முன்னுரை:
ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை, நேபால்,பங்கலாதேஷ் போன்ற நாடுகளில் சாதி (Caste) என்னும் அடையாள அடைமொழி குறிப்பாக இந்து மதத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் ஒட்டிக்கொண்டே பிறந்துவிடுகின்ற, இன்னும் பிரித்துப் பார்க்கவே முடியாத, ஒன்றர கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத ஒட்டுண்ணியாகவே காணப்படுகின்றது.அவ்வாறே ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள தந்தை பெயரை கூட குறிப்பிடாமல் தன் தாயின் பெயரை கூறினாலே போதுமானது என்று நீதிமன்றங்களே இன்று ஒருபுறம் கூறினாலும் மற்றொருபுறம் தங்களின் வாழ்வியலோடு பிறிக்கவே முடியாத ஒரு அங்கமாக இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் வாழும் பெரும் திரலான மக்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள தங்களின் குல மற்றும் சமூக அடையாளமாக இந்த சாதியையும் தங்களோடு ஒட்டிக்கொள்ளவோ அல்லது அதனை பிறர் மீது ஒட்டிவிடவோ எக்காலமும் காத்துக்கிடப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.
அது மட்டுமின்றி தனக்கென்று எவ்வித சிறப்பும் தனித்திறனும் இல்லை என்றாலும் இந்த சாதிய இழிகுறிகளால் தங்களை அடையாளப்படுத்துவதின் மூலம் தங்களுக்கு மிகப் பெரும் சிறப்பிருப்பதாக எண்ணிக்கொண்டு தங்களுக்கு தாங்களே புலங்காகிதம் அடைந்து கொள்ளும் ஏராளமான நபர்களையும் நம்மால் காண முடிகிறது.இப்படி ஒவ்வொரு மனிதனின் மனங்களிலும் அல்லது வாழ்விலும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்றாக ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த ஒட்டுன்னி எவ்வாறு தோன்றியது? யார் இதனை தோற்றுவித்தார்?இது எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?இப்பொழுது இதனுடைய தாக்கம் சமூகத்தில் எப்படி இருக்கின்றது? என்பதுபற்றியெல்லாம் வரலாற்று சான்றுகளுடன் வருங்கால சந்ததியினருக்கு விரிவாக விவரிக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட விளக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை தொகுத்து வருகின்றேன்.
இப்பொழுது அவற்றில் உள்ள மிக அவசியமான கருத்துக்களின் மூலம் நம்மில் ஒவ்வொருவரும் பயன்பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இந்த கட்டுரையில் அவற்றில் சிலவற்றை மட்டும் பதிவும் செய்திருக்கின்றேன். நிச்சயம் இந்த கட்டுரை சாதியின் அடிப்படைகளையும் இன்னும் அதன் நிலைப்பாடுகளையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன். நீங்களும் வாசித்து பயன் பெறுவதோடு உங்கள் நெருக்கம் பெற்றவர்களையும் பயன்பெறச்செய்யுங்கள் என்று பேரன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.முதலில் சாதியைப்பற்றி விரிவாக நாம் பார்ப்பதற்கு முன்பு சாதி(Caste) என்ற அடைமொழிக்கு அகராதியிலும் இன்னும் நிதர்சன வாழ்வியலில் சமூகம் சார்ந்தும் என்ன பொருள் கொள்ளப்படுகின்றது என்பது குறித்து பார்ப்பதே மிகச்சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்.எனவே சாதி சம்மந்தமான அகராதி பொருளை முதலில் சுறுக்கமாக பார்த்துவிடுவோம் வாருங்கள்..!
அகராதியில் சாதி(Caste) என்பதன் பொருள் என்ன.?
சாதி என்ற சொல் இந்திய மொழியை சேர்ந்த சொல் அல்ல.மாறாக அது "ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது கோத்திரத்தை அடையாளப்படுத்திக் காட்டுவதற்கான போர்ச்சிக்கீசிய சொல்லாகும் என்றே உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஆங்கில அகராதியான Oxford Dictionary கூறுகின்றது.ஆக சாதி என்ற சொல் குறிப்பிட்ட சில காலம் இந்திய குறு நிலங்களை ஆட்சி செய்த போர்ச்சுகீஸியர்களாலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஒருசிலர் குறிப்பிடுகின்றனர் என்றாலும் இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்கு முன்பே கிட்டதட்ட கி.மு.200 ற்கு முன்பே சாதி என்ற சொல் வழக்கத்தில் இல்லாமல் அது செயல் வடிவம் பெற்று ஆட்சி முறையாகவுமே கடைபிடிக்கப்பட்டு வந்ததாகவும் அவற்றையே போர்ச்சிக்கீஸியர்கள் தங்களின் சாதி என்ற சொல்லால் அடையாளப்படுத்தியதாகவும் நம்மால் காண முடிகின்றது.இதுவே சாதி என்பதற்கான அகராதி பொருளாக நம்மால் காண முடிகிறது.
ஆக இந்தியாவில் சாதிய கட்டமைப்பு மற்றும் அதன் பரினாம தோற்றம் என்பது குறித்து நாம் கட்டுரையின் கருப்பகுதியிலேயே பார்க்க இருகின்றோம் என்பதால் தற்பொழுது இந்த சாதி என்ற தனி மனித அல்லது சமூக அடைமொழியானது இந்தியாவை தவிர்த்து ஏனைய நாடுகளிலும் நடைமுறையில் இருந்ததா அல்லது இப்பொழுதும் நடைமுறையில் இருக்கின்றதா?என்ற மிக அவசியமான சாதி குறித்த உலகலவிலான சமூக நிலைப்பாட்டையும் இங்கு நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கின்றது என்பதால் அது குறித்தும் ஒரு சில விளக்கங்களைப் பதிவு செய்ய நான் விரும்புகின்றேன்.எனவே அது குறித்தும் சில விளக்கங்களை பார்த்துவிடுவோம் வாருங்கள்..!
உலகளவிலான சமூகத்தில் சாதிய நிலைப்பாடு என்ன?
மேற்கூறிய அகராதியின் அடிப்படையிலான இன மற்றும் குலம் சார்ந்த அடையாளமாக காணப்படும் சாதிய கண்ணோட்டம் இந்திய ஆசிய கண்டம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் காணப்படும் ஒரு அடிப்படைவாத செயல்பாடாகவே இடம்பெற்றிருப்பதாக நம்மால் தற்போதைய சமூக நிலையிலும் காண முடிகின்றது.ஆனால் அவை சில நாடுகளில் இடங்கள் மற்றும் கால நிலைகளுக்கேற்ப பல்வேறு பரிணாமங்களை அடைந்திருப்பதாகவும் என்னால் உணர முடிகிறது.உதாரணமாக ஆரம்ப காலகட்டங்களில் தங்கள் மூதாதையர்கள் அல்லது சமூகத்தவர்கள் செய்த ஏதோ ஒரு செயலை தங்களுக்கான அடைமொழியாக பயன்படுத்திக்கொள்ளும் முறை இன்றைக்கும் எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில மக்களால் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது.
அரபுகளிடம் சாதி இருந்ததா?
இவற்றில் குறிப்பாக அரபு நாடுகளில் வாழும் அரபுகளிடம் நபிகள் நாயகம் இஸ்லாத்தை போதிப்பதற்கு முன்பு மிகப்பெரும் குலப்பெருமை இருந்து வந்ததாகவும் பிறகு இஸ்லாமிய சகோதரத்துவ போதனையால் அந்த மக்களிடம் இத்தகைய மனிதர்களை பேதமைப்படுத்தும் குலப்பெருமை என்பது அறியாமையின் அடையாளம் என்பதாக போதிக்கப்பட்டு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாகவும் வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. மேலும் உலகிலேயே மக்களுக்கு மத்தியில் உடல் உறுப்பால் ஊணமுற்றவர்கள் மேலும் நிறத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மேலும் குலப்பெருமையின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் அனைவரும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவ போதனையால் மட்டுமே பெரிதும் பயன்பெற்றதாக வரலாற்றில் நம்மால் அறிய முடிகின்றது.மேலும் அத்தகைய போதனையே உலக மக்களிடம் நபிகள் நாயகத்தால் போதிக்கப்பட்ட இஸ்லாத்திற்கு மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றுந்தந்ததாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இதனையே நம் நாட்டின் மீது அக்கரை கொண்ட மக்களால் பெரிதும் போற்றப்பட்ட துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் 1900 -பிப்ரவரி-3யில் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற அகில உலக மத கூட்டமைப்பின் சார்பாக "The great teach of the world" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போது இப்படி கூறிக்காட்டுகின்றார்.
"How could Mohammedanism have lived, had there been nothing good in its teaching.? There is much good. Mohammed was the Prophet of equality of the brotherhood of man' and the brotherhood of all Muslims. "Mohammed by his life showed that amongst Muslims there should be perfect equality and brotherhood. There was no question of race, caste, creed, colour, or sex.
தமிழாக்கம்:முஹம்மது அவர்கள் போதனையில் எவ்வித நலவும் இல்லை என்றால் இன்றளவில் முஹம்மதியம் எப்படி இன்றும் உயிர் பெற்றிருக்கின்றது.?உண்மையில் அவற்றில் அதிகம் நன்மைகள் இருக்கின்றது.முஹம்மது மனித சமூகத்தின் சகோதரத்துவத்தை சமமாக நிலை நாட்டிய இறைத்தூதராக இருந்திருக்கின்றார்.மேலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மகத்தான சகோதரத்துவத்திற்கு சொந்தக்காரராகவும் இருந்திருக்கின்றார்.தன்னுடைய வாழ்வியல் மூலமாகவே இஸ்லாமியர்களுக்கு மிகச்சிறந்த சமத்துவமிகுந்த சகோதரத்துவத்தை காட்டியிருக்கின்றார்.அங்கு நிற வேற்றுமை,குல வேற்றுமை,பாலின வேற்றுமை,சமூக வேற்றுமை போன்ற பேச்சுக்கே இடமில்லை.
இவை மட்டுமின்றி ஒரு துருக்கிய அரசன் ஆப்ரிக்காவில் ஒரு கருப்பு இனத்தவரை இன்று அடிமையாக விலைக்கு வாங்கி அவரை சங்கிலியால் கட்டி தன் நாட்டிற்கு இழுத்துச் செல்லலாம்.ஆனால் அதுவே அந்த அடிமை முஹம்மது அவர்கள் போதித்த இஸ்லாத்தை ஏறுவிட்டால் அவன் அந்த அரசனின் மகளையும் திருமணம் செய்துகொள்ளும் தகுதி பெற்றுவிடுகின்றான் என்பதே முஹம்மது நபியின் போதனையின் மிகப்பெரும் சாதனை என்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவ்வுரையில் குறிப்பாக இந்து மத போதகர்கள் தங்கள் மதம் சார்ந்து குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதால் தங்களின் போதனை எவ்வித பலனுமற்றதாக ஆகிக்கொண்டிருக்கின்றது என்பது குறித்தும் இன்னும் பல்வேறு கருத்துக்களை மிக துள்ளியமாகவும் பதிவு செய்திருக்கின்றார். அவை அனைத்தையும் இங்கு பதிவு செய்வதால் கட்டுரை மிக நெடியதாகிவிடும் என்பதால் அவற்றை முழுமையாக பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது என்பதையும் வறுத்ததோடு இங்கு நான் பதிவுசெய்து கொள்கின்றேன்.இவை மட்டுமின்றி இன்னும் பல்வேறு சொற்பொழிவுகளிலும் திரு சுவாமி விவேகானந்தர் அவர்கள் "முஹம்மதியம் வாலால் பரவியது என்பதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அது தன்னுடைய சகோதரத்துவ அரவனைப்பால் மட்டுமே உலகம் முழுவதும் பரவியது என்றும் சுட்டிக்காட்டி இருக்கின்றார் என்பதனையும் உங்களின் மேலான கவனத்திற்கு தர நான் கடமைபட்டிருக்கின்றேன்.
ஆங்கிலேயே நாடுகளில் சாதி இருந்ததா?
ஆக சாதிய பேதமை என்பதில் அரபு தேசத்தின் நிலைப்பாடு இவ்வாறிருக்க இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் மேலைய நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா,ஜெர்மன்,லன்டன் போன்ற நாடுகளில் இதே சாதியம் என்பது சில இடங்களில் குலப்பெருமை அல்லது உடல் தோற்ற பாகுபாடு என்ற பழமைவாதத்தோடும் பல இடங்களில் நிறப்பாகுபாடு என்ற புதுமை வாதத்தோடும் நிலைப்பெற்றிருப்பதாகவே என்னால் காண முடிகின்றது. இதனால் மிகப்பெரும் மனித முன்னேற்றம் கண்டுவிட்டதாக கூறிக்கொள்ளும் மேலை நாடுகளிலும் பல்வேறு மனித உரிமை மீறல்களும் அடக்குமுறைகளும் மலிந்துகிடப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.
ஆக சாதி (Caste) என்பதன் அகராதி பொருளையும் இன்னும் அதனுடைய உலகளவிலான தற்போதைய சமூக நிலைப்பாட்டையும் மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நான் நம்பிக்கை வைக்கின்றேன்.ஆகவே அடுத்தபடியாக இந்த கட்டுரையின் கருவான "இந்தியாவில் சாதிய அமைப்பு எவ்வாறு தோன்றியது"? என்பது குறித்தும் இன்னும் அது எத்தகைய பரினாமங்களையெல்லாம் அடைந்திருக்கின்றது என்பது குறித்தும் பார்த்துவிடுவோம் வாருங்கள்.
இந்தியாவில் சாதிய கட்டமைப்பு எவ்வாறு யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
நான் மேற்கூறியவாறே இந்தியா மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் மனிதர்களுக்கு மத்தியில் வேறுபடுத்திக்காட்டும் வண்ணம் கட்டமைக்கப்பட்ட சாதிய அமைப்புகள் பல்வேறு பரினாமங்கள் பெற்று கடைபிடிக்கப்பட்டாலும் அவை இந்தியாவில் மட்டுமே ஆட்சி நடைமுறையால் அங்கிகாரம் பெற்று இன்னும் அவ்வாறு மனிதர்களுக்கு மத்தியில் பேதமை காட்டுவதே இறைவனின் புறத்திலிருந்தும் வந்த வேத பண்பாடாகும் என்றும் கூறி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை நம்மால் காணமுடிகின்றது.
அதாவது இந்தியாவில் தங்களை ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்திற்கு சொந்தக்காரர்களாக வெளிப்படுத்திக்கொண்ட இன்னும் தற்போது தங்களை இந்துக்கள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பிராமண ஆட்சியினர்களாலேயே கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பாக இந்தியா முழுவதையும் ஆட்சி செய்து வந்த மௌரிய ஆட்சியாளர்கள்,வஞ்சகமும்,சூழ்ச்சியும் நிறைந்த போர்களை கண்டு சலிப்படைந்த போது இனி போர் செய்யப்போவதில்லை என்றும் இன்னும் மத மூட நம்பிக்கைகளெல்லாம் வேண்டாம் என்றும் கூறி பவுத்த மதத்தை ஏற்று மூட நம்பிக்கைகளைவிட்டும் ஒதுங்கிய பொழுது அவர்களை சூழ்ச்சியின் மூலம் வெற்றி பெற்ற பிராமண ஆட்சியாளர்கள் பவுத்த மதத்தை ஏற்று செயல்படுபவர்கள் அனைவரையும் அடிமைப்படுத்துவதற்காக உறுவாக்கிய நடைமுறையே இன்றைய பிறப்பு அடிப்படையிலான சாதிய கட்டமைப்பாகும்.அவ்வாறே அத்தகைய பௌத்த மற்றும் சமண முனிவர்களை அடிமைபடுத்தி வைத்துக் கொள்வதற்காக குறுகிய காலத்தில் பிராமண ஆட்சியாளர்களால் எழுதப்பட்ட வேதமே இன்றைய சாதிய கொடுமையை போதிக்கும் மனுஸ்மிருதி என்ற சட்ட நூலுமாகும்.
இந்த மனுஸ்மிருதியே இன்றைக்கு இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்பவர்களால் ஓராயிரம் ஆண்டிற்கும் மேலாக குறிப்பாக இன்றைய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வரை சட்ட புத்தகமாக கடைபிடிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனையே இந்தியாவில் மீண்டும் சட்ட நூலாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சிலரால் தற்போது வரை வலியுறுத்தப்பட்டுக் கொண்டு வருவதையும் நம்மால் காண முடிகின்றது.ஆக இதுவே இன்றைய இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் உயர் சாதியினர் மற்றும் கீழ் சாதியினர் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய கட்டமைப்பாக நம்மால் அறிய முடிகின்றது.இன்னும் இவற்றிற்கு இடைப்பட்ட இந்திய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் இவற்றிற்குள் உள்ளாக்கபடவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.அவை குறித்து தனிக்கட்டுரையில் முழு விளக்கம் தர இருப்பதால் அதனை இங்கு நான் பதிவு செய்வதை தவிர்த்திவிடுகின்றேன்.
மேலும் இங்கு வரலாற்றை புரட்டிப்பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வியும் எழ வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.அதாவது சாதிய கட்டமைப்பை பற்றி அலசி ஆராய்ந்த சட்ட மாமேதை அம்பேத்கரே அத்தகைய கேள்வியை எழுப்பி அதற்கான மேலோட்டமான விடையையும் தனது "பண்டைய இந்தியாவில் புரட்சியும்,எதிர் புரட்சியும்"என்ற புத்தகத்தில் தந்துவிட்டு சென்றிருப்பதாகவே என்னால் காணமுடிகின்றது. அக்கேள்வி என்னவென்றால் "இன்றைக்கு பிறப்பின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும் சாதிய கட்டமைப்பானது முந்தைய வேதச்சுவடிகளில் சொல்லப்படவில்லை என்று கூறப்படுகின்றதே அதன் நிலை என்ன என்பதே அக்கேள்வியாகும்.
இதற்கு எனது சுருக்கமான பதில் என்னவென்றால் "பிராமணர்களால் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதிக்கு முன்பு வழங்கப்பட்ட வேதச்சுவடிகளில் மேற்கூறப்பட்ட அடிமைத்தனத்தை போதிக்கும் பிறப்பு அடிப்படையிலான சாதிய கட்டமைப்பானது கூறப்படவில்லை என்பதே உண்மையாகும். இதனையே சட்ட மாமேதை அம்பேத்கரும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் கூறுகின்றனர்.அதாவது மனுஸ்மிருதி என்று சொல்லப்படும் சட்ட வேத நூல் பிராமணர்களால் எழுதப்படுவதற்கு முன்பு வாழ்ந்த இங்குள்ள ரிஷிகளால் வழங்கப்பட்ட வேதச்சுவடிகளில் மேற்கூறப்பட்டது போல் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை அடிமைபடுத்தி அவர்களை அடக்கி ஆளுவதற்கான சாதிய கட்டமைப்பு பற்றிய எவ்வித கருத்துக்களும் கூறப்படவில்லை என்பதே அம்பேத்கர் உட்பட அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஒன்றுபட்டு கூறும் கருத்தாக இருக்கின்றது.
அப்படியானால் இந்த பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பு எப்படி வந்தது என்று நீங்கள் மீண்டும் என்னைப்பார்த்து கேட்கலாம்.அதற்கு என்னுடைய வட்டுறுக்கமான பதில் என்னவென்றால் நான் மேற்கூறிய மனுஸ்மிருதியின் வரலாற்றை நீங்கள் ஆழமாக உற்று கவனிக்க வேண்டும் என்பதேயாகும்.ஏனெனில் பிராமணர்கள் என்பவர்கள் நன்னெறிகளை போதித்த புத்த அல்லது சமண அல்லது முனிவர்களைப்போன்று வேதங்களை ஏற்ற வேதக்காரர்கள் அல்ல என்பதாகவே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.
ஆம் நீங்கள் மனுஸ்மிருதியின் ஆரம்ப கால வரலாற்றை உற்று நோக்கினால் முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த அனைத்து நன்னெறி வேதங்கள் மற்றும் போதனைகள் அனைத்தையும் அவர்கள் மாற்றி அமைப்பதற்கு பதிலாக தாங்களே உறுவாக்கிய மனுஸ்மிருதி கூறும் கருத்துக்களையே அவற்றிற்கு மேலான இறை கருத்துக்களாகவும் இன்னும் இதுவே மக்களால் தற்போது கடைபிடிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட புனித வேதம் என்பதாகவும் மக்களிடம் வழுக்கட்டாயமாக புகுத்தியிருக்கின்றனர் என்பதை நிச்சயம் கண்டு கொள்ள முடியும்.இன்னும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் செயல்படுவதே தங்கள் ராஜியத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடிமகனின் தர்மம் என்பதாக அவர்கள் போதித்திருப்பதையும் அறிந்து கொள்ள முடியும்.அதன் அடிப்படையிலேயே மனுதர்மம் என்பது மக்களுக்கான உயர்ந்த சட்ட வேதம் என்பதாக மக்கள் முற்றிலும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கண்டு கொள்ள முடியும்.
மேலும் சமஸ்கிருதத்தில் மட்டுமே எழுதப்பட்ட மனுஸ்மிருதியை குறிப்பாக பிராமணர்களை தவிர வேறு யாரும் படிக்கக்கூடாது என்று அவர்கள் கட்டளையிட்டதற்கும் இதுவே அடிப்படை காரணம் என்பதையும் உங்களால் கண்டுகொள்ள முடியும்.இன்னும் இந்த உலகில் சக மனிதர்களின் மீது அதிகாரம் செலுத்துவது மட்டுமே தங்களின் பிறப்புரிமை என்பதாக சட்டம் இயற்றிய அவர்கள் தங்களின் மொழியையும் யாரும் கற்கக்கூடாது என்று தடைவிதித்திருப்பதையும் உங்களால் கண்டு கொள்ள முடியும்.ஏனெனில் அவற்றை படித்துவிட்டால் அவற்றில் இருக்கும் மனித விரோத செயல்பாட்டு சட்டங்களை மக்கள் அறிந்துவிடுவார்கள் என்பதாலேயே முற்றிலுமாக அதனை பிராமணர்கள் அல்லாதோர் படிப்பதை தடைவிதித்தார்கள் என்றே பல்வேறு வரலாற்று ஆசிரியர்களாலும் கூறப்படுகின்றது.
இன்னும் சொல்லப்போனால் அவ்வேதத்தை படிக்க நினைப்பதே பெறும் குற்றம் என்றும் அவ்வாறு யாராவது படித்துவிட்டால் அவர்களின் காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும் என்றும் கண்கள் பிடுங்கப்பட வேண்டும் என்றும் இன்னும் பல்வேறு கொடூர தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்றும் அதே மனுதர்மத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டதும் முற்றிலுமாக அன்றைய பிராமண ஆட்சியாளர்களின் தனிப்பட்ட செயலேயன்றி முந்தைய வேதங்களுக்கோ அல்லது ஆட்சியாளர்களுக்கோ எவ்வித சம்மந்தமும் இல்லை என்றே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.
ஆனால் காலப்போக்கில் குறிப்பாக திராவிடர்கள் என்று வரலாற்றில் அடையாளம் காணப்படும் தென் இந்திய மக்கள் நீண்ட நெடும் கால அடிமைத்தனத்திற்கு எதிராக மிகப்பெறும் புரட்சி செய்திருப்பதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இதனைத்தான் சட்ட மாமேதை அன்னல் அம்பேத்கர் அவர்கள் "பண்டைய இந்தியாவில் புரட்சியும் 'எதிர்புரட்சியும் "என்று குறிப்பிட்டிருப்பதாகவும் நம்மால் அறிய முடிகின்றது.அந்த புரட்சி எப்படி இருந்தது என்பது சம்மந்தமாக ஒரு சில விளக்கங்களை இங்கு நான் பதிவு செய்வது மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்று கருதுவதால் அது சம்மந்தமான ஒருசில கருத்துக்களையும் பார்த்துவிடுவோம் வாருங்கள்.
எப்படி மனுஸ்மிருதிக்கு எதிரான புரட்சி ஏற்பட்டது?
முதலில் மனுஸ்மிருதி போதிக்கும் மனித விரோத செயல்களை தென் இந்திய பிராமணர்களில் சிலரே ஏற்கவில்லை என்பதே எனது கருத்தாகும் என்பதை முதற்கண் இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன்.அதாவது பாரதி போன்ற சிறந்த கவிஞர்கள் கூட மனுஸ்மிருதி போதிக்கும் தீண்டாமை நோயான சாதியை மிக கடுமையாக விமர்சித்து இருப்பதாகவே என்னால் வரலாற்றில் காண முடிகின்றது.அவ்வாறே பெண் புலவர்களில் மிகப்பெரும் பெயர் பெற்ற நம் பெண் இனத்தின் அடையாளமான மூதாதை ஔவையார் அவர்களும் அயோத்திதாசர் போன்ற பெரும் மஹான்களும் சாதிய தீண்டாமையை எதிர்த்து வந்ததாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.மேலும் மனுஸ்மிருதிக்கு எதிராக ஆரம்ப காலம் தொட்டே கருத்தியல் எதிர்ப்பு இருந்தாலும் மேலும் அது அவ்வப்பொழுது வலுப்பெற்று மறைந்தாலும் குறிப்பாக இஸ்லாமிய ஆட்சியாளர்களின் காலத்திலும் இன்னும் ஆங்கிலேயே ஆட்சியாளர்களின் காலத்திலும் அது புரட்சியாகவே வெடித்தது.
ஏனெனில் அவர்கள் இந்து மக்கள் என்பதாக பிராமணர்களால் அடிமைபடுத்தப்பட்ட மக்களுக்கு மதநம்பிக்கைகளையும் வழிபாட்டு சம்பிரதாயங்களையும் கடைபிடிக்க முழு சுதந்திரம் அளித்திருந்தாலும் அவற்றை தாண்டி மனுஸ்மிருதி கூறும் மனித விரோத செயல்களை அந்த அப்பாவி மக்கள் மீது மதத்தின் பெயரால் திணிக்கப்படுவதை அனுமதிக்கவில்லை என்றே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் அத்தகைய மனித விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் சட்டங்கள் இயற்றியதையும் நம்மால் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக அறிய முடிகின்றது.அதற்கு பிறகு ஒரு கட்டத்தில் குறிப்பாக இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக மதத்தின் பெயரால பிராமண அடிமைத்தனத்தின் இன்னல்களால் பாதிக்கப்பட்டு பொறுமை இழந்த அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற தென் இந்திய தலைவர்கள் தங்களின் மீதும் தங்களின் சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் மனித விரோத அடிமைத்தனமான சாதிய கொடுமைக்கு எதிராக மிகப்பெரும் போர்கொடி தூக்கியிருக்கின்றார்கள் என்பதை நம்மால் காணமுடிகின்றது.
அந்த புரட்சியின் ஒரு பங்காகவே முதல் முதலில் பிராமணர்களால் வழுக்கட்டாயமாக இந்துக்கள் என்று அடக்கியாளுவதற்காக உருவாக்கப்பட்ட சட்ட நூலான மனுஸ்மிருதியை சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் 1919 ஆம் ஆண்டு முத்துரங்க செட்டியார் என்பவர் திருவனந்தபுரம் கோமண்டூர் என்ற ஊரைச் சேர்ந்த இராமானுஜ ஆச்சாரி என்ற பார்ப்பனரின் மூலமாக மொழிபெயர்த்து அதனை அதே ஆண்டே சென்னை மாகாணத்தின் பத்மநாப விலாச அச்சகத்தில் அச்சிட்டு ரூபாய் 2.50 பைசாவிற்கு விற்பனையும் செய்தார் என்பதாக நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.அதற்கு பிறகு தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தமிழகம் உட்பட பல்வேறு மாகாணங்களிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சி எழுத்து வடிவங்களிலும் செயல் மற்றும் போராட்ட வடிவங்களிலும் பரினாமம் பெற்றிருக்கின்றது.
இவற்றில் மிக முக்கிய பங்கு வகித்த தமிழகத்தில் தந்தை பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி அவர்கள் மிகப்பெரும் புரட்சி செய்திருப்பதாகவே நம்மால் காண முடிகின்றது.இந்திய மக்களுக்கு எதிரான இன்னும் மனித விரோத சாதிய கட்டமைப்பிற்கு எதிரான அவருடைய வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை என்னுடைய "தமிழர்களின் கதாநாயகன் பெரியார் "என்ற புத்தகத்தில் விரிவாக நான் விவரித்திருக்கின்றேன். விருப்பமுள்ளவர்கள் கட்டாயம் அதனை வாசியுங்கள்.அவற்றில் இந்திய குடிமக்கள் இந்து மதம் என்ற பெயரில் எவ்வாறெல்லாம் அடிமைப் படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதையும் இன்னும் பெரியார் அவற்றிலிருந்து குறிப்பாக தமிழக மக்களை விடுவிக்க எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதையும் நிச்சயம் உங்களால் அறிந்து கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.
இப்படி கலப்புரட்சி ஒருபுறமிருக்க மறுபுறம் அன்னல் அம்பேத்கர் இந்திய சாதிய கட்டமைப்பான மனுஸ்மிருதிக்கு எதிராக சட்ட புரட்சியில் முற்றிலுமாக தன்னை அற்பனித்தார் என்பதாகவே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது. அதன் விளைவாகவே இன்றைய அரசியல் அமைப்பு சட்டமும் உறுப்பெற்று அது இந்திய மக்கள் அனைவராலும் சாதி மதங்கள் கடந்து புனிதத்தோடு பார்க்கப்பட்டும் கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது என்றால் அது மிகையாகாது.
ஆக மேற்கூறியவாறே இந்தியாவினுடைய சாதிய கட்டமைப்பு தோன்றி அது பல்வேறு புரட்சிகளால் புதைக்கவும்பட்டு தற்பொழுது அது விசித்திரமான தோற்றம் பெற்று, பரினாமம் அடைந்து நிற்கின்றது என்பதே இந்தியாவின் சாதிய கட்டமைப்பின் தோற்றம் குறித்த எனது ஆழமான கண்ணோட்டமாகும்.அது என்ன தற்போதைய தோற்றம் என்பதாக நீங்கள் எண்ணலாம்.! அதற்கான விடையை காண வேண்டியது நம் ஒவ்வொருவரின் மீதும் கடமை என்பதால் அது குறித்தும் ஒரு சில விளக்கங்களை இங்கு நான் பதிவு செய்துவிட்டு இந்த கட்டுரையின் முடிவுரைக்கு வர விரும்புகின்றேன்.
இந்தியாவில் சாதிய கட்டமைப்பின் தற்போதைய தோற்றம் என்ன?
அம்பேத்கர் மற்றும் பெரியார் மற்றும் காந்தியடிகள் போன்ற மஹான்களால் இந்நாட்டிற்காக அரும்பாடு பட்டு உறுவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டையும் நாட்டு மக்களையும் அடிமைபடுத்தி வந்த ஒரு சிறு குழுவினரை அடக்கி சாதிய கட்டமைப்பை ஒழித்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு அந்த மஹான்கள் தங்கள் கண்களை மூடியிருக்கலாம். ஆனால் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் அதே சாதிய கோரமுகம் வேறொரு பரிணாமம் பெற்று இந்நாட்டு மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது என்ற பேருண்மையை அவர்களின் கல்லரைகள் கண்டாலும் இதற்காகவா எங்களின் வாழ்வு முழுவதையும் அற்பணித்தோம் என்று கதறி அழும் என்றே கருதுகின்றேன்.
ஆம் அந்த மஹான்கள் மனுவை ஒழித்து மக்களைக்காக்க உறுவாக்கிக் கொடுத்த அரசியல் சாசனமே இன்று தன்னை காக்க முடியா தருனத்தில் நின்று தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதையே நான் இப்படி கூறுகின்றேன்.இன்றைய அரசியல் சாசனத்தை காத்து நிலை நாட்டவேண்டிய நீதித்துறைகளோ எந்த கரை படிந்த கைகளிடமிருந்து விடுதலை தேடி ஓராயிரம் ஆண்டாக பல ஆயிரம் போராட்டங்கள் கண்டதோ அதே கரைபடிந்த கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.
உதாரணமாக உயர் சாதியினராக கருதப்படும் பிராமணர்கள் எத்தகைய குற்றங்கள் புரிந்தாலும் அவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவதில்லை.மாறாக கீழ் சாதியினராக கருதப்படும் ஒருவன் சிறு குற்றம் செய்தாலும் அவன் மிகக்கொடூரமாக பொது வெளியில் தண்டிக்கப்படும் அதே மனுவின் கோடூரம் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் இந்நாட்டில் அன்றாடம் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டே வருகின்றது.இவற்றிற்கான சான்றுகளையும் பல்வேறு உணமை நிகழ்வுகளையும் எனது "இந்திய சாதிய கட்டமைப்பின் வரலாறு"என்ற புத்தகத்தில் விரிவாக தொகுத்து இருக்கின்றேன்.
அவ்வாறே கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் உயர் சாதியினராக கூறிக்கொள்ளும் பிராமணர்களே முன்னுரிமை எடுத்துக்கொண்டு ஏனைய குடிமக்களை இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் இரண்டாம் தர குடிமக்களாகவே பாவித்து அவர்களை அடிமைப்படுத்தும் அதே மனுவின் சாதிய கொடூரம் தற்போது வரை அரங்கேற்றப்பட்டுக்கொண்டே வருகின்றது.இதற்கான பல்வேறு சான்றுகளையும் உண்மை நிகழ்வுகளையும் எனது புத்தகத்தில் தொகுத்து இருக்கின்றேன்.
இதனைப்போன்றே தனிமனித உரிமைகளான உணவு ,உடை,உறவு,இறை நம்பிக்கை,இறைவழிபாடு, கலாச்சாரம் போன்றவற்றிலும் உயர் சாதியினராக கருதப்படும் தங்களையே முற்படுத்தி கடைபிடிக்க வேண்டும் என்றும் தங்களின் விருப்பப்படியே அவைகளும் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்கு பிடிக்காததை எவரும் சுதந்திரமாக செய்யக்கூடாது என்றும் இன்றைய 20 ஆம் நூற்றாண்டிலும் அதே மனுவின் அடிப்படையிலேயே கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இவற்றிற்கான பல்வேறு சான்றுகளையும் உண்மை நிகழ்வுகளையும் எனது புத்தகத்தில் பதிவு செய்து வருகின்றேன்.
இது மட்டுமின்றி நம் நாட்டில் இந்து மதமல்லாத வேறு மதங்களை கடைபிடிக்கும் மக்களும் இவர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட வேண்டும் என்றே தற்போது முயன்று வருகின்றனர்.அவை குறித்து ஒரு சில விளக்கங்களை முந்தய கட்டுரையான "இந்தியாவும் இந்து ராஷ்ட்ரியமும் "என்ற எனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்.அவை மட்டுமின்றி அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றனர் என்பது குறித்து விரிவான கட்டுரை ஒன்றை மிக விரைவில் பதிவிடவும் இருக்கின்றேன்.
ஆக இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் அதே ஆதிக்க மனோபாவம் கொண்ட வஞ்சமும் சூழ்சியுமே வாழ்வின் வெற்றி என்று போதித்துக்கொண்டிருக்கும் கூட்டம் முந்தய அதே அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்ல துடித்துக்கொண்டிருக்கின்றது என்பதை மேற்கூறியவற்றின் மூலம் ஓரளவு உணர்ந்திருப்பீர்கள் என்றே கருதுகின்றேன்.எனவே தற்பொழுது இந்த கட்டுரையின் சுறுக்கம் கருதி இக்கட்டுரையின் சாராம்சமான முடிவுரைக்கு வருவதே சிறப்பு என்று கருதுகின்றேன்.வாருங்கள் அதனையும் வட்டுறுக்கமாக பார்த்துவிடுவோம்.
முடிவுரை:
இந்த உலகினால் புனிதமாக பார்க்கப்படும் அரசியல் நிலைப்பாடான ஜனநாய ஆட்சிமுறை கடைபிடிக்கப்படும் நாடுகளில் மிகப்பெரிய நாடாக இன்றைக்கு இந்தியா இருக்கின்றது என்று என்னைப்போன்ற பல்வேறு இந்தியர்களும் பெருமிதம் கொள்வது நிதர்சனமாக இருக்கின்றது என்றே கருகின்றேன்.ஆனால் ஜனநாயகம் கூறும் "மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி" முறைமையானது தற்போதைய இந்தியாவில் மிகப்பெரும் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதே எனது இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இது பல நூறு ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட வஞ்சகர்களால் இந்நாட்டு மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு அவற்றிற்கு எதிராக மானம் இழந்து மண்டியிட்டு பல்வேறு தியாகங்கள் செய்து சமீபத்தில் போராடி பெற்ற அரசியல் சாசனமானது முந்தய அதே ஆதிக்க வர்க்கத்தினரால் ஆபத்திற்கு ஆளாகியிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்காகவே எழுதப்பட்ட கட்டுரையுமாகும்.நிச்சயம் இக்கட்டுரை வரலாற்று ரீதியாக தங்களின் அடிமைத்தனத்தை உணர்ந்து தாங்கள் இனி அடிமைகளாக வாழப்போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ள விரும்பும் நல் உள்ளங்களுக்கும் இன்னும் தொழில் நுட்பம் நிறைந்த இக்காலத்திலும் சக மனிதனை தீண்டத்தகாதவன் என்றும் அவனுக்கு எவற்றிலும் சம உரிமை கிடையாது என்றும் நடைமுறைபடுத்தப்படுவதை வெறுக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இது மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.
குறிப்பாக இக்கட்டுரை தங்களை யாரெல்லாம் பிற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் சாதியினராக எண்ணிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மிகப்பெரும் எரிச்சலையே தரும் என்பதையும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அவர்கள் செய்யும் மனித விரோத செயல்கள் பிற மனிதர்களுக்கு தரும் வேதணையைவிட என் கட்டுரையின் சுட்டிக்காட்டுதல் ஒன்றும் பெரிதல்ல என்பதால் இதற்காக என்னை அற்பணித்ததில் நான் பெருமிதமே அடைகின்றேன்.அத்தோடு ஆதிக்க சாதியினராக தங்களை எண்ணிக்கொள்ளும் நண்பர்கள் மனித நேயத்தையும் மனித மாண்பையும் எண்ணிப்பார்த்து பிற மனிதர்களோடு நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு கனம் எடை போட்டுக்கொள்ளுங்கள் என்றும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி:
Author:A.Sadam husain hasani