செவ்வாய், 31 மார்ச், 2026

உலக வரைபடத்தை மாற்றத்துடிக்கும் இரண்டு மன நோயாளிகள் - The Two Mentally ill persons who try to change the world map


முன்னுரை:

என் ஆயுதப்படையும்,என் கப்பல்படையும்,என் விமானப்படையும் என் ஏவுகனைகளும்,என் அணுகுண்டுகளும் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதை உனக்கு காட்டாமல் விடப்போவதில்லை என்று கூறிக்கொண்டு அப்பாவி பொதுமக்களின் மீதும்,ஏதும் அறியாத பள்ளி குழந்தைகளின் மீதும் கொத்துக்கொத்தாக வீசித்திரியும் ஆதிக்க மனநோய் பிடித்த கொடூரர்களை மனநோயாளிகள் என்றே இங்கு அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.எப்படி அடிபட்டு வெறிபிடித்த மிருகங்களாக ஹிட்லரும்,முசோலினியும் ஜெர்மனியை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடவேண்டும் என்று இரண்டாம் உலகப்போரை தொடங்கி நாடுபிடிக்கும் மனநோயில் திரிந்தார்களோ அதனைப்போன்றே தற்போது இஸ்ரேல் அதிபர் 1.நெதன்யாகு, அமெரிக்க அதிபர் 2.டோனல்ட் ட்ரம்ப் என்ற இரண்டு நாடுபிடிக்கும் மனநோயாளிகள் இந்த உலகில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தி அதில் குழிர்காய போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உலகில் பொருளாதாரத்திலோ அல்லது தொழில்நுட்பத்திலோ அல்லது இராணுவத்திலோ தன்னைவிட எந்த நாடும் பலமாக இருந்துவிடக்கூடாது என்பதுதான் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் விசித்திரமான மனநோய். இவர்களின் மனநோய் தெருவில் நடக்கும் எவரைப் பார்த்தாலும் தனக்கு அச்சுறுத்தலாக மட்டுமே பார்க்கக்கூடிய அளவிற்கு முற்றிவிட்டிருக்கின்றது. தன்னைவிட அல்லது தனக்கு நிகரான பலமுடையவராக இந்த உலகில் யாரும் இருக்கக்கூடாது என்பதுதான் இந்த மன நோயாளிகளுக்குள் குடிகொண்டிருக்கும் மோசமான நிலை.தன்னைவிட பலமாகவோ அல்லது தனக்கு நிகராகவோ யாரையாவது இவர்கள் கண்டால் அவரின்மீது எப்படியாவது ஆதிக்கம் செலுத்தி தனது கட்டுப்பாட்டில் அவரை வைத்துவிட வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.எந்த நாடாவது சுயமாக முன்நேற்றம் காண்கின்றது என்றால் அடுத்த நொடியே அதனை நாசமாக்குவதற்கோ அல்லது அதனை அநியாயமாக சூரையாடுவதற்கோ திட்டம் தீட்டிவிடுவார்கள்.அதற்காக அந்நாட்டை உலகின் அச்சுறுத்தல் என்றோ அல்லது தனது நாட்டிற்கு எதிரான பயங்கரவாதம் என்றோ இந்த முட்டால் உலகிற்கு முகத்திரை அணிவித்து அந்நாட்டையும் அதன் வளங்களையும் சுரண்டி சூரையாடிவிடுவார்கள்.

இவர்கள் நினைத்தாள் ஒருசில நிமிடங்களில் ஏதோ ஒரு நாட்டின் தலைவரை மிக இலகுவாக கொலை செய்துவிட முடியும் என்றும்,இவர்கள் நினைத்தால் ஏதோ ஒரு நாட்டின் மொத்த வளங்களையும் சூரையாடி சின்னாபின்னமாக்க முடியும் என்றும் காட்டிக்கொள்வது இந்த உலகை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள் என்ற எச்சரிக்கை மணியாகவே நான் காண்கின்றேன்.இத்தகைய மனநோயாளிகள் இந்த உலகையும் அதன் வரைபடத்தையும் சிதைத்து சின்னாபின்னமாக்க துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இப்பொழுதேனும் இந்த உலகை காக்க விரும்பும் நல்லுள்ளங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கட்டுரையை தொகுத்திருக்கின்றேன்.நிச்சயம் இந்த கட்டுரை தற்போது இந்த உலகை சூழ்ந்திருக்கும் போர் நிலையையும் அதன் காரணியையும் தெளிவுபடுத்தும் என்றே நம்புகின்றேன். நீங்களும் இந்த கட்டுரையை வாசித்து பிற நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

ஆதிக்க மனநோயே போர்களின் துவக்கப்புள்ளி:

இந்த உலகம் முழுவதையும் ஏதாவதொரு வகையில் தன் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆட்சி செய்துவிட வேண்டும் என்ற பேராசை இந்த உலகம் சுழல ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்துகிடக்கத்தான் செய்கின்றது.நாட்டின் அரசர்களாக இருந்தவர்கள் அவர்களின் ஆளுகைக்கேற்ப தனக்கு கீழுள்ள மனிதர்களின் மீது தன்னால் முடிந்தளவு ஆதிக்கம் செலுத்தத்துடித்தார்கள்.பிரஞ்சைகளாக இருந்தவர்கள் அதே ஆதிக்கத்தை எப்படியாவது அடைந்து அனைத்து மக்களையும் தானும் அடக்கியாண்டுவிட வேண்டும் என்ற பேராவலில் ஏங்கிக்கொண்டிருந்திருக்கின்றார்கள்.இவ்வளவுதான் மக்களுக்கும், மன்னர்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் மத்தியில் அன்று முதல் இன்று வரை இருக்கும் வேறுபாடாக நான் காண்கின்றேன்.இவற்றைத்தவிர்த்து ஒரு மனிதன் சகமனிதனின் மீது அநியாயமாக ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்று போதிப்பதற்கோ அதனை செயல்படுத்துவதற்கோ ஒருவரும் இல்லாத நிலையையே இந்த மனித சமூகம் எல்லா காலங்களிலும் எட்டியிருந்திருப்பதாக வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்!இது என் எல்லை என்றும்,இது என் வான்பரப்பு என்றும்,இது என் நிலப்பரப்பு என்றும், கூறிக்கொண்டு இந்த உலகில் ஓட்டப்பட்ட இரத்தங்கள் பல நூறு மில்லியன் லிட்டர்கள் என்பதை வரலாறுகள் இன்றும் துள்ளியமாக பதிவு செய்துவைத்திருக்கின்றது.யாரோ ஒருவரின் மீது எங்கோ ஏற்பட்ட வெறுப்பிற்காக, அல்லது யாரோ ஒருவருடன் எதற்காகவோ ஏற்பட்ட முரன்பாட்டிற்காக, அவரின் இரத்தத்தை ஓட்டாமல் ஓயப்போவதில்லை என்றும் அவரின் உடமைகளை பறித்து நடுத்தெருவில் அவரை நிறுத்தாமல் விடப்போவதில்லை என்றும் இந்த மனித சமூகத்திற்குள் நடந்தேரிய அட்டூழியங்கள் எண்ணில் அடக்கமுடியாதவை.

உண்மையில் இந்த உலகில் மனித சமூகம் பல்வேறு காரணங்களுக்காக போர்புரிந்திருக்கின்றது.அவற்றில் சில போர்கள் தன்னை தற்காத்துக்கொள்ளவும்,தன் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் நடத்தப்பட்டிருந்தாலும்,பல போர்கள் பிற மக்களை அடிமைகளாக்கி அடக்கியாளவும்,அவர்களின் உடமைகளை அநியாயமாக சொந்தமாக்கிக்கொள்ளவும்,அவர்களின் நம்பிக்கைகளை இழிபடுத்தி புலங்காகிதம் அடைந்துகொள்ளவும்தான் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை மிக வெளிப்படையாகவே இங்கு நான் பதிவு செய்ய கடமைபட்டிருக்கின்றேன்.

அவ்வளவேன் ஏதும் அறியாத ஒரு வீட்டு செல்லப்பிராணி பக்கத்துவீட்டில் வைத்திருந்த பானையில் உள்ள தண்ணீரை குடித்துவிட்டது என்பதற்காக இரண்டு வீட்டார்களும் பல ஆண்டுகளாக கோத்திரம்,கோத்திரமாக போர்புரிந்திருக்கின்றது என்ற வரலாறுகளின் மூலம் இந்த மனித சமூகம் எத்துணை மோசமான மடமைத்தனத்தில் கழித்திருக்கின்றது என்பதை  அறிந்துகொள்ள முடிகின்றது.இப்படி இந்த பூமியில் இந்த மனித சமூகம் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தன் பலம் என்ன என்பதை வெளிக்காட்டவோ அல்லது இங்கு எல்லோரும் எனக்கு கீழ்தான் என்பதை நிறூபித்துக்காட்டவோ செய்த அட்டூழியங்கள் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை. தொட்டதிற்கெல்லாம் கொலை,கொள்ளை சர்வநாசம் என்று காட்டுமிராண்டித்தனமான வாழ்வை இந்த மனித சமூகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கடந்து வந்திருக்கின்றது.

ஆனால் தற்பொழுது இந்த மனித சமூகம் மனித நேயம்,சட்ட ஒழுங்கு,சமூக அக்கரை என்ற பெரும் பாக்கியம்பெற்ற நாகரீத்தின் பக்கம் வார்த்தெடுக்கப்பட்டபின்பும் எதெற்கெடுத்தாலும் போர்,அழிவு,நாசம் என்ற இழிவான சூழல்களுக்குள் இழுத்துச்செல்லப்படுவது இந்த மனித சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் காண்கின்றேன். எப்படியாவது யாரோ ஒருவரின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனநோய் இன்று ஒவ்வொரு வீட்டின் சமயலரை தொடங்கி வானம், பூமி,கடல் என்று பரந்துவிரிந்து சென்றுகொண்டேபோகின்றது.அந்தளவிற்கு கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் அடக்கி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் மன நோயாளிகள் தற்போதைய பூமியை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள் என்பதாகவே என்னால் உணரமுடிகின்றது.

இரண்டாம் உலகப்போரில் கிட்டதட்ட 90 லட்சம் உயிர்களை காவு வாங்கிவிட்டு ஒருசில ஆண்டுகளாக போரின்றி சப்தமின்றி அமைதியாக சென்று கொண்டிருந்த இந்த பூமியையும் அதன் வரைபடங்களையும் சிதைத்துப்பார்ப்பதற்கு தற்போது இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் அவரைப்போன்ற ஆதிக்க மனநோய்பிடித்த அவரது நண்பரான அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பும் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கின்றார்கள்.மனித வாழ்வின் மான்புகளை உணராத இந்த மனநோயாளிகள் இந்த மனித சமூகத்தை திரும்பவும் கற்காலத்திற்கே திருப்பி இழுத்துச்செல்ல அணி திரட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டை காத்துக்கொள்வதற்காகவே உறுவாக்கிய NATO என்ற இராணுவ கூட்டமைப்பை வைத்து பல்வேறு நாடுகளையும் பிடித்துவிடலாம் என்று இந்த இரு மனநோயாளிகளும் தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் மடத்தனங்களால் ஏற்படப்போகும் மிகப்பெரும் ஆபத்தை இந்த உலகம்தான் சந்தித்துக்கொண்டிருக்கின்றது இன்னும் சந்தித்திக்கவும்போகின்றது.ஒருசில தினங்களுக்கு முன்பு ஈரானை திடீரென்று தாக்கி அவர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய அவர்கள் நாட்டின் அதிஉயர் பதவியில் இருந்த தலைவர் அயதுல்லா கமேனியை பலநூறு குண்டு மழைபொழிந்து அவரை கொலை செய்தார்கள்.அதன் விளைவாக ஈரான் இஸ்ரேலின் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல்களை தொடுத்துவருகின்றது.மேலும் கப்பல் பறிமாற்றம் செய்யும் ஹர்மூஸ் அணையை தங்களின் பகுதியில் முற்றாக மூடிவிட்டது. அதனால் இன்று பல்வேறு நாடுகளும் எறிபொருள் மற்றும் எறிவாயு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துவருகின்றது.குறிப்பாக தங்களின் இறையாண்மையை இழிவு செய்யும் வண்ணம் செயல்பட்ட நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் செய்த மடத்தனத்திற்கு அவர்களின் நட்பு நாடுகளும் இப்பொழுது தண்டனை பெறுகின்றன. இவற்றிற்கிடையில் தற்பொழுது ஹர்மூஸ் அணையை திறப்பதற்காக மிகப்பெரும் படையை திரட்டி இந்த பூமியை நாசக்காடாக்குவோம் எல்லோரும் வாருங்கள் என்று இந்த இரு மனநோயாளிகளும் ஏனையோர்களையும் கூவி அழைப்பது கொடுமையிலும் கொடுமை.

முடிவுரை:

இந்த இரு மனநோயாளிகளும் செய்யும் அட்டூழியங்களை தாங்கள் செய்யும் சாகசங்களாகத்தான் இப்பொழுதும் கூறிக்கொள்கின்றார்களே தவிர இவர்கள் தங்களின் தவறுகளை உணர்வதற்கோ அல்லது யாராவது இவர்களுக்கு உணர்த்துவதற்கோ வாய்ப்பே இல்லாத நிலையை அடைந்துவிட்டார்கள். இத்தகைய நிலையில் மொத்த பூமியையும் ஒருசில விநாடிகளில் அழித்தொழித்துவிடும் அணுஆயுதங்களையும் இந்த மன நோயாளிகள்  கையில் வைத்திருக்கின்றார்கள் என்பதை விரைவாக கருத்தில்கொண்டு முதலில் இவர்களை அதிகாரக் கட்டிலிலிருந்து இந்த உலகம் அகற்றவேண்டும். அடுத்தபடியாக ஆதிக்க மனோபாவம் கொண்ட இந்த மனநோயாளிகளுக்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சையுமளிக்க வேண்டும் என்பதையே இவர்களுக்கான மற்றும் இந்த உலகம் பாதுகாக்கப்படுவதற்கான சிறந்த தீர்வாக அமையும் என்பதை இறுதியாக இங்கு பதிவுசெய்து கொண்டு இக்கட்டுரையை  இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

நன்றி: ஆசிரியர்.அ.சதாம் உசேன் ஹஸனி.

வெள்ளி, 20 மார்ச், 2026

முஸ்லிம்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்-Why Muslims are Celebrating Eid-AL-Fitir?

 

முஸ்லிம்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்?

முன்னுரை:

இந்த உலகில் எல்லா மதங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் எல்லா குழுக்களுக்கும் எல்லா சமூகத்திற்கும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதற்கென்று ஒரு நாள் நிர்னயிக்கப்பட்டிக்கின்றது. அந்நாளில் அம்மதத்தைச் சார்ந்த அல்லது அவ்வினத்தைச்சார்ந்த அல்லது அக்குழுவைச்சார்ந்த மக்கள் தங்கள் முழு சக்தியையும் செலவழித்து கோலாகலமாக கொண்டாடியும் மகிழ்கின்றனர்.சிலர் அப்படி கொண்டாடி மகிழ்வதற்கான காரணங்களை குறிப்பிடுகின்றனர்.சிலர் அவற்றிற்கான காரணம் இல்லையானாலும் வாழையடி வாழையாக பின்பற்றிவருகின்றனர். அந்த வகையில் வருடாவருடம் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிற்கு பிறகு ஈத்பெருநாள் (அதாவது ஈகை திருநாள்)என்ற தினத்தை மிக கோலாகலமாக கொண்டாடி வருவதை நாமெல்லாம் காணமுடிகின்றது.அப்படி அவர்கள் கொண்டாடுகையில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமன் வாழ்த்து கூறியும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

இவ்வாறு குறிப்பிட்ட ஒருநாளை இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என்றும் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கின்றதா என்றும் ஒருசில நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.என்னால் முடிந்தளவு அவற்றின் காரணத்தை எளிய வடிவில் இங்கு பதிவு செய்ய முயல்கின்றேன்.இக்கட்டுரையை நீங்கள் வாசித்து பயன் பெறுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

இஸ்லாமிர்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்?

முதல் காரணம்:

அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரமலான் எனும் புனிதமிகு மாதத்தில் 30 நாட்களும் தங்களின் இறைவனுக்காக பசித்திருந்து பல்வேறு மனோ இச்சைகளையும் தவிர்த்திருந்து இறைவழிபாட்டில் திழைத்திருப்பதென்பது இறைவன் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் பாக்கியமாக கருதுகின்றனர். எனவே அத்தகைய பாக்கித்தை முழுமையாக வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறும் வண்ணமே இத்தகைய ஈத்பெருநாளை இறைவனுக்கு நன்றி கூறும் திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இரண்டாவது காரணம்:

இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் தாங்கள் புத்தாடை அணிந்து,சிறந்த உணவுகளை உட்கொள்வதற்கு முன்பே பிற ஏழைகளுக்கும்"ஈதுல் ஃபித்ர்" என்னும் பசியை தீர்க்கும் தானதர்மங்களை செய்து பிறமனிதர்களையும் மகிழ்வித்துவிட வேண்டும் என்று போதிப்பதால் இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.இதன் மூலம் பசித்திருத்தளின் வலியையும் பிற ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டிய கடமையையும் கற்றுணர்கின்றார்கள்.ஏழை எளிய மக்களின் பசியாற்றி மகிழச்சொல்லும் இத்தகைய  கொண்டாட்டம் மிக அற்புதமான சமூக வாழ்விற்கு வழிவகை செய்வதால் பல்வேறு சமூக அக்கறை கொண்ட பிறமத நன்மக்களும்கூட இதனை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

மூன்றாவது காரணம்:

இந்த ஈத் பெருநாளில் எல்லா மக்களும் ஒற்றுமையாக ஒரே திடலில் ஒன்று கூடி இறைவணக்கம் புரிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழவேண்டும் என்று போதிக்கப்படுவதால் அத்தகைய சகோதரத்துவத்தையும்,மனித நேயத்தையும் காப்பதற்காக இந்நாளை வெகுவாக கொண்டாடிவருகின்றனர். இந்த கொண்டாட்டத்தால் மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் வெறுட்சிகள்,வஞ்சங்கள் நீங்கி அன்பும், அரவணைப்பும் மலர்கின்றது.மேலும் சமூக ஒழுங்கை கட்டமைப்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதாலும் இஸ்லாமியர்கள் இதனை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.எனவே இந்த ஈகை திருநாள், வெறும் சடங்கு சம்பிரதாயமாகவோ அல்லது ஏதோ ஒரு மதவழிபாடாகவோ மட்டும் கொண்டாடப்படாமல், மனிதர்களின் மான்புகளை மதிப்பதற்கும்,சமூக அக்கரையோடு இந்த மனித சமூகம் செயல்படுவதற்கும் வலியுறுத்துகின்றது என்பதற்காவே இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.

முடிவுரை:

ஆக கொண்டாட்டம் என்ற பெயரில் தன்னை அழித்துக்கொள்வதையும்,பிற மனிதர்களுக்கு தொல்லை தருவதையும் கோலாகலமாக கொண்டாடப்படும் இன்றைய சூழலில்,இறைவனுக்கு நன்றி செலுத்தி,பிற மனிதர்களுக்கு தர்மம் செய்து மகிழ்விப்பதை போதிக்கும் இத்தகைய ஈகை திருநாள் போற்றப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.மேலும் ரம்ஜான் என்றாலே பிரியாணி என்று பிறமத சகோதரர்கள்கூட போற்றும் அளவிற்கு இந்த ஈகை திருநாளை பசியாற்றும் பெரும் நாளாக தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நிறூபித்துக்கொண்டுமிருப்பது தமிழக இஸ்லாமியர்களின் ஈகை கொள்கைக்கு மிகப்பெரும் சான்றாகவும் நான் காண்கின்றேன்.இத்தகைய அன்பும், அரவணைப்பும்,சமூக அக்கரையும் கொண்ட கொண்டாட்டம் இந்த மனித குலத்தை சிறந்த புரிந்துணர்வோடு என்றென்றும் காக்கட்டும் என்றும் இதன் வழிநடக்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலவுகளையும் வழங்கட்டும் என்றும் என்றென்றும் பிரார்திக்கின்றேன்.

நன்றி: Author.A.Sadam husain hasani

புதன், 18 மார்ச், 2026

மனிதன் முழுமை பெறவே முடியாதா?Can a person not fulfill him?


முன்னுரை:

என்னுடைய புத்தகத்திற்கு "முழுமை பெற்ற மனிதானக இரு"என்று நான் பெயரிட்டதை வைத்து பல்வேறு நண்பர்களும் ஒரு மனிதன் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற விஷயமாயிற்றே எப்படி நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக இரு என்று புத்தகம் எழுதுகின்றீர்கள் என்பதாக ஆச்சர்யமாய் கேட்கின்றனர்.இன்னும் சிலர் இந்த உலகில் எந்த மனிதனும் முழுமை பெற்றவனெல்லாம் கிடையாது.எல்லோரும் இங்கு அயோக்கியர்கள்தான் யாரும் இங்கு யோக்கியரில்லை என்று ஆணித்தரமாய் கூறி முற்றிலுமாய் என்னை எதிர்க்கின்றனர்.இத்தகைய எதிர்திசைகளுக்கு விரிவான விளக்கமளிக்க ஒரு எழுத்தாளனாக இங்கு நான் கடமைபட்டிருப்பதை கட்டாயமாக உணர்கின்றேன்.அதன் அடிப்படையில் உலகில் பிறக்கும் ஒரு மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற முரண்பாட்டிற்கு முதலில் இங்கு விளக்கமளித்துவிடுகின்றேன்.

மனிதன் முழுமை பெறவே முடியாதா?

இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அல்லது இயற்கையால் உறுவாக்கப்பட்ட அனைத்துமே தன்னால் முடிந்தளவு தன்னை முழுமைபடுத்திக்கொள்வதற்காகவே  உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்ற பேருண்மையை இந்த மனித சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே முதலில் இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.

ஆம்..!

சுருங்கிய சுருளிற்குள் சுருண்டுவிடாமல் பீரிட்டு எழுந்து,பசுமை பொழிந்து, பூக்கள் பூத்து,காய்கள் தரித்து,கனிகள் பொழிந்து பிறருக்கு குடையாகவும் தனக்கு நிழலாகவும் கம்பீரமாய் காட்சியளித்து தன்னை முழுமைபடுத்த துடிக்கும் ஒவ்வொரு செடிகொடிகளும் இதற்கு சாட்சி.!

கண்கவரும் வண்ணம் பூசி,கதைகள் கூறும் அறைகள் தொடுத்து,கட்சிதமான ஜன்னல்கள் வைத்து,அதற்கேற்ப திரை சீலையும் தைத்து,வண்ணமயமாய் காட்சிதரும் ஒவ்வொரு பூக்களும் இதற்கு சாட்சி.

இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொன்றையும் கவனித்துப்பார்த்தால் அவை அனைத்தும் தன்னை தனித்துவத்தோடு செழுமைப்படுத்தி, முழுமைபடுத்தி, திருப்தியுற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை கண்ஊடாக கண்டுகொள்ளலாம்.அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் எப்படி தன்னை செழுமைபடுத்தி முழுமையாக்கிக்கொள்ள முடியாது என்று வாதிடமுடிகிறது என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.உண்மையில் மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற வாதம் இந்த உலகில் மனிதன் தறிகெட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதை நியாயப்படுத்துவதற்கு வேண்டுமானால் உதவியாக அமையுமே தவிர மனித வாழ்வை மேம்படுத்தவோ அல்லது அவனை மனநிறைவான சுதந்திரத்தோடு வாழவைக்கவோ உதவாது என்பதையே நிதர்சனமாக நான் காண்கின்றேன்.

அவைமட்டுமின்றி தற்போதைய நிலையில் சுய ஒழுக்கங்களும் சமூக அக்கறைகளும் மனித வாழ்வை சிறைப்படுத்தும் பெரும் பாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் தனிமனித ஒழுங்கிற்கும்,சுதந்திரத்திற்குமான வேற்றுமையை புரிய வைப்பதே மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.ஏனெனில் தனிமனித ஒழுங்கைப்பற்றியோ அல்லது யாருக்கும் எவ்விதத்திலும் அநீதி இழைத்துவிடாத சுதந்திரத்தைப்பற்றியோ பேசினால் அவை பழம்பெருமையாகவோ அல்லது சலிப்பூட்டும் வேடிக்கையாகவோ மட்டுமே பார்க்கப்படுகின்றது.இவை ஒருபுறம் இப்படி இருக்க மற்றொரு புறம் மது,மாது,கொலை,கொள்ளை என தறிகெட்டு,பிற மனிதர்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி அநீதி இழைப்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் சாகசம் என்பதாக பெரும்பாலான திரைக்கதைகளால் போதிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலன மனிதர்களால் போற்றவும்படுகின்றது. 

இப்படி தற்போது எல்லா புறங்களிலும் மனித வாழ்வின் ஒழுங்கின்மையை வரவேற்பவர்களைப் பார்த்து ஒருசில கேள்விகளை இங்கு நான் கேட்க விரும்புகின்றேன்.அதாவது நீங்கள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அனைத்தும் ஒழுங்கற்றதாக இருப்பதை நீங்கள் உங்களுக்காக ஏற்றுக்கொள்வீர்களா?முடியாது என்று கூறுவீர்களேயானால் பிறகு எப்படி மனிதனின் ஒழுங்கின்மையை மட்டும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது?மேலும் இந்த உலகில் எதையும் சரிசெய்ய முடியாது என்றும் இங்கு யாரும் ஒழுங்கல்ல என்றும் கூறுவதின் மூலம் இந்த மனித சமூகத்திற்கு நீங்கள் எதனை கற்றுத்தர விரும்புகின்றீர்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த மனித சமூகத்தை தட்டழிந்து திரியச்செய்ய நினைக்கின்ற அல்லது இந்த மனித சமூகத்தை வாழ்வின் வெறுட்சியில் சுழலவைக்க நினைக்கின்ற எவரிடமும் ஒழுக்கக்கேடு என்பதை தவிர வேறு எந்த பதிலுமில்லை.ஏனெனில் அவர்கள் ஒழுங்கின்மை என்ற பாதாளக்குழிகளுக்குள் அகப்பட்டுக்கிடக்கின்றார்கள்.அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் கடினங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களையும் அதே பாதாளக்குழிகளுக்குள் இழுத்துக்கொள்ள போராடுகின்றார்கள்.

இத்தகையவர்கள் சாலையில் மூவண்ண விளக்குகள் மூலம் சாலைவிதியை கடைபிடிப்பது என்பதுகூட தேவையில்லாதது என்று உறுதியாக நம்புகிறார்கள்.ஆனால் இந்த சாலை விதிகளால் ஒவ்வொரு நாளும் பல்வேறு உயிர்கள் காக்கப்படுகின்றது என்ற பேருண்மையை சீர்தூக்கிப்பார்க்க மறுக்கின்றார்கள்.ஒன் வேயில் (One Way) எதிர்புறமாக சென்றால் மிகப்பெரும் விபத்து ஏற்படும் என்று கூறும் சாலைவிதிகள் இந்த மனித சமூகத்தை காக்கவும் அதனை நாகரீகப்படுத்தவும் உதவுகின்றது என்பதை ஏற்கமறுக்கின்றார்கள்.உண்மையில் இத்தகையவர்கள் இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரும் சவால் என்பதை சுட்டிக்காட்டுவதோடு இத்தகையவர்கள் மனது வைத்தால் ஒழுங்குற முழுமைபெற்று இவர்களாலும் தங்கள் வாழ்வை வாழமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இவற்றைவிடுத்து மனிதர்களுக்கு ஏன் சட்டங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்?மனிதர்களுக்கு இவை முற்றிலும் அவசியமற்றது என்று கூறிக்கொண்டு மனித வாழ்வின் பல்வேறு புனிதங்களை குழிதோண்டி புதைத்து இந்த மனித சமூகத்தை ஒழுங்கின்மை என்னும் மிகப்பெரும் சாபக்குழியில் தள்ளிவிட நினைப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டட்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் இங்கு பரிசளிக்க விரும்புகின்றேன்.அடுத்த கட்டுரையில் இந்த மனிதன் தன்னை எவற்றிலெல்லாம் முழுமைபடுத்திக்கொண்டு மனநிறைவோடு வாழமுடியும் என்பதை விவரிக்கின்றேன்.

முடிவுரை:

இந்த கட்டுரையின் இறுதியாக ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை எனது தாழ்வான கோரிக்கையாக வேண்டிக்கொள்ள ஆசிக்கின்றேன்.அதாவது மனிதனின் முழுமை என்பது சாத்தியமற்றது என்று கூறி தறிகெட்டு வாழச்சொல்வதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா? அல்லது மனிதன் தனக்காக திருப்திகரமிக்க ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்து தன்னை செழுமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா என்பதை ஒரு கணம் சீர்தூக்கிப்பாருங்கள்.உங்கள் உண்மையான உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டலாம்.


நன்றி : Author.A.Sadam husain hasani

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

யார் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்? (02- Irresponsibe People)

 


என்னதான் பல்வேறு பரிட்சைகள் வைத்து அல்லது பல்வேறு வழிகாட்டுதல்களை கொடுத்து சிலரை பணியில் அமர்த்தியிருந்தாலும் பணியில் அமர்ந்த பிறகு இத்தகையவர்கள் தன்னுடைய பொறுப்பை சிறிதளவு கூட பொருட்டுத்தாமல் வியாபாரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள்.

உதாரணமாக வருகின்ற வாடிக்கையாளர்களை மிக மோசமாக நடத்துவது அல்லது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாமல் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு நேரம் களிப்பது போன்ற செயல்களிலேயே எப்பொழுதும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதுமட்டுமின்றி வியாபாரப் பொருட்களை பற்றி எவ்வித அக்கறையுமின்றி கண்டு கொள்ளாமல் சீரழிவதற்கு விட்டுக் கொண்டுமிருப்பார்கள்.இத்தகைய நபர்கள்தான் பொறுப்பற்றவர்கள். இவர்களை உடனடியாக கண்டிக்க வேண்டும்.

அவ்வாறு கண்டித்தும் இவர்கள் முன்பு போன்றே பொறுப்பற்று நடந்துகொண்டால் பணி நீக்கம் செய்வதுதான் ஒரு சிறந்த நிறுவனத்தை காப்பாற்றிக்கொள்வதற்கான சிறந்த வழியாகும்.

அப்படியெல்லாம் கிடையாது நான் அன்னை தெரசாவிற்கு அன்னன் என்றோ அல்லது அன்னை தெரசாவிற்கு அண்ணி என்றோ கூறிக்கொண்டு அவர்களை பணியிடத்தில் அமர்த்தி வைத்திருந்தால் தலையில் துண்டை தவிர வேறு எதுவும் மிஞ்சாது என்பதை அன்போடும், பண்போடும்,பணிவோடும் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

இதனையும் தாண்டி "பாவம் என்னிடம் பணிக்கு சேர்ந்தவன் என்னைவிட்டால் வேறு எங்கு போவான்?" நான்தானே அவனுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்று பாட்டுபாடினால் அது உங்களின் தலையெழுத்து என்பதை தவிர உங்களுக்கு சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை என்பதோடு இப்பதிவை முடித்துக்கொள்கின்றேன்..

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

யார் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்?Who should be fired?


Part 1

ஒரு சிறந்த பணியாளர் தான் செய்யும் பணியை நன்கு அறிந்து அதில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

இன்று பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களில் பலரும் தன்னுடைய பணி சார்ந்த அறிவோ அல்லது அனுபவமோ அல்லாதவர்களாகவே தங்களின் பணியை தொடர்கின்றார்கள்.இத்தனைக்கும் அவர்கள் அத்துறையில் பல ஆண்டுகளை கழித்தும் இருப்பார்கள்.

அப்படி இருந்தும் தன் துறை சார்ந்த அடிப்படைகளை கூட அறிந்துகொள்ள முன்வரவேமாட்டார்கள்.

இத்தகைய பணியாளர்கள் தான் நம் வியாபாரத்திற்கு மிகப்பெரும் ஆபத்தாவாகள்.

இவர்கள் ஏதோ ஒரு வாய்ப்பில் அல்லது வேறு வழியின்றி பணியாளர்கள் பற்றாகுறையை தீர்க்க பணியில் தொடரவைக்கப்பட்டிருப்பார்கள்.

இவர்களால் அந்த பணியிலோ அல்லது வியாபாரத்திலோ அல்லது நிறுவனத்திலோ எவ்வித முன்னேற்றமும் இருக்காது.இத்தகைய பணியாளர்களை உடனடி பணி நீக்கம் செய்வதே ஒரு சிறந்த நிறுவனத்தின் அடையாளமாகும்.இல்லையெனில் இத்தகைய பணியாளர்களால் அந்நிறுவனம் மிக விரைவிலேயே பின்னடைவை சந்திக்கும்.

இத்தகைய பணிநீக்கம் மிக கொடியது என்பதாக சிலர் இங்கு வக்காலத்திற்கு வரலாம்.தயவு செய்து அத்தகையவர்கள் சிறந்த பணியாளர்களை உறுவாக்கும்பணியில் சென்று ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.