செவ்வாய், 27 ஜூலை, 2021

அரசியலும் மனித வாழ்வும் politics and people's life

அரசியலும் மனித வாழ்வும்
அரசியலும் மனித வாழ்வும்

எனக்கு தெரிந்து இன்றய மனித வாழ்வில் மனிதர்களை அதிகம் ஆக்கிரமத்திருக்கும் ஒரு சக்தி இருக்கின்றது என்றால் அது அரசியல் மட்டுமே.இந்த அரசியலே மக்களை எதை செய்யவேண்டும் என்றும் எதை செய்யக்கூடாது என்றும் நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றது.மேலும் நாட்டின் பொருளாதாரத்தையும் அதுவே முடிவு செய்துகொண்டிருக்கின்றது.மேலும் நாட்டின் குறிப்பிட்ட எல்லைகளையும் அதுவே வரையறுத்துக் கொண்டிருக்கின்றது.இத்தகைய அரசியல் என்னும் அரசு எவ்வாறு உறுவானது என்பது பற்றியும்,அது இந்த மனித வாழ்விற்கு எவ்வளவு அவசியம் என்பது பற்றியும்,மேலும் அந்த அரசியல் இன்றய மனித வாழ்வை எப்படியெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் இந்த கட்டுரையில் சற்று விரிவாக விளக்க இருக்கின்றேன்.

ஆகவே அண்பர்களே.எனது இந்த கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருவீர்களேயானால் நிச்சயம் அரசியல் சார்ந்த பல்வேறு நுனுக்கங்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.ஏனெனில் அரசியலின் தந்தையான அரிஸ்டாடிலை தொடர்ந்து காரல் மார்க்ஸ் போன்ற பெரும்பெரும் அரசியல் தத்துவவியளாலர்களின் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி உங்களிடம் மிக எளிய நடையில் சமர்பிக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கின்றது.

எனவே என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பதின் மூலம் ஒரு நல்ல நண்பனாக என்னோடு இணைந்திருக்கும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.சரி இப்பொழுது முதலாவதாக அரசியல் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.

அரசியல் என்றால் என்ன?

ஒரு தனிப்பட்ட மனிதனின் உரிமைகளை சமூக ரீதியில் வழங்குவதற்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பிற்கே அரசியல் அல்லது அரசு என்று சொல்லப்படுகின்றது.அடுத்தபடியாக இந்த அரசியல் இந்த மனித வாழ்விற்கு எவ்வளவு அவசியமாக இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

அரசியலின் முக்கியத்துவம் என்ன?

ஒரு மனிதன் தன்னுடைய உடல்,உயிர்,பொருள்,மானம் போன்றவற்றை தானே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றாலும் அவற்றை அநியாயமாக ஒரு கும்பலோ அல்லது ஒரு கூட்டமோ சூரையாடும் பொழுது அவன் அங்கு அநியாயமாக கொல்லப்படலாம்.அல்லது அவனது பொருட்கள் முற்றிலுமாக பறிக்கப்படலாம்.இச்சமயங்களில் அவன் தனிமனிதனாக நிற்கதியாக கொல்லப்படுவானேயானால் அது இந்த மனித சமூகத்தை மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் தள்ளிவிடும்.

இதனை கருத்தில் கொண்டே பண்டைய கால மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்ததை நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.அவர்களில் யாருக்கேனும் ஏதேனும் தீங்கு என்றால் அவர்கள் உடனே ஒன்றினைந்து எதிராளிகளை எதிர்த்து போர்புரிந்து வந்தார்கள்.இதனால் பெரும்பாலும் அவர்களில் தனிநபருக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளும்கூட அவர்களை சார்ந்த கூட்டத்தினருக்கான பிரச்சனையாக பார்க்கப்பட்டது.அதனால் மனிதர்களில் பெரும்பாலானோர் காரணமின்றியே மடிந்துபோனார்கள் என்பதாகவும் வரலாறு சான்று பகர்கின்றது.

மேலும் அன்றைய மக்கள் தங்களையும் தங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பதற்காக போர் பயிற்சியையே அடிப்படை கல்வியாக கற்றதாகவும் வரலாறு நமக்கு கூறுகின்றது.இவற்றையெல்லாம் சீர்செய்வதற்கே பிற்காலத்தில் அரிஸ்டாடில் போன்ற பெரும் சிந்தனையாளர்கள் மக்களுக்கு அரசியல் என்ற ஒன்று மிக அவசியமாக இருக்கின்றது என்பதை உணர்ந்து பல்வேறு வழிமுறைகளை வகுக்க தொடங்கினார்கள்.

மேற்கூறிய நோக்கத்திற்காகவே உறுவாக்கப்பட்ட அரசு என்ற கட்டமைப்பு இன்றைக்கு பல்வேறு நாடுகளில் பல வடிவங்களில் உறுமாறி கிடக்கின்றது. ஆக அவர்கள் உறுவாக்கிய அரசியல் என்னும் அரசு என்பது மக்களின் உடல்,பொருள்,மானம் போன்றவற்றை பாதுகாப்பதற்கான ஒரு மகத்தான நோக்கம் கொண்ட கூட்டமைப்பாகவே இருந்திருக்கின்றது.இத்தகைய அரசியல் எல்லா காலத்திலும் எல்லா மனிதர்களுக்கும் மிக  முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது என்பதை நம்மில் எவரும் மறுக்க முடியாது என்ற நம்பிக்கையில் அடுத்து ஒரு அரசின் முக்கிய செயல்பாடு என்ன என்பதை பற்றி ஒரு சில விஷயங்களை குறிப்பிடுகின்றேன்.

அரசியல் மற்றும் அரசின் முக்கிய செயல்பாடு என்ன?

ஒரு அரசு என்பது தன் குடிமக்களின் முழு வாழ்வாதாரத்திற்கும் பொறுப்பேற்க கூடியதாக இருக்கின்றது.இதன் அடிப்படையில் தான் இந்தியா போன்ற குடியரசு நாடுகளில் அரசு தன்னுடைய செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த சட்டதிட்டங்களை தனக்காக வகுத்திருக்கின்றது. அதனைத்தான் இன்று நாம் அரசியல் சாசனம் என்று கூறுகின்றோம்.இந்த அரசியல் சாசனம் என்பது முழுவதும் ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மிக உறுதியாக வழிகாட்டக்கூடியதாக இருக்கின்றது.இவற்றைத் தொடர்ந்து நாட்டின் பிரஜ்ஜைகள் சம்மந்தமான சட்டதிட்டங்களை அந்த அரசே அவ்வப்பொழுது உறுவாக்கி அதன்படி மக்களை வழி நடத்தி செல்வதற்கும் அது அனுமதிக்கின்றது.

ஆக சுறுங்கக் கூறினால் ஒரு அரசின் முக்கிய செயல்பாடு என்பது தன் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி மக்களின் முழு வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதே ஆகும்.அடுத்தபடியாக ஒரு அரசிற்கு கீழ் இருக்கும் மக்களின் உரிமைகள் சிலவற்றை பற்றி பார்ப்போம்.

மக்களின் உரிமைகள் என்ன?

சமூக உறவு,சமய நம்பிக்கை,வழிபாடு போன்ற  அனைவருக்குமான தனிப்பட்ட சுதந்திரத்தில் எந்த அரசும் தலையிட முடியாது.இவற்றில் அனைத்து குடி மக்களுக்கும் தனிப்பட்ட முழு உரிமை இருக்கின்றது.அதாவது ஒரு தனி நபர் தன் துணையை தேடிக்கொள்ளவும்,மேலும் தனக்கான மதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்,மேலும் அதன்படி செயல்படவும் முழு உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.அவ்வாறே அரசியல் ரீதியிலும்,பொருளாதார ரீதியிலும் நாட்டின் எப்பகுதியிலும் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.

அதாவது ஒரு இந்திய குடிமகன் அரசியல் ரீதியாக எப்பதவிக்காக வேண்டுமானாலும் போட்டியிட முடியும்.அதனை எந்த அரசும் தடுத்துவிட முடியாது.அவ்வாறே ஒரு குடிமகன் இந்தியாவின் எப்பகுதியிலும் கொடுக்கள் வாங்கள் செய்து வியாபாரம் செய்யவும் முடியும்.அவற்றை யாராலும் தடுத்து நிறுத்திவிடவும் முடியாது.ஆக அன்பர்களே..!மேலே சில முக்கிய அடிப்படை உரிமைகளை மட்டும் குறிப்பிட்டு காண்பித்துள்ளேன்.இவை மட்டுமின்றி மக்களுக்கான பல்வேறு உரிமைகளைப்பற்றி அரசியல் சாசனம் மிக விரிவாக பேசுகின்றது.இறைவன் நாடினால் அவற்றையெல்லாம் பின் வரும் கட்டுரைகளில் விவரிக்கின்றேன்.

இறுதியாக அரசியலில் மக்களுக்கான உரிமை என்பது எவ்வளவு மகத்தானது என்பதை உணர்ந்துகொள்ள"மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி"என்ற ஒற்றை அடைமொழியே போதுமானது என்றே நான் நம்புகின்றேன்.மக்களின் உரிமையை விளக்க இந்த சொற்றொடரை விட ஒரு புரிந்துணர்வு மிக்க சொற்றொடர் வேறெதுவுமில்லை என்றும் நான் கருதுகின்றேன்.ஆனால் இன்றய மக்களில் பெரும்பாலானோர் அரசு,ஆட்சி என்பதெல்லாம் தங்களைச் சார்ந்ததுதான் என்பதை அறியாமல் இருப்பதையே மிகப்பெரும் துரதிஷ்டவசமாக நான் கருதுகின்றேன்.

அரசியல்வாதிகள்,மற்றும் அரசு ஊழியர்கள் என்பவர்களெல்லாம் ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போன்றும்,அவர்களின் செயல்களுக்கு எந்த கேள்வி கணக்குகளும் கிடையாது என்பது போன்றும் மக்களிடம் ஒரு தவறான பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரும் அபத்தம் என்றே நான் கருதுகின்றேன்.ஆக என்னைப் பொருத்தமட்டில் மக்கள் தங்களின் உரிமையை அரியாதது என்பது ஒரு யானை தன்னை பூனையாக நினைப்பதை போன்றதற்கு சமம் என்பதாகவே கருதுகின்றேன். இக்கட்டுரையின் விரிவு கருதி இத்தோடு இக்கட்டுரையை முடித்துக் கொள்கின்றேன்.அடுத்த கட்டுரையில் ஒரு அரசு எதற்காக முதலில் பாடுபட வேண்டும் என்பதைபற்றி விரிவாக பார்ப்போம்..!

Previous Post
Next Post