வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தேசியவாதமும் தனிமனித உரிமையும்(Bjp Nationalism)

 

தேசியவாதமும் தனிமனித உரிமையும்
தேசியவாதமும் தனிமனித உரிமையும்

ஒருவன் நாட்டை காக்கவேண்டும் என்றும் நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்றும்,நாட்டிற்காக பல தியாகங்கள் செய்யவேண்டும் என்பதே தேசியவாதம் என்பதை நாமெல்லாம் நன்றாக அறிவோம் என்றே நம்புகின்றேன். உண்மையில் இத்தகையத்தன்மை ஒவ்வொரு குடிமகனிடமும் காணப்பட வேண்டிய அற்புத பண்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது.ஆனால் இந்தியாவில் தேசியவாதம் என்ற ஒரு அற்புதமான பண்பு அரசியல் செய்வதற்கான முக்கிய கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கமுடிகின்றது.

இதுவே நாட்டின் குடிமகனை அச்சுறுத்தும் காரணியாகவும் அவனை வேற்றுமைபடுத்திக்காட்டும் கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இது சமூகத்தில் மிகப்பெரும் அச்சுறுத்தலையே தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.மேலும் இதுவே இந்நாட்டு மக்களில் சிலரை வேண்டுமென்றே  அன்னியப்படுத்தவும்,பலிவாங்கவும் உகந்த கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

உண்மையில் இன்றைய பாஜக அரசு தேசியவாதம் என்ற இந்த சொல்லை வைத்து மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று நம்புகின்றது.அது உண்மையில் பொதுப்பார்வையில் மிகச்சரியானதாக இருந்தாலும் அது நாட்டின் பல்வேறு மக்களுக்கு மிகப்பெரும் இழப்பைத்தர காத்திருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் தேசியவாதம் என்ற பெயரில் நாடும் நாட்டின் பழமை கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை சொல்லித்திரிபவர்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதை சரியாக காண்பது மிகப்பெரும் அநீதியாகும்.

இந்திய அரசியல் சாசனம் எவ்வாறு நாட்டையும் நாட்டு உடமைகளையும் பாதுகாக்கும்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் வலியுறுத்துகின்றதோ அதைவிட அதிகமாக நாட்டு மக்களுடன் சகோதரத்துவத்துடனும் தனிமனித சுதந்திரத்துடனும் செயல்பட வலியுறுத்துகின்றது.இன்றைக்கு நாட்டின் நாலாபுறங்களிலும் பாஜக என்ற குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்கள் தன்னை தவிர்த்து ஏனையவர்களெல்லாம் நாட்டுப்பற்றற்றவர்கள் என்று காட்டிகொள்ளவே முயற்சிப்பது நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடாக நான் காண்கின்றேன்.

சில தினங்களுக்கு முன்பு  இசைஅமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இது சம்மந்தமாக ஒரு விஷயத்தை சமூகவலைதளத்தில் பதிந்து அது அனைவராலும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.அவர் தன்னுடைய முன்னுரிமையைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.அதாவது எனக்கு முதலில் மொழிதான் அதற்கு பிறகே நாடு என்பதெல்லாம் என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.உடனே அவரை தேசவிரோத சக்தி என்றளவிற்கு பலரும் விமர்சனம் செய்யத்துவங்கினர்.அவர்கள் வேறுயாருமில்லை நான் மேற்குறிப்பிட்ட அடிப்படை அரசியல் அறிவில்லாத பாஜக தொண்டர்களேயாவார்கள்.

இங்கு நான் ஒரு முக்கியமான அடிப்படையை விளக்க விரும்புகின்றேன். அதாவது நாட்டுப்பற்று என்பது எல்லோருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு பொதுவான அம்சமேயாகும்.நிச்சயமாக நாட்டில் வசிக்கும் ஒரு பிச்சைக்காரனும் கூட தான்வசிக்கும் நாட்டை நேசிக்கவே செய்வான். அவற்றில் அவனுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் தனக்கு நாட்டுபற்று இருக்கின்றது என்பதை மட்டுமே எப்பொழுதும் ஒருவன் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவனது சொந்த வாழ்வில் வேறு எதற்கும் விருப்பம் இருக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துவது மிகப்பெரும் சர்வாதிகார போக்கு என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே அண்பர்களே..!நாட்டு பற்றையும் அரசியல் ஆதாயம் தேடும் தேசிய வாதத்தையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த கட்டுரையை எளிய வடிவில் அனைவரும் விளங்கிக்கொள்ளும் விதமாக வட்டுறுக்கமாக நான் எழுதியிருக்கின்றேன்.

இதனை நான் மதம் சார்ந்தோ அல்லது ஒரு கட்சி சார்ந்தோ தனிப்பட்ட வெறுப்பினால் பேசுவதாக நீங்கள் நீனைத்தால் தாராலமாக நினைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் என்னுடைய இந்த கட்டுரைக்கான நோக்கம் என் மக்கள் இது போன்ற ஏமாற்றுபேர்விளிகளிடம் சிக்கி (போலி) தேசியவாதம் என்ற பெயரில் தன் சொந்த மக்களையே எதிரியாக்கிவிடக்கூடாது என்ற தூய நோக்கத்திற்கானது மட்டுமே என்பதை தூய மனதுடன் தெரியப்படுத்திக்கொள்கின்றேன்.

நன்றி:

Previous Post
Next Post