![]() |
பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது |
பிரச்சனையில்லாத உலகமே இல்லை.
இந்த உலகில் எந்த மனிதனுடைய வாழ்விலும் பிரச்சனைகளுக்கு விதிவிலக்கு என்பதே கிடையாது.சிலருக்கு வாழ்வதே பிரச்சனையாக இருக்கின்றது. பலருக்கு வாழ்க்கையில் எங்குபோனாலும் பிரச்சனையாக இருக்கின்றது. சிலருக்கு பிரச்சனை எங்கிருந்தாவது வந்துவிடுமோ என்பதே பெரிய பிரச்சனையாக இருக்கின்றது.இப்படி பிரச்சனை என்பது மனிதனிடமிருந்து பிறிக்க முடியாத ஒரு அங்கமாகவே அது இடம் பெற்றுவிட்டது.ஆக பிரச்சனையில்லாத வாழ்வு அல்லது இடம் அல்லது மனம் வேண்டும் என்று இந்த உலகில் நீங்கள் விரும்பினால் நிச்சயம் நீங்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் தான் அதை தேட வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
எனவே நான் இந்த கட்டுரையில் பிரச்சனையில்லாமல் எப்படி வாழ்வது என்பதைப் பற்றி ஒருபோதும் பேசப்போவதில்லை.ஏனெனில் அது சாத்தியமற்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆனால் அந்த பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றி ஒருசில வழிமுறைகளை இங்கு குறிப்பிடுகின்றேன்.அவை உங்களுக்கு பிடித்தமானவையாக இருந்தால் நீங்களும் அதனை கடைபிடியுங்கள்.
பிரச்சனையை தீர்க்கும் வழிகள்.
1.முதலில் நீங்கள் பிரச்சனை என்றால் என்ன என்று அறிந்திருக்க வேண்டும்.
ஏனென்றால் இன்று எதுவெல்லாம் பிரச்சனை என்று பார்ப்பதிலேயே இங்கு பலருக்கு பிரச்சனையாக இருக்கின்றது என்பதாகவே நான் காண்கின்றேன்.எனவே பிரச்சனை என்றால் என்ன என்பதை முதலில் இங்கு நான் விளக்கிவிடுகின்றேன்."ஒரு செயலால் நமக்கோ அல்லது நம்மை சுற்றியிருப்பவர்களுக்கோ அல்லது ஏதேனும் ஒரு பொருளுக்கோ மீட்ட முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்துவதையே பிரச்சனையாக நான் கருதுகின்றேன்."இதுவே பிரச்சனைக்கான சரியான பொருளாக இருக்கும் என்றும் நான் நம்புகின்றேன்.இன்னும் இங்கு "மீட்ட முடியாத பெரும் சேதத்தையே" பிரச்சனைக்கான பெரும் காரணமாகவும் நான் கருதுகின்றேன்.
இன்றைக்கு சிறிய விஷயத்திற்காகவெல்லாம் ஊரை இரண்டாக்கும் மனிதர்களுக்கு இதனை மிக அழுத்தமாக சொல்லவும் நான் விரும்புகின்றேன். உண்மையில் அத்தகைய பக்குவமற்ற மனிதர்களிடம் நாம் மாட்டிக்கொள்வது மிகப்பெரும் சாபம் என்றே நான் கருதுகின்றேன்.ஆக இங்கு நான் வலியுறுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால் முதலில் பிரச்சனை என்றால் அது உங்களுக்கு பெரிய அளவில் மீட்ட முடியாத அளவிற்கு பாதிப்பை தருவதாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதேயாகும். ஏனென்றால் வாழ்வில் எந்த மாற்றங்களையும் தந்துவிடாத ஒரு காரியத்தை தன்னுடைய பிரச்சனையாக பார்ப்பவனைவிட மிகப்பெரிய முட்டாள் இந்த உலகில் வேறு யாருமில்லை என்றே நான் கருதுகின்றேன்.
எனவே உங்கள் வாழ்வில் எதையெல்லாம் உங்கள் மன நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனையாக இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அது உண்மையில் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியை பாதிப்பதுதானா?என்று ஒரு கனம் சீர்தூக்கிப்பாருங்கள்.இல்லை என்ற பதில் கிடைத்தால் முதலில் அவற்றை உங்கள் மனதிலிருந்து பிடிங்கி எறியுங்கள்.இதுவே உங்களின் மனம் சார்ந்த அந்த பிரச்சனைக்கு முதல் தீர்வாகும்.அடுத்தபடியாக உண்மையிலேயே உங்கள் வாழ்வில் ஒரு விஷயம் பிரச்சனையாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதாவது உண்மையிலேயே அது உங்களுக்கு மனதளவிலோ அல்லது பொருளலவிலோ அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பை தந்தால் அப்பொழுது அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளை உங்களுக்கு இங்கு நான் பதிவுசெய்கின்றேன். அவற்றில் எது உங்களுக்கு சரியாகப்படுகின்றதோ அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
1. அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்களுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை ஒப்பீடு செய்துபாருங்கள்.அது உங்களுக்கு மிக அவசியமானதாகவோ அல்லது அது இல்லாமல் நீங்கள் பெரும் துன்பத்திற்குள் ஆளாவீர்கள் என்றோ நீங்கள் எண்ணினால் அந்த பிரச்சனையை உங்கள் ஆழ்மனதால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.அவற்றை சிறிது காலம் சகித்துக் கொண்டு கடந்துசெல்ல முடிவுசெய்யுங்கல்.உண்மையில் இதையும் ஒரு உண்ணதமான செயலாகவே நான் காண்கின்றேன்.
இத்தகைய சகிப்புத்தனமையைத்தான் அனைத்து மதங்களும் அதன் தலைவர்களும் உயர்ந்த செயலாக போதித்திருப்பதாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் இத்தகைய பொறுமையையே நம்முடைய நெருங்கிய உறவினர்களான தாய் தந்தையரிடமும் மனைவி மக்களிடமும் காட்டவேண்டும் என்றும் நான் விரும்புகின்றேன்.நான் மேலே பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது என்று கூறியதை தவறுகள் செய்யாத மனிதர்களே கிடையாது என்றும் நீங்கள் விளங்கிக்கொள்ளலாம்.எனவே இதனை ஒரு பொது விதியாக நீங்கள் புரிந்து கொண்டால் நான் கூறும் இந்த சகிப்புத்தன்மை நிச்சயமாக உங்களுக்கு பாரமாக இருக்காது என்றே நான் நம்புகின்றேன்.
நமக்கு ஏதோ ஒரு நிலையில் சில துன்பங்கள் தந்துவிட்டார்கள் என்பதற்காக ஒவ்வொருவரையும் நாம் தூக்கிஎறிந்துவிட வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஒரு கட்டத்தில் நம்மை நாமே நாம் வெறுக்க ஆரம்பித்துவிடுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.ஆக உண்மையிலேயே உங்களுக்கு சில கஷ்டங்களை தரும் பிரச்சனை இருக்கின்றது என்றால் அது தூக்கி வீசிவிட தகுதியானதுதானா என்பதில் ஒன்றுக்கு நூறு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.அதனை சீர்செய்துவிட முடியும் என்றோ அல்லது அது உங்கள் வாழ்வையே இழக்கும் அளவிற்கான பிரச்சணையல்ல என்றோ எண்ணினால் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்ள தொடருங்கள்.
அதற்காக வேண்டுமென்றே உங்களை எப்பொழுதும் மிக மோசமாக நடத்தப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று இங்கு நான் ஒருபோதும் கூறமாட்டேன்.ஆனால் இந்த உலகில் மிகச்சரியானது என்ற ஒன்று இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் என்பதை மட்டுமே இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.ஆக உங்கள் உண்மையான பிரச்சனைக்கு அதனை கொடுப்பவர்களை கருத்தில் கொண்டு ஏற்றுக் கொள்வதும் ஒரு சிறந்த தீர்வாகவே நான் காண்கின்றேன்.ஆனால் அதனை கட்டாயம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதில் எனக்கு எந்த உடன்பாடுகளும் கிடையாது என்பதையும் இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.
2. உங்களுக்கு அந்த கஷ்டங்களை கொடுப்பது உங்கள் உயிரிற்கோ அல்லது உடலுக்கோ அல்லது உங்களின் முக்கிய உடமைக்கோ பெரும் பிரச்சனையாக மாறிவிடும் என்று நினைத்தால்,அல்லது அதனை பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாது என்று எண்ணிணால் அதனை விட்டும் முடிந்தளவு தூரமாகிவிடுங்கள்.அல்லது அதனை தூரமாக்கிவிடுங்கள்.இவைகளுக்கு முடிந்தளவு சட்ட ரீதியிலான தீர்வுகளை காணவேமுற்படுங்கள்.ஆக இவற்றையே பெரும் பிரச்சனைகளுக்கான தீர்வாக நான் கருதுகின்றேன். அடுத்தபடியாக இந்த பெரும் பிரச்சனைகளை பெரும்பாலும் தவிர்த்துகொள்வதற்கு ஒரு சில வழிமுறைகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தளவு அவற்றையும் கடைபிடித்து வாருங்கள்.அவை பெரும்பாலும் உங்களை பிரச்சனையை விட்டும் காப்பாற்றலாம்.
- உங்களுக்கும் உங்களை நம்பி இருப்பவர்களுக்கும் மிக நேர்மையாக இருங்கள்.
- உங்கள் பொருளிலிருந்து அவ்வப்பொழுது தர்மம் செய்து வாருங்கள்.
- அனைவருடனும் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்.
- சமூகத்திற்கு பெரிய அளவில் தொல்லை தருபவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.
- உங்கள் உடல் வலிமையையும் ,மனவலிமையும் வளர்ப்பதை கடைபிடியுங்கள்.
- யாரைப் பார்த்தும் பயப்படாதீர்கள்.