![]() |
கடன் நல்லதாகெட்டதா |
கடன் என்று சொன்னவுடனே நம்மில் பலருக்கும் தலை தெறிக்க ஓடுவதுதான் நியாபகம் வரலாம்.அந்த ஓட்டம் கொடுப்பதற்கு முன்னாலும் இருக்கலாம் அல்லது கொடுத்ததற்கு பின்னாலும் இருக்கலாம்.அதாவது கடன் கேட்கப் படுபவரும் சில சமயம் கடன் கேட்க வருபவர்களைப்பார்த்து ஓடுவார் அல்லது கடனை வாங்கியவர் கடனை வாங்கிய பிறகு திருப்பிக்கொடுக்க முடியாமல் ஓடுவார்.இத்தகைய நிலைகளையே கடன் சம்மந்தப்பட்ட கொடுக்கல் வாங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால் கடனில் ஒரு சுவாரஸ்யமான பகுதியும் இருக்கின்றது.அது என்ன என்பதை இங்கு நான் குறிப்பிட்டுகாட்டுகின்றேன்.அதற்கு பிறகு நீங்களே கடன் நல்லதா ?கெட்டதா எனபதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.இன்றைக்கு உலகின் மிகப்பெரும் கோடிஸ்வரர்கள் அனைவருமே கடனால் உயர்ந்தவர்கள் தான் என்று நான் கூறினால் உங்களால் ஏற்க முடியுமா?நீங்கள் ஏற்கவில்லை யானாலும் அதுதான் உண்மை.இன்னும் சொல்லப்போனால் பல ஆயிரம் கோடி அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்தாலும் இன்றும் அவர்கள் அவ்வப்பொழுது கடன் பெற்றுக்கொண்டும் செலுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நாமெல்லாம் கவணிக்க தவறிவிட்ட உண்மையாகும்.
ஏன் அவர்கள் அவ்வாறு செய்துவருகின்றார்கள் என்று பார்ப்போமேயானால் அதற்கு பின்புலத்தில் சில அற்புதமான இரகசியங்கள் ஒழிந்திருப்பதை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.எனவே அவர்கள் அந்த கடனை எந்தளவு வாங்குகின்றார்கள் என்பதையும் அதனை எதற்காக வாங்குகின்றார்கள் என்பதையும் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவற்றில் சிலவற்றை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.
உண்மையில் பள்ளி கல்வியோ அல்லது கல்லூரி கல்வியோ கடனைப் பற்றியோ அல்லது அதனை எவ்வாறு லாபகரமாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியோ பெரும்பாலும் சொல்லித்தருவதில்லை.இதனாலேயே பெரும்பாலானோர் கடனை பார்த்து பயந்து ஓடிவிடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.ஆனால் கோடிஸ்வரர்களை பொறுத்த வரைக்கும் கடனை ஒரு அற்புதமான வரப்பிரசாதமாக பார்க்கின்றனர்.அதாவது தன் வருமானத்தை இரட்டிப்பாக்கிக்கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவே காண்கின்றனர்.
இதனாலேயே தன்னிடம் முழு பணம் கொடுத்து ஒரு வீட்டையோ அல்லது வாகனத்தையோ வாங்கிவிட முடியும் என்றாலும் அதனை சிறிய வட்டியில் தவனை முறையில் எடுத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் அவர்களின் மீதி பணத்தை ஏதேனும் வியாபாரத்தில் முதலீடு செய்து அப்பணத்தை அவர்கள் இலகுவாக மீட்டிக் கொள்கின்றனர்.மேலும் அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளையும் பெற்றுவிடுகின்றனர்.தங்கள் பணத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்திவிடுகின்றனர்.
இதனைத்தான் "ரிச் டாட் பூர் டாட்"என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசகி"பணத்தை தனக்காக வேலை செய்ய வைப்பது"என்று கூறுகின்றார். இவ்வாறு அவர்கள் செய்வதால் கடனில் வாங்கப்படும் அப்பொருளுக்கு வரி விலக்கும் வழங்கப்படுகின்றது என்பது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் இரட்டிப்பு சந்தோஷமாகும்.இதனாலேயே பெரும்பாலும் அவர்கள் ஏதேனும் முக்கிய பொருளாக இருந்தாலும் அவற்றை கடனில் பெற்றுக்கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக இருக்கின்றது.
ஆக அவர்களின் கடன் என்பது அவர்களின் எதிர்காலத்தை செழிப்பாக்குவதற்காகவே இருக்கின்றது என்பதால் அவர்கள் கடன் நல்லது என்றே கூறுகின்றனர்.ஆனால் மற்றொரு சாரார்களையும் இங்கு நாம் கவணிக்க கடமைபட்டுள்ளோம்.அதாவது கடன் கிடைக்கின்றது என்பதற்காக நாலாபுறமும் வாங்கி தன் தலைமீது சுமைக்கு மேல் சுமையை ஏற்றிக்கொள்ளும் புன்னியவான்கள்தான் அவர்கள்.
சில வங்கிகள் தங்களின் வியாபாரம் செழிப்பதற்காக கடன் அட்டைகளை கொடுத்து உதவுவதாக சொல்லிக்கொண்டு வரும்பொழுது அதனை பெற்று கண்ணில் காண்பதை எல்லாம் வாங்கிவிட்டு பிறகு அதனை கட்டமுடியாமல் விழிபிதிங்கி நிற்கும் மகான்கள் என்றே அவர்களை சொல்லலாம். அவர்கள்தான் கடனை கெட்டதாக ஆக்குகின்றார்கள்.அந்த கடன்தான் மிக கெட்ட கடனாகும்.ஏனெனில் கடனை வாங்கி ஆசைகளை நிறைவேற்றுவது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்பதாகவே ராபர்ட் கியோசகி குறிப்பிட்டு காட்டுகின்றார்.கடன் என்பது இரட்டிப்பு இலாபம் தந்தால் மட்டுமே அது சரியானதாகும் என்பதையும் மிக ஆழமாக உணர்த்துகின்றார்.அவ்வாறே கடன் வாங்கும் பொழுது பெரும்பாலானோர் கவணிக்க தவறிவிடும் இரண்டு அடிப்படைகளையும் விளக்குகின்றார்.
1.குறுகிய காலத்தில் கட்டிமுடித்துவிடும்படியான கடனை பெறுங்கள் என்கிறார்.
2.அல்லது குறைவான தொகையில் நீண்ட காலதவணையை பெறுங்கள் என்பதாக குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நாம் செய்வதால் நம் பொருளாதார நிலை சீரானதாக இருக்க முடியும் என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.ஆகவே தோழர்களே..!மேற்கூறிய இரண்டு சாரார்களையும் உங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள் எந்த சாரார்களாக இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் கடன் நல்லதா? அல்லது கெட்டதா?என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எழுத்தாளர்:
Dr.S.Dhana Priya