ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)

யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)
யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)

பார்க்கின்ற எவரையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?அல்லது அனைவரையும் ஏதோ ஒருவிதத்தில் இப்படித்தான் என்று நீங்களாகவே முடிவு செய்கின்றீர்களா?அப்படியானால் உங்கள் வாழ்வில் நீங்கள் பெரும் பகுதியை தொலைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுதேனும் உணர்ந்து கொள்ள கடமைபட்டிருக்கின்றீர்கள்.ஒருவரை பார்த்த உடனே அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்பட்ட உடனே அவரை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ முடிவு செய்வது என்பது ஒரு உயர்ந்த மனிதனின் செயலாக இருக்க முடியாது என்பதே மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்தாகும் .

ஏனென்றால் இந்த உலகில் ஒருவரை பார்த்தவுடனோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விபட்டவுடனோ முடிவு செய்வது என்பது பெரும்பாலும் தவறான முடிவிற்கே இட்டுச்செல்கின்றது என்ற உண்மையை நம்மால் நிதர்சன உலகில் ஒவ்வொரு நாளும் காணமுடிகின்றது.இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் எந்த மனிதரும் நேற்று இருந்ததுபோல் இன்று இருப்பதில்லை.இன்று இருப்பதுபோல் நாளை இருப்பதில்லை என்பதேயாகும்.

ஒரு தீயமனிதர் நாளையே நல்ல செயல்களை செய்ய முடியும் என்றிருக்கும் பொழுது அவரை நாம் எவ்வாறு தீயவர் என்று முடிவெடுக்க முடியும்.?அவ்வாறே ஒரு நல்ல மனிதர் நாளையே தீய செயல்களை செய்ய முடியும் என்றிருக்கும் பொழுது அவரை எவ்வாறு நாம் நல்லவர் என்று முடிவு செய்ய முடியும்..? எனவே ஒருநபரை குறிப்பிட்ட சில செயல்களை வைத்து சரியானவர் என்றோ அல்லது தவறானவர் என்றோ சொல்வது மடைமையின் உச்சம் என்றே மனோ தத்துவ நிபுனர்கள் நமக்கு சுட்டிக்காண்பிக்கின்றனர்.

இதனைத்தான் நம் முன்னோர்கள் "கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் 'தீர விசாரிப்பதே மெய் "என்று உபதேசித்து விட்டு சென்றுள்ளனர் என்பதையும் இங்கு நான் சுட்டிகாண்பிக்க கடமைபட்டுள்ளேன்.அவ்வாறே அரபு நாட்டின் மூன்றாவது ஆட்சியாளரான உமர் (ரழி)அவர்களும் இதனைத்தான் "தன்னிடம் ஒரு கண்ணை கையில் எடுத்துக் கொண்டு வந்து இன்னார் என்னுடைய கண்ணை பிடுங்கிவிட்டார் என்று ஒருவர் முறையிட்டாலும் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்து விசாரிக்காத வரை அவர் விஷயத்தில் நான் எந்த தீர்ப்பையும் வழங்கமாட்டேன் என்று கூறிக்காண்பித்துள்ளார்கள்.

இங்கு தீர விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் பலரும் பிறரின் குறைகளை அலசி ஆராய்ச்சி செய்வது சரியே என்று தங்களின் அற்ப செயலுக்கு வியாக்கியானம் அளிக்க கிளம்பிவிடுவார்கள்.உண்மையில் இங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நாம் விளங்கிக்கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.அதாவது நம்மில் பலரும் ஒருவரை தீயவராக சித்தரிப்பதற்காகவே பல்வேறு ஆராய்சிகளை முடுக்கிவிடுகின்றோம் என்பதே அந்த ஆராய்ச்சியை சாபக்கேடு நிறைந்த ஆராய்ச்சியாக மாற்றிவிடுகின்றது என்பது துரதிஷ்டகரமானதாகும்.

ஏனென்றால் இங்கு ஒரு மனிதரைப்பற்றி தவறாக பேசப்படுவது என்பதே பெரும்பாலும் காழ்ப்புணர்ச்சியாலும் அல்லது பொறாமையாலும் அல்லது அம்மனிதர் மீதான தனிப்பட்ட வெறுப்பினாலுமே உமிழப்படக்கூடியதாக இருக்கின்றது என்பதால் பிற மனிதர்களை நாம் ஆய்வு செய்வதற்கோ, குறிப்பாக நம்முடைய வாழ்வோடு சம்மந்தப்படாத ஒரு மனிதரைப் பற்றி ஆய்வு செய்வதற்கோ அல்லது கருத்து சொல்வதற்கோ நாம் எவ்வித அருகதையுமற்றவர்கள் என்பதே எனது கருத்தாகும்.

ஏனெனில் இங்கு பலரும் தன்னை தவிர்த்து இந்த உலகில் நம்புவதற்கோ, அல்லது பழகுவதற்கோ அல்லது ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கோ சிறந்த ஒரு மனிதர் வேறு எவரும் இல்லை என்ற ஆணவத்தோடு சுய நலனிற்காக மடும் "பார்க்கின்ற அனைவரின் மீதும் சேற்றை வாரி வீசும் பழக்கமுடையவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நம்மால் காண முடிகின்றது.உண்மையில் இன்று ஒருவர் எத்துனை ஆயிரம் நலவுகள் செய்தாலும் அவரிடமுள்ள ஏதேனும் ஒரு குறையை பேசுவதிலேயே இன்றைய மக்கள் இன்பம் கண்டு மகிழ்கின்றனர் என்பதை நம்மால் மறுக்க முடியுமா

உண்மையில் சொல்லப்போனால் இந்த உலகில் நல்ல விஷயங்களும் நல்ல மனிதர்களும் இல்லாமலெல்லாம் இல்லை.மாறாக நல்லவர்களின் செயல்களையும்,அவர்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள் என்பதே எனது கண்ணோட்டமாகும்.எனவே அண்பர்களே..!உங்களால் முடிந்தளவு நீங்கள் சந்திக்கும் எவரையும் இவர் இப்படித்தான் என்று மூன்பே முடிவெடுக்காதீர்கள்.அவர்களை அவர்களாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்துபாருங்கள்.உண்மையில் அது உங்களின் மீது ஒரு பெரும் மதிப்பை உங்களுக்கே ஏற்படுத்தச்செய்யும்.

உங்கள் வாழ்வில் ஏதேனும் உயர்ந்த செயலை செய்ய நினைத்தால் தயவு செய்து உங்கள் செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருங்கள்.யாரையும் குறைத்தும் மதிப்பிடாதீர்கள்.நிறைத்தும் மதிப்பிடாதீர்கள்.அது நமக்கு தேவையற்றது என்று ஆழமாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் இந்த உலகில் எல்லோரும் பலம்,மற்றும் பலஹீனம் இரண்டும் கலந்த கலவைகளாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதை எக்காலமும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..!

இங்கு மிகச்சரியானது என்ற ஒன்றுமில்லை,மிக மோசமானது என்ற ஒன்றுமில்லை.எல்லாம் மாறுதலுக்குறியதே என்பதை நினைவில் நிறுத்தி உங்கள் வாழ்வின் பாதையில் நடைபோட்டுக் கொண்டே இருங்கள். இழப்புகலோ,தோல்வியோ ஏற்பட்டால் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.பிறிதொறுமுறை நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்கள் சிறந்த மனிதராக நிறூபிக்க முடிந்தளவு முயற்சி செய்யுங்கள்.!

நன்றி:

அ.சதாம் உசேன் ஹஸனி

Previous Post
Next Post