![]() |
கல்வி அறிவும் மனித வாழ்வும் |
கல்வியின் முக்கியத்துவம்.
கல்வி அறிவே இந்த உலகின் பல்லாயிரம் உயிரனங்களுக்கு மத்தியில் மனிதனை வேறுபடுத்திக்காட்டும் அற்புத சக்தியாக இருக்கின்றது.மேலும் இதுவே ஒரு மனிதனை தனித்துவப்படுத்தி அடையாளம் காட்டும் மகத்தான அடையாளச் சின்னமாகவும் இருக்கின்றது.ஒரு மனிதனிடம் காணப்படும் கல்வி என்பது ஒரு காலியான பாத்திரத்தில் நிறம்பி இருக்கும் அருசுவை பானத்தைப் போன்றதாகும்.அல்லது வரட்சியான ஒரு தரிசு நிலத்தில் பூத்துக் குழுங்கும் மலர்ச் சோழையைப் போன்றதாகும்.
அவற்றால் அம்மனிதர் பலனடைவதோடு அவரை சுற்றியுள்ளோரையும் அவரால் பலனடையச் செய்துவிட முடியும்.இன்னும் இத்தகைய மனிதரால் இந்த உலகை பூஞ்சோழையாக மாற்றியமைக்கவும் முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.இதற்கு அற்புதமான முன் உதாரணம் நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே.அவர் தன்வாழ்வில் கல்வியின் கேந்திரமாக திகழ்ந்தார்.எனவே சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் அடைமொழியிற்கும் சொந்தக்காரரானார்.
மேலும் இந்த உலகில் அற்புதமான சக்திகளை உறுவாக்கும் திறன் கல்வியாளர்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை மிக ஆனித்தரமாக வலியுறுத்தியும் சென்றார்.அவ்வாறே கல்வியின் சிறப்பு குறித்து பேசியபோது "நீங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று விரும்பினால் உங்கள் சந்ததியினருக்கு கல்வியை போதியுங்கள்"என்று மஹாத்மா காந்தி அவர்களும் போதித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.
அவற்றைப் போன்றே இந்த உலகை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் அது கல்வி மட்டுமே என்று நெல்சன் மன்டேலா அவர்கள் கல்வியின் அவசியத்தை விவரித்திருப்பதையும் இங்கு நான் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.ஆக அன்பர்களே!கல்வியால் மட்டுமே உங்களை நீங்கள் ஒரு அற்புத மனிதராக கட்டியமைத்துக் கொள்ள முடியும் என்பதையும்,இந்த கல்வியால் மட்டுமே ஒரு அற்புதமான சுற்றுச்சூழலையும் உங்களால் கட்டியமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் ஆழமாக உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடலை கட்டுடலாக அமைத்துக்கொள்ள எப்படி பல்வேறு கடினங்களை ஏற்க தயாராகின்றீர்களோ அதனைப் போன்றே உங்கள் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். உங்களுடைய கல்வி அறிவையே தனித்துவமிக்க உங்கள் அடையாளமாக இவ்வுலகிற்கு நீங்கள் விட்டுச்செல்லவேண்டும் என்ற வேட்கையோடு வாழ்வை நகர்த்துவதற்கு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.நம்மில் சிறியவர் பெரியவர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி பெரும்பாலானோர் அடிப்படை கல்வியையும் கூட கற்றுக்கொள்ள விரும்பாமல் இருப்பது மிகப் பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.
வீண் கேளிக்கைகளிலும்,வேடிக்கைகளிலும் அதிகமான நேரத்தை கழிக்கும் நாம் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வழிகளை அமைத்துக் கொள்வதற்கான திட்டங்களை யோசித்துப்பார்ப்பதே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கின்றது.நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கோ,நற்சிந்தனையை தூண்டுவதற்கோ,நல்ல உரையாடல்களை கேட்பதற்கோ,கல்வியாளர்களை சந்திப்பதற்கோ நேரமில்லை என்று கூறும் நாம்தான் பலமணி நேரங்கள் எவ்வித நோக்கமுமின்றி தொலைக்காட்சியின் முன்பும்,தொலைபேசியின் முன்பும் அமர்ந்து நேரத்தை வீணடிக்கின்றோம் என்பதை மனசாட்சியோடு சற்று யோசித்துப்பார்க்க கடமை பட்டிருக்கின்றோம்.
அண்பர்களே இறுதியாக ஒன்றை கூறிக்கொள்கின்றேன்."உங்கள் கல்வியின் தரமே உங்களின் தரம்" என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்,"தயவு கூர்ந்து இன்றிலிருந்து கற்பதை தொடருங்கள்!உங்கள் வாழ்வை மெறுகூட்டிக் கொண்டே செல்லுங்கள்.!அடுத்தபடியாக நாம் அரசால் எப்படி கல்வியூட்டப்படுகின்றோம் என்பதை குறித்து ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.
அடிப்படை கல்வியும் அரசும்.
உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆரம்பத்தில் இன்னபொருள் இது வென்றுகூட அறியமுடியாதவனாகவே பிறக்கின்றான்.பிறகு வாழ்வின் நேரடி அனுபவங்களால் நெருப்பு என்பது சுடும் என்றும்,பனி என்பது குளிரும் என்றும் கற்கத்தொடங்கினான்.இப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் கல்வியறிவும் அவனுக்குள் தொடக்கமாகியது என்பதை நாமெல்லாம் நன்றாக அறிந்திருப்போம்.இந்த கல்வி அறிவு என்பது ஒவ்வொரு மனிதனின் அனுபவம், மற்றும் சுற்றுச்சூழைலை பொறுத்து மாறுபட்டும் காணப்படுகின்றது.
ஆம் இந்த கல்வி அறிவு என்பது எல்லோருக்கும் ஒரே அளவுகோளில் இருப்பது கிடையாது.ஒவ்வொரு மனிதனின் அணுகுமுறைக்கும்,அவனுடைய செயல்பாட்டிற்கும் தகுந்தவாறு அது மாறுபட்டுக்கொண்டே செல்கின்றது.ஆக மனித கல்வி அறிவு என்பது எல்லோராலும் அடைந்து கொள்ள முடிந்த பலதரப்பட்ட அனுபச்சிதறல்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஏனெனில் இந்த உலகில் எத்துனை வகையான பொருட்கள் உள்ளதோ அத்துனை வகையான அனுபவங்களையும் கல்வியையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இதன் அடிப்படையில்தான் இன்றைய அரசும் மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான படிநிலைகளை மட்டும் பாடதிட்டமாக வகுத்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது.மேலும் அவற்றில் மொழி சார்ந்த இலக்கண இலக்கிய பாடங்களையும்,கணிதம் சார்ந்த எண்ணிக்கை பாடங்களையும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பாடங்களையும்,வரலாறு சார்ந்த மனித வாழ்வியல் பாடங்களையும் மொத்த தொகுப்பாக தொகுத்து பாட புத்தகங்களாக அச்சடித்து கற்பித்துக்கொண்டிருக்கின்றது.
இவற்றையெல்லாம் ஒரு மனிதன் கற்பதின் மூலம் தன் வாழ்வின் பெரும்பங்கை தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களால் அல்லாமல் முந்தய அனுபவங்களின் புத்தக தொகுப்புகளாலேயே மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என்ற நோக்கத்தில் அரசு இவ்வாறு செய்து வருகின்றது.என்னைப் பொருத்தமட்டில் இத்தைகைய கல்விமுறை என்பது மிக அவசியமான எல்லோருக்குமான அடிப்படை கல்வி முறை என்றே பார்க்கின்றேன். இத்தைகைய கல்வியை அரசு ஒவ்வொரு மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வியாக கொடுப்பது மிகப்பெரும் வரப்பிரசாதமேயாகும்.
மேலும் இத்தகைய கல்வியை அனைத்து மாணவர்களும் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காகவே அரசு பல்வேறு சலுகைகளையும் மாணவர்களுக்கு வழங்குவது என்பது மகத்தான செயலாகவே நான் கருதுகின்றேன்.ஆகவே கல்வியை கொடுப்பதில் அரசு நல்ல பல திட்டங்களையே நடைமுறை படுத்துகின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.இது விஷயத்தில் அரசை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரங்களும் கிடையாது என்பதே எனது வாதமுமாகும்.
ஆனால் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத மக்களே நம்மில் அதிகம் காணப்படுகின்றனர் என்பதை நம் யாராலும் மறுக்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்.இன்றைய தலைமுறையே இதற்கு மிகப்பெரும் எடுத்துக் காட்டாக இருக்கின்றது என்பதாகவும் நான் கருதுகின்றேன்.கட்டுரையின் விரிவு கருதி இக்கட்டுரையை இத்தோடு முடித்துக் கொள்கின்றேன்.பின்வரும் கட்டுரையில் இன்றைய மாணவர்கள் கல்வியை கற்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும், இன்றைய மாணவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது குறித்தும் விவரிக்கின்றேன்.