![]() |
நீங்களும் தலைவனாகலாம். |
முன்னுரை:
இந்த உலகத்தில் எல்லோரும் தான் ஒரு பெரிய தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தோடே வாழ்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் தலைவனாகும் ஆசையில்லாத மனிதர்களே மிக அரிது என்றும் குறிப்பிடலாம்.அத்தகைய ஆசை உங்களுக்கும் இருந்தால் அது ஒன்றும் தவறில்லை.ஆனால் அவற்றை அடைவதற்கான சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்வது என்பது தலையாய கடமையாகும்.இந்த உலகில் எவரும் பிறக்கும் பொழுதே தலைவர்களாக பிறக்கவில்லை என்பதனால் நீங்களும் தலைவனாக முடியும் என்ற நம்பிக்கையோடு கீழே நான் குறிப்பிடும் ஒரு சில தகுதிகளை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் ஒரு நல்ல தலைவனாகலாம்..!
ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய முதல் தகுதி:
1."உயர்ந்த சிந்தனை.".
ஏனென்றால் உயர்ந்த சிந்தனையே ஒரு மனிதனையும் அவனை நம்பியுள்ள மக்களையும் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்லும் அற்புத உந்து சக்தியாக இருக்கின்றது.இத்தகைய சக்தியில்லாதவர்களால் நிச்சயம் மக்களை சீராக வழி நடத்த முடியாது என்பதே அனைத்து மனோ தத்துவ நிபுனர்களின் ஏகோபித்த முடிவாகும்.எனவே நீங்கள் தலைவனாக வேண்டும் என்று விரும்பினால் உங்கள் சிந்தனை திறனை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள்.
அதற்கு நல்ல பல புத்தகங்களை வாசியுங்கள்.அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை கிரகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நேற்றைய வாசிப்பாளர்கள்தான் இன்றைய தலைவர்களாக இருக்கின்றார்கள்.அவ்வாறே நல்ல அறிஞர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.அவர்களோடு சிறிது நேரம் உரையாடுங்கள்.இதனால் நிச்சயம் உங்களுடைய சிந்தனை திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.
இரண்டாவதாக ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி:
2."பேச்சாற்றால்"
அதாவது தான் கொண்ட கொள்கையை அல்லது சரியான பாதையை மக்களிடம் அழகிய முறையில் விளக்கிச்சொல்லும் அளவிற்கு ஒரு தலைவனிடம் நாவன்மை இருப்பது இன்றியமையாததாகும்.உங்கள் சிந்தனையிலும்,எண்ணத்திலும் எத்துனை பெரிய உண்மை பொதிந்திருந்தாலும் அதனை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி விளக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லையானால் நீங்கள் செய்யும் நற்காரியங்களும் கூட தீய நோக்கமுடையதாக சித்தரிக்கப்பட்டு உங்களுக்கு அதுவே பெரும் பிரச்சனையை தரக்கூடியதாக மாறிவிடும்.எனவே ஒரு நல்ல தலைவன் தன் நிலைப்பாட்டை மிகத்தெளிவாக மக்களுக்கு புரியச் செய்யும் ஒருவனாக இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததே..!
மூன்றாவதாக ஒரு தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:
3.பொறுப்பேற்கும் திறன்"
அதாவது தன்னை நம்பி வரும் மக்களுக்கு தானே முன்வந்து முழுவதுமாக பொறுப்பேற்கும் தகுதி ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக நல்ல விஷயங்களில் மக்களை முன்நிற்கவிட்டுவிட்டு பிரச்சனை என்று வரும்பொழுது ஒரு தலைவனே முன் விரிசையில் வந்து நிற்க வேண்டும். இதுவே தலைமைத்துவத்தின் மிக அவசியமான பண்பாகும். பிரச்சணைகளை கண்டு ஒழிந்து கொள்வதோ அல்லது யாரோ செய்த ஒரு நல்ல காரியத்திற்கு தான் பெயர் வாங்க நினைப்பதோ ஒரு நல்ல தலைவனுக்கு ஒருபோதும் அழகாகாது.எனவே நீங்கள் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் மக்களின் குறை நிறைகளுக்கு பொறுப்பேற்க தயாராகிக்கொள்ளுங்கள்.
நான்காவதாக ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:
4."மக்களிடம் குறைகளை கேட்குமளவு பணிவு "
அதாவது மக்கள் சகஜமாக சந்தித்து தங்கள் குறையை சொல்லும் அளவிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.தான் தலைவன் என்ற கர்வத்தில் மக்களை தூரமாகவே வைத்து பாவிப்பது என்பது ஒரு நல்ல தலைவனின் செயலாகாது.அதனால் நிச்சயமாக மக்கள் அந்த தலைவனின் மீது அதிர்ப்தியே கொண்டிருப்பார்கள்.மேலும் அதனால் அந்த தலைவனும் கெட்டு மக்களும் கெட்டுப்போவதே முடிவாக அமையும்.
எனவே ஒரு நல்ல தலைவன் தன் மக்களை அவ்வப்பொழுது சந்தித்து அவர்களின் குறை நிறைகளுக்கு செவி சாய்க்கும் அளவு பணிவு கொண்டிருக்க வேண்டும்.நீங்களும் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலவில் கவனம் செலுத்துங்கள்.அவர்களின் இன்ப துன்பங்களில் அவ்வப்பொழுது பங்கெடுக்க முயற்சி செய்யுங்கள்.
ஐந்தாவதாக ஒரு தலைவனிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான தகுதி:
5.தனித்து நிற்கும் துணிவு "
தலைமைத்துவம் என்றாலே நிச்சயம் அதற்கு ஒரு எதிர் பகுதி இருக்கும். அத்தகைய எதிர்பகுதியை மிக சமயோஜிதமாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் செயல்படவிடாமல் தடுக்கும்பொழுதெல்லாம் துணிந்து செயல்பட வேண்டும்.மக்கள் ஏசுகின்றார்கள் என்பதற்காக தன் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு ஓடிவிடக்கூடாது.அச்சமயங்களில் தான்கொண்ட கொள்கையில் நிலையாக நின்று தன் துணிவை நிறூபிக்க வேண்டும்.ஏனெனில் மக்கள் குறைகூறுகின்றார்கள் என்பதற்காக ஓடி ஒழிந்துகொள்பவர் நிச்சயமாக ஒரு நல்ல தலைவனாக முடியாது.எனவே நீங்கள் நல்ல தலைவனாக விரும்பினால் மக்களிடமிருந்து வரும் அனைத்தையும் சந்திக்கும் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.தலைமைத்துவத்தில் பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்ப்பதென்பது முட்டாள்தனத்தின் உச்சம்.
ஆகவே மேற்கூறிய இந்த ஐந்து தகுதிகளையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கிய பண்பாக நான் பார்க்கின்றேன்.இது அல்லாமல் மேலும் பல பண்புகளும் உண்டு என்றாலும்,இந்த ஐந்து தகுதிகளுமே ஒரு நல்ல தலைவனுக்கு போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அவற்றையே இங்கு பதிவும் செய்திருக்கின்றேன்.முடிந்தளவு கடைபிடித்துப்பாருங்கள்.
அவ்வாறே ஒரு சமூகத்திற்குத்தான் நீங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.உங்களுக்கு நீங்களும் தலைவனாக இருக்க முடியும். மேலும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்.இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எந்தளவிற்கு பொறுப் பேற்கின்றீர்கள் என்பதை பொறுத்ததே உங்களுடைய தலைமைத்துவம் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் தலைமைத்துவம் என்பது அதிகாரம் தரும் ஒரு இடம் மட்டுமே என்று நீங்கள் எண்ணுபவராக இருந்தால் தயவுசெய்து அதை அடையும் கனவை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.ஏனெனில் அந்த இடம் தகுதியுள்ள ஒரு நபரால் நிரப்பப்பட வேண்டிய இடமாகும்.அதிகாரத்தை பெறுவதற்கோ அல்லது மக்களை அடக்கியாள்வதற்கோ தயவு செய்து அதனை அடையவிரும்பாதீர்கள்.