![]() |
வெற்றியின் ரகசியம் பயிற்சியே (power of practice) |
இன்றைக்கு வெற்றியாளர்களாக பார்க்கப்படும் அனைவரும் தங்களின் வெற்றிக்கான ரகசியமாக என்ன செய்கின்றார்கள் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுன்டா..? அல்லது அவர்கள் தங்கள் துறையில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்ததற்கு என்ன காரணம் என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா..?இந்த உலகில் வெற்றிபெற்றவர்களின் வரலாறுகள் அனைத்தையும் புரட்டிப்பாருங்கள்! அவர்கள் அனைவரும் தன் வாழ்வில் எதை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்களோ அதில் அளவுகடந்து பயிற்சி எடுத்தார்கள் என்பதை மட்டுமே பெற்றுக்கொள்வீர்கள்...!
ஆம் அண்பர்களே!பயிற்சியாள் மட்டுமே முடியாதது என்ற ஒன்றே இல்லை என்று நிறூபிக்க முடியும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.ஒரு செயலை முதல்முறை செய்யும்பொழுது அதில் நாம் தயங்களாம்.அதனை மறுமுறை செய்யும்பொழுது சற்று அதில் தெளிவைபெறலாம்.பிறகு அதனை திரும்ப திரும்ப செய்யும்பொழுது நாம் அந்த காரியத்தில் வல்லுனர்களாக இயற்கையாகவே மாற்றிவிடுகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இத்தகைய நிலையைத்தான் நான் பயிற்சி என்றும் பெயரிட விரும்புகின்றேன். நான் சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் என்னால் அது முடியாது இது முடியாது என்றே முறையிடுவார்கள்.ஆனால் சிறிது காலத்திலேயே பயிற்சியின் மூலம் அவர்களை நான் பொய்பித்துவிடுவேன்.
ஆம் அண்பர்களே ..!
பயிற்சியின் மூலம் நீங்களே உங்களை பொய்பிக்கமுடியும் என்பதும் எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.உண்மையில் பயிற்சியே மனிதனை திறம்படச்செய்கின்றது என்பதற்கு மனிதனின் இயல்பு வாழ்க்கையிலேயே ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுக்கள் கொட்டிக்கிடக்கின்றன.உதாரணமாக இன்று மிடுக்காக நடக்கும் நாம் சிறுபிராயத்தில் தவழுவதற்கே விழுந்து விழுந்து பயிற்சி எடுத்ததை நம்மால் மறுக்கமுடியுமா?இன்றைக்கு பலநூறு மீட்டர்கள் அதிவேகத்தில் சீரான ஒரு நேர்கோட்டுகுள் ஓட முடிந்த நாம் எழுந்து நிற்பதற்கே தத்தித்ததும்பிநின்றோம் என்பதை மறந்துவிட முடியுமா. இவைகளெல்லாம் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு ஒற்றை பதில்தான்.
அது தான் பயிற்சி..!
போராட்டம் என்னும் பயிற்சியின் மூலமே ஒரு மனிதன் தன்னை உயர்த்தி நிறுத்த முடியும் என்பதை சிறுபிராயத்திலிருந்தே இயற்கை நிர்னயித்து இருக்கின்றது என்ற பெருண்மையை பெரும்பாலானோர் உணர முடியாமல் இருப்பது மிகப்பெரும் கைசேதமாகவே நான் காண்கின்றேன்.எனக்குத் தெரிந்து வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.வெற்றியாளார்கள் ஒன்றை செய்து பார்த்துவிடவேண்டும் என்று தானே முன்வருவார்கள்.தோல்வியாளர்கள் நம்மால் இவையெல்லாம் முடியாது என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.இவ்வளாவுதான் இருவருக்கும் உள்ள வேறுபாடு.
கடலில் நீச்சல் அடிப்பது கடினம்தான்.ஆனால் அது எவ்வளவு இன்பகரமானது என்பதை அங்கு நீந்தி விளையாடும் நீச்சல் வீரர்களிடம் கேட்டுப்பாருங்கள். அது எத்துனை இன்பகரமான விளையாட்டு என்பதை புரிந்து கொள்வீர்கள். மலையில் ஏறுவது கடினம்தான்.ஆனால் அதில் ஏறி சாகசம் செய்யும் தோழர்களிடம் கேட்டுப்பாருங்கள் அது எத்துனை அற்புதமான அனுபவம் என்பதை புரிந்து கொள்வீர்கள்..!
வாகனங்களை இயக்குவது கடினம்தான்.ஆனால் அதில் கை தேர்ந்தவர்களை கேட்டுப்பாருங்கள் அது எத்துனை பிரயோஜனம்மிக்கது என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.ஆக அண்பர்களே இறுதியாக ஒன்றை நினைவூட்டிக் கொள்கின்றேன்.நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்...!
இந்த உலகிலுள்ள அனைத்தும் கடினமானதுதான் அதனை நீங்கள் உங்கள் வயப்படுத்தும்வரை.உங்கள் விடாபயிற்சியாள் எதனை நீங்கள் உங்கள் வயப்படுத்திவிடுவீர்களோ அதுதான் இந்த உலகிலேயே மிக இலகுவான காரியம் என்று நீங்களே பிறகு சாட்சிகூறுவீர்கள்.எனவே உங்களுக்கான எல்லையை முதலில் நீங்கள் உடையுங்கள்..!அயராது பயிற்சி மேற்கொள்ளுங்கள்...!சாதனை என்பது உங்கள் காலடியில் தவளும் பொம்மையாகிவிடும் என்பதை நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றேன்.