![]() |
உங்களிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.(satisfy what you have) |
உங்களிடம் இருப்பதை பொருந்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவதைவிட முதலில் உங்களிடம் இருப்பதின் மதிப்பை உணர்ந்துகொள்ளுங்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.ஏனென்றால் இன்றைக்கு நம்மில் பலரும் தன் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை,தன்னிடம் இருப்பவற்றின் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது.பிறரிடம் இருக்கும் துரும்புகளும்கூட நம் கண்களுக்கு பெரிதாக தோன்றிவிடுகின்றது.ஆனால் நம்மிடமுள்ள பெரும் பெரும் அருட்களெல்லாம் நம் கண்களைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவது என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.
சிறியதோ பெறியதோ நம்மிடமுள்ளவற்றின் மதிப்பை என்றுவரை நாம் உணர்ந்து கொள்ளமாட்டோமோ அன்று வரை நம் வாழ்வில் மன அமைதி என்பதற்கு இடமே இல்லை என்றே நான் கருதுகின்றேன்.இதற்கு உதாரணமாக ஒரு ஏழை வாளிபனின் நிகழ்வை இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு விரும்புகின்றேன்."அவ்வாளிபன் ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்து தன் குடிசை வீட்டில் இருளில் சிறிய வெளிச்சத்திற்கு முன்பாக அமர்ந்து சப்தமிட்டு அழுதுகொண்டிருந்தான்.அப்பக்கமாக கடந்து சென்றவர்களில் சிலரும் அவனுக்கு சில ஆறுதல்கள் சொல்லிவிட்டு கடந்து சென்று கொண்டுமிருந்தார்கள்.
இரவின் இருள் அதிகமாகத்தொடங்கவே,யாருமற்ற அவ்வாளிபனின் அழுகையும் அதிகமாக தொடங்கியது.அப்பொழுது அவ்வழியாக ஒரு துறவி கடந்து செல்லவே,இச்சப்தத்தை அவர் செவியுற்றார்.பிறகு அச்சப்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை நோக்கி நடக்கலானார்.அப்பொழுது இந்த சிறுவன் இருந்த வீட்டின் வாயிலையும் அவர் வந்தடைந்தார்.ஆனால் அச்சிறுவனோ இவரை கண்ட பிறகும் அழுதுகொண்டே இருந்தான்.உடனே அவன் அருகில் சென்ற துறவி அவனுடைய தலையை கோதிவிட்டு,ஓ வாளிபனே நீ ஏன் அழுகின்றாய் என்று கேட்டார்.
என் பெற்றோர்கள் எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று நடந்ததை விவரித்தான்.மேலும் தனக்கென்று இன்று யாருமில்லை என்பதையும் முறையிட்டான்.அதனை கேட்ட துறவி கவலைப்படாதே நான் இருக்கின்றேன் என்றார்.உடனே அவ்வாளிபன் மிக்கநன்றி என்று கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினான்.ஏன் நீ மீண்டும் அழுகின்றாய் என்று அத்துறவி அவனிடம் கேட்கவே.நான் ஏதுமற்றவனாக இருக்கின்றேன்.எனவே என் வாழ்வே முடிந்துவிட்டது என்றே நான் கருதுகின்றேன் என்று அவ்வாளிபன் பதிலளித்தான்.
அவ்வாளிபனின் மனோநிலையை புரிந்துகொண்ட துறவி "அப்படியா உன்னிடம் ஏதுமில்லை என்றே நீ நம்புகின்றாயா என்று திருப்பிக் கேட்டார்.அவ்வாளிபனும் ஆம் என்னிடம் மதிக்கதக்க எதுவுமே இல்லை என்றே நான் நினைக்கின்றேன் என்றான்.அப்படியா...!அப்படியானால் இதோ இந்த சிமிலியின் குமிழியை எனக்கு தருவாயா என்று துறவி கேட்டார். அவ்வாளிபனும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.
துறவியும் அதனை எடுத்துக் கொண்டு அவர் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.ஆனால் சிறிது தூரம் கூட அவர் கடந்திருக்கமாட்டார் அவ்வாலிபனோ "ஐயா துறவியே" சற்று நில்லுங்கள் என்று கூக்குறலிட்டான். அத்துறவியும் நின்றார்."ஐயா நீங்கள் எடுத்துச்சென்ற சிமிலியின் குமிழி இல்லாததால் என் விளக்கு அனைந்து என் வீடே இருளாகிவிட்டது.எனவே தயவு செய்து இந்த குமிழியை என்னிடமே திருப்பி தந்துவிடுங்கள் என்றான். அப்பொழுது அத்துறவியும் புன்முறுவல் பூத்துக் கொண்டே "ஓஹ் இது உனக்கு அவ்வளவு அவசியமான பொருளா"என்று கூறிக் கொண்டே அவ்வாளிபனின் கையில் ஒப்படைத்தார்.
பிறகு கூறினார். "ஓ வாலிபனே இந்த உலகில் நீ எது வைத்திருந்தாலும் அதனுடைய மதிப்பு என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்.உன்னிடமுள்ள எப்பொருளையும் தாழ்வாக கருதாதே...!இவ்வாறு நீ செய்தால் நிச்சயமாக உன் வாழ்வில் நீ மிகச்சிறந்த மனிதனாக வருவாய் என்று உபதேசித்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.அப்பொழுதுதான் அச்சிறுவன் இவ்வுலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கின்றது என்பதை உளமாற உணரத்தொடங்கினான்.பிறகு அக்கிராமத்திலேயே தலை சிறந்த படைவீரனாகவும் திகழ்ந்தான் என்றும் வரலாறு நீளுகின்றது.
நீதி:
இவ்வாளிபனின் மனோ நிலையே இன்றைக்கு பெரும்பாலான மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.பல ஆயிரம் பொருட்களை குவித்துவைத்திருந்தாலும் உங்கள் மனமோ இல்லாத ஒன்றை மட்டுமே காண்பித்து உன்னிடம் ஒன்றுமே இல்லை ஆகவே நீ ஒன்றுமில்லாதவனே என்று நிறூபிக்கத்துடித்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை தூக்கி எறிய தயாராகிக்கொள்ளுங்கள்.மேலும் அவற்றிற்கு உங்களிடமுள்ள பொருட்களின் மீது உள்ள மதிப்பை உணர்ந்து கொள்வதற்கான பயிற்சியை வழங்குங்கள்.இல்லையெனில் உங்கள் வாழ்வு முழுவதும் இருண்ட இருளாகவே அமைந்துவிடும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.