![]() |
கற்றலும் பயிற்சியுமே அதீத தன்னம்பிக்கையை தரும் |
தன்னம்பிக்கையே வெற்றி தரும்.
இந்த உலகில் பிறந்து விட்ட ஒவ்வொரு மனிதனிடமும் காணப்பட வேண்டிய மிகச்சிறந்த ஆற்றல் தன்னம்பிக்கை.அதாவது ஒரு விஷயத்தை தன்னாலும் செய்யமுடியும் என்று நம்புவது என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம் அல்லது தன்மீது எச்சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது என்றும் பொருள் கொள்ளலாம்.இந்த உலகில் சிலர் மட்டும் தங்கள் வாழ்வில் ஜெயிப்பது எப்படி என்று என்னிடம் கேட்கப்படும் சமயங்களிலெல்லாம் நான் கூறும் ஒற்றை பதில் தன்னம்பிக்கையால்தான் என்பதே..!
ஏனெனில் எந்த மனிதன் தன்மீது நம்பிக்கை வைத்துவிடுவானோ அவன் ஆயிரம்முறை தோற்றாலும் நிச்சயமாக அவன் அவன்மீது வைத்த அந்த நம்பிக்கை அவனை ஒரு காலமும் வீணடித்துவிடாது என்பதே எனது ஆழமான நம்பிக்கையாகும்.மேலும் என்றேனும் ஒரு நாள் அவன் ஜெயித்தே தீருவான் என்பதே எழுதப்படாத விதியாக இருக்கின்றது என்பதையும் நான் நிதர்சனமாக கருதுகின்றேன்.
அவ்வாறே எந்த மனிதன் தன் மீதே சந்தேகம்கொள்வானோ அவன் எத்தகைய உச்சியில் இருந்தாலும் என்றேனும் ஒரு நாள் மிகப்பெரும் இழப்பை சந்திப்பான் என்பதையும் நிதர்சனமான உண்மையாகவே நான் காண்கின்றேன்.ஆம் அன்பர்களே..!நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதை கவனித்தே நாம் வெற்றியாளராவதும் தோல்வியாளராவதும் முடிவு செய்யப்படுகின்றது என்பதை தயவுகூர்ந்து என்றாவது ஒருநாள் புரிந்துகொண்டுவிடுங்கள்.
அப்படி ஒருவேளை உங்களால் உங்களை நம்பவேமுடியவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு வழிமுறையை இங்கு நான் குறிப்பிடுகின்றேன் அதனை கட்டாயம் கடைபிடித்து வாருங்கள்.
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான வழி
1.சற்று தனிமையில் அமர்ந்து உங்கள் மனதோடு பேசுங்கள்.அது ஏன் உங்களை நம்பமறுக்கின்றது என்பதை பொறுமையாக அதனிடம் கேழுங்கள்.நீங்கள் சாதிப்பதற்கு உங்களிடம் திறமையில்லை என்று அது கூறுகின்றதா?அல்லது உங்களுக்கு அதற்கான சக்தியில்லை என்கிறதா?அல்லது அதையெல்லாம் நீங்கள் ஆசிக்கவேகூடாது என்கிறதா?என்ற மூன்று கேள்விகளையும் அவற்றைப்பார்த்து கேளுங்கள்.
முதல் இரண்டு கேள்விகளுக்கும் அவை ஆம் என்றால் உங்களை நீங்கள் செதுக்கிக்கொள்ள தயாராகுங்கள்.ஏனென்றால் திறமையும்,ஆற்றலுமில்லாத தன்னம்பிக்கை வெறும் ஆணவமாகவே பார்க்கப்படும்.அது நம்மிடம் நலவுகளை தருவதைவிட பெரும் தீங்குகளையும் இழுத்துவந்துவிடும்.எனவே திறனை வளர்த்துக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள்.இந்த உலகில் எந்த மனிதனும் தனித்திறனோடே பிறக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இங்கு கற்றலாலும்,பயிற்சியாலும் நம்மை செதுக்கிவிடலாம் என்பதை மலையளவு நம்புங்கள்.பணிவன்புடன் கற்கத்தொடருங்கள்,போராட்டம்தான் உங்களை செம்மைபடுத்தும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
இப்படி உங்கள் திறமையை நீங்கள் வளர்த்துவிட்டால் உங்களை ஆசைபடாதே என்று சொல்வதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள்.குறிப்பாக உங்கள் குரங்கு மனதையும்தான்.உங்களை அது குறைத்து மதிப்பிட தொடங்கும் பொழுதெல்லாம் அதனை தலையில் தட்டி அமரவையுங்கள்.அவ்வாறே உங்கள் திறனையும்,ஆற்றலையும் உங்களுக்கு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டவேண்டும் என்று ஆசிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவர்களை உங்களைவிட்டும் சற்று தூரமாகவே வைத்துக் கொள்ளுங்கள்.அவர்களின் கருத்துக்களுக்கோ கண்ணோட்டத்திற்கோ ஒருபொழுதும் முக்கியத்துவம் வழங்காதீர்கள்.
ஏனெனில் இந்த உலகையே நீங்கள் அவர்கள் கையில் கொடுத்தாலும் உங்களை அவர்கள் குறைத்து பேசுவதை விடமாட்டார்கள்.அது ஒரு விதமான மனநோய் என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டு உங்கள் சக்தியையும் திறனையும் உங்களை உயர்த்தும் செயலில் செலுத்திக்கொண்டே இருப்பதுதான் சாலச்சிறந்ததாகும்.
இறுதியாக ஒன்றை நினைவூட்ட விரும்புகின்றேன்.உங்களுக்கு ஒன்று தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படாதீர்கள்.தெரியாததை தெரியாது என்று தைரியமாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.ஒருவேளை அது உங்கள் வாழ்விற்கு மிக அவசியமானதாக இருந்தால் அதனை கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.அண்பர்களே..!இந்த உலகில் எல்லாம் தெரிந்த மனிதனும் கிடையாது எதுவும் தெரியாத மனிதனும் கிடையாது என்ற பொது விதியை புரிந்து கொண்டு கற்றலை தொடருங்கள்.கற்றலை விட உங்களுக்கு தன்னம்பிக்கையை தரும் ஒரு ஆற்றல் மிகுந்த செயல் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆகவே கற்றுக்கொள்ளுங்கள்..!
தன்னம்பிக்கை வையுங்கள்..!ஆற்றல் பெறுங்கள்..!வெற்றியடையுங்கள்..!
நன்றி: