திங்கள், 13 செப்டம்பர், 2021

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது?

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது
ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது

முன்னுரை:

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்று கேட்கும் அனைவரிடமும்"நீங்கள் ஏன் புத்தகம் படிக்கபோகின்றீர்கள் என்று கேட்பது என்னுடைய வழக்கமாகும்.ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது எப்படி என்பது அவரவர்களின் நோக்கங்களை பொறுத்தே அமைகின்றது என்பதாக கருதுகின்றேன்.மேலும் இன்றைய புத்தக வாசிப்பாளர்களை பல வகையினராக பிறிக்க முடியும் என்றாலும் அவர்களில் சில வகையினரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாசிப்பாளர்களின் வகைகள்:

1.நல்ல நண்பனாக நினைத்து படிப்பவர்கள்.

இந்த வகையினரில் நிச்சயமாக நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை முதலில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொண்டு இந்த சாரார்கள்தான் புத்தகமே தேடும் நபர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இவர்கள் புத்தக காதலர்கள் என்பதால் எத்தகைய புத்தகங்களை நீங்கள் இவர்கள் கையில் கொடுத்தாலும் அதை ஒரு சில மனித்துளிகளில் அதனுடைய மொத்த சாராம்சத்தையும் விளக்கிவிடுவார்கள்.

இவர்களுக்கு புத்தகத்தை படிப்பதற்கான எந்த வறைமுறையும் அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இவர்கள் இருளிலும் படிப்பார்கள், வெளிச்சத்திலும் படிப்பார்கள்.தனிமையிலும் படிப்பார்கள், கூட்டத்திலும் படிப்பார்கள்.ஆகவே இவர்களுக்கு படிப்பதை கற்றுக்கொடுக்க எந்த தேவையும் இல்லை என்பதால் நாம் அடுத்த வகையினரை பார்ப்பதே சிறந்தது என்று கருதுகின்றேன்.

2.அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட உங்கள் துறை சார்ந்த புத்தகங்களை படிப்பதே மேலானதாகும். உதாரணமாக நீங்கள் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அறிவியல் சார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.அதைவிடுத்துவிட்டு வரலாறோ அல்லது புவியியலையோ படிப்பீர்களேயானால் உங்களுடைய புத்தகம் படிக்கும் ஆசை உங்களைவிட்டும் மிக விரைவில் சென்றுவிடும் என்பதே நிதர்சனமான உலவியல் சார்ந்த உண்மையாகும்.

"அப்படியானால் வெவ்வேறு துறைகளின் புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்று கேட்பீர்களேயானால் அங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்க விரும்புகின்றேன்.அதாவது உங்களுடைய அறிவுத்தேட்டம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துத்தான் உங்களுடைய புத்தக வாசிப்பும் தொடரும் என்பது எனது கருத்தாகும்.உங்களால் பல் துறைகளின் புத்தகங்களை நிச்சயமாக வாசித்துவிட முடியும் என்றாலும் அதில் உங்களுடைய அறிவு தேடல் என்பது எவ்வளவு இருக்கின்றது என்பதை பொறுத்தும் நீங்கள் அத்துறையில் முன்பே எவ்வளவு அடிப்படையாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துமே உங்களுடைய வாசிப்பிற்கான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

எனவே அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் புத்தகம் வாசித்தால் முடிந்தளவு நீங்கள் உங்கள் துறை சார்ந்த புத்தகத்தை வாசியுங்கள்.அல்லது நீங்கள் படிக்கும் அப்புத்தகம் ஒரு துறையின் அடிப்படையான அறிவை போதிக்கும் புத்தகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் புத்தகம் வாசிப்பதைவிட அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கின்றோம் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிப்பதால் பெரும்பாலும் அமைதியான இடங்களை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு  சிறந்ததாகும். ஏனெனில் புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது அதனை சிந்தனையில் செலுத்தும்பொழுதோ வேறு சில இடையூறுகள் இருந்தால் அது நம்மை ஆரோக்கியமாக புரிந்து கொள்வதை விட்டும் தடுத்துவிட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.எனவே சிந்தித்து உணர வேண்டிய புத்தகங்களை பெரும்பாலும் தனிமையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறே குறிப்பிட சில பக்கங்களை படித்துவிட்டால் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி படிப்பதற்கு ஓய்வுவிடுங்கள்.அச்சமயம் அமைதியாக அமர்ந்து அது சம்மந்தமாக சிந்தித்துப்பாருங்கள்.அது உங்களுக்கு புதிய பல தீர்வுகளை அளிக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கையாகும்.

3.ஆழமான ஞானம் பெறுவதற்காகவோ அல்லது மன அமைதிக்காகவோ படிப்பவர்கள்.

நீங்கள் ஆழ்ந்த ஞானம் படைக்க வேண்டுமெறோ அல்லது உங்கள் மனதை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்றோ நினைத்தால் நீங்கள் பைபிள்,அல்லது குரான்,அல்லது பகவத் கீதை போன்ற புனித நூல்களை வாசிப்பது சிறந்ததாகும்.ஏனெனில் பெரும்பாலும் மத நூல்கள் பல்வேறு வாழ்வியல் நெறிகளை மிக அற்புதமாக போதிக்கின்றது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அவ்வாறே அந்த புத்தகங்களை உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒன்றாக அமர்ந்து வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஒருவர் வாசித்து அனைவரும் செவிமடுப்பது அதனை புரிந்து கொள்வதற்கும் மேலும் வாழ்வில் அனைவரும் கடைபிடிப்பதற்கும் மிக இலகுவானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.இத்தகைய முறையயே நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் கடைபிடித்துவருகின்றோம் என்பதால் அதனையே உங்களுக்கும் நான் முன்மொழிகின்றேன்.

4.ஒரு மொழியை கற்பதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் ஒரு மொழியை கற்பதற்காக புத்தகங்களை படிப்பவராக இருந்தால் இன்று பல்வேறு மொழிப்புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.மேலும் அவற்றை ஒரு சில நாட்களிலேயே கற்றுவிடும் அளவிற்கு கூட மிக எளிய வடிவில் தொகுக்கப்படுகின்றன.எனவே நீங்கள் மொழியை கற்பதற்காக படிப்பவராக இருந்தால் இரண்டு அடிப்படையான புத்தகங்களை நீங்கள் நிச்சயம் வாசித்தாக வேண்டும்.

ஒன்று அந்த மொழி சார்ந்த இலக்கண இலக்கிய சட்டங்கள் பொதிந்த புத்தகங்கள்.இரண்டாவது அந்த மொழியின் வார்த்தைகள் தொகுக்கப்பட்ட அகராதிகள்.இவை இரண்டையும் நீங்கள் தொடந்து வாசித்து வந்தால் மட்டுமே ஒரு மொழியில் உங்களால் தேர்ச்சி பெறமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறே இதனை மிக ஓர்மனதோடு மனதில் பதியவைக்கவேண்டிய அவசியம் இருப்பதால் காலை பொழுதுகளில் அமைதியான சூழலில் கற்பது சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

5.வாசிப்பது நல்ல பழக்கம் என்பதற்காக வாசிப்பவர்கள்.

வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் அதனை உங்கள் வாழ்விலும் அமைத்துக் கொள்வதற்காக நீங்கள் புத்தகங்கள் வாசிப்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் நீங்கள் மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் அல்லது தினசெய்தித்தாள்கள் வாசிப்பதே போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அப்படி அதுவும் போதவில்லையானால் வெற்றியாளர்களின் வரலாறுகள் அல்லது பொதுவான ஏதேனும் கதைகளை வாசிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனது பரிந்துரையாகும்.

வாசிப்பதை வெறும் பழக்கமாக மட்டுமே ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.ஏனெனில் வெறும் சடங்கிற்காக படிக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு மிக கவனம் என்பது அவசியமில்லை.

6.பொழுது போக்கிற்காக படிப்பவர்கள்.

பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் த்ரில்லர் புத்தகங்கள் அல்லது தொடர் கதைகள் படிப்பது மிக பிரயோஜனமாக இருக்கும்.ஏனென்றால் அவைகள் நம்முடைய மூளைக்கு பல சுவாரஸ்யங்களையும்,எதிர்பார்ப்புகளையும் கூட்டி ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதாரணமாக பயணத்தில் செல்லும் பொழுது பேருந்திலோ அல்லது ரயிலிலோ புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  நாவல் அல்லது த்ரில்லர் கதைகளை படிப்பதே சிறந்தது என்பதாக நான் கருதுகின்றேன்.அவ்வாறே அதனை உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.

ஆக இந்த ஆறு வகையான புத்தக வாசிப்பாளர்களையே நம்மால் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.அடுத்தபடியாக ஒரு புத்தகத்தை நாம் எவ்வாறு அணுகுவது என்பதையும் சுறுக்கமாக விளக்கிவிட விரும்புகின்றேன்.

 ஒரு புத்தகத்தை எவ்வாறு அணுகுவது.?

1.புத்தகங்கள் வாசிப்பதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முடிந்தளவு அடிப்படை உங்களுக்கு முன்பே கொஞ்சம் தெரிந்த விஷயத்தையே ஒரு புத்தகத்தில் படிக்க முயலுங்கள்.அது உங்களுடைய புத்தக வாசிப்பின் ஆர்வத்தை போக்கிவிடாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.அப்படி ஒரு வேளை அத்துறையை படித்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் முதலில் அது சம்மந்தமான அடிப்படை விஷயங்களை கொண்ட புத்தகங்களை வாசியுங்கள்.பிறகு ஆய்வு புத்தகங்களை வாசிப்பது மிக இலகுவாகிவிடும். 

2.புரிவதற்கு மிக கடினமான நீண்ட ஆய்வு புத்தகங்களை எந்த அடிப்படையும் தெறியாமல் வாசிக்காதீர்கள்.ஏனெனில் அது உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

3.ஒரு மொழியை கற்பதற்காக ஒரு மொழியில் உள்ள மிகக்கடினமான ஆய்வு புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பல குழப்பங்களையே கொடுக்கும்.

4.ஒரு துறையில் நீங்கள் மிக அனுபவம் மிக்கவராக இருந்து கொண்டு அத்துறை சார்ந்த ஆரம்ப அடிப்படைகள் சார்ந்த புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அதுவும் உங்களுடைய நேர வீணடிப்பாகவே அமையும் என்றே நான் கருதுகின்றேன்.இதுவே ஒரு நல்ல புத்தக வாசிப்பாளர் ஒரு புத்தகத்தை அணுகும் சிறந்த முறையாக நான் கருதுகின்றேன்.முடிந்தால் நீங்களும் கடைபிடியுங்கள்..!தொடர்ந்து வாசிக்க அமேசானில் எனது புத்தகம் இடம்பெற்றுள்ளது.அதனை பெற்று வாசித்து பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

Previous Post
Next Post