திங்கள், 13 செப்டம்பர், 2021

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்?

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்
வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்

முன்னுரை:

இன்றைக்கு வெற்றியாளர்கள் வெற்றிஅடைந்துகொண்டே செல்வதற்கு காரணம் என்னவென்று நம்மில் பலரும் யோசிப்பதுன்டு.அத்தோடு மன ஆறுதலுக்காக அவர்களுக்கு அதுவெல்லாம் அதிஷ்டமாக கடவுள் கொடுத்தது, நாமெல்லாம் அதற்கு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான் என்று நமக்குள் நாமே கூறிக்கொண்டு நமது மனதை தேற்றிக்கொள்ளவும் செய்து கொள்பவர்களே அதிகம்.ஆனால் உண்மை அவ்வாறல்ல.வெற்றியாளார்கள் தோல்வியாளர்கள் செய்கின்ற ஒருசில செயல்களை ஒருபோதும் தன் வாழ்வில் செய்வதே இல்லை என்பதே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.எனவே இந்த கட்டுரையில் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத சில விஷயங்களை குறிப்பிட்டுக்காட்டுகின்றேன்.முடிந்தால் நீங்களும் அதனை செய்வதை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயமாக நீங்களும் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே நீடிக்க முடியும்.

வெற்றியாளார்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத 6 விஷயங்கள்.

1.கொண்ட கொள்கையை ஒருபோதும் கைவிடுவதில்லை.

1.தனக்கு சரி என்றோ அல்லது தன்னால் ஒன்றை செய்யமுடியும் என்றோ அவர்கள் உணர்ந்துவிட்டால் அதனை யாருக்காகவும் செய்யாமல் இருப்பதை அவர்கள் விரும்புவதே இல்லை.அக்காரியம் அவர்களுக்கு எத்துனை கடினமாக இருந்தாலும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள்.அவ்வாறே அதற்கு எதிராக எத்துனை தடைகள் வந்தாலும் அவற்றைக்கண்டு ஓடிவிடாமல் அதற்கு தீர்வு காணவே முற்படுவார்கள்.இத்தகைய மனோபாவமே அவர்களை எல்லாக்காலங்களிலும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு முக்கிய காரணியாக இருந்துவிடுகின்றது.

2.நேரத்தை வீணாக்குவதில்லை.

தன் ஆற்றலை வீணான காரியங்களுக்காக செலவழிப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.எச்செயலால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் அறிவார்களோ அவற்றைவிட்டும் மிக தூரமாக இருப்பதே அவர்கள் எக்காலமும் வெற்றியாளார்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

3.தற்பெருமை கொள்வதில்லை.

தன் துறையில் எல்லாமே தனக்கு தெரியும் என்று காட்டிக்கொள்வதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தன் துறை சம்மந்தமான அதிகமான தேடலிலேயே இருப்பதால் அவரகள் கல்வியை தேடும் சாதாரண மனிதனாகவே பெரும்பாலும் தங்களை காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய பண்பே அவர்களை எல்லா காலமும் வெற்றியாளராக இருப்பதற்கான மிகமுக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

4.நிராகரிப்பிற்கும்,தோல்விக்கும் அஞ்சுவதில்லை

நிராகரிப்புகளையும்,இழப்புகளையும்,தோல்விகளையும் கண்டு ஓய்ந்து போய்விடுவதை அவர்கள் தங்கள் வாழ்வில் ஒருபோதும் விரும்புவதில்லை. துன்பங்களுக்கே துன்பம் கொடுக்கும் அளவிற்கான மனோ தைரியம் கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவார்கள்.அத்தகைய பண்பே எப்பொழுதும் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

5.எதிர்மறை எண்ணங்களுக்கு இடமளிப்பதில்லை.

எதிர்மறையான எண்ணங்களுக்கும்,எதிர்மறையாக பேசுபவர்களுக்கும் அவர்கள் ஒருபோதும் மதிப்பளிப்பதே கிடையாது.ஒரு காரியத்தை நேர்மறையாக யோசித்து அதனை சீராக செய்யமுடியும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவற்றைப்பற்றி யார் எதிர்மறை கருத்துக்களை கூறினாலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு அவற்றில் வெற்றி காணும் பக்குவமுடையவர்களாக இருப்பார்கள்.இத்தகைய உறுதிமிக்க பண்பே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாக இருப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

6.தன்னை நம்பியோர்களை ஏமாற்றுவதில்லை.

6.தன்னோடு இருப்பவர்களையும்,தன்னை நம்பி வருபவர்களையும் ஏமாற்ற வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.தன்னுடைய நேர்மை என்பதில் துளியளவும் குறைவு செய்யக்கூடாது என்பதில் மலையளவு உறுதியாக இருப்பார்கள்.இதனால் தன்னை நம்பும் அனைவருக்கும் மதிப்பளித்து அவர்களை கண்ணியப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.இத்தகைய பண்பே அவர்களை எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

ஒரு வெற்றியாளார் செய்யவே விரும்பாத முக்கிய பண்புகளில் இந்த ஆறு பண்புகள் மட்டுமே பிரத்தியேக இடம் பெற்றிருக்கின்றது என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் பதிவிட்டிருக்கின்றேன்.நீங்களும் வெற்றியாளராக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் ஒரு நல்ல வெற்றியாளர் விரும்பாத இந்த ஆறு பண்புகளையும் உங்களைவிட்டும் நீக்கிக் கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் வெற்றியாளராக நீடித்திருக்க முடியும் என்றே நான் ஆதரவு வைக்கின்றேன்.!

Previous Post
Next Post