சனி, 18 செப்டம்பர், 2021

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!
அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

முன்னுரை:

இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் இருக்கின்றது என்ற உண்மையை பெரும்பான்மையான சமயங்களில் மனிதன் புரிந்துகொள்ள முற்படுவதே இல்லை என்பது மிக பரிதாபத்திற்குறிய விஷயமாகும்.மனிதன் தான் விரும்பிய அல்லது எண்ணிய எதனையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனை உயர்ந்த மகத்தான மனித உச்சத்தை அடைவதைவிட்டும் தடுத்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

மேலும் இந்த உலகில் பொறுமையாக இருந்து,தான் விரும்பியதை அடையாதவர்களைவிட அவசரப்பட்டு எல்லாவற்றையும் தொலைத்தவர்களே அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.இங்கு பலரும் பொறுமை என்பது பலஹீனத்தின் அல்லது இயலாமையின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொள்கின்றனர்.ஆனால் அவசரமும் நிதானமின்மையும்தான் மிகப்பெரிய பலஹீனம் என்பதை அவர்கள் உணரத்தவறிவிடுகின்றனர்.

ஆம்..!

யாரிடம் பொறுமையும் நிதானமும் இருக்குமோ அவர் இந்த உலகில் பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தை அசைக்க முடியாதளவு உயர்த்தி நிறுத்திவிட முடியும்.ஆனால் யாரிடம் பொறுமையும் நிதானமும் இல்லையோ அவரால் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட உறுதிமிகு சாம்ராஜ்யங்களும் கூட  சுக்கு நூறாக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமாகும்.பலசமயங்களில் ஒரு நிமிட அவசரம் அல்லது நிதானமின்மை நம்மை 100 வருட கைசேதத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது என்பதே இந்த உலகின் மகத்தான பேருண்மையாக இருக்கின்றது.

இந்த உலகில் நாம் வியப்புடன் பார்க்கும் பல்வேறு சாம்ராஜ்யங்கள் ஏதோ சில நொடிகளில் கட்டமைக்கப்பட்டதல்ல.மாறாக எத்தனையோ யுகங்களின் சகிப்புத்திறனால் உறுவாக்கப்பட்டவையே என்ற பேருண்மையை வரலாற்றை சற்று ஆழமாக உற்றுநோக்கும் சமயம் வெள்ளிடை நீரைப்போல் வெண்மையாக நாம் உணர்ந்து கொள்ளலாம்."அவசரக்காரனுக்கு புத்தி மட்டு"என்ற தமிழ் அடைமொழி மனித உலவியலை மிக அற்புதமாக பேசும் ஒரு தமிழ் சொற்றொடர் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அவசரம் என்பது நம்முடைய மனித மதிப்பீடான அறிவை முற்றிலும் மட்டுப்படுத்திவிடுகின்றது என்பதே மகத்தான உண்மையாக இருக்கின்றது. சாலைகளை கடப்பதில் தொடங்கி கடைகளில் பொருள் வாங்கும் வரைக்கும் எதிலும் அவசரம் என்ற நிலையை மனிதன் அடையும்பொழுது அவன் உண்மையில் தனக்குத்தானே மிகப்பெரிய தண்டனையை கொடுத்துக் கொள்கின்றான் என்றே நான் கருதுகின்றேன்.

பிறரை முந்துவதையோ அல்லது தோற்கடிப்பதையோ தனக்கான வெற்றியாக தானே எண்ணிக்கொண்டு தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் மனிதர்களை காணும் சமயம் உண்மையில் நான் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன்.அவசரம் என்பது நம்முடைய சிறிய அற்பத்தனமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துவிடும் என்றாலும் அது இந்த உலகின் மகத்தான செயலை ஒருபொழுதும் உருவாக்கிவிடாது என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது.

எனவே அண்பர்களே.....!

எதெற்கெடுத்தாலும் அவசரம், துரிதம் என்று தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே தண்டனை வழங்கிக்கொள்ள முற்படாதீர்கள்.எதனையும் உணர்ந்து நிதானத்துடன் செயல்படத்தொடங்குவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வை மிக அர்த்தமுள்ளதாக உணரத்தொடங்கிவிடுவீர்கள்.எல்லோரும் அவசரப்படுகின்றனர் என்பதற்காக நீங்களும் உங்களை அதே படுகுழியில் தள்ளிக்கொள்ளாதீர்கள்.உங்களுக்கானதை நீங்கள் முடிவு செய்து பழகிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஸ்திரமாக நிதானத்துடன் செயல்படுங்கள். நிசயம் இந்த வாழ்க்கை உங்களுக்கு இன்பம் தர வல்லதாக அமைந்துவிடும். இவற்றிற்கு மாறாக அவசரத்தையும் நிதானமின்மையையும் நீங்கள் உங்களுக்காக தேர்ந்தெடுதுக்கொண்டால் நிச்சயமாக உங்களை நீங்களே ஒரு குழிக்குள் புதைத்துக்கொண்டு மண்ணையும் நீங்களே உங்கள் மீது இரைத்துகொண்டிருப்பதைப் போன்றதாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
Previous Post
Next Post