முன்னுரை:
இன்றைக்கு மனிதர்களிடம் காணப்படும் குணங்களிலேயே மிக ஆபத்தான குணம் தேவையற்ற தீர்மானம் செய்வதுதான் என்றே நான் கருதுகின்றேன். எந்த அவசியமும் இல்லாத இடங்களிலும் கூட மனிதர்களில் பெரும் பாலானோர் தேவையற்ற தீர்மானங்களை தேடுவதையும், அதில் ஈடுபடுவதையும் காணும்பொழுது எனக்கு மிக பரிதாபமாகவே உள்ளது. அத்தகைய நிலையைக்கொண்ட மூன்று ஜென் துறவிகளின் ஒரு நிகழ்வை இங்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.அது நிச்சயம் நம் போன்ற தேவையற்ற தீர்மானங்களை தேடும் மனிதர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.
"மூன்று ஜென் துறவிகள் காலை பொழுதில் எப்பொழுதும் போல் நடை பயிற்சிக்காக அருகில் உள்ள காட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது எதார்த்தமாக அந்த காட்டில் இருந்த மலை உச்சியில் தங்கள் முந்தைய ஆசிரியரான ஒரு ஜென் துறவி நிற்பதை மூவரும் காண்கின்றனர்.அவரை கண்டவுடனே மூவரில் ஒருவர் நம் ஆசிரியர் யாரையோ எதிர்பார்த்து நிற்பதை போன்று தெரிகின்றதே என்றார்.
அதனைக்கேட்ட மற்றொருவர் இல்லை!இல்லை.!அவர் எதோ ஒன்றை தொலைத்துவிட்டு மலையின் உச்சியில் நின்று தேடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.
அதனைக் கேட்ட மூன்றாமவரோ இல்லை!இல்லை..!அவர் அங்கு நின்று தியானம் செய்துகொண்டிருக்கின்றார்.ஏனெனில் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று கூறி முடித்தார்..!இப்பொழுது மூவருக்கும் தங்கள் ஆசிரியர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதில் கருத்து வேறுபாடு முத்தியது.வேறு வழியே இன்றி இப்பொழுது ஆசிரியரையே நேராக சென்று சந்தித்து பிரச்சசனையை தீர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.
தாங்கள் எதற்கு வந்தார்களோ அவற்றை எல்லாம் மறந்துவிட்டு,மலை உச்சிக்கு சென்றால் தாங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைகளெல்லாம் நின்றுபோகும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமத்தோடு மலை உச்சியை அடைந்தார்கள்.அப்பொழுது அரை கண்ணை மட்டும் திறந்த நிலையில் ஆசிரியர் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர்.ஆனாலும் முதலாமவருக்கோ தன் கருத்துதான் சரி என்று நிறூபிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் இருந்ததால் அவர் மெல்லமாக ஆசிரியரை அழைத்தார். ஆசிரியரும் என்ன கூறுங்கள் என்றார்.அதற்கு முதலாமவர் ஐயா நீங்கள் இங்கு யாரையோ தேடி வந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே என்றார்.
அதற்கு துறவியோ எனக்கு இந்த உலகில் யாரும் இல்லையே நான் யாரை தேடப்போகின்றேன் நான் தனியாகவே இந்த உலகிற்கு வந்தேன் தனியாகவே போவேன் என்பதை நான் நன்றாக அறிவேன் எனவே இங்கு நான் யாரையும் தேடவேண்டிய அவசியமில்லையே என்றார்.அதனைக்கேட்ட இரண்டாமவர் தன்னுடைய முடிவுதான் சரியானது என்று எண்ணிக்கொண்டு அப்படியானால் நீங்கள் உங்களுடைய கால் நடைகளில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு மேலிருந்து தேடுகின்றீர்கள் அப்படித்தானே என்றார்.
அதற்கும் துறவி இங்கு என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை என்றிருக்கும் பொழுது நான் எப்படி என்னை விட்டும் தொலைந்த பொருளை தேடுவேன்?எனவே நான் எந்த பொருளையும் தேடவில்லை என்று பதிலளித்தார்.பிறகு மூன்றாமவருக்கோ மிக்கமகிழ்ச்சி ஏனென்றால் ஆசிரியர் தியானத்தில் இருப்பதாக தான் கருதியதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு "அப்படியானால் நீங்கள் இங்கு தியானம் செய்கின்றீகள்தானே என்றார்.
அதற்கு துறவியோ உனக்கு தெரியாதா?தியானம் என்பது எல்லா நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று.அதனை நான் நம் மடத்திலேயே செய்துவிட்டேன்.இப்பொழுது நான் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றேன்.நான் யார் எனக்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் மறந்து ஒரு காலிப்பாத்திரமாக இருக்கின்றேன்.இத்தகைய நிலைதான் புத்தர்களால் போற்றி புகழப்பட்ட நிலை.எனவே இது தியானமும் இல்லை என்றார்.மூவரின் முகமும் வாடிப்போனது.தங்களின் தேவையற்ற தீர்மானங்கள் அனைத்தும் பொய்யாய் போனதை உணர்ந்துகொண்டார்கள்.அப்பொழுது துறவியோ மக்களின் நிலையை முடிவு செய்வதை விடுத்துவிட்டு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.அதுதான் உங்களுக்கு தீர்க்கமான தீர்வை தருவதற்கு மிக உகந்தது என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.
நீதி:
- அடுத்தவர்களின் காரியத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
- பிறரின் செயலுக்கு வடிவம் கொடுக்காதீர்கள்.
- நிச்சயமற்ற ஒன்றிற்காக உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.
- தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்தை நிறூபிக்க விரும்பாதீர்கள்.
- தேவையற்ற விஷயத்தை உங்கள் தோளில் சுமக்காதீர்கள்.
- உங்கள் காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.