ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள காட்டில் சென்று மரம் வெட்டிவந்து அதனை விற்று தன் வாழ்வை கழித்து வந்தான்.இப்படி ஒவ்வொரு நாளும் அவன் அக்காட்டு வழியாக கடந்து செல்லும்போது ஒரு மரத்தடியின் கீழ் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதையும் பார்த்துக்கொண்டே கடந்துசென்றான். ஒரு நாள் தன் வாழ்வில் எதுவுமற்ற வெறுட்சியை உணர்ந்த விவசாயி அத்துறவியிடம் தன் வாழ்கையில் செல்வம் பெற்றவனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கலாமே என்று யோசித்துக்கொண்டு அத்துறவியை நெருங்கினான்.
தியானத்தில் இருந்த துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா நான் வாழ்வில் செல்வம் பெற்று உயர்வாக வாழ ஏதேனும் வழி உண்டா என்றான். கண்களை மெல்லமாக திறந்த துறவி இதோ இந்த பக்கமாக மரங்களை பார்த்துக்கொண்டே நடந்துசெல் என்றார்.உடனே அவ்விவசாயியும் துறவியின் பேச்சை தட்டக்கூடாது என்பதற்காகவே மரங்களை பார்த்துக்கொண்டே தூரமாக நடக்க ஆரம்பித்தான்.
நீண்ட தூரம் கடந்த பின்பு சந்தன மரங்கள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தான்.இதற்கு முன்பு அக்காட்டில் பலமுறை கடந்து வந்திருந்தாலும் இதனை கவனிக்கவில்லையே என்று வருந்திக்கொண்டே அம்மரங்களை வெட்டிவீழ்த்தினான்.பிறகு அதனை விற்று அவனுடைய ஊரிலேயே மிகப்பெரும் செல்வந்தனானான்.சிறிது காலம் தான்அனுபவிக்காத அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தான்.பிறகு அனைத்தும் சலித்துப்போனது. அதைவிட பெரும் செல்வந்தனாக ஆக வேண்டும் என்று விரும்பினான்.எனவே மீண்டும் அத்துறவியை சந்திக்கச்சென்றான்.எப்பொழுதும்போல் துறவி அம்மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
விவசாயியோ ஐயா என் வாழ்வில் இதைவிட பெரிய செல்வந்தனாக ஏதேனும் வழி உண்டா என்றான்.மீண்டும் துறவி மெல்லமாக கண்களை திறந்து இதோ இவ்வழியாக கீழே பார்த்துக்கொண்டே செல் என்றார்.அவனும் கேட்ட மாத்திரத்திலேயே கீழே பார்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.நீண்ட தூரம் கடந்த பிறகு ஒரு சிறிய குகையை அடைந்தான். அங்குள்ள பாறைகள் முழுவதும் தங்கத்தால் மின்னியது.அட இத்தனை நாள் இந்த காட்டை சுற்றிவருகின்றேன் இது தெறியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு அத்தங்கங்களை கட்டியாக்க முற்பட்டான்.பிறகு அதனை விற்று மிகப்பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிட்டான்.
சிறிது காலம் தன் மனதில் புதைந்து கிடந்த அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொண்டான்.பிறகு முன்பைப்போல் மீண்டும் மனதில் வெறுட்சி தோன்ற ஆரம்பித்தது.அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது.எனவே எப்பொழுதும் போல் அத்துறவியின் நினைவு வந்தது.துறவியை நோக்கி நடக்கலானான். துறவியும் எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.விவசாயியோ மெல்லமாக துறவியின் அருகில் சென்று ஐயா இப்பொழுது இருப்பதைவிட இன்னும் மிகப்பெரிய செல்வந்தனாக நான் ஆவதற்கு ஏதேனும் வழியிருக்கின்றதா என்றான்.
மெல்லமாக கண்களை திறந்த துறவி இதோ இந்த ஆற்றின் ஓரமாகவே நடந்து செல் என்றார்.உடனே விவசாயி விருவிருவென நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் கடந்த பின்பு அந்த ஆற்றின் ஓரத்தில் சில வைரவைடூரிய கற்கள் கிடப்பதை பார்த்தான்.அட என்ன ஆச்சர்யம் இந்த கற்களை நான் வாழ்நாட்கலிலேயே அணிந்ததில்லையே என்று எண்ணிக்கொண்டு அவற்றை பொறுக்கி எடுத்துக்கொண்டான்.அவற்றில் சிலவற்றை அணிந்து கொண்டு மீதியை மிகப்பெரும் தொகைக்கு விற்றான்.
சிறிது காலம் எல்லா சுகங்களையும் அனுபவித்தான்.ஆனால் இயற்கை அவனை திரும்பவும் இயல்பு நிலைக்கு அழைத்தது.எல்லா வசதிகள் இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுட்சி துரத்துவதை உணர்ந்தான்.சரி மீண்டும் துறவியிடம் செல்வோம் என்று யோசித்தபோது அவனுடைய மனதில் இப்படி ஒரு எண்ணமும் தோன்றியது.அதாவது வைர முத்துக்கள் மற்றும் தங்க சுரங்கம் மற்றும் சந்தனக்காடு இவை எல்லாம் இருக்கும் இடங்கள் அனைத்தையும் தெரிந்தும் இந்த துறவி ஏன் அவற்றை எடுத்து அனுபவிக்காமல் இருந்தார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
தலையே சுற்றியது.சரி கட்டாயம் இதனை துறவியிடம் கேட்டால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்த விவசாயி துறவியை நோக்கி நடந்தான்.துறவி எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அங்கு வந்த விவசாயியோ துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா இன்று நான் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டுச்செல்ல வந்திருக்கின்றேன் என்றான். துறவியும் கண்களை விழித்து, கேள்! என்றார்.ஐயா நீங்கள் ஏன் சந்தனக் காடுகளையும் தங்க சுரங்கத்தையும் வைர முத்துக்களையும் உங்களுக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே எனது கேள்வியாகும் என்றான் விவசாயி.
அதற்கு துறவியோ புன்னகைத்துக்கொண்டே "நான் அதனைவிடவும் மேலான "மன அமைதியை" அடைந்துவிட்டேன்."எனவே நீ உயர்வாக பார்க்கும் அப்பொருட்கள் எனக்கு எத்தேவையுமற்றது என்றார் துறவி.துறவியின் பதிலை கேட்ட மாத்திரமே விவாசாயி அவருடைய கரங்களை பற்றிக்கொண்டு ஐயா எனக்கும் அந்த மனஅமைதியை தரும் வழியை கற்றுக்கொடுங்கள் என்று மன்றாடினான்.அப்பொழுது துறவியும் அதனை அவனுக்கு கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.!
நீதி:
- இந்த உலகில் மன அமைதியை விட விலை உயர்ந்தது வேறொன்றுமில்லை.
- இந்த உலகில் அனைத்தும் ஒரு கட்டத்தில் சலிப்பை தந்துவிடுவதே.
- அடையும் வரைக்கும்தான் செல்வம் சுகமானது.
- மன அமைதி என்பது பாதுகாக்கப்பட வேண்டியது.
- மன அமைதி என்பது ஆழ்ந்த அமைதியால் பெறப்படக் கூடிய அற்புத நிலை.