வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ற முந்தைய கட்டுரையிலேயே வியாபாரத்தின் நோக்கங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.அதில் இன்றைய உலகம் மிக தீவிரமாக செயல்படுத்தத்துடிக்கும் லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபார முறையும் ஒன்றாக குறிப்பிட்டு இருந்தேன்.மேலும் அது இந்த மனித சமூகவாழ்வை இறுதி நிலைக்கு அழைத்துச்சென்றுவிடும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.எனவே இந்த கட்டுரையில் அது எப்படி இந்த மனிதசமூகத்திற்கு மிக ஆபத்து என்பதை விரிவாக பார்ப்போம்...!
1.மக்களிடம் செயற்கை தேவையை ஏற்படுத்துகிறது.
லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வியாபார முறையானது மக்களின் தேவையை நிறைவேற்றுவதைவிடுத்து தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் மக்களிடம் செயற்கையான தேவையை ஏற்படுத்துவதை மைய்யமாகக்கொண்டு செயல்படக்கூடிய வியாபாரமுறை என்பதே இதில் ஒழிந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதாக நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றிற்கென்று எந்த வரைமுறைகளுமின்றி பொருளை மக்களின் தலையில் கட்டுவது மட்டுமே இந்த வியாபாரமுறையின் அடிப்படை கொள்கையாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு உதாரணமாக இன்றைய உற்பத்தி துறைகளில் லாபநோக்கோடு மட்டும் செயல்படும் பல்வேறு கார்பரேட் தொழில் கூடங்களை குறிப்பிடலாம். உதாரணமாக இன்றைக்கு குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு இத்தனை வாகனங்களை மக்களின் தலையில் கட்டிவிட வேண்டும் என்ற (Target)குறிக்கோளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக நாம் பார்க்கலாம்.
மக்களுக்கு வாகனம் தேவையாகத்தான் இருக்கின்றது என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் தேவையற்றது என்பதும் நிதர்சனமாக இருக்கின்றது. ஆனால் அளவுக்கு அதிகமாக தயாரித்து வைத்திருக்கும் வாகனங்களை மக்கள் தங்கள் கையில் உள்ள பொருளை அல்லது பணத்தை கொடுத்து எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்பதற்காகவே இந்த வியாபார முதலைகள் செயற்கையான தேவையை உறுவாக்குகின்றனர்.அதற்கு அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் ஆயுதம் மக்களின் பேராசையை தூண்டுவதேயாகும்.
ஆம் ..!
இன்று மக்கள் தங்களின் சொத்தை விற்றேனும் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதற்கான ஆசையை விளம்பரங்களின் மூலம் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இதனால் யார் அந்த பொருளை வைத்திருப்பாரோ அவர் சமூகத்தில் மிக மதிப்பிற்குறியவர் என்றும் யாரிடம் அது இல்லையோ அவர் சமூகத்தில் எவ்வித மதிப்புமற்றவர் என்றும் ஒரு ஆபத்தான சமூக கட்டமைப்பை இந்த லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட வியாபாரமுறை உறுவாக்கிக்கொண்டிருக்கின்றது என்பதே எனது முதல் குற்றச்சாட்டாகும்.
இந்த வியாபார முறையை இப்படியும் விளக்களாம் என்றே நான் கருதுகின்றேன்.அதாவது குருடனும்கூட அவனுடைய சொத்தையோ அல்லது தன்னையோ இழந்து லாபநோக்கம் மட்டுமே கொண்ட சில வியாபாரிகளின் ஒரு அழகிய சித்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதைப்போன்றதே இந்த லாப நோக்கம் கொண்ட வியாபாரமுறை என்றும் குறிப்பிடலாம்.
அந்த சித்திரத்தை குருடன் பார்க்கவே முடியாது என்றாலும் அது அழகானது என்று சில மக்களாலோ அல்லது அதை விற்கத்துடிப்பவர்களின் விளம்பரத்தாலோ வலியுறுத்தப்பட்டுவிட்டதால் அந்த குருடனும் அதை வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றான்.இப்படி மனிதனின் அத்தியாவசியங்கள் என்பதெல்லாம் தாண்டி சவ்கரியங்கள் என்பதையும் கடந்து தேவையற்ற பொருட்கள் என்ற வட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டு அது உலகலவில் சந்தைப்படுத்தப்படுவது என்பது இந்த மனித இனத்திற்கான மிகப்பெரும் அழிவுப்பாதையேயன்றி வேறு என்னவென்று சொல்வது
இத்தகைய வியாபாரமுறைதான் இந்த மனித சமூகத்தை மிகப்பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் மிகக்கொடிய வியாபாரமுறை என்று நான் குறிப்பிடுகின்றேன்.ஆனால் இன்று இந்த உலகையே இந்த வியாபார முறைதான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் நிதர்சனமாக நான் காண்கின்றேன்.இது இந்த மனித சமூகத்திற்கு பொருளாதார சீர்கேட்டை தருமே தவிர ஒரு முறையான வசதிமிக்க மனநிறைவுபெற்ற வாழ்வியலை ஒருபொழுதும் தராது என்பதே எனது உறுதியான கண்ணோட்டமாக இருக்கின்றது.
ஏனெனில் மக்களின் தேவையே வியாபாரத்தின் அடிப்படை விதி என்றிருக்கும்பொழுது மக்களிடம் செயற்கையான தேவையை உறுவாக்கி அவர்களிடம் வியாபாரம் செய்து அவர்களை உறிஞ்ச நினைப்பது என்பது இந்த மனித சமூகத்தை பேரழிவில் தள்ளுவதற்கான முயற்சியாக அமையுமே தவிர இந்த மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் ஒருபோதும் அழைத்துச் செல்லாது என்பதே எனது தீர்க்கமான முடிவாகவும் நான் கருதுகின்றேன்.
2.பொருட்களை பதுக்கி வைத்துக்கொள்ள தூண்டுகிறது.
வெறும் லாப நோக்கை மட்டுமே கொண்ட இந்த வியாபார முறையே பொருட்களை பதுக்கி வைத்து மக்களிடம் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கும், விலைஏற்றம் செய்வதற்கும் மிக அடிப்படை காரணியாக இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.இன்று மக்களின் தேவைக்கு தகுந்தவாறு பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய சூழலிலும்கூட இந்த லாப நோக்கு கொண்ட வியாபாரமுறை அதனை பதுக்கி வைத்துக்கொண்டு மக்களை அலைக்களிக்கச் செய்து பிறகு மிகப்பெரும் விலைக்கு மக்களிடம் தலையில் கட்டிவிடுகின்றது என்பதை நம்மால் ஒர்போதும் மறுக்க முடியாது.
அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச்செயலாக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் பல்வேறு சமயங்களில் அரசின் உதவியோடே இந்த மாபாதகச் செயல் அரங்கேற்றப்படுகின்றது.லாபமடைவது என்ற சுயநலனை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வியாபாரமுறை மக்களின் நிலைகுறித்தோ அல்லது மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ எந்த கவலையும் படத்தயாராக இல்லை என்றிருக்கும்பொழுது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அந்த வியாபாரிகள் மனசாட்சியின்றி மக்களை உறிஞ்சுவதற்காக விலையை தாருமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.அப்படி மக்கள் வாங்க மறுக்கும்பொழுது அதனை வேண்டுமென்றே பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.எனவேதான் இந்த மனசாட்சியற்ற வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வியாபார முறை மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்லும் மிகப்பெரும் ஆபத்து என்று நான் கூறுகின்றேன்.
3.குறிப்பிட்ட சிலருக்கே இது உதவி புரிகிறது.
லாப நோக்கம் மட்டும் கொண்ட இந்த வியாபார முறையானது அடித்தட்டு வியாபாரி தொடங்கி உயர் மட்ட வியாபாரி வரை அனைவரிடமும் குடி கொண்டிருந்தாலும் இது உயர்மட்ட வியாபாரிகளிடமே அதிகம் குடிகொண்டிருக்கின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் இது உயர்மட்ட நுகர்வோர்களுக்கு மட்டுமே அதிகம் உதவக்கூடியதாகவும் நம்மால் காணமுடிகின்றது.
உதாரணமாக ஒரு அத்தியாவசியப்பொருள் அது சந்தையில் எங்கும் கிடைக்கவில்லை என்றிருக்கும்பொழுது அதனை குறிப்பிட்ட சிலர் மட்டும் மிக எளிதில் பெற்றுவிடுவது இதற்கு மிகப்பெரும் சான்றாக இருக்கின்றது.வெறும் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் இந்த வியாபாரமுறை குறிப்பிட்ட செல்வாக்குடையவர்களை குறிவைத்தே நகர்கின்றது என்பதையே இவ்வாறு நான் குறிப்பிடுகின்றேன்.குறிப்பாக சொல்லப்போனால் உழைப்பின்றி பெரும் செல்வங்களை திரட்டிவைத்திருப்பவர்களுக்கு எத்தகைய தொகையும் பெரிதாக தெரியப்போவதில்லை என்பதை கருத்தில்கொண்டே இந்த வியாபாரமுறை சுழல்கின்றது என்பதாகவும் இதனை கூறலாம்.
பெரிய அளவிலான மக்கள் இந்த வியாபாரத்தால் பயனடையவும் முடியாது.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் பெரும் லாபம் அடைந்து கொள்ளவும் முடியும் என்பதே இந்த வியாபாரமுறையின் முக்கிய முரன்பாடுடைய அபாயமாக இருக்கின்றது.எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உதவி செய்யும் இந்த வியாபார முறையானது மக்களின் உயர்நிலைக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்பதோடு இது செல்வம் படைத்தவர்களுக்கும் ஆபத்தே என்பதும் எனது கண்ணோட்டமாக இருக்கின்றது.
கட்டுரையின் விரிவு கருதி இத்துடன் இந்த கட்டுரையை முடித்துக் கொண்டு அடுத்த கட்டுரையில் தொழிளாலர்களுக்கு இந்த வியாபார முறை எப்படியெல்லாம் ஆபத்தாக அமைந்திருக்கின்றது என்பது சம்மந்தமாகவும், மேலும் வியாபாரம் எதனை அடிப்படையாகக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.
நன்றி:
அ.சதாம் உசேன் ஹஸனி