 |
நிலைத்துநிற்பதே வெற்றியை தரும் |
நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்
நீங்கள் அடையவிரும்பும் லட்சியத்தை எப்படி அடைவது என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது ஒரே நாளில் ஏன் நம்மால் அதனை அடைய முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றீர்களா..?உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான இலகுவான ஒரு வழியை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தாள் கடைபிடியுங்கள் நிச்சயமாக உங்கள் லட்சியத்தை அடைந்துவிடலாம்.
நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.எவ்வளவு தூரம் நடந்தீர்கள் என்றோ அல்லது உங்கள் தூரத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்றோ யோசிக்கவே செய்யாதீர்கள்.உங்கள் கால்கள் வலிதரும் அளவிற்கு நடந்து கொண்டே இருங்கள்.பிறகு மறுநாளும் அதனைப்போன்றே செய்யுங்கள்.இப்படி உங்கள் லட்சியப்பாதையில் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ நடந்து கொண்டே இருங்கள்.எக்காரணத்திற்கும் நேற்றைய நிலையிலேயே இன்றைக்கும் அமர்ந்துவிடாதீர்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள் உங்கள் லட்சியப்பயணம் எங்கு சென்று முடிய வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை அறியாமலேயே உங்களை அது கொண்டு சேர்த்துவிடும்.
இந்த வழிமுறையானது யார் தன் லட்சியப்பயணத்தை தொடங்கிய பின்பு அது எப்பொழுது முடியும் என்றோ அல்லது தனக்கு ஏன் இன்னும் அந்த லட்சியம் கிட்டவில்லை என்றோ தன்னைத்தானே சந்தேகிப்பார்களோ அவர்களுக்கு மிகச்சிறந்த வழிமுறையாகும்.இதை இங்கு ஏன் குறிப்பிட்டுக் காட்டுகின்றேன் என்றால் நம்மில் பலரும் ஒரு காரியத்தை மிக வீரியமாக ஆரம்பித்து விடுகின்றோம்.ஆனால் அதிலிருந்து உடனே பலன் கிடைக்கவில்லை என்பதால் ஒருசில தினங்களிலேயே அதனை அப்படியே விட்டொழித்து விடுகின்றோம்.அல்லது ஒரே சமயத்தில் அதனை முயற்சித்துவிட்டு பிறகு அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம்.
அதனை போக்குவதற்கு நான் மேலே குறிப்பிட்டுக்காட்டிய அந்த வழியே மிக உதவியாக இருக்கும்.ஏனென்றால் யார் ஒன்றை அடைய வேண்டுமென்று ஆரம்பம் செய்து அதில் நிலைத்திருக்கவும் செய்துவிடுகின்றாரோ அவர் என்றாவது ஒருநாள் அதனை அடைந்துவிடுவதே இயற்கையின் அமைப்பாக இருக்கின்றது.அதில் அவர் தன் பயணத்தை எவ்வளவு குறைவாக அமைத்திருந்தாலும் அதனை விடாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததின் விளைவாக ஒருநாள் அதனை அவர் மிக இலகுவாக அடைந்துவிட அதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.
எனவே நீங்களும் உங்கள் லட்சியத்தை இலகுவாக அடையவேண்டும் என்று விரும்பினால் அதனை உங்கள் வாழ்வில் அன்றாடம் நிலையாக செய்யும் காரியமாக மாற்றிக்கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் அந்த காரியம் குறைவாக இருந்தாலும் சரியே.அதனை தொடர்ந்து செய்து வருவதில் நிலைத்திருங்கள்.நிச்சயம் ஒருநாள் அது பெரும் வெற்றியாக உங்களை வந்தடைய உங்களின் அந்த சிறிய நகர்வே காரணமாக அமைந்துவிடும்.