முன்னுரை:
இன்று உலகில் பல நூறு கோடி மக்கள் ஒரு வேலை உணவிற்காக பசியிலும்,பஞ்சத்திலும் வாடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் மற்றொரு புறம் யாருடைய உணவு கலாச்சாரம் சிறந்தது என்று மிகப்பெரும் கலாச்சார போரே நடந்துகொண்டிருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் மீது வீசப்பட்ட சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.மனிதன் உயிர் வாழ்வதற்கும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதற்கும் உணவு உட்கொண்ட காலம் கடந்து இப்பொழுது தன் இன,மத,கலாச்சார பெருமையை நிலை நாட்ட மட்டுமே உணவு உட்கொள்ளும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பது உண்மையில் காலத்தின் கொடுமையாகவே நான் கருதுகின்றேன்.
ஏனெனில் இன்று மனிதர்கள் சாப்பிடுவதிலும் கூட தங்களின் சுதந்திரங்களை இழந்து தங்களுக்கு பிடித்தமானதையும் கூட எவ்வித அறிவுப்பூர்வமான அடிப்படைகளுமற்ற கலாச்சார வெளியுலகிற்காக மட்டுமே இது எனக்கு பிடிக்காது என்றும்,தனக்கு பிடிக்காததையும் கூட இந்த போலி உணவு கலாச்சார வெளியுலகிற்காக இது எனக்கு பிடித்தது என்றும் கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதை வெளிப்படையாகவே நம்மால் காண முடிகின்றது.
எனவே கலாச்சார அல்லது மத அடிப்படையிலான உணவு எப்படி தோன்றியது என்பது சம்மந்தமாகவும் நாம் சுதந்திரமான ஆரோக்கியமிக்க உணவு முறையை எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது சம்மந்தமாகவும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெறுவதோடு ஏனைய நண்பர்களுக்கும் இதனை எத்தி வைக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
உணவு கலாச்சாரம் எப்படி தோன்றியது?
மனிதனின் உணவு கலாச்சாரத்தில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை மாமிசம் என்பது ஒரு முக்கிய அங்கம் வகித்திருப்பதாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் சொல்லப்போனால் பல்வேறு பகுதிகளில் கால் நடைகள் அல்லது மீன்கள் போன்ற மாமிசத்தை உண்டாலே தவிர உயிர் வாழவே முடியாது என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரை இருக்கக்கூடிய நாடுகளையும் பகுதிகளையும் நம்மால் காண முடிகின்றது. அங்கெல்லாம் ஏனைய தாணிய மற்றும் காய்கறி உணவுகள் விளைவது கிடையாது என்பதே அங்கு மாமிசம் மட்டுமே பிரத்தியேக உணவாக ஆனதற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் கவனிக்க தக்கதாகும்.
இந்தியா போன்ற சில நாடுகளில் தாணிய,காய்கறி உணவுகளும் மாமிச உணவுகளும் பெரும்பாலும் சமமான நிலையில் கிடைக்கப்பெற்றதால் இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் இரண்டையும் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என்றே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.குறிப்பாக இந்தியாவிற்குள்ளேயே பகுதிகளுக்கு தகுந்தவாறு உணவு பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருந்ததாகவும் நம்மால் காண முடிகின்றது.
உதாரணமாக தெற்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு அரிசி விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் அரிசியை மட்டுமே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் வடக்கில் உள்ளவர்களுக்கு கோதுமையின் விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் கோதுமையையே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் ஆக்கிக்கொண்டுவிட்டனர் என்பதாகவே நம்மால் வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.மேலும் ஆசிய கண்டத்தின் சில பகுதிகளில் சோழம் மற்றும் பருப்பு வகையிலான தாணியங்கள் பிரத்யேக உணவாக பார்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆக இந்த உலகில் ஒவ்வொரு பகுதிகளுக்கு தகுந்தவாறும் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள சீதோஷன நிலைக்கு தகுந்தவாறுமே மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்திருந்ததே தவிர அங்கு மத அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ அல்லது கலாச்சார அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
எனவே உணவு கலாச்சாரம் என்பது அந்தந்த பகுதிகளை கவனித்தும் அங்குள்ள சீதோஷன நிலையை கவனித்துமே இருந்தது என்பதை நாம் ஆழமாக உணர்ந்து கொண்டாலே போதுமானது.இன்றைய பெரும் பான்மையான கலாச்சார பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு கண்டுவிட முடியும் என்றே நான் கருதுகின்றேன்.அடுத்தபடியாக எத்தகைய உணவுமுறை சிறந்து என்பதில் மக்களிடம் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அது சம்மந்தமான ஒரு சில விளக்கங்களையும் இங்கு நாம் பார்த்துவிடுவோம்.
எத்தகைய உணவு முறையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்?
என்னுடைய "முழுமை பெற்ற மனிதனாக இரு "என்ற புத்தகத்தில் ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றது என்ற தலைப்பின் கீழ் உணவு பழக்க வழக்கம் சம்மந்தமாக விரிவாக எழுதி இருக்கின்றேன்.முடிந்தால் அவற்றை ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு அவற்றில் முக்கியமான கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.உலகில் இன்று பல்வேறு உணவுகள் பல சுவைகளில் உறுவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு முக்கிய விதி என்பது இரண்டு தான்.
1.அது நமக்கு பிடித்தமான சுவையில் இருக்க வேண்டும்.
2.உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாத சுத்தமான உணவாக அது இருக்க வேண்டும்.
இந்த இரண்டு பொதுவிதிகளுக்கும் உட்பட்ட எத்தகைய உணவானாலும் உண்ணலாம் என்பதே என்னுடைய கருத்தாகும்.இவற்றில் மாமிசம் பிரியமானவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை தாராலமாக அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அவ்வாறே காய்கறி வகையான உணவை மட்டுமே விரும்புபவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை அவர்கள் தாராலமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இவற்றிற்கு மத்தியில் உணவு கலாச்சாரம் என்றும் உணவு பாரம்பரியம் என்றும் கூறிக்கொண்டு தனக்கு விருப்பமில்லாததை மற்றவர்களும் விரும்பக்கூடாது என்றோ அல்லது தனக்கு விருப்பமானதையே எல்லோரும் விரும்ப வேண்டும் என்றோ வற்புறுத்துவது என்பது மிக இழிவான செயல் என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ஆக இறைச்சியோ,காய்கறியோ அவரவரின் விருப்பத்திற்கேற்பவும் அவரவரின் உடல் நிலைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுத்துக்கொள்வதே ஒரு சிறந்த உணவுமுறையாக இருக்குமே தவிர ஒருவருடைய உணவு பழக்கத்தை மற்றொருவரிடம் மதத்தின் பெயராலோ அல்லது கலாச்சாரத்தின் பெயராலோ புகுத்த நினைப்பது என்பது அநாகரீகத்தின் உச்சமேயன்றி வேறில்லை என்றே நான் காண்கின்றேன்.
அடுத்தபடியாக இறைச்சி என்பது பெரும்பாலும் அசுத்தமாக பார்க்கப்படுகின்றதே அப்படியானால் அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?என்று சிலர் கேட்கின்றனர்.எனவே அது சம்மந்தமாகவும் ஒரு சில விளக்கங்களை இங்கு பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.
அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?
இந்த உலகில் மனிதன் ஒன்றை தன் உணவாக எடுத்துக் கொள்வதற்கு முதல் விதியே அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதையே நான் பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுவருகின்றேன்.எனவே அது இறைச்சியானாலும் சரி,அல்லது அது காய்கறியானாலும் சரி, அது சுத்தமானதாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.மேலும் அசுத்தத்தை மட்டுமே உண்ணுகின்ற அல்லது பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றும் பிராணிகளின் இறைச்சிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.எவ்வாறு விஷச்செடிகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்கின்றோமோ அது போன்றே இத்தகைய மாமிசங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும் சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.
எனவே அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தமட்டில் உடலுக்கு தீங்கை தரும் இன்னும் அறுவறுப்பாக காணப்படும் நிலையில் உள்ள இறைச்சிகளை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அடுத்தபடியாக கட்டுரையின் இறுதி பகுதிக்கும் வருவோம்.அதாவது இறைச்சி என்றவுடனே இந்தியாவில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாட்டிறைச்சியாகவே உள்ளது. எனவே அது சம்மந்தமாகவும் இங்கு ஒருசில விஷயங்களை பார்த்துவிடுவோம்.
மாட்டிறைச்சி உண்ணலாமா..?
மாடு என்பது உண்மையில் இந்த மனித சமூகத்திற்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருக்கும் ஒரு சிறந்த பிராணி என்பதை இங்கு முதலில் நான் நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.இன்னும் சொல்லப்போனால் அது விவசாயிகள் மற்றும் பால்காரர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு செல்லப்பிராணி என்று கூறினாலும் கூட அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.
அத்தகைய ஒரு பிராணியை அவர்கள் அளவு கடந்து நேசிப்பதால் அவற்றையே கடவுளாகவும் புனிதப்படுத்திப்பார்க்கின்றனர்.இது அவர்களின் தனிப்பட்ட பிரியம் என்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும் அவற்றை எல்லோரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஏனையோரையும் வலியுறுத்த நினைப்பது என்பதிலிருந்து தான் பிரச்சனையே உறுவெடுக்கின்றது.ஏனெனில் அவர்கள் நினைப்பது போன்றே ஒரு ஆடு வளர்ப்பவர் தன் ஆட்டை அளவு கடந்து நேசிக்கின்றார் என்பதற்காக அதனை இனி யாரும் உண்ணக்கூடாது என்று கூறத்தொடங்களாம்.இது போன்றே உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் புனிதத்தையும் காரணம் காட்டி ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இன்ன பொருளை உண்ணக்கூடாது என்று வற்புறுத்தத் தொடங்கினால் பிறகு உலகில் மனிதன் எதனையும் உண்ணவே முடியாமல் போய்விடுவான்.
எனவே மாட்டை நேசிப்பவர்கள் அல்லது மாட்டிறைச்சி உண்பதை வெறுப்பவர்கள் தாங்கள் அதனை செய்யாமல் தவிர்ந்துகொள்வதுதான் சிறந்ததே தவிர ஏனையோரையும் வற்புறுத்துவது என்பது அநாகரீகத்தின் உச்சம் என்பதை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளும்படி பணிவண்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மாட்டை புனிதமாக பார்க்கின்றார்கள் எனில் அவர்களுக்கு முன்பு மாட்டிறைச்சியை தவிர்த்துக் கொள்வது என்பதே அதனை உண்பவர்களுக்கும் சிறந்த பண்பாக அமையும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்..!ஆக மாட்டிறைச்சி உண்ணலாமா? என்று என்னிடம் கேட்டால் அதை உண்ணுவதும் உண்ணாமல் போவதும் அவரவரின் விருப்பம் என்று தான் நான் கூறுவேன், என்றாலும் நாம் அவற்றை உண்ணுவதால் ஒருவருடைய மனம் புன்படுகின்றது என்பதை உணர்ந்தால் அச்சமயம் கட்டாயம் அதனை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.
நன்றி:
எழுத்தாளர்:
அ.சதாம் உசேன் ஹஸனி