பெரியாரைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலராலும் பரப்பப்பட்டுவரும் நிலையிலும் அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பல்வேறு நலவுகளையும்,தொண்டுகளையும் நடுநிலை கண்ணோட்டத்துடன் என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன்.குறிப்பாக ஒரு சுதந்திரமான மனோநிலையில் மனிதர்களின் வாழ்வியலை போதிக்கும் ஒரு சிறந்த ஆசானாகவே அவர் தன் வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பதை அவருடைய எழுத்துக்களும் பிரச்சாரங்களும் பிரதிபளிப்பதை காணும் பொழுது அத்தகைய சிறந்த மனிதரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
இந்த கட்டுரை முழுவதும் பெரியார் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையில் "விவாகரத்து சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி "கல்யாண விடுதலை"என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.இது நிச்சயம் எல்லோருக்கும் பயனலிப்பதாக இருக்கும் என்றே ஆதரவு வைத்து பதிவிடுகின்றேன்.
(குறிப்பு:இவற்றில் சில கருத்துக்களை புரிவதற்காக நானே எளிய சில வார்த்தைகளையும் சேர்த்து இருக்கின்றேன் என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு விட்டுவிடுகின்றேன்.)"ஆண்,பெண் கல்யாண விஷயத்தில் அதாவது கணவன் மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாண தத்துவத்தையெல்லாம் சுறுக்கமாக பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாக்கிக்கொள்வதை தவிர வேறொன்றுமே அதில் இல்லை.அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கிறோம்.
பொதுவாக கவனித்தால் நமது நாடு மட்டுமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும் ,இயற்கைக்கு விரோதமான நிர்பந்தமும்படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது.ஆனால் நம் நாடு இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாடுகளையும் விட மிக மோசமானதாகவே இருந்து வருகின்றது.
இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டிற்குள்ளாக கல்யாணம் என்பதும் ,உறவு முறை என்பதும் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கொடுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வருகின்றனர்.ஆனால் நம் நாடு மாத்திரம் குரங்குபிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது.ஆகவே முறையாக நமது நாட்டில் பெண்களின் ஒரு கிளர்ச்சி ஏற்பட வேண்டிய அவசியமிருக்கின்றது.
சென்ற வருடம் செங்கல் பட்டு மாநாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடன் மேலும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடன் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுபவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு பிறகு இந்தியாவிலேயே பல இடங்களில் கல்யாண ரத்து சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
ரஷ்யாவில் கல்யாணம் என்பது ஒரு நாள் ஒப்பந்தமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.ஜெர்மனியில் கணவன் மனைவிக்கு விருப்பமில்லையானால் காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தினரும் கல்யாண ரத்துக்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள்.மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் நடைமுறையில் இருந்துதான் வருகின்றது.ஆனால் நமது நாட்டில் மட்டும் இவ்விஷயத்தில் சட்டம் கொண்டுவராமல் இருப்பது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும்.
சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக கனவர்கள் தங்களது மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்வதாக தினம் தினம் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம். சில சமயங்களில் மனைவிகளின் நடத்தையில் சந்தேகத்தின் காரணமாகவே பல்வேறு கொலைகள் நடப்பதையும் பார்க்கின்றோம்.ஆனால் இந்த சீர்திருத்தவாதிகளான பிடிவாதக்காரர்களிடம் தெய்வீகம் சார்ந்த இந்த கல்யாணம் இப்படி கொலைகளில் முடிகின்றதே என்று கவலைப்பட எவ்வித புத்தியும் இன்னும் தென்படவில்லை.
"பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அவ்வாறே ஆண்களுக்கும் திருப்தியும் ,இன்பமும் ,உண்மையான காதலும்,ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமான காரியமாகும்.அப்படி இல்லாதவரை ஆண்,பெண் இருவருக்கும் சுதந்திரமான வாழ்க்கை என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.
இங்கு தங்களை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து நாம் ஒன்று கேட்கவும் விரும்புகின்றோம்."கல்யாணம் என்பது மனிதனின் இன்பத்திற்கும் திருப்திக்குமா.?அல்லது வெறுமனே சடங்கிற்காக மட்டுமா..?என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
அது அவர்களால் முடியாது...!
எனவே தெய்வீகம் எங்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பமே இல்லாமலும் எவ்வித அறிமுகமும் இல்லாத உறவில் நிலைத்திருக்கும் படியும் வற்புறுத்தப்படுவதால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பம் ஒழிக்கப்பட வேண்டும்.மனிதன் ஏன் பிறந்தான் ஏன் சாகின்றான் என்பது வேறு விஷயம்.அது ஒருபுறமிருக்க மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியும் தான்.அதற்கு ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாக இருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும்.
அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூரு இருக்குமானால் அதை முதலில் கலைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதனைத்தான் முதலில் செய்ய வேண்டும்.இதைவிடுத்து கல்யாணம் செய்துவிட்டோமே என்பதற்காக சகித்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்று கருதி துன்பத்தையும் ,அதிருப்தியையும் அனுபவிப்பதும்,அனுபவிக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் ,சுய மரியாதையுமற்ற தன்மையுமேயாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும்.