ஒரு நாட்டின் அரசன் மிக பயபக்தியானவர்.அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் மக்களின் நிலையை அறிவதற்காக நகர்வளம் செல்வதுண்டு.அப்படி அவர் செல்கையில் தினமும் ஒரு வாலிபன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டு செல்வார்.ஒரு நாள் ஆர்வமிகுதியால் தன் குதிரையை விட்டும் இறங்கி அவ்வாலிபனிடம் சென்றார்.
"வாலிபனே நான் உன் தியானத்தை கலைத்தற்காக மன்னித்து விடு என்றார்.வாலிபனோ தன் கண்களை மெல்லமாக திறந்து "இல்லை நான் தியானம் செய்வதில்லை அது எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கின்றது , அது எப்பொழுதும் என்னைவிட்டும் கலைவதில்லை எனவே நீங்கள் மன்னிப்பு வேண்டவேண்டிய எந்த அவசியமுமில்லை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.அரசன் " நான்தான் இந்நாட்டின் அரசன்.என்னுடைய அரன்மனைக்கு நீங்கள் வந்துவிடுங்கள்.அங்கு நான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றேன்.நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய தவத்தாலும்,ஒளியாலும், அமைதியினாலும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.எனவே தயவு கூர்ந்து என்னுடன் வந்துவிடுங்கள் என்றார்.
(உண்மையில் அந்த துறவி தன் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அரசர் விரும்பினார்.ஏனென்றால் துறவி அதனை ஏற்றுவிட்டால் அவர் அரன்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்பிதான் இருந்திருக்கின்றார் என்று ஆகிவிடும் என்று பயந்தார்.)ஆனால் அந்த வாலிபர் எழுந்து போகலாம் என்றார்.
அப்போது அரசருடைய மனம் முழுவதும் ஒரு வெள்ளப்பிரலயமே ஓங்கி வீசுகின்றது."இவர் அரன்மணையில் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்போல் தெரிகின்றதே,அப்படியானால் இவர் உண்மையான துறவி இல்லைபோல் தெரிகின்றது.ஏனென்றால் துறவிகள் என்பவர்கள் தங்களை வருத்தி கொள்பவர்கள்தான் என்று அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் இந்த வாலிபர் அரன்மணையை விரும்புகின்றாரே என்பதை கண்டு இவர் ஒரு போலி துறவி என்றே முடிவெடுத்துக் கொள்கின்றார்.
ஆனாலும் வார்த்தை மாறமுடியாதே என்பதற்காக வேறுவழியின்றி வாலிபரை அரன்மணைக்கு அழைத்து செல்கின்றார்.அங்குள்ள பிரத்யேக அறையை அவருக்காக தயார்செய்தும் கொடுத்தார்.மேலும் பணியாட்களையும் அழகிய அந்தபுறப் பெண்களையும் அனுப்பி வைத்தார்.வாலிபர் இவற்றில் எதனையும் மறுக்கவில்லை.அனைத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.அரசனின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.இந்த வாலிபன் என்னை ஏமாற்றிவிட்டான். நான் கடந்துசெல்லும் இடத்தை சரியாக கண்டுபிடித்து என்னிடம் அவன் தியானம் செய்வதுபோல் நடித்து ஏமாற்றிவிட்டான் என்று மனதுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டார்.
இதே எண்ணத்தோடே அரசர் சில நாட்களை பல்லை கடித்துக்கொண்டு கடந்தார் என்றாலும் அவற்றை எல்லாம் போட்டு உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.அப்படி ஒரு நாளும் வந்தது.ஆம்..!
ஒரு நாள் துறவியும் அரசரும் ஒரு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் சூழல் ஏற்பட்டது.அப்பொழுது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி வாலிபரே உங்களிடம் நான் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஆசிக்கின்றேன் என்றார்.துறவியும் கேளுங்கள் என்றார்.
அரசர் சற்று தயக்கத்துடனே இதை நான் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் பாலாய்ப்போன மனம் அதனை உறுத்திக் கொண்டே இருக்கின்றது எனவேதான் நான் இதை கேட்கின்றேன் என்றார்.துறவி பரவாயில்லை கேளுங்கள் என்றார்...!அரசர்"உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன..?"தயவு செய்து எனக்கு விளக்கம் கூறுங்கள்.ஏனெனில் நான் அனுபவிக்கும் அனைத்தையும் நீங்களும் அனுபவிக்கின்றீர்கள் அப்படியானால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்று சற்று விரப்புடனே கேட்டார்.
அதற்கு அந்த வாலிப துறவியோ இந்த சந்தேகம் "நான் உன் அரன்மணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டபோதே உன்னிடம் தோன்றிவிட்டது என்பதை நான் நன்றாக அறிவேன்.ஆனாலும் நீர் ஒரு கோழை.அன்றே இந்த கேள்வியை கேட்டிருந்தால் உன் மனம் நிம்மதியாக இருந்திருக்கும்.சரி இப்பொழுதாவது கேட்டாயே..! என்று கூறி விட்டு, இந்த கேள்விக்கு விடை இதோ இந்த ஆற்றை கடந்தால் மட்டுமே பெற முடியும் என்றார்.
அரசரோ அப்படியா அப்படியானால் நாம் அந்த பக்கமாக போகும்பொழுது அதனை பெற்றுக்கொள்வோம் என்றார்.ஆனால் துறவியோ அது இப்பொழுதே போனால் மட்டுமே கிடைக்கும்.எனவே என்னோடு ஆற்றைக் கடந்து வாருங்கள் என்றார்.இருவரும் ஆற்றைக் கடந்து ஒரு காட்டை வந்தைடைந்தனர்.அப்பொழுது துறவி இந்த காட்டிலேயே நான் அமர்ந்து தவம் செய்யப்போகின்றேன் எனவே நீங்கள் விரும்பினால் என்னோடு இருக்கலாம் இல்லையானால் நீங்கள் போகலாம் என்றார்.
அரசனோ நான் எப்படி உங்களோடு இருப்பது என்னை நம்பி ஒரு நாடு இருக்கின்றது.மேலும் எனக்கான பொறுப்புகளும் கடமைகளும் ஏறாலமாக அங்கு காத்திருக்கின்றது.எனவே என்னால் எப்படி உங்களோடு வர முடியும் என்றார்.அப்பொழுது துறவி "இது தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்றார்.நான் ஒரு துறவி நேற்று போல் எனக்கு இன்று இல்லை.இன்று போல் எனக்கு நாளை இல்லை.எனவே நான் காட்டில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.அரன்மணையில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.ஆனால் உங்கள் நிலை அப்படிப்பட்டதில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் நான் இனி உங்கள் அரன்மனைக்கு வரப்போவதில்லை என்றார்.
அதற்கு அரசனோ இல்லை இல்லை நான் உங்களை தவறாக எண்ணிவிட்டேன் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.நீங்கள் என் அரன்மணைக்கு கட்டாயம் என்னோடு வந்தேயாக வேண்டும் என்று துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.ஆனால் துறவியோ இல்லை நான் உங்களோடு இப்பொழுது வந்தாலும் உங்கள் மனம் என்றாவது ஒரு நாள் திரும்பவும் அதே கேள்வியை தோற்றுவிக்கும்.எனவே நான் உங்கள் மன அமைதியை கெடுக்க விரும்பவில்லை.எனவே நான் திரும்பி வருவதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் எனக்கு இந்த உலகில் ஒரு மரத்தின் நிழல் போதும் என்று உறுதியாக கூறிவிட்டார்.
நீதி:
- பிறரைப்பற்றிய நம் எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துவிடும்.
- யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
- இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை உள்ளது.
- இந்த உலகத்தில் ஒரு மரத்தின் நிழலே பெரும் மகிழ்ச்சிக்கு போதுமானது.