முன்னுரை:
இந்த உலகில் எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்துவதற்கென்றே ஒருசிலர் இருப்பது இன்றைய சமயத்தில் மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவற்றிற்கு யாரும் விதிவிலக்கும் கிடையாது.இப்படி எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்தவோ அல்லது நம் உணர்வோடு விளையாடவோ பல்வேறு மனிதர்கள் நம்மைச் சுற்றி வலம்வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி வேண்டுமென்றே நம்மை வெறுப்பூட்ட நினைக்கும் ஒருவரை நாம் பெறும்பாலும் அடித்தோ அல்லது அவரைவிட மிக மோசமாகவோ நடந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்வோம்.ஆனால் வேண்டு மென்றே நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஒருவரை எவ்வாறு கையாளுவது என்பதை முற்கால துறவி ஒருவர் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றிருப்பதை நம்மால் காணமுடிகிறது.அவற்றை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொண்டால் நம் வாழ்விற்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இங்கு நான் பதிவுசெய்கின்றேன்.
துறவியின் கதை:
"அந்த நாட்டிலேயே மிகவும் அமைதியானவர் என்ற பெயரை அத்துறவி எடுத்திருந்தார்.மக்காளால் மிகவும் புகழப்பட்டுக் கொண்டிருந்த அத்துறவியின் மீது ஒருவனுக்கு பொறாமை வந்தது.அவர் எப்படி மக்களிலேயே மிகவும் நல்லவர் என்றும் மிக அமைதியானவர் என்றும் பெயர் பெற்றார்..?அவரை சும்மா விடக்கூடாது என்றும் அவரை நாம் எரிச்சலூட்டினால் நிச்சயம் அவர் உண்மை ரூபம் மக்களுக்கு வெளிப்பட்டுவிடும் என்றும் எண்ணிக்கொண்டு அத்துறவியின் பெயரை கெடுப்பதற்காகவே அவருடைய மடத்திற்கு வந்தான்.
சீடர்களோடு உரையாடிக்கொண்டிருந்த துறவியை பார்த்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டினான்.ஆனால் துறவி அவனுடைய வார்த்தைகளை காதிலேயே எடுத்துகொள்ளவில்லை.பிறகு துறவியை நேராக பார்த்து அடே கிழவா,அசிங்கம் பிடித்தவனே,முட்டாளே இங்கே வாடா என்றான்.மாணவர்கள் அனைவரும் கோபமுற்று எழுந்தார்கள்.ஆனால் அத்துறவியோ அமைதியாக அமருங்கள் என்று கூறிவிட்டு வெளியில் வந்து "ஏனெப்பா ஏன் இப்படி தொண்டை வலிக்க கத்துகின்றாய்..?இதோ இந்த தண்ணீரை அருந்து என்று துறவி சாந்தமாக தன் கையிலிருந்த குவளையை கொடுத்தார்.ஆனால் அவன் அதனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு நான் உன்னை இவ்வளவு கேவலமாக திட்டுகின்றேனே உனக்கு சுரனையே இல்லையா..?என்று துறவியைப்பார்த்து கேட்டான்.
அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக் கொண்டே " நாம் ஒருவருக்கு வழங்கும் பரிசை அவர் பெற்றுக்கொண்டால் தானே அது அவருக்கு சொந்தம்..!அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லையானால் அது அந்த பரிசளித்தவருக்கே சொந்தமாகிவிடுமல்லவா என்று அவனைப்பார்த்துக்கேட்டார்.வாலிபனோ சொல்வதறியாமல் நின்றான்..!நிலைதடுமாறிய அவ்வாலிபனை தோளில் தட்டிக் கொடுத்து வாலிபனே என்னை நான் யாரென்று உன்னைக்காட்டிலும் அறிவேன் எனவே என்னை திட்டுவதில் உன் பொன்னான சக்தியை வீணடிக்காதே என்று உபதேசித்தார்.அவ்வாலிபனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு துறவியிடம் மன்னிப்பு வேண்டினான்.மேலும் அத்துறவியிடமே சீடனாகவும் ஆனான் என்றும் அக்கதை முடிகின்றது.
நீதி:
- இங்கு பலரும் நம்முடைய பொறுமையை சோதிப்பதற்கென்றே திரிகிறார்கள் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
- நம்மை அவமானப்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு நம்மை திட்டுபவர்களுக்கு நாம் எந்த பதிலும் அளிக்கத்தேவையில்லை.ஏனெனில் நாம் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அற்ப ஆசையாக இருக்கும்.எனவே அத்தவறை நாமும் செய்துவிடக்கூடாது.
- நாம் நம்மைபற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும்பொழுது நம்மை தாழ்த்த நினைப்பவர்களிடம் சென்று நம்மை உயர்த்திக்காட்ட எந்த அவசியமுமில்லை.அவர்களுக்கு விளக்கமளிப்பதைவிட விலக்கி வைப்பதே மேலானது.
- நம்மை வெறுப்பூட்ட நினைப்பவர்களையும் மனிதர்களாக மதித்து செயல்பட வேண்டும்.