திங்கள், 13 ஜனவரி, 2025

இந்திய இஸ்லாமியர்களின் கல்விநிலையும் அதற்கான தீர்வும்-Indian Muslims and their Education

 

முன்னுரை:

                            இந்த மனித சமூகத்தை இன்றுவரை மனிதமாண்புடன் நிலை நிறுத்திக்கொண்டிருப்பதே கல்விதான் என்றால் நிச்சயம் அது மிகையாகாது. கல்வியற்ற மனிதர்கள் கட்டற்ற காட்டுமிராண்டிகளாகவும்  அறமற்ற அரக்கர்களாகவுமே இப்பூமியில் வளம்வருவார்கள் என்பதற்கு வரலாறு நெடுகிழும் சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன.அதனடிப்படையில்தான் "ஒரு பள்ளிக்கூடம் ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுகின்றது" என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.அவ்வளவேன் "கல்வியின் வாடையையே கண்ணில் காட்டாத காலத்திலேயே "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைபுகினும் கற்கை நன்றே" என்று பாடிவிட்டு சென்றால் நம் பாட்டி அவ்வையார்.இப்படி இந்த மனித சமூகத்தின் முதுகெழும்பான கல்வியின் மாண்பை இங்கு எடுத்துறைக்க பேனாக்களும் போதாது, காகிதங்களும் போதாது.

ஆக ஒருமனிதன் தான் பிறந்ததிலிருந்து இந்த உலகில் கற்கவேண்டிய பாடங்களும் அனுபவங்களும் எண்ணிள் அடக்கமுடியாதளவிற்கு கொட்டிக்கிடக்கின்றன.அவை அனைத்தையும் இப்பூவுலகிற்கு வரும் ஒவ்வொரு மனிதனும் கற்றுவிடமுடியாதென்றாலும் அவனுக்கென்ற அடிப்படை அறிவையும் வாழ்வியல் நெறியையும் பொருளாதார மற்றும் சமூக புரிதலையும் பெறவேண்டியது அல்லது கொடுக்கவேண்டியது இந்த மனித சமூகத்தை மனிதமாண்போடு காக்கப்போராடும் ஒவ்வொருவரின்மீதும் கடமையாகும்.அவ்வாறு காக்கத்தவறினால் படித்த அல்லது மனித மாண்போடு வாழநினைக்கும் ஏனையோறும் சேர்ந்து அழிந்துபோகவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவார்கள்.இதன்காரணமாகவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கட்டாயம் வழங்கவேண்டும் என்ற சட்டம் (ஒரு சில ஆண்டிற்கு முன்பு)இயற்றப்பட்டிருபதை நம்மால் காணமுடிகிறது.

(இந்திய அரசியலமைப்பு சட்டம் 2002இல் (86-வது திருத்தம்), ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக வழங்குவதற்காக, இந்திய அரசியலமைப்பில் 'பிரிவு 21A' சேர்க்கப்பட்டது. இது கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009 என்று அழைக்கப்படுகிறது.)

மேற்கூறப்பட்டவாறு சட்டம் இயற்றப்பட்டும் இன்றைக்கு இந்தியாவில் ஆரம்ப கல்வியென்பது எல்லா தரப்பிலும் ஓரளவு பரவாயில்லை என்பதாகவே அறிக்கைகள் கூறினாலும் அவை இஸ்லாமிய சமூக மக்களின் கல்விசார்ந்து மிகப்பெரும் வருத்தத்தை பகிர்ந்திருக்கின்றது.மேலும் உயர் நிலை கல்வியிலோ அல்லது மேல்நிலைக் கல்வியிலோ பார்க்கும்பொழுது பிற்படுத்தப்பட்ட மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதத்தைக் காட்டிலும் மிகமோசமாக உள்ளதாக சிறுபான்மை கல்வி தரவை நாடாலுமன்றத்தில் சமர்பித்த சர்ச்சார் கமிட்டி கூறுவது உண்மையில் என் இதயத்தை சுக்குநூறாக்குகின்றது.

சர்ச்சார் கமிட்டி நாடாளுமன்றத்தில் வழங்கிய தரவு:Download

தற்போதைய தரவு 👇

இஸ்லாமியர்களின் பள்ளி கல்வி நிலை சதவிகிதம்

மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில்தான் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கின்றதா என்றால் அவற்றில் கணக்கிடப்படாத ஏராளமான அவளநிலைகளும் இங்கு அரங்கேறிக்கொண்டேதானிருக்கின்றது.அந்த அவளங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமென்ன என்பதை அலசி ஆராய்ந்துபார்த்தால் இந்த சமூகம் வாழ்வாதாரப் பற்றாக்குறையோடு ஒவ்வொரு நாளும் போராடி போர்புரிந்துகொண்டிருப்பதை காணமுடிகின்றது. ஆம்.!நம்நாட்டில் உள்ள 85% சதவிகித வறுமைகோட்டிற்கு கீழுள்ள மக்களில் 30% மக்கள் இஸ்லாமியர்கள் என்பதாக அரசு தரவுகள் சான்றுபகர்கின்றன.

மேலே நான் சுட்டிக்காட்டியிருக்கும் சர்ச்சார் கமிட்டியின் அறிக்கையை நன்றாக வாசித்துப்பாருங்கள்.முஸ்லிம்கள் கல்வித்தரம் மலைவால் மக்களைக்காட்டிலும் மிகமோசமாக இருப்பதாக சுட்டிக்காண்பித்திருக் கின்றார்கள்.அவைமட்டுமின்றி வேலைவாய்ப்பு,அடிப்படை வசதிகள் போன்ற அனைத்திலும் இந்த இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கியிருப்பதாக அவ்வறிக்கை நமக்கு தெளிவுபடுத்துகின்றது.இப்படி அன்றாடம் தானும் தன்குடும்பமும் ஒருவேலை சாப்பாட்டிற்கே போராடவேண்டிய சூழல் இருக்கும்பொழுது ஒரு இஸ்லாமிய குழந்தை நிறுவனமையமாவதையும்,(மருத்துவராவதையும்,கணிணி பொறியாளர் ஆவதையும்) தொழில் நுட்பவாதியாவதையும் எப்படி கனவு காணும்?என்று நினைக்கும்பொழுது உண்மையில் கண்களில் இரத்தமே வருகின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க தன்சொந்த நாட்டு மக்களை கல்வியாலும் வேலைவாய்ப்புகளினாலும் மேம்படுத்தவேண்டிய தற்போதைய அரசு மதஅடிப்படைவாதத்தை கையிலெடுத்துக்கொண்டு குறிப்பிட்ட சமூகங்களை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்பட்டுவருவது அதனினும் கொடுமை. இத்தகைய இக்கட்டான இச்சமயத்தில் இந்திய இஸ்லாமிய சமூகம் இதற்காக என்னதான் செய்யவேண்டும்?என்பதை விரிவாக விவரிப்பதே என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கமாகும்.நிச்சயம் இக்கட்டுரை இஸ்லாமிய சமூகத்தை உயர்த்தி நிறுத்த போராடிக்கொண்டிருக்கும் நல்லுல்லங்களுக்கு ஒரு பரந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றே ஆதரவுவைக்கின்றேன்.


தற்போதைய நிலையில் இஸ்லாமிய சமூகம் என்ன செய்யவேண்டும்?

தீர்வு-1.தரவுகளை சேகரிக்கவேண்டும்.

முதலாவதாக இந்தியாவில் வசிக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகளும் ஜமாஅத்துகளும் தங்களின் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் எண்ணிக்கையையும்,அவர்களில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை யாரெல்லாம் கற்றிருக்கின்றார்கள் என்பதையும்,அவர்களில் யாரெல்லாம் அரசு வேலை வாய்ப்புகளை பெற்றிருக்கின்றார்கள் என்பதையும் மேலும் தாங்கள் படித்த படிப்பிற்கான பணியில் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்பதையும் தரவுகளாக்க வேண்டும். உண்மையில் இஸ்லாமிய சமூகம்பற்றிய இந்த தகவலே இன்றைய அரசிடம் இல்லை என்பது கேட்பாரற்ற சமூகமாக இஸ்லாமிய சமூகம் விடப்பட்டிருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.

எனவே இன்றைய இஸ்லாமிய இயக்கங்களும் ஜமாஅத்தலைவர்களும் தங்களுக்கு மத்தியில் உள்ள குடும்ப பிரச்சனைகளையும் பதவிப் பிரச்சனைகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் ஓரமாக வைத்துவிட்டு இறைவனுக்காகவும் இந்த கேட்பாரற்ற சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் சேவைசெய்யும்விதத்தில் தங்கள் பகுதியில் உள்ள இஸ்லாமிய குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலைக்குறித்த தரவுகளை சேமிப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும். மேலும் அத்தரவுகளை சேமித்து ஏதோ நம் பகுதியில் உள்ள மக்களின் தகவல்களை தெரிந்துகொண்டோம் என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி அடுத்த கணமே நகரவேண்டும்.அது என்ன அடுத்தகட்ட நடவடிக்கை என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அவை என்னவென்று பார்த்துவிடுவோம்.


தீர்வு-2.இஸ்லாமிய சமூக அமைப்புடன்கூடிய தரமான கல்விக்கூடங்களை ஒவ்வொரு பகுதியிலும் உறுதி செய்யவேண்டும்.

இன்றைக்கு மதச்சார்பற்ற அரசியல் செய்வதாககூறும் மாநிலங்களிலுள்ள பள்ளிகள்கூட நமதுநாட்டில் இஸ்லாமிய குழந்தைகளின் மத அடையாளங்ளையும் அவர்களின் மதம் சார்ந்த உணர்வையும்  அழிப்பதற்கும் அதன்மீது வன்மத்தை கக்குவதற்குமே முயற்சிப்பதை காணமுடிகின்றது. பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய குழந்தைகள் ஆசிரியர்களாலும் சகமாணவர்களாலும் மதத்தால் குறிவைக்கப்பட்டு மனோஉலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.அதனால் நன்கு படிக்கும் குழந்தைளும்கூட கல்வியை துண்டித்து தவறான பாதையில் செல்லும்நிலை அதிகரித்துவருகின்றது.இதனைத்தான் அந்த கயவர்களும் விரும்புகின்றனர்.

உண்மையில் மனசாட்சியோடு சிந்தித்துப்பாருங்கள்!இன்றைக்கு நம் பெண் குழந்தைகள் தங்களின் கண்ணியத்திற்காக அணியும் ஹிஜாப் என்னும் துப்பட்டா அல்லது மேற்துண்டுகளை எத்தனையோ கல்விக்கூடங்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தடைசெய்துவிட்டது.அவை ஒருபுறமிருக்க தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள்கூட இந்த துண்டுகளையெல்லாம் இன்னும் ஏன் கழட்டிவீசாமல் தலைகளில் சுமந்துகொண்டு திரிகின்றீர்கள் என்பதாக ஏதோ அவர்களே பலநூறு கிலோ சுமையை தங்களின் தலைகளில் சுமப்பதைப்போன்று நம் சமூக சகோதரிகளிடம் ஒரு குற்றஉணர்ச்சியை தூண்டிக்கொண்டிருக் கின்றார்கள்.இவற்றிற்கு பலியாகும் அப்பாவி குழந்தைகளும் இன்று பெருகிவருகின்றனர்.

எனவே இவற்றையெல்லாம் துடைத்தெரிய இஸ்லாமிய சமூகம் தங்களுக்கான தலைசிறந்த கல்விக்கூடங்களை தங்களின் பகுதியில் நிறுவுவதற்கு உறுதி செய்யவேண்டும்.மேலும் அவற்றில் உலகத்தரம் வாய்ந்த கல்வி,விளையாட்டு மற்றும் செயல்திறன் பயிற்சிகளை வழங்கவேண்டும்.பல்வேறு மொழிகளை பயிற்றுவிக்கவேண்டும்.குறிப்பாக ஏழைமாணவர்களுக்கு அந்த ஊரில் உள்ள செல்வபெருந்தகைகள் அல்லது ஜமாஅத்தார்கள் பொறுப்பேற்று உயர்கல்வி கொடுப்பதோடு சிறந்த பணிகளை அவர்கள் அடைவதற்கான எல்லா வழிவகைகளையும் செய்துகொடுக்க வேண்டும்.மேலும் அவர்களை சமூக அக்கரைகொண்ட சிறந்த சமூகஅமைப்பாளர்களாகவும் சமூகத்திற்காக அற்பணிக்கவேண்டும்.

இவ்வாறு செய்யும்பொழுது இஸ்லாமிய சமூகத்தில் சிறந்த கல்வியாளர்களை இஸ்லாமிய விழுமியத்தோடு நம்மால் வார்த்தெடுக்கமுடியும்.மேலும் அதனால் தன்னிறைவோடு வாழக்கூடிய ஒரு சிறந்த கூட்டமைப்பையும் நம்மால் கட்டிக்காக்கவும் முடியும்.மேலும் கல்விக்காக சேவைசெய்யக்கூடிய ஒரு சிறந்த சமூகமாகவும் நம்மை கட்டமைத்துக்கொள்ளவும் முடியும். அவைமட்டுமின்றி நம்முடைய குழந்தைகளுக்கெதிரான வன்மங்களையும் வஞ்சங்களையும் எதிர்கொண்டு அடக்கவும் முடியும்.எனவே தற்போதைய ஆரம்ப நிலையிலேயே இதில் நாம் கவனம்செலுத்தவேண்டும். இல்லையெனில்  நிச்சயம் நம் சமூகம் மிகப்பெரும் அதலபாதாளத்தில் தள்ளிவிடப்படும் என்பதை சமூகஅக்கரை கொண்ட ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள கடமைபட்டிருக்கின்றோம் என்பதை பணிவண்போடு சுட்டிக்காண்பித்துக்கொள்கின்றேன்.


முடிவுரை:

இன்றைய இஸ்லாமிய சமூகம் எல்லாதுறைகளிலும் மிகப்பெரும் அளவில் வஞ்சிக்கப்பட்டுவருகின்றது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.ஏனெனில் கண்முன்னே ஒரு குறிப்பிட சமூகத்திற்கெதிரான பல்வேறு அநீதிகளும் அக்கிரமங்களும் இங்கு அரங்கேறிக்கொண்டேதான் இருக்கின்றது.இவற்றையெல்லாம் அறத்தோடும் ஆழமான ஆற்றலோடும் எதிகொள்ளவேண்டிய கட்டாயத்தின் கீழ் இன்றைய இஸ்லாமிய சமூகம் பணிக்கப்பட்டிருக்கின்றது.மேலும் இவற்றை கலைவதற்கு நாம் கல்வி,பொருளாதாரம்,அதிகாரம் என்பதை நோக்கி அறத்தோடு நடைபோடவேண்டிய கட்டாயத்திலும் இருகின்றோம். அரசு,ஆட்சிஅதிகாரம் என்பதை நாம் என்றைக்குமே கேட்டுப்பெறுபவர்களல்ல என்றாலும் நம்முடைய அடிப்படை உரிமைகளை காப்பதும் நமது மதச்சுதந்திரத்தை உறுதிசெய்வதும் நம்மில் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

இவற்றில் குறிப்பாக நம்சமூக குழந்தைகளின் கல்வியின் விஷயத்தில் எவ்வித சமரசமுமின்றி எவ்வித பாகுபாடுமின்றி உலகத்தரம்வாய்ந்த கல்வியை அடையச்செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.சிறந்த கல்வியாளர்கள் சமூகமாக நம்மை செதுக்கி எடுக்கவேண்டும்.ஏதோ பணம்படைத்தவர்கள் அல்லது அரசியல் அடிவருடிகளாக வளம்வருபவர்களின் பிள்ளைகள் மட்டுமே உயர் கல்விபடிக்கமுடியும் என்ற அல்லது உயர்பதவியில் இருக்கமுடியும் என்ற பீடைநிலையை விட்டொழித்துவிட்டு கீழே நான் குறிப்பிடும் சில அடிப்படைகளை ஒவ்வொரு நல்லுள்ளம்கொண்ட சமூக அக்கரையாளர்களும் கருத்தில் கொள்ளவேண்டுமென்று மிக பணிவண்போடுவேண்டிக்கொள்கின்றேன்.


ஒவ்வொரு பள்ளிவாயிலிலும் ஒரு (Smart Class) வகுப்பறை நிறுவப்பட வேண்டும்.

நம்மில் ஒவ்வொரு(மஹல்லா)பகுதியிலும் அல்லது ஒவ்வொரு ஜமாஅத்திலும் தற்பொழுது எப்படி குர்ஆன் வாசிப்புமுறை கற்பிக்கப்படுகின்றதோ அவ்வாறே அடிப்படை கல்விமுதல்(UPSE-GROUP-1-GROUP-2 & 4)எழுதுவதற்கான பயிற்சிவரை அளிக்கப்படவேண்டும்.அவை மட்டுமின்றி நமது சமூக குழந்தைகள் மருத்துவ கல்வியில் சிறந்துவிளங்க மருத்துவ நுழைவுத்தேர்விற்கான சிறந்த பயிற்சிகளையும் அங்கு கொடுக்கப் படவேண்டும்.அவ்வாறே சூழழுக்கு தகுந்தவாறு பல்வேறு மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும்.மேலும் பெண்பிள்ளைகளுக்கு (B.Ed)ஆசிரியை படிப்பதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துகொடுக்க வேண்டும்.இவ்வாறெல்லாம் நாம் நம் சமூகத்திற்கான பயனுள்ள கல்வி ஏற்பாடுகளை செய்வதால் நிச்சயம் நாம் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையினரை தன்னிறைவோடு வாழச்செய்துவிடலாம் என்பது எனது நம்பிக்கையாகும்.

(குறிப்பு)இங்கு பலரும் என்ன இவர் மார்க்க கல்வி கற்பிப்பதை சார்ந்து எதுவும் சொல்லவில்லை.அப்படியானால் அது தேவையே இல்லை என்று எண்ணுகிறாரா? என்று கேட்கலாம்.அன்பர்களே நிச்சயம் அவ்வாறல்ல.மாறாக அதுதான் நம் உயிர்நாடி.அவை நம்முடைய ஆளமானவேர் என்றால் மேலே குறிப்பிட்டவைகளெல்லாம் அதற்கான உரங்கள் என்பதாகவே நான் கருதுகின்றேன்.அந்த ஆழமான வேர்கள் இருப்பதால்தான் இந்த கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயமே எனக்கு ஏற்பட்டுள்ளது.எனவே மார்க்க கல்வியை ஒருகாலமும் பிரித்துப்பார்ப்பதற்கான நிலையை நான் ஒருபோதும் அடைந்ததில்லை,அடையப்போவதுமில்லை.அவை நம் கல்வியோடு ஒன்றோடொன்று பிணைந்துவிட்டது.அதனை பிரித்துப்பார்க்கும் எந்த நோக்கமும் என்னிடமில்லை என்பதை பணிவண்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி:
A.Sadam husain hasani
Previous Post
Next Post