முன்னுரை:
இந்த உலகில் கொட்டிகிடக்கும் அருட்செல்வங்கள் அனைத்தையும் குறைவின்றி அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பது இந்த இயற்கைத்தாயோ அல்லது இறைத்தாயோ என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக்கருத்துமிருக்காது என்றே நான் கருதுகின்றேன்.அத்தகைய இறை அருட்செல்வங்களை அடைந்து கொள்வதற்காக மனிதன் பல்வேறுமுறைகளில் பாடுபட்டுவருகின்றான் என்றாலும் ஒருவர் மற்றொருவருக்கு எவ்விதத்திலும் அநீதிஇழைத்துவிடாமலும் தீங்கிழைத்துவிடாமலும் அவற்றை அடைந்துகொள்வதற்கே வியாபாரம் என்ற ஒரு சிறந்த வழியை இந்த மனிதசமூகம் தேர்ந்தெடுத்துக்கொண்டது அதற்கு கிடைத்த பெரும்பேறு என்பதாகவே குறிப்பிடலாம்.
இத்தகையநிலையில் 2024 யின் ஆய்வறிக்கைப்படி இந்த உலகில் கிட்டத்தட்ட 359 மில்லியன் வியாபாரங்களும் அதற்காக கிட்டத்தட்ட 328 மில்லியன் கம்பெணிகளும் செயல்படுத்தப்பட்டுவருவதாக நம்மால் காணமுடிகின்றது. இந்த வியாபாரங்களில் பெரும்பான்மையானவை மனிதர்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கும் அதனை சந்தைப்படுத்துவதற்குமானதாகவே இருக்கின்றது என்றாலும் அவற்றில் சில இந்த மனிதசமூகத்தை சீரழிப்பதற்கு காரணியாக அமையக்கூடியவைகளும் இருக்கின்றது.உதாரணமாக மது,புகையிலை போன்ற போதைப்பொருள் வியாபாரங்கள் அல்லது சூது,நிச்சயமற்ற பந்தையம் போன்ற அறமற்ற விளையாட்டு வியாபாரங்கள் அல்லது அநியாய வட்டிவசூல் வியாபாரங்கள் இவையனைத்தும் அவற்றில் அடங்கும்.
அந்தவகையில் பங்குச்சந்தை என்பது எத்தகைய வியாபாரமுறை என்பது குறித்தும் உண்மையில் அது சூதாட்டத்திற்கு இணையானதா?என்பது குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கின்றேன்.பங்குச்சந்தை குறித்த பல்வேறு தவறான கண்ணோட்டமுடையவர்களுக்கு நிச்சயம் இந்த கட்டுரை சிறந்த தெளிவைத்தரும் என்றே நம்புகின்றேன்.முதலாவதாக பங்குச்சந்தை என்பதே சூதாட்டம்தானா என்பதை நாம் புரிந்துகொள்ள இரண்டு அடிப்படைகளை புரிந்துகொள்ளவேண்டும்.முதலாவது சூதாட்டமென்றால் என்ன என்பது குறித்தும் இரண்டாவது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.எனவே வாருங்கள் முதலில் சூதாட்டமென்றால் என்ன எனபது குறித்து பார்த்துவிடுவோம்.
 |
What is Gambling? |
சூதாட்டமென்றால் என்ன?
"பணத்தையோ அல்லது மதிப்புமிகு ஏதேனும் ஒருபொருளையோ பகராமக வைத்து குறிப்பிட்ட சில விளையாட்டுகளை விளையாடுவதாகும்."உதாரணமாக தற்போதையநிலையில் கேசினோ என்னும் ரம்மி சீட்டுக்கட்டுக்களை அடிப்படையாகக்கொண்ட விளையாட்டுகள் அல்லது கிரிகேட் போன்ற விளையாட்டுப்போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து பந்தையம் கட்டுவது அல்லது அதிக தொகையை வெல்லும் நம்பிக்கையில் லாட்டரி சீட்டுக்களை விலைக்கு வாங்கிவைத்துக்கொள்வது போன்ற அனைத்து முறைகளும் சூதாட்டமாகவே கருதப்படுகின்றது.இத்தகைய விளையாட்டுக்கள் பொழுதுபோக்கிறகாக விளையாடப்பட்டாலும் தற்போதையநிலையில் இவை மிகப்பெரும் பொருளாதார சீர்கேட்டை கட்டமைப்பதற்கு மிகமுக்கிய காரணியாக மாறிவிட்டது.
அதாவது தற்போதைய நிலையில் மேற்கூறப்பட்ட விளையாட்டுக்களில் பந்தையம்கட்டி தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த மொத்த பொருளாதாரத்தையும் ஒருசில நொடிகளில் இழந்துவிடுவதால் ஒவ்வொருநாளும் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்துகொள்வதை கண்கூடாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் சிலருக்கு இதுவே பழக்கமாகமாறி இத்தகைய சூதாட்டத்திலேயே தங்களுடைய பொன்னான நேரத்தையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக வீணடித்துவிடுகின்றனர்.இப்படிப்பட்ட விளையாட்டுக்களில் கட்டப்படும் பந்தையங்கள் கடுமையான சட்டங்களாலும்,தண்டனைகளாலும் தடைசெய்யப்படவேண்டியதுதானேயன்றி அவைகளும் ஒரு வியாபார முறையாகவோ அல்லது லாபமீட்டுவதற்கான வழியாகவோ பார்க்கப்படவேண்டுமென்று எந்த ஒரு நல்ல மனிதனும் வாதிடமாட்டான் என்றே நம்புகின்றேன்.
அதனடிப்படையில் அடுத்தபடியாக பங்குச்சந்தை என்பது மேற்கூறப்பட்டது போன்ற சூதாட்டம்தானா?என்பதை விவரிக்க பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம் வாருங்கள்..!
பங்குச்சந்தை என்றால் என்ன?
(Stock Market) -பங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும்,விற்பதற்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு சந்தையாகும்.இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது பங்குகளை முதலீட்டாளர்களிடம் வெளியிட்டு அவற்றைவிற்று அதன்மூலம் தங்களது நிறுவனத்திற்கான நிதியை திரட்டிக்கொள்கின்றன.இதனைப்போன்றே முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பு அதிகமாகும்பொழுது அதிலிருந்து குறிப்பிட்ட லாபங்களையும் பெறுகின்றனர்.அவைமட்டுமின்றி அந்த நிறுவனத்தின் சிறு உரிமையாளராகவும் மாறுகின்றனர்.மேலும் இத்தகைய பங்குச்சந்தைக்கு இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளும் இருக்கின்றது.அதாவது இவற்றிற்கென்றே விதிகளை அமைக்கும் அரசு பொதுஅமைப்புகள் இங்கு பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அரசு அமைப்பிற்கு (SEBI) செபி என்று சொல்லப்படுகின்றது.இவை இந்தியாவின் அதிகபட்ச அதிகார வரம்பைக்கொண்ட (RBI)-ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா-வின் நேரடிப்பார்வையில் இயங்கக்கூடிய ஒரு அரசு அதிகாரமிக்க அமைப்பாகும்.இவற்றிற்குக்கீழ் (NATIONAL STOCK EXCHANGE)-தேசிய பங்கு வர்த்தகம் மற்றும் BOMBAY STOCK EXCHANGE-பாம்பே பங்கு வர்த்தகம் என்று சொல்லப்படக்கூடிய இரண்டு சந்தை தளங்களை அடிப்படையாகக் கொண்டே இவை செயல்படுத்தப்படுகின்றன.இத்தகைய ஒரு முதலீட்டு அமைப்பிற்கே பங்கு வர்த்தகம் அல்லது பங்குச்சந்தை என்று சொல்லப்படுகின்றது. தற்பொழுது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் அது எப்படி இயங்குகின்றது என்பது குறித்தும் ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.எனவே வாருங்கள் அடுத்தபடியாக மேற்கூறப்பட்ட பங்குவர்த்தகம் சூதாட்டம்தானா என்பது குறித்த விவரங்களை பார்த்துவிடுவோம்.
பங்குச்சந்தையே சூதாட்டம்தானா?
இதற்கு ஒற்றை வரியில் பதிலளிக்கவேண்டுமானால் மேலே நான் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்படும் முதலீட்டுத்தளமான பங்குச்சந்தையை சூதாட்டத்துடன் ஒப்பிடுவது அறியாமையின் உச்சம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.ஏனெனில் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் தன்னுடைய பணத்தை அரசின் மூலமாக முதலீடு செய்து அதன்மூலம் நிறுவனத்திற்கும் அரசிற்கும் தனக்கும் லாபத்தை ஈட்டிக்கொள்வது எந்த வகையில் சூதாட்டமாகும்? உண்மையில் ஒரு சிறந்த முதலீட்டாளர் தன்னுடைய பணத்தை தான் விரும்பிய அல்லது வளர்ந்துவரும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து லாபமடைந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்திலும் சூதாட்டமாகாது.மேலும் பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்துவதே ஒரு சிறந்த பொருளாதார நிபுனரின் மிகச்சிறந்த சேமிப்பாகவும் முதலீடாகவும் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
ஏனெனில் இப்பங்குச்சந்தையே நாட்டின் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் நிறுவனத்திற்கும் நாட்டின் குடிமக்களான முதலீட்டாளர்களுக்கும் மத்தியில் பெரும்பாலமாக இருக்கின்றது. உண்மையில் இப்பங்குச்சந்தையின் மூலம் நாட்டின் கடைகோடியில் உள்ள ஒருவரும் தன் முதலீட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கும் வாய்ப்பை பெறுவதோடு அவற்றின் மூலம் தானும் லாபமடைந்து கொள்கின்றார் என்பதே நிதர்சனமாகும்.எனவே இத்தகைய ஒரு சிறந்த முதலீட்டுத்தளத்தை சூதாட்டம் என்று சொல்வது மடமையையன்றி வேறுஎன்னவாக இருக்கமுடியும்?
இறுதியாக ஒருசிலர் இப்படி கேட்பதையும் என்னால் காணமுடிகின்றது. அதாவது பங்குச்சந்தை என்பது சிறந்த முதலீட்டுத்தளம்தான் என்றால் அதில் ஏன் 95% சதவிகிதம் நபர்கள் பணத்தை இழக்கின்றார்கள் என்பதாக பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பே கூருகின்றதே என்பதாக கேள்வியெழுப்புகின்றனர்.எனவே அதுகுறித்த விவரங்களையும் இங்கு பதிவு செய்துவிடுகின்றேன்.
பங்குச்சந்தையில் அதிகமானோர் ஏன் பணத்தை இழக்கின்றனர்?
இவற்றிற்கு சுறுக்கமாக பதில்கூறவேண்டுமானால் கீழ்வருமாறே என்னுடைய பதிலை பதிவுசெய்துகொள்ள நான் விரும்புகின்றேன். "குறுகிய காலத்தில் அதிக லாபமீட்டுவதற்கு நினைப்பதே அதற்கான அடிப்படை காரணியாகும்."அதாவது பங்குச்சந்தையில் Option -ஆப்சன் முதலீடு அல்லது Future - குறிப்பிட்ட காலவரையரை முதலீடு என்று சொல்லப்படக்கூடிய முதலீட்டுமுறைகள் உள்ளன.அவைகள் சிலசமயங்களில் குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை தந்துவிடும் என்பது நிதர்சனமானாலும் அதைக்காட்டிலும் பெரிய நஷ்டத்தில் தள்ளிவிடும் என்பதும் மகத்தான உண்மையாகும்.இத்தகைய முதலீட்டுமுறைகள் பெரும்பாலும் நஷ்டத்தையே கொடுக்கும் என்பதில் நல்ல முதலீட்டாளர்களிடத்தில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்பதை இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.
மேற்கூறியவாரான முதலீட்டுமுறைகளை பெரும்பாலும் சிறந்த முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பதே கிடையாது என்பதே நிதர்சனமாகும்.ஆனால் பங்குச்சந்தைக்கு புதிதாக வருபவர்கள் அல்லது மேற்கூறிய முறையை மட்டுமே பங்குச்சந்தை என்பதாக எண்ணிக்கொள்பவர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் தன்மொத்த முதலீட்டையும் கொட்டி புல்லுக்கிறைத்த நீராய் தங்களின் பணத்தை இழந்துவிட்டு காணாமல்போய்விடுகின்றார்கள்.அல்லது தங்களின் முதலீட்டில் பெரும்பகுதியை இழந்து பங்குச்சந்தையையே வெறுத்து வெளியேறிவிடுகின்றார்கள்.உணமையில் இத்தகைய நபர்களைத்தான் சூதாடும் மனோபாவம் கொண்டவர்கள் என்பதாகவும் இங்கு சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.
ஆனால் இவற்றிற்கு மாறாக நீண்டகால அடிப்படையில் ஒரு சிறந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் லாபத்தை மட்டுமே தருகின்றது என்பதே எனது அனுபவத்தின் முடிவாகும்.அதனடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மட்டுமலாமல் ஒரு நல்ல முதலீட்டாளர் தான் முதலீடு செய்யும் நிறுவனம் எத்தகையது என்பது சார்ந்தும் அதன் கடன் சார்ந்த விவரங்கள் என்ன என்பது சார்ந்தும் மேலும் அதனுடைய காலாண்டு மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விற்பனையையும் லாப நஷ்டங்களையும் கட்டாயம் கவனிக்கவேண்டும் என்பதையும் இங்கு தாழ்வண்போடு சுட்டிக்காண்பித்துக்கொண்டு, இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்ற ஆதரவோடு முடித்துக்கொள்கின்றேன்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து உங்கள் முதலீட்டின் மூலம் லாபமடைய நீங்களும் விரும்பினால் நான் நம்பகமான இரண்டு பங்கு விற்பனை தரகர் செயலிகளை பயன்படுத்துகின்றேன்.
- ZERODHA - சிரோதா -LINK
- ANGEL ONE- ஏஞ்சல் ஒன்- LINK
இவற்றில் ஏதேனும் ஒரு செயலியை தேர்ந்தெடுத்து இவற்றின் மூலம் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பம் செய்யலாம்.மேலும் இவற்றில் Zerodha -வில் உங்கள் முதலீட்டுக்கணக்கை ஆரம்பம் செய்யும் பொழுதே வருடாந்திர கட்டணமாக 400/- ரூபாய் வசூலிக்கின்றனர்.ஆனால் Angel One -யில் இலவசமாகவே Demate Account -பெறுவதற்கு உதவுகின்றனர்.ஆனால் மாதம் ஒருமுறை 20 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.மேலும் அடுத்த கட்டுரையில் பங்குச்சந்தையில் எப்படி ஒரு கம்பெணியை தேர்ந்தெடுப்பது என்பது சம்மந்தமாகவும் அதனை எப்படி வாங்குவது மற்றும் விற்பது என்பது சம்மந்தமாக விரிவாக பார்ப்போம்.
.webp) |
Online Stock Market Course In Tamil |
தமிழில் பங்குச்சந்தை சார்ந்த அனைத்து தகவல்களையும் பாடமாக படிப்பதற்கு இணையத்தின் வழியாகவே பங்குச்சந்தை வகுப்பை நான் நடத்தி வருகின்றேன்.பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நண்பர்கள் மட்டும் அப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
நன்றி:
Author:A.Sadam husain hasani