புதன், 22 ஜனவரி, 2025

பங்குச்சந்தையே சூதாட்டம்தானா? Indian Share Market

பங்குச்சந்தையே சூதாட்டம்தானா? Indian Share Market


முன்னுரை:

இந்த உலகில் கொட்டிகிடக்கும் அருட்செல்வங்கள் அனைத்தையும் குறைவின்றி அள்ளிக்கொடுத்துக்கொண்டிருப்பது இந்த இயற்கைத்தாயோ அல்லது இறைத்தாயோ என்பதில் நமக்கு எவ்வித மாற்றுக்கருத்துமிருக்காது என்றே நான் கருதுகின்றேன்.அத்தகைய இறை அருட்செல்வங்களை அடைந்து கொள்வதற்காக மனிதன் பல்வேறுமுறைகளில் பாடுபட்டுவருகின்றான் என்றாலும் ஒருவர் மற்றொருவருக்கு எவ்விதத்திலும் அநீதிஇழைத்துவிடாமலும் தீங்கிழைத்துவிடாமலும் அவற்றை அடைந்துகொள்வதற்கே வியாபாரம் என்ற ஒரு சிறந்த வழியை இந்த மனிதசமூகம் தேர்ந்தெடுத்துக்கொண்டது அதற்கு கிடைத்த பெரும்பேறு என்பதாகவே குறிப்பிடலாம்.

இத்தகையநிலையில் 2024 யின் ஆய்வறிக்கைப்படி இந்த உலகில் கிட்டத்தட்ட 359 மில்லியன் வியாபாரங்களும் அதற்காக கிட்டத்தட்ட 328 மில்லியன் கம்பெணிகளும் செயல்படுத்தப்பட்டுவருவதாக நம்மால் காணமுடிகின்றது. இந்த வியாபாரங்களில் பெரும்பான்மையானவை மனிதர்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய பொருட்களை தயாரிப்பதற்கும் அதனை சந்தைப்படுத்துவதற்குமானதாகவே இருக்கின்றது என்றாலும் அவற்றில் சில இந்த மனிதசமூகத்தை சீரழிப்பதற்கு காரணியாக அமையக்கூடியவைகளும் இருக்கின்றது.உதாரணமாக மது,புகையிலை போன்ற போதைப்பொருள் வியாபாரங்கள் அல்லது சூது,நிச்சயமற்ற பந்தையம் போன்ற அறமற்ற விளையாட்டு வியாபாரங்கள் அல்லது அநியாய வட்டிவசூல் வியாபாரங்கள் இவையனைத்தும் அவற்றில் அடங்கும்.

அந்தவகையில் பங்குச்சந்தை என்பது எத்தகைய வியாபாரமுறை என்பது குறித்தும் உண்மையில் அது சூதாட்டத்திற்கு இணையானதா?என்பது குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கியிருக்கின்றேன்.பங்குச்சந்தை குறித்த பல்வேறு தவறான கண்ணோட்டமுடையவர்களுக்கு நிச்சயம் இந்த கட்டுரை சிறந்த தெளிவைத்தரும் என்றே நம்புகின்றேன்.முதலாவதாக பங்குச்சந்தை என்பதே சூதாட்டம்தானா என்பதை நாம் புரிந்துகொள்ள இரண்டு அடிப்படைகளை புரிந்துகொள்ளவேண்டும்.முதலாவது சூதாட்டமென்றால் என்ன என்பது குறித்தும் இரண்டாவது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும்.எனவே வாருங்கள் முதலில் சூதாட்டமென்றால் என்ன எனபது குறித்து பார்த்துவிடுவோம்.

What is Gambling?


சூதாட்டமென்றால் என்ன?

"பணத்தையோ அல்லது மதிப்புமிகு ஏதேனும் ஒருபொருளையோ பகராமக வைத்து குறிப்பிட்ட சில விளையாட்டுகளை விளையாடுவதாகும்."உதாரணமாக தற்போதையநிலையில் கேசினோ என்னும் ரம்மி சீட்டுக்கட்டுக்களை அடிப்படையாகக்கொண்ட விளையாட்டுகள் அல்லது கிரிகேட் போன்ற விளையாட்டுப்போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து பந்தையம் கட்டுவது அல்லது அதிக தொகையை வெல்லும் நம்பிக்கையில் லாட்டரி சீட்டுக்களை விலைக்கு வாங்கிவைத்துக்கொள்வது போன்ற அனைத்து முறைகளும் சூதாட்டமாகவே கருதப்படுகின்றது.இத்தகைய விளையாட்டுக்கள் பொழுதுபோக்கிறகாக விளையாடப்பட்டாலும் தற்போதையநிலையில் இவை மிகப்பெரும் பொருளாதார சீர்கேட்டை கட்டமைப்பதற்கு மிகமுக்கிய காரணியாக மாறிவிட்டது.

அதாவது தற்போதைய நிலையில் மேற்கூறப்பட்ட விளையாட்டுக்களில் பந்தையம்கட்டி தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த மொத்த பொருளாதாரத்தையும் ஒருசில நொடிகளில் இழந்துவிடுவதால் ஒவ்வொருநாளும் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்துகொள்வதை கண்கூடாக நம்மால் காணமுடிகின்றது.மேலும் சிலருக்கு இதுவே பழக்கமாகமாறி இத்தகைய சூதாட்டத்திலேயே தங்களுடைய பொன்னான நேரத்தையும் பொருளாதாரத்தையும் முற்றிலுமாக வீணடித்துவிடுகின்றனர்.இப்படிப்பட்ட விளையாட்டுக்களில் கட்டப்படும் பந்தையங்கள் கடுமையான சட்டங்களாலும்,தண்டனைகளாலும் தடைசெய்யப்படவேண்டியதுதானேயன்றி அவைகளும் ஒரு வியாபார முறையாகவோ அல்லது லாபமீட்டுவதற்கான வழியாகவோ பார்க்கப்படவேண்டுமென்று எந்த ஒரு நல்ல மனிதனும் வாதிடமாட்டான் என்றே நம்புகின்றேன்.

அதனடிப்படையில் அடுத்தபடியாக பங்குச்சந்தை என்பது மேற்கூறப்பட்டது போன்ற சூதாட்டம்தானா?என்பதை விவரிக்க பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம் வாருங்கள்..!


பங்குச்சந்தை என்றால் என்ன?

(Stock Market) -பங்குச்சந்தை என்பது முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கும்,விற்பதற்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு சந்தையாகும்.இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது பங்குகளை முதலீட்டாளர்களிடம் வெளியிட்டு அவற்றைவிற்று அதன்மூலம் தங்களது நிறுவனத்திற்கான நிதியை திரட்டிக்கொள்கின்றன.இதனைப்போன்றே முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் மதிப்பு அதிகமாகும்பொழுது அதிலிருந்து குறிப்பிட்ட லாபங்களையும் பெறுகின்றனர்.அவைமட்டுமின்றி அந்த நிறுவனத்தின் சிறு உரிமையாளராகவும் மாறுகின்றனர்.மேலும் இத்தகைய பங்குச்சந்தைக்கு இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளும் இருக்கின்றது.அதாவது இவற்றிற்கென்றே விதிகளை அமைக்கும் அரசு பொதுஅமைப்புகள் இங்கு பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக இந்திய பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அரசு அமைப்பிற்கு (SEBI) செபி என்று சொல்லப்படுகின்றது.இவை இந்தியாவின் அதிகபட்ச அதிகார வரம்பைக்கொண்ட (RBI)-ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா-வின் நேரடிப்பார்வையில் இயங்கக்கூடிய ஒரு அரசு அதிகாரமிக்க அமைப்பாகும்.இவற்றிற்குக்கீழ் (NATIONAL STOCK EXCHANGE)-தேசிய பங்கு வர்த்தகம் மற்றும் BOMBAY STOCK EXCHANGE-பாம்பே பங்கு வர்த்தகம் என்று சொல்லப்படக்கூடிய இரண்டு சந்தை தளங்களை அடிப்படையாகக் கொண்டே இவை செயல்படுத்தப்படுகின்றன.இத்தகைய ஒரு முதலீட்டு அமைப்பிற்கே பங்கு வர்த்தகம் அல்லது பங்குச்சந்தை என்று சொல்லப்படுகின்றது. தற்பொழுது பங்குச்சந்தை என்றால் என்ன என்பது குறித்தும் அது எப்படி இயங்குகின்றது என்பது குறித்தும் ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன்.எனவே வாருங்கள் அடுத்தபடியாக மேற்கூறப்பட்ட பங்குவர்த்தகம் சூதாட்டம்தானா என்பது குறித்த விவரங்களை பார்த்துவிடுவோம்.


பங்குச்சந்தையே சூதாட்டம்தானா?

இதற்கு ஒற்றை வரியில் பதிலளிக்கவேண்டுமானால் மேலே நான் குறிப்பிட்ட வரைமுறைகளில் செயல்படும் முதலீட்டுத்தளமான பங்குச்சந்தையை சூதாட்டத்துடன் ஒப்பிடுவது அறியாமையின் உச்சம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.ஏனெனில் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் தன்னுடைய பணத்தை அரசின் மூலமாக முதலீடு செய்து அதன்மூலம் நிறுவனத்திற்கும் அரசிற்கும் தனக்கும் லாபத்தை ஈட்டிக்கொள்வது எந்த வகையில் சூதாட்டமாகும்? உண்மையில் ஒரு சிறந்த முதலீட்டாளர் தன்னுடைய பணத்தை தான் விரும்பிய அல்லது வளர்ந்துவரும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்து லாபமடைந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்திலும் சூதாட்டமாகாது.மேலும் பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்துவதே ஒரு சிறந்த பொருளாதார நிபுனரின் மிகச்சிறந்த சேமிப்பாகவும் முதலீடாகவும் இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஏனெனில் இப்பங்குச்சந்தையே நாட்டின் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் நிறுவனத்திற்கும் நாட்டின் குடிமக்களான முதலீட்டாளர்களுக்கும் மத்தியில் பெரும்பாலமாக இருக்கின்றது. உண்மையில் இப்பங்குச்சந்தையின் மூலம் நாட்டின் கடைகோடியில் உள்ள ஒருவரும் தன் முதலீட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கும் வாய்ப்பை பெறுவதோடு அவற்றின் மூலம் தானும் லாபமடைந்து கொள்கின்றார் என்பதே நிதர்சனமாகும்.எனவே இத்தகைய ஒரு சிறந்த முதலீட்டுத்தளத்தை சூதாட்டம் என்று சொல்வது மடமையையன்றி வேறுஎன்னவாக இருக்கமுடியும்?

இறுதியாக ஒருசிலர் இப்படி கேட்பதையும் என்னால் காணமுடிகின்றது. அதாவது பங்குச்சந்தை என்பது சிறந்த முதலீட்டுத்தளம்தான் என்றால் அதில் ஏன் 95% சதவிகிதம் நபர்கள் பணத்தை இழக்கின்றார்கள் என்பதாக பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி அமைப்பே கூருகின்றதே என்பதாக கேள்வியெழுப்புகின்றனர்.எனவே அதுகுறித்த விவரங்களையும் இங்கு பதிவு செய்துவிடுகின்றேன்.



பங்குச்சந்தையில் அதிகமானோர் ஏன் பணத்தை இழக்கின்றனர்?

இவற்றிற்கு சுறுக்கமாக பதில்கூறவேண்டுமானால் கீழ்வருமாறே என்னுடைய பதிலை பதிவுசெய்துகொள்ள நான் விரும்புகின்றேன். "குறுகிய காலத்தில் அதிக லாபமீட்டுவதற்கு நினைப்பதே அதற்கான அடிப்படை காரணியாகும்."அதாவது பங்குச்சந்தையில் Option -ஆப்சன் முதலீடு அல்லது Future - குறிப்பிட்ட காலவரையரை முதலீடு என்று சொல்லப்படக்கூடிய முதலீட்டுமுறைகள் உள்ளன.அவைகள் சிலசமயங்களில் குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை தந்துவிடும் என்பது நிதர்சனமானாலும் அதைக்காட்டிலும் பெரிய நஷ்டத்தில் தள்ளிவிடும் என்பதும் மகத்தான உண்மையாகும்.இத்தகைய முதலீட்டுமுறைகள் பெரும்பாலும் நஷ்டத்தையே கொடுக்கும் என்பதில் நல்ல முதலீட்டாளர்களிடத்தில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை என்பதை இங்கு நான் வெளிப்படையாகவே பதிவுசெய்துகொள்கின்றேன்.

மேற்கூறியவாரான முதலீட்டுமுறைகளை பெரும்பாலும் சிறந்த முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பதே கிடையாது என்பதே நிதர்சனமாகும்.ஆனால் பங்குச்சந்தைக்கு புதிதாக வருபவர்கள் அல்லது மேற்கூறிய முறையை மட்டுமே பங்குச்சந்தை என்பதாக எண்ணிக்கொள்பவர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் தன்மொத்த முதலீட்டையும் கொட்டி புல்லுக்கிறைத்த நீராய் தங்களின் பணத்தை இழந்துவிட்டு காணாமல்போய்விடுகின்றார்கள்.அல்லது தங்களின் முதலீட்டில் பெரும்பகுதியை இழந்து பங்குச்சந்தையையே வெறுத்து வெளியேறிவிடுகின்றார்கள்.உணமையில் இத்தகைய நபர்களைத்தான் சூதாடும் மனோபாவம் கொண்டவர்கள் என்பதாகவும் இங்கு சுட்டிக்காட்ட நான் விரும்புகின்றேன்.

ஆனால் இவற்றிற்கு மாறாக நீண்டகால அடிப்படையில் ஒரு சிறந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகள் பெரும்பாலும் லாபத்தை மட்டுமே தருகின்றது என்பதே எனது அனுபவத்தின் முடிவாகும்.அதனடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது மட்டுமலாமல் ஒரு நல்ல முதலீட்டாளர் தான் முதலீடு செய்யும் நிறுவனம் எத்தகையது என்பது சார்ந்தும் அதன் கடன் சார்ந்த விவரங்கள் என்ன என்பது சார்ந்தும் மேலும் அதனுடைய காலாண்டு மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விற்பனையையும் லாப நஷ்டங்களையும் கட்டாயம் கவனிக்கவேண்டும் என்பதையும் இங்கு தாழ்வண்போடு சுட்டிக்காண்பித்துக்கொண்டு, இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்ற ஆதரவோடு முடித்துக்கொள்கின்றேன்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்து உங்கள் முதலீட்டின் மூலம் லாபமடைய நீங்களும் விரும்பினால் நான் நம்பகமான இரண்டு பங்கு விற்பனை தரகர் செயலிகளை பயன்படுத்துகின்றேன்.
  1. ZERODHA - சிரோதா -LINK



  1. ANGEL ONE- ஏஞ்சல் ஒன்- LINK
இவற்றில் ஏதேனும் ஒரு செயலியை தேர்ந்தெடுத்து இவற்றின் மூலம் நீங்கள் முதலீடு செய்ய ஆரம்பம் செய்யலாம்.மேலும் இவற்றில் Zerodha -வில் உங்கள் முதலீட்டுக்கணக்கை ஆரம்பம் செய்யும் பொழுதே வருடாந்திர கட்டணமாக 400/- ரூபாய் வசூலிக்கின்றனர்.ஆனால் Angel One -யில் இலவசமாகவே Demate Account -பெறுவதற்கு உதவுகின்றனர்.ஆனால் மாதம் ஒருமுறை 20 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.மேலும் அடுத்த கட்டுரையில் பங்குச்சந்தையில் எப்படி ஒரு கம்பெணியை தேர்ந்தெடுப்பது என்பது சம்மந்தமாகவும் அதனை எப்படி வாங்குவது மற்றும் விற்பது என்பது சம்மந்தமாக விரிவாக பார்ப்போம்.

Online Stock Market Course In Tamil


Online Stock Market Course In Tamil

தமிழில் பங்குச்சந்தை சார்ந்த அனைத்து தகவல்களையும் பாடமாக படிப்பதற்கு இணையத்தின் வழியாகவே பங்குச்சந்தை வகுப்பை நான் நடத்தி வருகின்றேன்.பங்குச்சந்தையை ஒரு சிறந்த முதலீட்டுக்களமாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் நண்பர்கள் மட்டும் அப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
 

நன்றி:
Author:A.Sadam husain hasani

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபாரத்தின் ஆபத்துகள்

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ற முந்தைய கட்டுரையிலேயே வியாபாரத்தின் நோக்கங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.அதில் இன்றைய உலகம் மிக தீவிரமாக செயல்படுத்தத்துடிக்கும் லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபார முறையும் ஒன்றாக குறிப்பிட்டு இருந்தேன்.மேலும் அது இந்த மனித சமூகவாழ்வை இறுதி நிலைக்கு அழைத்துச்சென்றுவிடும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.எனவே இந்த கட்டுரையில் அது எப்படி இந்த மனிதசமூகத்திற்கு மிக ஆபத்து என்பதை விரிவாக பார்ப்போம்...!

1.மக்களிடம் செயற்கை தேவையை ஏற்படுத்துகிறது.

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வியாபார முறையானது மக்களின் தேவையை நிறைவேற்றுவதைவிடுத்து தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் மக்களிடம் செயற்கையான தேவையை ஏற்படுத்துவதை மைய்யமாகக்கொண்டு செயல்படக்கூடிய வியாபாரமுறை என்பதே இதில் ஒழிந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதாக நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றிற்கென்று எந்த வரைமுறைகளுமின்றி பொருளை மக்களின் தலையில் கட்டுவது மட்டுமே இந்த வியாபாரமுறையின் அடிப்படை கொள்கையாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு உதாரணமாக இன்றைய உற்பத்தி துறைகளில் லாபநோக்கோடு மட்டும் செயல்படும் பல்வேறு கார்பரேட் தொழில் கூடங்களை குறிப்பிடலாம். உதாரணமாக இன்றைக்கு குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு இத்தனை வாகனங்களை மக்களின் தலையில் கட்டிவிட வேண்டும் என்ற (Target)குறிக்கோளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக நாம் பார்க்கலாம்.

மக்களுக்கு வாகனம் தேவையாகத்தான் இருக்கின்றது என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் தேவையற்றது என்பதும் நிதர்சனமாக இருக்கின்றது. ஆனால் அளவுக்கு அதிகமாக தயாரித்து வைத்திருக்கும் வாகனங்களை மக்கள் தங்கள் கையில் உள்ள பொருளை அல்லது பணத்தை கொடுத்து எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்பதற்காகவே இந்த வியாபார முதலைகள் செயற்கையான தேவையை உறுவாக்குகின்றனர்.அதற்கு அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் ஆயுதம் மக்களின் பேராசையை தூண்டுவதேயாகும்.
ஆம் ..!
இன்று மக்கள் தங்களின் சொத்தை விற்றேனும் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதற்கான ஆசையை விளம்பரங்களின் மூலம் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இதனால் யார் அந்த பொருளை வைத்திருப்பாரோ அவர் சமூகத்தில் மிக மதிப்பிற்குறியவர் என்றும் யாரிடம் அது இல்லையோ அவர் சமூகத்தில் எவ்வித மதிப்புமற்றவர் என்றும் ஒரு ஆபத்தான சமூக கட்டமைப்பை இந்த லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட வியாபாரமுறை உறுவாக்கிக்கொண்டிருக்கின்றது என்பதே எனது முதல் குற்றச்சாட்டாகும்.

இந்த வியாபார முறையை இப்படியும் விளக்களாம் என்றே நான் கருதுகின்றேன்.அதாவது குருடனும்கூட அவனுடைய சொத்தையோ அல்லது தன்னையோ இழந்து லாபநோக்கம் மட்டுமே கொண்ட சில வியாபாரிகளின் ஒரு அழகிய சித்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதைப்போன்றதே இந்த லாப நோக்கம் கொண்ட வியாபாரமுறை என்றும் குறிப்பிடலாம்.

அந்த சித்திரத்தை குருடன் பார்க்கவே முடியாது என்றாலும் அது அழகானது என்று சில மக்களாலோ அல்லது அதை விற்கத்துடிப்பவர்களின் விளம்பரத்தாலோ வலியுறுத்தப்பட்டுவிட்டதால் அந்த குருடனும் அதை வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றான்.இப்படி மனிதனின் அத்தியாவசியங்கள் என்பதெல்லாம் தாண்டி சவ்கரியங்கள் என்பதையும் கடந்து தேவையற்ற பொருட்கள் என்ற வட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டு அது உலகலவில் சந்தைப்படுத்தப்படுவது என்பது இந்த மனித இனத்திற்கான மிகப்பெரும் அழிவுப்பாதையேயன்றி வேறு என்னவென்று சொல்வது

இத்தகைய வியாபாரமுறைதான் இந்த மனித சமூகத்தை மிகப்பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் மிகக்கொடிய வியாபாரமுறை என்று நான் குறிப்பிடுகின்றேன்.ஆனால் இன்று இந்த உலகையே இந்த வியாபார முறைதான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் நிதர்சனமாக நான் காண்கின்றேன்.இது இந்த மனித சமூகத்திற்கு பொருளாதார சீர்கேட்டை தருமே தவிர ஒரு முறையான வசதிமிக்க மனநிறைவுபெற்ற வாழ்வியலை ஒருபொழுதும் தராது என்பதே எனது உறுதியான கண்ணோட்டமாக இருக்கின்றது.

ஏனெனில் மக்களின் தேவையே வியாபாரத்தின் அடிப்படை விதி என்றிருக்கும்பொழுது மக்களிடம் செயற்கையான தேவையை உறுவாக்கி அவர்களிடம் வியாபாரம் செய்து அவர்களை உறிஞ்ச நினைப்பது என்பது இந்த மனித சமூகத்தை பேரழிவில் தள்ளுவதற்கான முயற்சியாக அமையுமே தவிர இந்த மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் ஒருபோதும் அழைத்துச் செல்லாது என்பதே எனது தீர்க்கமான முடிவாகவும் நான் கருதுகின்றேன்.

2.பொருட்களை பதுக்கி வைத்துக்கொள்ள தூண்டுகிறது.

வெறும் லாப நோக்கை மட்டுமே கொண்ட இந்த வியாபார முறையே பொருட்களை பதுக்கி வைத்து மக்களிடம் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கும், விலைஏற்றம் செய்வதற்கும் மிக அடிப்படை காரணியாக இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.இன்று மக்களின் தேவைக்கு தகுந்தவாறு பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய சூழலிலும்கூட இந்த லாப நோக்கு கொண்ட வியாபாரமுறை அதனை பதுக்கி வைத்துக்கொண்டு மக்களை அலைக்களிக்கச் செய்து பிறகு மிகப்பெரும் விலைக்கு மக்களிடம் தலையில் கட்டிவிடுகின்றது என்பதை நம்மால் ஒர்போதும் மறுக்க முடியாது.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச்செயலாக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் பல்வேறு சமயங்களில் அரசின் உதவியோடே இந்த மாபாதகச் செயல் அரங்கேற்றப்படுகின்றது.லாபமடைவது என்ற சுயநலனை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வியாபாரமுறை மக்களின் நிலைகுறித்தோ அல்லது மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ எந்த கவலையும் படத்தயாராக இல்லை என்றிருக்கும்பொழுது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அந்த வியாபாரிகள் மனசாட்சியின்றி மக்களை உறிஞ்சுவதற்காக விலையை தாருமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.அப்படி மக்கள் வாங்க மறுக்கும்பொழுது அதனை வேண்டுமென்றே பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.எனவேதான் இந்த மனசாட்சியற்ற வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வியாபார முறை மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்லும் மிகப்பெரும் ஆபத்து என்று நான் கூறுகின்றேன்.

3.குறிப்பிட்ட சிலருக்கே இது உதவி புரிகிறது.

லாப நோக்கம் மட்டும் கொண்ட இந்த வியாபார முறையானது அடித்தட்டு வியாபாரி தொடங்கி உயர் மட்ட வியாபாரி வரை அனைவரிடமும் குடி கொண்டிருந்தாலும் இது உயர்மட்ட வியாபாரிகளிடமே அதிகம் குடிகொண்டிருக்கின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் இது உயர்மட்ட நுகர்வோர்களுக்கு மட்டுமே அதிகம் உதவக்கூடியதாகவும் நம்மால் காணமுடிகின்றது.

உதாரணமாக ஒரு அத்தியாவசியப்பொருள் அது சந்தையில் எங்கும் கிடைக்கவில்லை என்றிருக்கும்பொழுது அதனை குறிப்பிட்ட சிலர் மட்டும் மிக எளிதில் பெற்றுவிடுவது இதற்கு மிகப்பெரும் சான்றாக இருக்கின்றது.வெறும் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் இந்த வியாபாரமுறை குறிப்பிட்ட செல்வாக்குடையவர்களை குறிவைத்தே நகர்கின்றது என்பதையே இவ்வாறு நான் குறிப்பிடுகின்றேன்.குறிப்பாக சொல்லப்போனால் உழைப்பின்றி பெரும் செல்வங்களை திரட்டிவைத்திருப்பவர்களுக்கு எத்தகைய தொகையும் பெரிதாக தெரியப்போவதில்லை என்பதை கருத்தில்கொண்டே இந்த வியாபாரமுறை சுழல்கின்றது என்பதாகவும் இதனை கூறலாம்.

பெரிய அளவிலான மக்கள் இந்த வியாபாரத்தால் பயனடையவும் முடியாது.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் பெரும் லாபம் அடைந்து கொள்ளவும் முடியும் என்பதே இந்த வியாபாரமுறையின் முக்கிய முரன்பாடுடைய அபாயமாக இருக்கின்றது.எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உதவி செய்யும் இந்த வியாபார முறையானது மக்களின் உயர்நிலைக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்பதோடு இது செல்வம் படைத்தவர்களுக்கும் ஆபத்தே என்பதும் எனது கண்ணோட்டமாக இருக்கின்றது.

கட்டுரையின் விரிவு கருதி இத்துடன் இந்த கட்டுரையை முடித்துக் கொண்டு அடுத்த கட்டுரையில் தொழிளாலர்களுக்கு இந்த வியாபார முறை எப்படியெல்லாம் ஆபத்தாக அமைந்திருக்கின்றது என்பது சம்மந்தமாகவும், மேலும் வியாபாரம் எதனை அடிப்படையாகக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.

 நன்றி:

அ.சதாம் உசேன் ஹஸனி

சனி, 18 செப்டம்பர், 2021

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன?

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன
வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன

முன்னுரை:

இன்றைய சூழலில் பெரும்பான்மையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொருளாதாரம் சம்மந்தமான பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவைகள் மாணவர்களுக்கு புரியும் வண்ணமோ அல்லது மாணவர்களின் வாழ்வியலோடு கலந்தோ கற்பிக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்திற்குறிய உண்மையாகும்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான பேராசிரியர்களே வியாபாரத்தின் அடிப்படை கூறுகளை சரியாக புரியாததுதான் அவ்வாறு நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த கட்டுரையில் வியாபாரத்தின் சில தத்துவங்களை சுட்டிக்காட்டுவதின் மூலம் வியாபாரம் என்றால் என்ன என்பதையும் அவைகள் எதனையெல்லாம் அடைப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது போன்ற முக்கிய அடிப்படை விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இது வியாபரத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

வியாபாரம் என்றால் என்ன?

இதற்கு பொருளாதார கோட்பாட்டு புத்தகங்களில் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டிருந்தாலும் இயல்பான வியாபார விதியை குறிப்பிடவே நான் விரும்புகின்றேன்.அதாவது."இரு நபர்கள் தங்களின் மனப்பொறுத்தத்துடன் ஒப்புதல் பெற்று தங்களுக்குள் ஒன்றை பரிமாறிக்கொல்வதற்கே இயல்பு வாழ்வில் வியாபாரம் என்று சொல்லப்படுகின்றது."

இங்கு வியாபாரத்தின் முதல் அடிப்படையாக பார்க்கப்படுவது இருவரின் மனப்பொறுத்தம் மட்டுமே என்பதை பொருளாதார வல்லுநர்கள் மிக ஆழமாக வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் எந்த வியாபாரத்தில் மனப் பொறுத்தமில்லாமல் வற்புறுத்தலின் பெயராலோ அல்லது மிரட்டலின் பெயராலோ கொடுக்கவோ வாங்கவோ செய்யப்பட்டிருக்குமோ அந்த வியாபாரம் செல்லாது என்பதே வியாபாரத்தின் அடிப்படை விதியாகும்.

எப்படி மனப்பொறுத்தமில்லாத வாழ்க்கையை முறித்துக்கொள்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் உரிமை இருக்கின்றதோ அதனைப் போன்றே மனப்பொறுத்தமில்லாத வியாபாரத்தை முறித்துக்கொள்ள இருவருக்குமே உரிமை இருக்கின்றது என்பதே இதன் கருத்தாகும்.

வியாபாரம் ஏன் உறுவானது?

இரு மனிதர்கள் தங்களின் வேறுபட்ட தேவையை பரிமாரிக் கொள்வதற்காகவே வியாபாரம் என்ற முறை உறுவானது.இது பண்டைய காலம் தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.அன்றைய வியாபாரம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.ஆனால் இன்று அந்த வியாபாரம் பல்வேறு பரினாம வளர்ச்சி கண்டு வியாபாரம் இல்லையெனில் மனித வாழ்வு இல்லை என்றளவிற்கு மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக உறுமாறி இருக்கின்றது.எனவே இங்கு இன்றைய வியாபாரம் எத்தகைய நோக்கங்களுகெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாக அறிந்து வைத்துக்கொள்ள நாம் கட்டாயம் கடமைபட்டிருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

இன்றைய வியாபாரத்தின் நோக்கங்கள் யாவை?

1.தனி மனித தேவையை பூர்த்தி செய்தல்.

2.சமூக தேவையை பூர்த்தி செய்தல்.

3.நாட்டின் வளத்தை பெறுக்குதல்.

4.குறிப்பிட்ட நபர்களின் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்தல்.

இந்த நான்கு நோக்கங்களே பெரும்பான்மையான வியாபாரத்தில் காணப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேருக்குநேர் சந்தித்து வியாபாரம் செய்து வந்ததால் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் பொருட்களை பண்டமாற்றம் செய்து தங்களின் வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.அதன்பிறகே பொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற வழக்கம் தோன்றியது.அது எப்பது தோன்றியது என்பதை பார்த்துவிடுவோம் வாருங்கள்.

சந்தைப்படுத்தல் முறை எப்படி உறுவானது?

பண்டமாற்றுமுறை கடினமாக இருப்பதை உணர்ந்து அதை எளிமையாக்க ஒரு காலத்தில் கொடுக்கள் வாங்களை சந்தைபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதாவது தங்களுக்கு தேவையானதை கொடுக்கல் வாங்கள் செய்துகொள்ள (வியாபாரத்திற்கென்று) ஒரு தனி இடத்தை நிர்னயித்து அங்குதான் வியாபாரம் நடக்கும் என்றும்,அங்கு வந்தே மக்கள் விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்றும் அங்கு நிர்ணயிக்கப்படுவதுதான் விலை என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தங்களுக்கு தாங்களே மக்கள் வகுத்துக்கொண்டனர்.

இப்படித்தான் வியாபாரம் என்பது சந்தைபடுத்தல் முறையாகமாறியது.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மக்களின் தேவையையும் வியாபாரியின் தேவையையும் பூர்த்தி செய்யும் அந்த இடம் போட்டிக்குள்ளாக்கப்பட்டது.ஒரே பொருளோ அல்லது பலவிதமான பொருளோ பல்வேறு விதங்களில் வியாபார வடிவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.ஆனால் அவற்றிலும் மக்கள் பல்வேறு சிக்கள்களை சந்தித்தனர்.ஏனென்றால் சில சமயங்களில் மக்களுக்கு பொருளின் தேவை அதிகமாக இருந்தது ஆனால் பொருள் மிக குறைவாக இருந்தது.சிலசமயங்களில் வியாபாரப் பொருட்கள் அதிகமாக இருந்தது ஆனால் மக்களின் தேவை குறைவாக இருந்தது.

இதனை எல்லாம் அனுபவங்களால் புரிந்துகொண்ட அன்றைய பொருளாதார முதலைகள்(Corporates) தான் வெறும் லாப நோக்கை மட்டும் கொண்ட நாங்காவதாக மேலே நான் குறிப்பிட்டிருக்கும் தனிமனித லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட விசித்திரமான வியாபார முறையை உறுவாக்கினார்கள்.அதாவது பொருட்களை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற ஆபத்தான வியாபாரம் செய்யும்முறை என்பது உறுவாக்கப்பட்டது.உண்மையில் இந்த வியாபாரமுறையானது மனித இனத்தை இறுதி கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவே நான் கருதுகின்றேன்.அத்தகைய வியாபாரமுறை குறித்து அடுத்த கட்டுரையில் பதிவிடுகின்றேன்.
நன்றி:

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோசின் அற்புத ஆலோசனைகள்(Jeff Bezos)

முன்னுரை:

இன்றய உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கும் அமேசான் நிறுவனர் ஜெஃப்பிசோஸ் ஒரு நிகழ்சியில் இளைஞர்களுக்கு வியாபார ஆலோசனையாக பகிர்ந்த விஷயங்களை இங்கு நான் பதிவிடுகின்றேன்.நிச்சயம் தொழில் முனைபவர்களுக்கு இது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

ஜெஃப்பிசோசின் உரை:

"மக்கள் எல்லோரும் உயர் நிலையில் இருப்பதையே விரும்புகின்றனர். அதனையே தங்கள் பணியிலும் விரும்புகின்றனர்.சிலருக்கு அது கிடைத்து விடுகின்றது.அதாவது அவர்களின் வேலையே அவர்களுக்கு பாதி மகிழ்ச்சியை கொடுப்பதாக அமைந்துவிடுகின்றது.உண்மையில் அது மிக அற்புதமான விஷயமேயாகும்.ஆனால் உண்மையென்னவெனில் எல்லாவற்றிலும் சில கடினங்கள் என்பது இருக்கத்தான் செய்கின்றது. உதாரணமாக நீங்கள் சுப்ரிம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்தாலும் அதிலும் உங்களுக்கு பிடிக்காத சில காரியங்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றிலும் சில கடினமான பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றது.இப்படி இந்த உலகில் உள்ள எல்லா வேலைகலிலும் நம் மனதுக்கு பிடிக்காத பக்கங்கள் என்பது கட்டாயம் இருக்கவே செய்யும்.

அவை கடினமாக இருக்கின்றது என்பதற்காக விட்டுவிட்டு மற்றொன்றை தேடிச்செல்வதை தவிர்த்துவிட்டு அதனை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையே நான் உங்களுக்கு ஆலோசனையாக கூறுகின்றேன். பெரும்பான்மையான மக்கள் தங்களின் பிடிவாதங்களையும்,கட்டுப்பாடற்ற தன்மையையும் போக்குவதற்கு விரும்பாமல் கடின உழைப்பை முற்றிலுமாக வெறுக்கின்றனர்.இதுவெல்லாம் நான் வாலிபனாக இருந்த காலத்திலும் நடந்த தவறுகள்தான்.அப்பொழுது பல்வேறு நிகழ்சிகளை நான் பொறுபேற்க வேண்டியிருந்தது.அதனால் ஓய்வை விரும்பினேன்.அதனால் வரும் கஷ்டத்தை வெறுத்தேன்.ஆனால் அந்த கடினம்தான் என்னை உயர்வுக்கு கொண்டுவந்தது.

நம் எல்லோருக்கும் ஒரே நேரம் தான் இந்த உலகில் வழங்கப்பட்டிருக்கின்றது. இங்கு யாருக்கும் யாரைவிடவும் அதிகமான நேரமெல்லாம் வழங்கப்படவில்லை.நீங்கள் வெற்றியாளராக ஆக விரும்பினால் பல பொறுப்புக்களை ஏற்க தயாராகிக்கொள்ளுங்கள்.நீங்கள் வாலிபர்களாக இருக்கும்பொழுதே உங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்க ஆரம்பியுங்கள்.யாரையும் கவரவேண்டும் என்றோ அல்லது உங்கள் பாதையை யாருக்கும் விளக்கவேண்டுமென்றோ எந்த அவசியமும் கிடையாது.நீங்கள் உங்கள் லட்சியப்பாதையில் வரும் கடினங்களை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள்.அதனை நீங்கள் வெறுத்தால் நிச்சயம் உங்களால் ஒரு உயர்ந்த மனிதராக உறுவாக முடியாது.

வாலிபர்களுக்கு மிக முக்கியமான ஒன்றையும் நான் கூறவிரும்புகின்றேன். அதாவது நீங்கள் உங்கள் இலக்கை நிர்னயிப்பதற்கு முன்பே நீங்கள் எதனை தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்பதில் மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.இந்த உலகில் நம் எல்லோருக்கும் ஒரு தனிப்பட்ட அருள் வழங்கப்பட்டு இருக்கின்றது.அது சிலருக்கு அழகாக இருக்கலாம்,அல்லது திறனாக இருக்கலாம்,அல்லது சிந்தனையாக இருக்கலாம்.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இவைகள் அனைத்தும் நமக்கு வழங்கப்பட்ட அருட்கள் மட்டுமே.இவற்றை கொண்டு நாம் பெருமை கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றில் எதுவும் நாம் சம்பாரித்ததல்ல.ஆனால் நாம் பெருமைபட மிகத்தகுதியானது என்பது நாம் கடினமாக உழைக்க முடிவெடுப்பதே என்றே நான் கருதுகின்றேன்.

நான் என் பள்ளி பருவத்தில் மிகச்சிறந்த மாணவனாக திகழ்ந்தேன். "A"தரத்தில்தான் என் மதிப்பெண்கள் இருந்தது.கணக்குப்பாடத்தில் மிக ஆர்வம் கொண்டிருந்தேன்.அவைகள்தான் மிகப்பெரிய சாதனைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் அவை எதுவும் உண்மையல்ல என்றே இன்று நான் உணருகின்றேன்.ஏனென்றால் கடின உழைப்பை தவிர மிகப்பெரும் சாதனை வேறெதுவுமில்லை என்றே இன்று நான் கருதுகின்றேன். என்னுடைய கடின உழைப்பையே எனக்கு கிடைத்த மிகப்பெரும் அருளாக நான் பார்க்கின்றேன்.எனக்கு இறைவன் கொடுத்த அனைத்து அருட்களையும் எனக்கான சவால்களில் செலவழிக்க ஆரம்பித்தேன்.

எதுவெல்லாம் என்னால் முடியாது என்று நினைத்தேனோ அவற்றையெல்லாம் இன்று நான் செய்து முடித்துவிட்டதை இன்று என்னாலே நம்பமுடியவில்லை. இன்று நான்தான் உலகில் முதல் பணக்காரனாக இருக்கின்றேன்.எனவே வாலிப நண்பர்களே..!உங்கள் வாழ்க்கை பயணத்தில் கடினமான பாதையையும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்! இலகுவான பாதையையும் தேர்ந்தெடுக்க முடியும்.ஆனால் நீங்கள் தொண்ணூறு வயதில் இருக்கும் பொழுது எது உங்களை திருப்திபடுத்தும் என்பதை இப்பொழுதே யோசித்துக் கொள்ளுங்கள்.

நான் அனைத்து தொழில் முனைவோருக்கும் சொல்வது இதுதான்.நீங்கள் உங்கள் தொழிலில் மிக கவனமாக இருங்கள்.என்னுடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாளராக இருப்பதை நினைத்து பெருமை அடைவதை விட்டுவிட்டு நீங்களே ஒரு நிறுவனத்தை உறுவாக்குங்கள்.அப்படி உறுவாக்கி உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதுதான் மிக உயர்ந்த செயல் என்பதாகவே என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு நான் கூறிவருகின்றேன்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்(Credit card's pro and con)

கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்
கடன் அட்டைகளும் அதன் சாதக பாதகங்களும்

கடன் அட்டை வாழ்விற்கு அவசியமா?

இன்றைக்கு நம் வாழ்வில் கடன்அட்டை என்பது ஒரு முக்கிய அங்கமாக இடம்பிடித்துவிட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். சாதாரண கூழித்தொழிலாளி தொடங்கி அனைத்து கோடீஸ்வரர்களும் இந்த கடன் அட்டைக்கு அடிமைதான் என்றால் அது ஒருபொழுதும் மிகையாகாது. கடன் அட்டையின் வட்டியை செலுத்துவதற்காகவே இங்கு பெரும்பாலானோர் ஓடாய் உழைக்கின்றனர் என்பதும் நான் நிகழ் உலகில் பார்க்கும் உண்மையாக இருக்கின்றது.முன்பெல்லாம் வாழ்வாதாரத்திற்காக உழைத்த மக்கள் இன்று இந்த கடன் அட்டைக்காகவே உழைத்து உயிர் வாழ்வது மிகப்பெரும் சாபக்கேடாகும்.

இன்றைக்கு வங்கிகளும் சில நிறுவனங்களும் தங்களின் வியாபாரத்தை செழிப்பாக்கிக்கொள்ள உறுவாக்கிய திட்டமே கடன்அட்டை என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் ஆசைகளின் அடிவருடிகளாக இருப்பவர்களே இதற்கு நல்ல வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.இதனைப்பற்றி மிக எளிய முறையில் சொல்வதானால் உனக்கு சொந்தமான பொருளையே நீ வட்டிக்கு வாங்குவதை போன்றதாகும்.அதாவது ஒரு பொருள் எப்படியானாலும் தன்னுடையதாகத்தான் ஆகப்போகின்றது என்று தெரிந்தும் அதனை இப்பொழுதே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையில் கூடுதல் விலைக்கு வட்டியுடன் வாங்குவதைப்போன்றதாகும்.இதுதான் இருப்பதிலேயே மிகப்பெரும் ஊதாரித்தனம் என்று பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு ஒரு பிரபல்யமான பொருளாதர கொள்கை கொண்ட பல்கலை கழகத்தால் சிறிய சோதனை ஒன்றும் நடத்தப்பட்டது.அதாவது அதில் சில குழந்தைகளின் கைகளில் இணிப்புத்துண்டு ஒன்றை கொடுத்து இதனை இப்பொழுதே வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம் என்றும் ஆனால் அதனை 10 நிமிடத்திற்கு பிறகு சாப்பிட்டால் மற்றொரு இணிப்புத்துண்டு உங்களுக்கு கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது.

சில குழந்தைகள் மட்டுமே அவ்வாறு 10 நிமிடம் காத்திருந்து இரண்டு இனிப்புத்துண்டுகளை பெற்று சாப்பிட்டதாகவும் பல குழந்தைகள் அதனை கொடுத்த உடனே சாப்பிட்டுவிட்டன என்றுமே அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.மேலும் எந்த குழந்தைகள் காத்திருந்து சாப்பிட்டனவோ அந்த குழந்தைகளே பிற்காலத்தில் மிகவும் பொருளாதார பொறுப்புள்ள குழந்தைகளாக வந்தன என்றும் அவ்வாய்வின் மூலம் நிறூபனமும் ஆனது என்பதாக சொல்லப்படுகின்றது.எனவே நாளைக்கு எனக்கே சொந்தமாகப்போகும் ஒரு பொருளை இன்றே கடன் அட்டை மூலம் அதிக பணம் கொடுத்து பெறுவது நம்முடைய வாழ்விற்கு அவசியம்தானா என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்..

கடன் அட்டையால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

1.கடன் அட்டைக்கு 36 % வட்டி வசூலிக்கப்படுகின்றது என்பதே இதன் மிகப்பெரும் ஆபத்தாகும்.ஒரு நாள் நீங்கள் அதற்கான தொகையை கட்டத்தவறினாலும் உங்கள் உழைப்பில் பெரும்பகுதியை நீங்கள் வட்டியாக கட்ட தயாராகிக்கொள்ள வேண்டும்.இது கந்துவட்டி என்றும் மீட்டர் வட்டி என்றும் சொல்லக்கூடிய வட்டி முறையைவிட மிக மோசமான வட்டி என்பதாகவே நான் கருதுகின்றேன்.

2.கடன்அட்டை என்பது பெரும்பாலும் நம்மிடம் பொருளாதார மேலான்மையை கெடுத்துவிடும் என்பதும் இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாக நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இன்று நம் கையில் அட்டை இருக்கின்றது என்பதற்காக தேவையேயற்ற பொருளையும் கூட நாம் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு நாம் தயாராகிவிடுகின்றோம் என்பது உலவியல் ரீதியான உண்மையாகும்.

உதாரணமாக  15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க நீனைக்கும் கை பேசியை 25 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு இந்த அட்டைகள் நம்மை தூண்டுகின்றது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரும் ஆபத்தாகும்.இதனால் நம்முடைய பொருளாதாரம் சார்ந்த மேலான்மை முற்றிலும் கெட்டு நாம் நம்முடைய ஆசைக்காக எதனையும் வாங்கும் நபர்களாக மாறிவிடுவோம்.

3.நம்முடைய சேமிக்கும் பழக்கத்தை கடன்அட்டை பாழாக்கிவிடும் என்பது நான் அறிந்த உண்மையாகும்.என்னைப்பொறுத்தமட்டில் சேமிப்பு என்பதே நம்முடைய பொருளாதாரத்தின் மிகப்பெரும் பலமாக கருதுகின்றேன்.கடன் அட்டைகள் என்பது நிச்சயமாக அதனை கலவாடிச்சென்றுவிடும் காரணியாக இருக்கின்றது என்பதாகவே கருதுகின்றேன்.எனவே கடன்அட்டை என்பது நம்முடைய சேமிப்பிற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே நான் கருதுகின்றேன்.

4.டெபிட்கார்டைக்காட்டிலும் க்ரெடிட் கார்டுகளில் மோசடி நிகழ்வது அதிகம் என்ற ஆபத்து உள்ளது.க்ரெடிட் கார்டுகளின் இரகசிய எண்களை மிக இலகுவாக கண்டறிய முடிகின்றது என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.எனவே அது போன்ற பண மோசடிகளை தவிர்க்க க்ரெடிட் கார்டுகளை தவிர்ப்பதே நல்லது.

கடன் அட்டையாள் ஏற்படும் சாதகங்கள் என்ன ?

1.கடினமான சூழலை தவிர்ப்பதற்காக கடன் அட்டையை பெறலாம். உதாரணமாக அவசியத்தேவை என்று நினைக்கும் பொருள் இப்பொழுது வாங்கவில்லையானால் பிறகு எப்பொழுதும் கிடைக்கவே கிடைக்காது என்ற சூழல் இருந்தால் அப்பொழுது கடன் அட்டை பயன்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.அதுவும் அக்கடனை மிக விரைவிலேயே கட்டிவிடும் திட்டத்தோடே அதனை பெறுவதும் மிக அவசியமானது என்றே நான் கருதுகின்றேன்.

2.இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள் (no cost EMI) என்ற சலுகையை பயன்படுத்துவதற்காகவும் கடன் அட்டையை பயன்படுத்துவது சிறந்ததாகும். எந்தவித வட்டியுமில்லாத கடனாகவே அது பார்க்கப்படுவதால் அது நமக்கு எந்த பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தாது என்றே நான் கருதுகின்றேன்.

3.வெளிநாட்டு கொடுக்கல் வாங்கள் வைத்திருப்பவர்கள் கடன் அட்டை பயன்படுத்துவது இயல்பேயாகும்.ஏனெனில் டெபிட் கார்டுகள் உலக அளவில் பயன்படுத்த முடியாது என்பதால் வெளி நாட்டில் வர்த்தக தொடர்புடையவர்கள் க்ரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்:

Dr.S.Dhana priya

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது?(Money Management)

எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது
எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது

முன்னுரை:

என்னிடம் அதிகமானோர் கேட்கும் கேள்வி "பணத்தை எப்படி வீணாக செலவழிக்காமல் பாதுகாப்பது என்பது பற்றித்தான்..!எனவே அது சம்மந்தமாக சுறுக்கமாகவும்,அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும் அளவிற்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வடிவமைத்தேன்.இது உங்கள் அனைவருக்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.அனைவரும் படித்து பிரயோஜனம் அடைவதோடு உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தும் பிரயோஜனம் பெறச்செய்யுங்கள்..!

எதெற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது?

1.மலிவான பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் செலவழிக்காதீர்கள்.அதாவது மிக மட்டமான ஒரு பொருள் மிக மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக மட்டும் வாங்காதீர்கள்.அது உங்களுடைய பணத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

2.நோயை தரும் பொருட்களை வாங்கி உண்ணுவதற்காக உங்கள் பணத்தை செலவழிக்காதீர்கள்.உதாரணமாக போதை தரும் மது,கஞ்சா,பான் பாக்குகள், மேலும் சிகரெட்கள் போன்றவற்றிற்காக உங்கள் பணத்தை ஒருபோதும் வீணடிக்காதீர்கள்.இவைகள் அனைத்தும் உங்கள் பணத்தையும் அழித்து உங்கள் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் நிச்சயம் இழக்கச்செய்துவிடும். எனவே எவையெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு தீங்குதரும் என்று எண்ணுவீர்களோ அப்பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் வீணடிக்காதீர்கள்.

3.மக்களுக்கு நீங்கள் மிகப்பெரும் பணக்காரர் என்று காட்டுவதற்காக மட்டும் கவர்ச்சிமிக்க பொருளை வாங்கிவைத்துக்கொள்வதில் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.அதாவது விலை உயர்ந்த ஒரு பொருளை  மக்களிடம் காட்டுவதற்காக மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.அதனால் உங்களுக்கு நலவை விட தீங்கே வந்தடையலாம்.மேலும் அப்பொருளை நீங்கள் பேணிப்பாதுகாக்கவும் தேவையிருக்கும்.எனவே உங்களுக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை மட்டும் உங்கள் மனதிற்கு பிடித்தவாறு வாங்கிக்கொள்ள முயற்சிசெய்யுங்கள்.வெறும் கவர்ச்சிக்காக மட்டும் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.

4.உங்களுக்கு எது புரியவில்லையோ அதில் உங்கள் பணத்தை ஒருபொழுதும் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக ஜோசியம்,குறி சொல்லல்,மாயம்,மந்திரம் என்ற மறைவான விஷயங்களுக்காக உங்களுடைய பணத்தை ஒருபோதும் செலவழிக்காதீர்கள்.ஏனெனில் இவைகள் பெரும்பாலும் ஏமாற்றுவதற்கும் பித்தலாட்டங்கள் செய்வதற்குமே பயன்படுகின்றன.எனவே உங்களுடைய பணத்தை இது போன்ற விஷயங்களில் வீணடித்துவிடாதீர்கள்.

5.உங்களுக்கு தெறியாத வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.உதாரணமாக பங்குச்சந்தையில் எந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவது எப்படி வாங்குவது பிறகு அதனை எப்படி கையாள்வது என்ற எந்த அடிப்படை அறிவுமில்லாமல் அதில் உங்கள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்.அது உங்களுடைய பணத்தை புள்ளுக்கு இறைத்த நீராக ஆக்கிவிடும்.

6.தேவையற்ற (பெட் ) பந்தயம்கட்டாதீர்கள்.உதாரணமாக கிரிக்கெட்டில் இந்த அணிதான் வெள்ளும் என்றோ அல்லது இந்த அணி தோற்கும் என்றோ பந்தையம்கட்டாதீர்கள்.இதுவும் உங்களுடைய பணத்தை தேவையில்லாமல் வீணடிப்பதற்கே பயன்படக்கூடியதாகும்.

7.சூது,தாயம் போன்ற விளையாட்டுக்களில் உங்கள் உழைப்பை ஒருபொழுதும் வீணடித்துவிடாதீர்கள்.அவற்றைவிட உங்கள் வருமானத்தை விணடிக்கும் ஒரு செயல் வேறொன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

8.உங்கள் புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ அவசியமின்றி சமூகவளைதளங்களில் பணம் கொடுத்து பதிவேற்றம் செய்யாதீர்கள்.அதனை விளம்பரப்படுத்துவதற்கும் உங்களுடைய பணத்தை முடிந்தளவு செலவழிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் பெரும்பாலும் சமூகவளைதளங்கள் என்பது நிஜமற்றதாகவே இருக்கின்றது. எனவே முடிந்தளவு உங்கள் பணத்தை அவற்றில் செலவழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9.பொழுது போக்கு காட்சிகளுக்காக உங்களுடைய பணத்தை அதிகம் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக அதிக பணம் கொடுத்து அடிக்கடி திரையரங்குகளுக்கு செல்வது,அல்லது அதிக பணம் கொடுத்து ப்ரீமியம்(premium) காணொளிகளை பெறுவது போன்ற விஷயங்களை பெறும்பாலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.இவற்றில் உங்களுடைய பணம் வீணாவதைவிட்டும் முடிந்தளவு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

10.உங்கள் வருமானத்தில் 20 % மேல் செலவை தரும் வீடுகளை வாடகைக்கு எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.அதாவது உங்களுக்கு போதுமான அறைகளை கொண்ட ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.தேவையின்றி அதிகமான அறைகளை கொண்ட மிக விலை உயர்ந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வீணடித்துவிடாதீர்கள்.

11.அருகில் சென்று வருவதற்கெல்லாம் அடிக்கடி வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.இதனால் பெட்ரோல்,மற்றும் டீசலும் வீணாகும் உங்கள் ஆரோக்கியமும் வீணாகும்.எனவே முடிந்தளவு அருகில் நடந்தே சென்றுவிடும் இடங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள். அவற்றிற்கு மாற்றாக சைக்கிள்களையும் பயன்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

மேற்கூறிய இந்த 11 விஷயங்களையும் உங்களால் முடிந்தளவு கடைபிடித்து வாருங்கள்.இதனால் நிச்சயம் உங்கள் பணம் உங்களுடைய கட்டுக் கோப்பில் இருக்கும்.


எழுத்தாளார்:

 Dr.S.Dhana Priya 

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

கடன் நல்லதா?கெட்டதா?(Debt and credit)

கடன் நல்லதாகெட்டதா
கடன் நல்லதாகெட்டதா

கடன் என்று சொன்னவுடனே நம்மில் பலருக்கும் தலை தெறிக்க ஓடுவதுதான் நியாபகம் வரலாம்.அந்த ஓட்டம் கொடுப்பதற்கு முன்னாலும் இருக்கலாம் அல்லது கொடுத்ததற்கு பின்னாலும் இருக்கலாம்.அதாவது கடன் கேட்கப் படுபவரும் சில சமயம் கடன் கேட்க வருபவர்களைப்பார்த்து ஓடுவார் அல்லது கடனை வாங்கியவர் கடனை வாங்கிய பிறகு திருப்பிக்கொடுக்க முடியாமல் ஓடுவார்.இத்தகைய நிலைகளையே கடன் சம்மந்தப்பட்ட கொடுக்கல் வாங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம்.

ஆனால் கடனில் ஒரு சுவாரஸ்யமான பகுதியும் இருக்கின்றது.அது என்ன என்பதை இங்கு நான் குறிப்பிட்டுகாட்டுகின்றேன்.அதற்கு பிறகு நீங்களே கடன் நல்லதா ?கெட்டதா எனபதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.இன்றைக்கு உலகின் மிகப்பெரும் கோடிஸ்வரர்கள் அனைவருமே கடனால் உயர்ந்தவர்கள் தான் என்று நான் கூறினால் உங்களால் ஏற்க முடியுமா?நீங்கள் ஏற்கவில்லை யானாலும் அதுதான் உண்மை.இன்னும் சொல்லப்போனால் பல ஆயிரம் கோடி அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்தாலும் இன்றும் அவர்கள் அவ்வப்பொழுது கடன் பெற்றுக்கொண்டும் செலுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நாமெல்லாம் கவணிக்க தவறிவிட்ட உண்மையாகும்.

ஏன் அவர்கள் அவ்வாறு செய்துவருகின்றார்கள் என்று பார்ப்போமேயானால் அதற்கு பின்புலத்தில் சில அற்புதமான இரகசியங்கள் ஒழிந்திருப்பதை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.எனவே அவர்கள் அந்த கடனை எந்தளவு வாங்குகின்றார்கள் என்பதையும் அதனை எதற்காக வாங்குகின்றார்கள் என்பதையும் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவற்றில் சிலவற்றை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

உண்மையில் பள்ளி கல்வியோ அல்லது கல்லூரி கல்வியோ கடனைப் பற்றியோ அல்லது அதனை எவ்வாறு லாபகரமாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியோ பெரும்பாலும் சொல்லித்தருவதில்லை.இதனாலேயே பெரும்பாலானோர் கடனை பார்த்து பயந்து ஓடிவிடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.ஆனால் கோடிஸ்வரர்களை பொறுத்த வரைக்கும் கடனை ஒரு அற்புதமான வரப்பிரசாதமாக பார்க்கின்றனர்.அதாவது தன் வருமானத்தை இரட்டிப்பாக்கிக்கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவே காண்கின்றனர்.

இதனாலேயே தன்னிடம் முழு பணம் கொடுத்து ஒரு வீட்டையோ அல்லது வாகனத்தையோ வாங்கிவிட முடியும் என்றாலும் அதனை சிறிய வட்டியில் தவனை முறையில்  எடுத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் அவர்களின் மீதி பணத்தை ஏதேனும் வியாபாரத்தில் முதலீடு செய்து அப்பணத்தை அவர்கள் இலகுவாக மீட்டிக் கொள்கின்றனர்.மேலும் அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளையும் பெற்றுவிடுகின்றனர்.தங்கள் பணத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்திவிடுகின்றனர்.

இதனைத்தான் "ரிச் டாட் பூர் டாட்"என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசகி"பணத்தை தனக்காக வேலை செய்ய வைப்பது"என்று கூறுகின்றார். இவ்வாறு அவர்கள் செய்வதால் கடனில் வாங்கப்படும் அப்பொருளுக்கு வரி விலக்கும் வழங்கப்படுகின்றது என்பது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் இரட்டிப்பு சந்தோஷமாகும்.இதனாலேயே பெரும்பாலும் அவர்கள் ஏதேனும் முக்கிய பொருளாக இருந்தாலும் அவற்றை கடனில் பெற்றுக்கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக இருக்கின்றது.

ஆக அவர்களின் கடன் என்பது அவர்களின் எதிர்காலத்தை செழிப்பாக்குவதற்காகவே இருக்கின்றது என்பதால் அவர்கள் கடன் நல்லது என்றே கூறுகின்றனர்.ஆனால் மற்றொரு சாரார்களையும் இங்கு நாம் கவணிக்க கடமைபட்டுள்ளோம்.அதாவது கடன் கிடைக்கின்றது என்பதற்காக நாலாபுறமும் வாங்கி தன் தலைமீது சுமைக்கு மேல் சுமையை ஏற்றிக்கொள்ளும் புன்னியவான்கள்தான் அவர்கள்.

சில வங்கிகள் தங்களின் வியாபாரம் செழிப்பதற்காக கடன் அட்டைகளை கொடுத்து உதவுவதாக சொல்லிக்கொண்டு வரும்பொழுது அதனை பெற்று கண்ணில் காண்பதை எல்லாம் வாங்கிவிட்டு பிறகு அதனை கட்டமுடியாமல் விழிபிதிங்கி நிற்கும் மகான்கள் என்றே அவர்களை சொல்லலாம். அவர்கள்தான் கடனை கெட்டதாக ஆக்குகின்றார்கள்.அந்த கடன்தான் மிக கெட்ட கடனாகும்.ஏனெனில் கடனை வாங்கி ஆசைகளை நிறைவேற்றுவது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்பதாகவே ராபர்ட் கியோசகி குறிப்பிட்டு காட்டுகின்றார்.கடன் என்பது இரட்டிப்பு இலாபம் தந்தால் மட்டுமே அது சரியானதாகும் என்பதையும் மிக ஆழமாக உணர்த்துகின்றார்.அவ்வாறே கடன் வாங்கும் பொழுது பெரும்பாலானோர் கவணிக்க தவறிவிடும் இரண்டு அடிப்படைகளையும் விளக்குகின்றார்.

1.குறுகிய காலத்தில் கட்டிமுடித்துவிடும்படியான கடனை பெறுங்கள் என்கிறார்.

2.அல்லது குறைவான தொகையில் நீண்ட காலதவணையை பெறுங்கள் என்பதாக குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு நாம் செய்வதால் நம் பொருளாதார நிலை சீரானதாக இருக்க முடியும் என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.ஆகவே தோழர்களே..!மேற்கூறிய இரண்டு சாரார்களையும் உங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள் எந்த சாரார்களாக இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் கடன் நல்லதா? அல்லது கெட்டதா?என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர்:

Dr.S.Dhana Priya 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன?(How to save farmers)

விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன
விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன

முன்னுரை:

உணவு உற்பத்தியே ஒரு நாட்டின் மக்களை பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றக்கூடியது என்பதால் விவசாயமே ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் எந்நாட்டில் உணவு உற்பத்தி என்பது வளமிக்கதாக இருக்கின்றதோ அந்நாடே உலகில் மிக செளிப்பான நாடாகவும் போற்றப்படுகின்றது.இந்தியா என்பது எவ்வாறு மக்கள் தொகையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுவிட்ட நாடாக ஏனைய நாடுகளால் கருதப்படுகின்றதோ அதே அளவிற்கு இயற்கை வழங்களாலும் நிறைந்த நாடாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இதனைத்தான் மஹாத்மா காந்தி ஜி அவர்கள் 

"இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று குறிப்பிட்டார்."

இந்தியாவில் வேளாண்உற்பத்தி பொருட்கள் 85 % உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மீதி 15 % வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருவது பெருமைக்குறிய விஷயமேயாகும் என்றாலும் குறிப்பிட்ட சில வருடங்களாக வேளாண்உற்பத்தித்துறையில் இந்தியா மிகப்பெரும் வீழ்சியையே சந்தித்து வருவதாக புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன.இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும்? ஏன் வேளாண்துறை மிகப்பெரும் வீழ்சியை சந்தித்து வருகின்றது என்பது குறித்தும், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் இந்த கட்டுரையில் வட்டுறுக்கமாக விவரிக்க முயலுகின்றேன்.

வேளாண் துறையின் வீழ்சிக்கு காரணம் என்ன?

இன்றைய வேளாண்துறை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே அரசு தன் விவசாய மக்களை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என்பதை என்னால் மிக உறுதியாக கூற முடியும்.ஆம்..!விவசாயிகளே இல்லாத நாட்டை உறுவாக்க நினைக்கும் அரசுதான் இதற்கு முக்கிய காரணம் என்று நான் உறுதியாக கூறுகின்றேன்.நாட்டின் பொருளாதார முதல் மதிப்பீடான விவசாயம் செய்யும் மக்களை வழுக்கட்டாயமாக வேறு தொழில்களை நோக்கி விரட்டத்தூண்டும் அரசின் சில நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று என்னால் வெளிப்படையாகவே கூறமுடியும்.இன்றைக்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் புதிய தலைமுறையினரோ விவசாயத்தைவிட்டும் நெடு தூரம் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் சொல்லப்போனால் வயல்களையும்,வெளிகளையும் அவர்கள் அதிசயமாக பார்க்கும் அளவிற்கு வேற்றுகிரகவாசிகளாக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமாகும்.அத்தகைய நிலையில் வேளாண் துறையை நாம் காக்கவேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும் என்பதையே அதற்கான தீர்வாக நான் காண்கிறேன். அவர்களை காப்பதற்கு அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது குறித்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன்.

எனவே விவசாயிகள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது சம்மந்தமாக ஒரு சில விஷயங்களை இங்கு நான் விவரிக்க விரும்புகின்றேன். விவசாயத்தில் இரவு பகல் பாராத அதிக உழைப்பும்,உறுதியற்ற வருமானமும் இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்வதை விட்டுவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆம் மக்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லையெனில் எவ்வாறு அவர்கள் அத்துறையில் நிலைத்திருப்பார்கள்?

எனவே அவர்கள் பணம் எங்கு அதிகம் கிடைக்கின்றதோ அந்த துறைகளை நோக்கி சப்தமின்றி நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாகும்.அவ்வாறே அவர்கள் கடனுக்கும் வட்டியிற்கும் பணம் பெற்று அதனை முதலீடு செய்யும் விவசாயம் அவ்வப்பொழுது இயற்கை சீற்றங்களால் முற்றிலும் நாசமடைந்து போகும்பொழுது அவர்கள் நிர்கதியற்று நிற்க வைக்கப்படுகின்றனர்.இதனால் ஏன் இந்த தலைவலி பிடித்த தொழிலை கட்டி மாரடிக்கவேண்டும் என்று விவசாயத்தை வெளிப்படையாகவே தூக்கி எறிந்துவிட முற்படுகின்றனர்.

என்னை பொருத்தமட்டில் அவர்களின் எண்ணம் தவறானதல்ல என்றே நான் கூறுவேன்.ஏனென்றால் இரவு பகலாக ஓடாய் உழைக்கும் ஒரு மனிதனுக்கு எவ்வித பலனுமே கிடைக்கவில்லையெனில் அவன் அத்தொழிலிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசிப்பது எவ்வாறு நியாயமாகும்..?எனவே அவனுடைய உழைப்பிற்கான உறுதியான ஒரு பலனை அரசு உறுதி செய்வது மட்டுமே அவன் விவசாயத்தில் நீடிப்பதற்கான தீர்வாக அமையும் என்பது எனது கண்ணோட்டமாகும்.

நூறு நாட்கள் தாண்டியும் இன்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத் திற்கான உறுதியை வேண்டி டெல்லியில் போராடிக்கொண்டு தானிருக்கின்றனர்.ஆனால் அவர்களின் விஷயத்தில் அரசு திரும்பிப் பார்ப்பதற்குகூட தயாராக இல்லை என்பது எத்துணை பெரிய அவளம் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.இத்தகைய அரசைத்தான் முதலாளித்துவ அடிமை அரசு என்று மார்க்ஸ் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

ஏனெனில் பணம் என்பது உழைப்பாளர்களின் உற்பத்தி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது.அதனை உழைப்பாளிகளை சுரண்டிப்பிளைக்க நினைக்கும் அற்பர்களிடம் அச்சடித்து கொடுத்துவிட்டு ஏழை விவசாயிகளை அந்த பணத்தை நோக்கி ஓடவிடுவது என்பது மிகப் பெரும் அனாகரீகம் என்றே நான் பார்க்கின்றேன்.நாட்டின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கின்றது என்று நாடாலுமன்றங்களில் கூக்குரல் இடும் இந்த கயவர்கள் ஏன் விவசாயிகளுக்கென்ற வாழ்வாதார உறுதியை கொடுக்க மறுக்கின்றனர் என்று யோசிப்பீர்களேயானால் அங்குதான் முதலாளித்துவ அடிமை சேவகம் ஒழிந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

ஏற்பிடித்து கழப்பை பிடித்து உழைக்கும் ஒருவனின் வியர்வைக்கு தகுந்த வருமானத்தை அரசு உறுதிசெய்யவில்லையெனில் அந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்..?அதுமட்டுமல்லாது இரவு பகலாக பயிரிட்ட அவனது பயிற்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அமோக லாபம் பெறத்துடிக்கும் முதலாளிகளின் கைகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி கட்டவிழ்த்துவிட்டு விட்டு நாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது,எனவே விலவாசி உயர்ந்துவிட்டது என்று ஓழமிடுவது எத்துனை பெறிய பித்தலாட்டம்.. இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கின்றேன்..!விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு..!அவர்களை முறித்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தை எதிர்பார்த்தால் இந்நாடு கூன் விழுந்த கிழவியாகவே நாதியற்று இறந்து போகும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்..!

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)

எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)
எலான் மாஸ்கின் புத்தூக்கப் பேச்சு.(Motivation of Elon musk)

 

உங்களுக்குத் தெரியுமா என்னுடைய கார் உற்பத்தி தொழிற்சாலைதான் நான் என்னுடைய அதிகமான நேரத்தை செலவிட்ட இடமாகும்.மேலும் நான் தூங்கும் இடமும் அதுதான்.அங்கு ஒரு மூலையில் சாய்ந்தவாரே நான் தூங்கிய சமயத்தை விட மிக வலிநிறைந்த சமயம் வேறெதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.பெரும்பாலும் என் வீட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பே அற்றுப்போனேன்.உண்மையில் நான் வெற்றிக்காக போராடியது என்பது என்னுடைய கால்முறிந்துபோனதை விட கொடுமையானதாகவே நான் கருதுகின்றேன்.இப்பொழுது நான் வெற்றி பெற்றவனா இல்லையா என்று நான் அறியமாட்டேன்.ஆனால் எல்லா வெற்றியாளர்களும் ஆரம்பத்தில் மிகப்பெரும் தோல்வியாளர்களே என்பதை நான் மறுக்கமாட்டேன்.

உண்மையான வெற்றியாளர்கள் தங்களின் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டு எழுந்து வந்துவிடுகின்றார்கள்.ஆனால் தோல்வியாளர்களோ தன் தவறுகளை தட்டிக்கழித்துவிட்டு ஆணவத்தோடு தோற்றுப்போகின்றார்கள். நான் இயற்பியலை நன்றாக படித்ததால் ஒரு தவறிலிருந்து எப்படி திரும்பி வரவேண்டும் என்பதை நன்றாக அறிவேன்.இயற்பியல் எனக்கு கற்பித்த முதல் விஷயம் "இந்த உலகில் சரி, தவறு என்பதெல்லாம் கிடையாது" என்பதுதான். மேலும் அனுபவங்களே இந்த உலகம் என்பதை நான் நன்றாக அறிவேன். எனவே அதுவே எனக்கு போதும்.

தோல்வி என்ற வார்த்தையை நான் எங்கும் பயன்படுத்துவதே இல்லை. ஏனென்றால் தவறுகள் என்பதே அடுத்த கட்டத்திற்கான முதல் படி என்றே நான் நம்புகின்றேன்.அதை சீர் செய்து விட்டு செல்வதுதான் சிறந்த வழியாக இருக்கின்றது.எனவே புதிதாக ஒன்றை நீங்கள் செய்ய துணிந்தால் தாராலமாக தவறு செய்யுங்கள்.பிறகு அதனை விரைந்து சீர் செய்துவிடுங்கள். உண்மையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது தவறே இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் கிடைத்துவிடாது.மாறாக நடைபெறும் தவறை விரைவாக சீர் செய்வதின் மூலமே ஒரு நிறுவனம் வெற்றியடைகின்றது.

என்னுடைய நிறுவனத்தில் புதிதாக செயல்படும் நபர்களையே இணைத்துக் கொள்கின்றேன்.ஆதலால் எங்கள் உற்பத்தி மிக புதுமை நிறைந்ததாக இருக்கின்றது.மேலும் தரமானதாகவும் இருக்கின்றது.எங்களுடைய காரிற்கு நாங்கள் விளம்பரம் ஏதும் கொடுப்பதில்லை அதன் தொகையை தரத்திற்காக  செலவழிக்கின்றோம்.ஆகையால் இன்று எங்கள் உற்பத்திகள் அதிக அளவில் விற்பனையாகின்றது.எனவே புதிதாக எதையேனும் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தைரியமாக செய்யுங்கள்.என் நிறுவனம் 2008 -ல் தோல்வியுற்றுவிட்டது என்று மக்களில் சிலர் பரப்பி சந்தோஷமடைந்தார்கள். அதனால் கிறிஸ்மஸ்சை கூட நான் சந்தோஷமாக கொண்டாடவில்லை.

உண்மையில் அந்த மக்கள் நான் என்ன செய்கின்றேன் என்றும்,என் திட்டத்தின் நோக்கம் என்ன என்றும் கூட தெறியாமலே என்னை அவர்கள் விமர்சித்தார்கள்.அதனால் நான் மிகப்பெரும் வேதணை அடைந்தேன்.ஆனால் இன்று நான் என் இலட்சியத்தை அடைந்துவிட்டேன் என்றே நினைக்கின்றேன்.ஆகவே என் வாலிப நண்பர்களே ..!உங்கள் இளமையை பார்த்து நான் பொறாமைபடுகின்றேன்.ஏனென்றால் அது மிக விலைமதிக்க முடியாதது.

எது எப்படியோ நீங்கள் படியுங்கள்,அல்லது வேலை செய்யுங்கள் அது உங்களுடைய விருப்பம்.ஆனால் ஏதேனும் ஒரு இலட்சியத்தோடு அதனை செய்யுங்கள்.நன்றாக நினைவில் கொள்ளுங்கள் பணம் அதனை எங்கிருந்தாலும் சம்பாரித்துவிடலாம்,ஆனால் இலட்சியம் என்பது அவ்வாறல்ல.இங்கு அதிகமானோர் தோற்பதை பயப்படுகின்றார்கள்.அந்த பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.எங்கு தோல்வியும் ,கடினமும் இல்லையோ அங்கு ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.