![]() |
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும் |
முன்னுரை:
இந்த கட்டுரையை இந்த மனித சமூகத்தை உண்மையாகவே நேசிக்கும் நல்உள்ளங்களுக்கும்,வரும்கால சமூகத்தை அழிவின் பாதையிலிருந்து காப்பதற்கு ஆசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அற்பனிக்கின்றேன். குறிப்பாக இந்த உலகையும் இந்த உலகில் கொஞ்சி மகிழப்பட வேண்டிய இயற்கையையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த கட்டுரையை அற்பனம் செய்கின்றேன்.
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறையே தீர்வு.
இன்றைக்கு மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கும் மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பதே கல்விதான் என்பதை அறிந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கும் நிலையை உறுவாக்கி இருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னேற்பாடு என்பதில் அனைவரும் திருப்திகொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.ஏனெனில் கல்வியற்ற சமூகம் என்பது இந்த மனித சமூகத்தையே பேரழிவில் தள்ளிவிடச்செய்துவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை முந்தைய வரலாறுகளின் மூலம் நம்மால் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.என்றாலும் இன்றைய கல்விமுறையை அடிப்படையாகக்கொண்ட தற்போதைய சமூகம் இந்த மனித சமூகத்தை இன்னும் விரைவாக அழிவில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. ஏனெனில் இன்றைய கல்விமுறையே அத்தகைய சூழலை உறுவாக்கி கொடுப்பதாக உணர முடிகின்றது.
அதாவது இன்றைக்கு குழந்தைகளுக்கு இயந்திரத்தனமான பொருளை தேடுவதற்கான கல்வியை மட்டுமே கட்டாய கல்வியாக தினிக்கப்படுவது என்பது ஒரு கட்டத்தில் இந்த மனித சமூகம் தன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் ,தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் இயற்கைகளை மறந்து பாழ்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துவிடும் என்பதையே இங்கு நான் அவ்வாறு கூறுகின்றேன்.இன்றைக்கு பல்வேறு நாடுகளும் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டது என்றும் இந்த பூமி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் கூப்பாடுபோடுவதோடு மனிதர்கள் இந்த இயற்கையை காக்கத்தவறுகின்றனர் என்பதாக குற்றமும் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள்தான் அத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர் என்பதை இங்கு நான் வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.
அதாவது இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படும் பெரும்பான்மையான கல்விகள் மனித வாழ்வை மெறுகூட்டும் கலைகள் என்பதை கடந்து பணத்தையும் பொருளாதாரத்தயும் அடைவதற்கான வழிகளாக அரசே அமைத்து வைத்துவிட்டு பிறகு நாட்டில் மனிதவளத்தையும் இயற்கை வளத்தையும் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு பெறிய அறியாமை என்பதை இன்றைய அரசுகள் உணர வேண்டும்.
மேலும் மனிதர்கள் இந்த உலகில் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத்தான் கல்வி,பொருளாதாரம்,நாட்டின் வளங்கள் என்பவையெல்லாம் அரசே மனிதர்களுக்கு மறக்கடித்துவிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் பின்னால் அவர்களை ஓடவும் விட்டுவிட்டு, இன்றைய மனித சமூகம் இந்த உலகை சூரையாடுகின்றது என்று கூப்பாடு போடுவது என்பது வடிகட்டிய மடமையன்றி வேறென்ன..?மனிதர்களின் வாழ்வியலை சீர்கெடுக்கும் அத்துனை வழிகளையும் நாமே திறந்து வைத்துவிட்டு மனிதர்கள் அதில் சென்று அழிகின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய அறியாமை..?
எனவே இந்த மனித சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்தத் துடிப்பவர்களும்,இந்த உலகின் இயற்கையை காக்கத்துடிப்பவர்களும் ஆரம்பம் முதலே இந்த மனிதனுக்கு அடிப்படை கல்வியாக இந்த உலகில் யாருக்கும் தொல்லையின்றி மகிழ்ச்சியாக தன்னை நேசிக்கவும் தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிக்கவும் மேலும் இந்த எழில் கொஞ்சும் இயற்கையை நேசிக்கவும் போதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையே என்னுடைய தாழ்வான வேண்டுகோளாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.
மேலும் மனிதவாழ்விற்கு பல்வேறு திருப்திகளை தரும் கலைகளை அற்ப வியாபாரம் ஆக்குவதை விடுத்துவிட்டு அதை மனிதர்களை மேம்படுத்தும் கலைகளாகவும்,மனிதர்களை உற்சாகமூட்டும் திறன்கலாகவும் போற்றப்படுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக இந்த உலகில் மனித வாழ்வில் பெருந்துன்பங்களும், குற்றங்கலும்,இயற்கை சீரழிவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர இவ்வுலகில் எவ்வித முன்னேற்றங்களும் நடந்தேறிவிடாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு கட்டுரையின் முடிவுக்கு வருகின்றேன்.
முடிவுரை:
இன்றைக்கு கல்வி என்ற பெயரில் மனித வாழ்விற்கு பெரிதும் பயன்தரக்கூடிய பல்வேறு கலைகள் வியாபாரமாக்கப்பட்டிருப்பது நாமெல்லாம் அறிந்த உண்மையே ஆகும்.அவ்வாறே மனிதர்களுக்கு எக்காலமும் பயன்தரக்கூடிய இந்த உலகின் இயற்கைகளும் மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.அதன் விளைவாக இன்றைக்கு உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்தித்துவருவதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.
இதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நம்முடைய கல்விமுறையை வியாபார நோக்கமாக மட்டும் ஆக்குவதை விடுத்துவிட்டு மகிழ்ச்சியான மனித வாழ்வை போதிப்பதற்கானதாக ஆக்கவேண்டும்.அல்லது பொருளாதார கல்வியை போதிப்பதோடு மனித வாழ்வியலை மகிழ்வாக்கிக் கொள்ளுவதற்கும் மேலும் இயற்கையை நேசிப்பதற்குமான ஒரு பாடத்திட்டத்தையேனும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
அவ்வாறு நாம் செய்யவில்லையெனில் இந்த மனித சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை மிக வருத்தத்தோடு இங்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.
நன்றி