 |
நற்குணமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது. (Good Characters) |
ஒரு மனிதன் தன் செல்வத்தை இழந்துவிட்டால் உண்மையில் அது இழப்பே அல்ல என்றே நான் கூறுவேன்.ஒருவேலை ஒருவன் தன் ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் அவன் வாழ்வில் ஏதோ ஒரு முக்கிய பகுதியை இழந்துவிட்டான் என்பதாக நான் எடுத்துக்கொள்வேன்.ஆனால் ஒருவன் தன் குணத்தை இழந்துவிடுவானேயானால் அவன் உண்மையில் தன் வாழ்வில் பெரும்பகுதியை இழந்துவிட்டான் என்பதே எனது ஆழாமான நம்பிக்கையாகும்.ஆம் அன்பர்களே..!அறிவும் செல்வமும் நமக்கு அதிகாரத்தை இழுத்துவந்து கொடுத்துவிடலாம்.ஆனால் நற்குணம் மட்டுமே நமக்கான மதிப்பை இழுத்து வரக்கூடியதாக இருக்கின்றது.அவ்வாறே அழகும்,திறமையும் நம்மை உயர்ந்த இடத்தில் கொண்டுசென்று அமர்த்திவிடலாம்.ஆனால் நற்குணம் மட்டுமே அவற்றிலேயே நிலைத்திருக்கச்செய்யும் ஆற்றலுடையதாக இருக்கின்றது.
மக்களெல்லாம் அறிவையும் ஆற்றலையும் போற்றிப்புகழலாம்,ஆனால் இறைவனோ நற்குணத்தை மட்டுமே போற்றிப் புகழ்கின்றான் என்று வேதங்கள் கூறுகின்றது.பல சமயங்களில் ஒரு மனிதனின் முழு வாழ்வையும் அவனுடைய குணமே முடிவு செய்கின்றது என்பதே யாராலும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.பெரும்பான்மையான வெற்றியாளர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்ததே இந்த நற்குணம்தான் என்று நான் குறிப்பிட்டாலும் அது மிகையாகாது என்றே கருதுகின்றேன்.ஏனெனில் நற்குணம் என்பது பலசமயங்களில் எல்லா திறமைகளையும் மிகைத்துவிடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாக அமைந்துவிடுகின்றது.
இவை மட்டுமின்றி இந்த உலகம் ஒரு நற்குணம் கொண்டவனையே தன் தலைவனாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றது.ஏனெனில் ஒரு நல்ல மனிதனால் மட்டுமே இந்த உலகில் நல்ல பல முன்னேற்றங்களை கொண்டு வரமுடியும் என்பதாக இந்த உலகம் நம்புகின்றது.ஆகவே அன்பர்களே..!நீங்கள் ஒரு முழுமைபெற்ற மனிதராக ஆகவேண்டுமானல் உங்களுடைய நற்குணத்தை வளர்த்துக்கொள்வதில் அதிகம் கவனம் செழுத்துவதற்கு தயாராகிக்கொள்ளுங்கள்.அல்லது இந்த வாழ்வில் ஒரு முழுமை பெற்ற மனிதனாக ஆகும் கனவை தூரமாக வைத்துவிட்டு யாருக்கும் பாரமின்றி உங்கள் வாழ்வை அதன் போக்கில் தொடருவிடுங்கள்.அடுத்தபடியாக நற்குணம் என்றால் என்ன என்பதை நாம் சற்று அறிந்து கொள்வோம்.
நற்குணம் என்றால் என்ன..?
யாருக்கும் அநீதி இழைக்காமல் நலவை மட்டுமே நாடுவதற்கு மனோ தத்துவ நிபுணர்கள் நற்குணம் என்று குறிப்பிடுகின்றார்கள்.இந்த குணங்களை அவர்கள் இரண்டு வகைகளாகவும் பிறித்திருக்கின்றார்கள்.
அவைகளைப்பற்றி பார்ப்போம்.
1. நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள்.
2. நம்மிடம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள்.
நாம் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எவை..?
1.நேர்மையை கடைபிடித்தல்
2.இரக்கம் காட்டுதல்
3.அக்கரை எடுத்துக்கொள்தல்.
4.பணிவை கடைபிடித்தல்.
5.மன்னித்தல்.
6.சகிப்புத்தன்மையை கடைபிடித்தல்.
7.தவறிற்காக மன்னிப்பு வேண்டுதல்.
8.உபகாரத்திற்கு நன்றி கூறுதல்.
9.எளிமையை கடைபித்தல்.
10.தனித்துவமாக இருத்தல்.
11.சுய மரியாதை பேணுதல்.
மேற்கூறிய அனைத்து குணங்களும் ஒவ்வொரு மனிதனிடமும் பெறப்பட வேண்டிய முக்கிய நற்குணங்களாகும்.இவற்றை வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது தாழ்வான வேண்டுகோளாகும்.அடுத்தபடியாக இவை ஒவ்வொன்றும் நம் வாழ்விற்கு எவ்வளவு அவசியமாக இருக்கின்றது என்பதையும் இவற்றை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதையும் பற்றி சற்று சுருக்கமாக நான் விளக்க முயலுகின்றேன்.
1.நேர்மையை கடைபிடித்தல்..!
இந்த உலகில் ஒரு மனிதன் தன்னை சீராக்கிக் கொள்வதற்கு நேர்மை என்னும் ஒறே ஒரு ஆயுதம் போதும் என்பதாகவே நான் நம்புகின்றேன்.அவனுக்கு எந்த சட்டதிட்டங்களும் தேவையே இல்லை என்றும் கூட குறிப்பிடலாம் மேலும் நேர்மையான ஒரு மனிதர் இறைவனால் தனித்துவமாக படைக்கப்பட்ட ஒரு அதிஷயம் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.ஆம் அன்பர்களே.உண்மையில் நேர்மையைவிட வேறு எதுவும் உங்களுக்கு நன் மதிப்பை பெற்றுத்தந்துவிடாது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.!
நேர்மைக்கென்று ஒரு பலம் இருக்கின்றது.அதனை உலகில் யாராலும் அசைத்து பார்த்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.ஆனால் அதனை பெரும்பாலான மக்கள் உணர்ந்து கொள்ளவே இல்லை என்பதுவே வேதணையான விஷயம்.உண்மையில் இந்த உலகில் அதிகம் சந்தோஷமாக இருப்பவர்கள் நேர்மையான மனிதர்களே என்று ஒரு ஆய்வு குறிப்பிட்டுக் காட்டுவதையும் உங்களுக்கு நான் நினைவூட்டிக் கொள்கின்றேன்.
அவ்வாறெ நேர்மை என்பது பல சமயங்களில் உங்களுக்கு அதிக நண்பர்களை தராமல் போய்விடலாம்.ஆனால் இந்த நேர்மைதான் உங்களுக்கு தகுதியான நபர்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கும் காரணமாக இருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.எனவே நீங்கள் நம்பப்பட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் நம்பிக்கைக்குறியவர்களாக இருப்பதற்கு தயாராகிக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் உங்கள் நேர்மையை பரிசளியுங்கள்.
ஏனென்றால் நேர்மை என்பது உறவுகளுக்கு மத்தியில் தண்ணிரைப் போன்று இருக்கின்றது.அதற்கு எந்த நிறமுமில்லை எந்த வடிவமுமில்லை எந்த சுவையுமில்லை என்றாலும் அதுவே வாழ்க்கையின் அடிப்படை தேவையாக அமைந்திருக்கின்றது.ஆகவே அதனை ஒரு காலமும் இழந்துவிடாதீர்கள். அவ்வாறே அதிகம் மிகச்சரியாக இருப்பதுதான் நேர்மை என்றும் நீங்கள் எண்ணிவிடாதீர்கள்.அது யாராலும் முடியாத காரியமாகும்.அவ்வாறின்றி உங்களுக்கும் உங்களை நம்புபவர்களுக்கும் நீங்கள் உண்மையாக இருப்பதே நேர்மை என்பதை புறிந்து கொள்ளுங்கள்.
மேலும் நீங்கள் நேர்மையாக நடந்து கொண்டதற்காக யாரிடமும் மன்னிப்பு வேண்டாதீர்கள்.ஏனென்றால் நேர்மை என்பது எந்த நலவையும் துண்புறுத்துவது அல்ல.அது பொய்களுக்கே கஷ்டத்தை கொடுக்கின்றது. அதனைப் பொன்றே நேர்மையாக இருப்பது மட்டுமே உங்கள் கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.உங்கள் நேர்மையை பிறருக்கு நிறூபிக்க நினைப்பது என்பது உங்களை நீங்களே குறைத்துக்கொள்ளும் செயலில் உங்களை நீங்களே போட்டுக்கொள்வது என்பதையும் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்.
2.இரக்கம் காட்டுதல்.
பிறரின் மீது இரக்கம் காட்டுவது என்பது மிக கடினமான ஒன்று என்று நம்மில் பலரும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அதனை விட மிக விலையுயர்ந்த ஒன்றை மிக இலகுவாக யாருக்கும் கொடுத்துவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.சிறியதோ பெறியதோ நாம் காட்டும் இரக்கமே இவ்வுளகில் பேரழகு என்பதாகவே நான் எண்ணுகின்றேன்.ஆம் அன்பர்களே.உங்களுடைய வாழ்வில் உங்களுக்கு அர்த்தம் தரும் ஒரு தருனம் என்பது நீங்கள் பிறர் மீது இரக்கம் காட்டும் தருனம் மட்டுமே..!ஏனென்றால் அங்குதான் உங்களை நீங்கள் உண்மையான மனிதராக நிறூபிக்கின்றீர்கள்.
நம்மில் பலரும் பிறரை உயர்த்துவதால் நாமும் உயர்கின்றோம் என்பதையே மறந்தே போய்விடுகின்றனர் என்பது துரதிஷ்டவசம் என்பதாகவே நான் நினைக்கின்றேன்.உண்மையில் இந்த உலகில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்கு அடையாளமே இரக்க குணமுடையவர்கள்தான் என்று குறிப்பிட்டாலும் அது மிகையாகாது.ஆகவே அன்பர்களே சிறியதோ, பெரியதோ,இரக்கமான வார்த்தைகளையே எங்கு சென்றாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.அது யாறேனும் ஒருவரின் வாழ்விற்கு ஒழியேற்றிவிடலாம். மேலும் ஒருவரின் இருள் சூழ்ந்த வாழ்வை வண்ணமயமாக்க அதுவே காரணியாகவும் அமைந்துவிடலாம்.
இன்னும் சொல்லப்போனால் இரக்கமற்ற மனிதர்களிடமும் கூட நீங்கள் இரக்கம் காட்டுங்கள்.ஏனென்றால் அவர்கள்தான் அதனின் பக்கம் அதிகம் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள்.பிறரைப்பற்றி யோசிப்பதற்கே நேரமில்லை என்றளவிற்கு உங்கள் நலனில் மட்டுமே மூழ்கிவிடாதீர்கள். ஏனெனில் அதனை விட துற்பாக்கியம் வேறொன்றுமில்லை.அவ்வாறே இரக்கம் காட்டுவது என்பது பலஹீனமான செயல் என்பதாக எண்ணிவிடாதீர்கள்.ஏனென்றால் இரக்கம் காட்டுவதற்குத்தான் அதிகம் தைரியம் தேவையிருக்கின்றது.அன்பர்களே நன்றாக நினைவில் கொள்ளுங்கள்..!
இந்த உலகை மாற்றியமைக்கும் சக்தி என்பது ஒன்றிற்கு இருந்தால் அது இரக்க குணத்திற்கு மட்டுமே இருக்கின்றது என்பதாகவே நான் நம்புகின்றேன். ஆகவே நீங்கள் இந்த உலகால் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் எங்கு சென்றாலும் உங்கள் இரக்க குணத்தை விதைத்துவிட்டு வாருங்கள்..!எங்கு சென்றாலும் நீங்கள் நிச்சயம் நேசிக்கப்படுவீர்கள்.
3.அக்கரை எடுத்துக்கொள்தல்.
இந்த பொய்யான உலகில் அன்பு இருப்பதாக சொல்லிக்கொள்பவர்களும் காட்டிக்கொள்பவர்களும் அதிகம் இருக்கின்ரனர்.ஆனால் அதனை உண்மையாக செயல்படுத்துபவர்கள் மிகக்குறைவே என்றே நான் பார்க்கின்றேன்.ஏனென்றால் அன்பின் அடையாளமே அக்கரைதான் என்பதாகவே நான் நம்புகின்றேன்.ஆம் அன்பர்களே..!இரு மனிதர்களுக்கு மத்தியில் உறவை உறுதிபடுத்துவதே இந்த அக்கரைதான்.மேலும் பலரின் உறவுகள் முறிந்து போவதற்கு காரணமும் அக்கரைப்பட வேண்டிய தருனத்தில் சுய நலமிகளாக நின்று வேடிக்கை பார்ப்பதுதான்.
எனக்கு தெரிந்து உறவில் ஒருவர் மற்றொருவர் மீது எடுத்துக் கொள்ளும் அக்கரையை விட மிக மகிழ்ச்சியான தருனம் வேறெதுவும் இல்லை என்பதே எனது நிலைப்பாடாகும்.உண்மையில் அக்கரை என்பதற்கு உலகில் ஒரு வடிவம் கொடுக்க நான் நினைத்த பொழுது தாய் மட்டுமே அதற்கு தகுதியானவர் என்பதாக நான் நம்புகின்றேன்.ஏனென்றால் அம்மாவிடம் மட்டுமே கலப்பற்ற அன்பு நிறம்பி நிற்கின்றது.அதனை அவர்கள் கொடுக்க நினைப்பதில் கொஞ்சமும் குறைவைப்பதில்லை.இன்னும் சொல்லப்போனால் கோபத்திலும் கூட அக்கரை காட்டும் அதிசய பொக்கிஷம் அவள்.ஆகவே அன்பர்களே..!
உங்களை சுற்றியிருப்பவர்கள் மீது உங்களால் முடிந்தளவு அக்கரை காட்டுங்கள்.அவ்வாறே உங்கள் மீது அக்கரை காட்டுபவர்களையும் ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.மேற்கூறிய குனங்கள் தவிர்த்து இன்னும் பல குணநலன்கள் சம்மந்தமாக எனது "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற புத்தகத்தில் விவரித்திருக்கின்றேன்.உங்களை ஒரு அற்புத மனிதனாக செதுக்கிக்கொள்ள எனது அந்த புத்தகத்தை வாசியுங்கள்.அவற்றில் கீழ் வரும் தலைப்புகளின் விளக்கங்களை எல்லாம் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
4.பணிவை கடைபிடியுங்கள்..!
5.மன்னித்தல்
6.பொறுமை
7.மன்னிப்பு வேண்டுதல் .
8.நன்றி கூறுங்கள் .
9.எளிமையை கடைபிடியுங்கள்.
10.தனித்துவத்துடன் இருங்கள் .
11.சுயமரியாதை பேணுங்கள் .
2.கெட்ட குணங்கள் .
1.இழிவான எண்ணம்
2.ஆணவம்.
3.பொறாமை
4.பேராசை
5.கோபம் .