 |
ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy) |
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமே இவ்வுலகின் மிகச் சிறந்த செல்வம் என்பதாகவே இவ்வுலகில் உள்ள அத்துனை மதங்களும் அதன் தலைவர்களும் போதித்துவிட்டு சென்றுயிருப்பதை நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.ஆம் காந்தி ஜீ: "இந்த உலகில் தங்கம்,வெள்ளியை விட உண்மையான செல்வம் அது ஆரோக்கியம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார்.அவ்வாறே நபிகள் நாயகம்:"இந்த உலகில் இறைவனிடம் கேட்க வேண்டிய முதல் செல்வம் அது ஆரோக்கியமே "என்பதாக கற்றுக் கொடுத்ததாகவே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.
இவ்வாறே புத்தரும் "உடல் ஆரோக்கியமே உலகின் மிகச்சிறந்த செல்வம்' என்பதாக போதித்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது.இப்படி உடல் ஆரோக்கியத்தின் மேன்மையை உணர்ந்த அந்த மஹான்கள் எல்லோரும் இந்த உலகில் ஒரு முழுமைபெற்ற மனிதர்களாகவே தங்களை நிலைநாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
உண்மையில் இந்த உலகில் மனிதர்களை இரண்டே வகையில் நாம் உள்ளடக்கிவிடலாம்.ஒன்று நோய்வாய்பட்டு தன்னுடைய ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக போராடும் ஒரு சாரார்கள்,மற்றொன்று தன்னுடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றொறு சாரார்கள்.இவ்விரண்டு சாரார்களில் நீங்கள் எந்த சாரார்களில் இருக்கின்றீர்கள் என்பதை ஒரு கனம் சீர் தூக்கிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக ஆரோக்கியத்தை எப்பது பாதுகாப்பது என்பது சம்மந்தமாக பார்ப்பதற்கு முன்பாக முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம்..!
ஆரோக்கியம் என்றால் என்ன.?
"நாம் விரும்பியவாறு சுதந்திரமாக செயல்படும் நிலைக்குத்தான் ஆரோக்கியம் என்று சொல்லப்படும்.ஆம் உடல் ரீதியாக நாம் சுதந்திரமாக செயல்படும் அந்த காலம்தான் நம் வாழ்வில் கிடைக்கப்பெற்ற வசந்த காலம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அதிகப்படியாக ஆசிப்பது இந்த சுதந்திர காலத்தைத்தான்.தான் விரும்பிய எதனையும் எவ்வித தங்குதடையுமின்றி சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் தனிப்பட்ட பேராசையாகும்.பெரும்பாலான மனிதர்களுக்கு அது வெறும் பேராசையாகவே கடந்து சென்றுவிடுகின்றது.
இந்த கட்டுரையில் நான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டாலும் அவற்றைவிட உங்களிடம் நான் வேண்ட நினைப்பதெல்லாம் ஒன்றுதான் "உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்பதேயாகும்.ஆம்..!உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு சமயமும் ஒருவர் உங்களுக்கு போதித்துக் கொண்டே இருக்கும் நிலையை தயவுகூர்ந்து நீங்கள் அடைந்துவிடாதீர்கள். உண்மையில் அதைக்காட்டிலும் துரதிஷ்டமான நிலை வேறெதுவுமில்லை.
ஆகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதே உங்கள் வாழ்வின் முதல் இலட்சியமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் உடல் ஆரோக்கியமற்றுப்போகும்பொழுது நீங்கள் உங்களுடைய சுதந்திரத்தை இழப்பது மட்டுமின்றி உங்களை சுற்றியிருப்பவர்களின் சுதந்திரத்தையும் இழக்கச்செய்துவிடுவீர்கள்.இதற்கு நல்ல உதாரணம் குருடர்கள்தான்.அவர்கள் எல்லா காலமும் மற்றொரு மனிதரின் பக்கம் தேவையுற்றவர்ளாகவே ஆகிவிடுகின்றனர்.மேலும் இந்த அற்புதமான உலகின் பரந்து விரிந்த பாலைகளையும்,சோழைகளையும் பார்த்து ரசிக்கும் பாக்கியமற்று தனித்து விடப்பட்ட, இருண்ட உலகில் தத்தளிக்கும் வெற்று சடலங்களாக மாறிவிடுகின்றனர்.ஆக அந்த குருடர்களின் நிலையே ஆரோக்கியத்தின் உண்மை பொருளையும்,அவசியத்தையும் மிகத்தெளிவாக விளக்குகின்றது என்பதால் இந்த சிறு உதாரணத்துடனே இக்கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு நான் செல்கின்றேன்.
உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது..?
உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு நாம் எல்லா காலங்களிலும் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.
ஆரோக்கியத்தை காப்பதற்கான வழிகள்:
1.Having Food -உணவு முறை
2.Having Rest -ஓய்வு எடுத்தல்
3.Doing exercise -உடற்பயிற்சி செய்தல்
4.Beeing cleanliness -தூய்மை கடைபிடித்தல்.
1.நம் உடல்நலனை பேணிப்பாதுகாக்க முதல் காரணியாக இருப்பது நம் உணவு சார்ந்த பழக்கவழக்கமாகவே இருக்கின்றது.ஆகவே அவற்றைப்பற்றியே இங்கு நான் முதலில் விளக்குவதற்கு விரும்புகின்றேன். உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை நாம் இங்கு இரண்டு பகுதிகளாக பிறித்துக்கொள்ளலாம்.
1.நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய உணவு.
2.நாம் நம்மைவிட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு.
நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உணவு நாம் உண்ணுவதற்கு தகுதியானதுதானா என்பதை எல்லா சமயங்களிலும் ஒன்றிற்கு பலமுறை சோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அது எவ்வாறு சோதித்துப்பார்ப்பது? என்பதாக நீங்கள் கேட்டால்..!அதற்கான இரு பொது விதிகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.
1.அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்.
2.அவை சுவையானதாக இருக்க வேண்டும்.
இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்ட உணவுகளை எப்பொழுதும் தவிர்த்துவிடுவதே நம் ஆரோக்கியத்தை பேணிக்கொள்வதற்கான ரகசிய சூட்சமமாகும்.ஆம் ..!சுத்தமற்ற உணவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை தாக்கும் முதல் எதிரி என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.குறிப்பாக வயிற்றுப்போக்கு,வாந்தி பேதி போன்ற நோய்கள் ஏற்பட சுகாதாரமற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளே முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிடுகின்றனர்.
அவ்வாறே தெருக்களின் ஓரமாக திறந்த வெளிகளில் விற்கப்படும் தின்பண்டங்களாலேயே காலரா,மற்றும் டைஃபாய்டு,போன்ற வைரஸ் காய்ச்சல்களும் பரவுகின்றது என்பதாகவே மருத்துவர்கள் நமக்கு எச்சரிக்கின்றனர்.ஆகவே உங்களால் முடிந்த அளவு சுகாதாரமான உணவுகளையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக சுவையான உணவை நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது.நம்மில் பலரும் விலையுயர்ந்த உணவு பொருட்களை அதிக தொகைகொடுத்து வாங்க தயாராகவே இருக்கின்றோம்.ஆனால் அவை நம்முடைய உடல்நலத்தை காக்கும் சுவைமிக்கதுதானா.?என்பதை கவனிக்க பல சமயங்களில் தவறிவிடுகின்றோம்.
வெறும் அயல் நாட்டு உணவு என்ற பெயரிற்காகவே அதனுடைய சுவை மற்றும் அதன் விளைவு போன்றவற்றை மறந்துவிட்டு அதிக விலை கொடுத்து உண்ணுகின்றோம்.அவை மிக காரம் நிறைந்து,நம் மனதிற்கு பிடிக்காத சுவையில் இருந்தாலும் அவற்றை பற்களை கடித்துக் கொண்டு விழுங்கி விடுகின்றோம்.இவற்றிற்கு மாறாக நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை மிக சுவையாக சமைத்து உண்ணுவதையே நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கான மிகச்சிறந்த வழி என்பதாக நான் முழுமையாக நம்புகின்றேன்.
மேலும் மற்றொரு விஷயத்தையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு கடமைபட்டிருக்கின்றேன்.அதாவது நம்மில் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டுமானால்,பாதி அவியல் கொண்ட சுவையற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மை என்னவெனில் பாதி அவியலான உணவு அதிக சத்துக்களை கொண்டதாக கருதப்பட்டாலும் அவற்றை முறையாக,முழுமையாக சமைத்து உண்ணும்பொழுது அதனுடைய முழு சக்தியும் கிடைக்கவே செய்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிட்டுகாட்டுகின்றனர்.
ஆகவே சுத்தமான மேலும் சுவையான உணவை உங்கள் மனதிற்கு பிடித்த வகையில் உண்டு மகிழுங்கள்.மேலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்புடையவர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.
2.தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்.
உண்ணக்கூடாத உணவு என்பது அசுத்தம் நிறைந்த பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றுகின்ற அனைத்து விதமான உணவுகளையும் முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.குறிப்பாக போதை தரும் பொருட்களில் எதுவாக இருந்தாலும் அவற்றை முற்றிலுமாக தூரமாக்கிவிடுங்கள்.அவ்வாறே அசுத்தமான கால்நடைகளின் இறைச்சிகளையும் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.அவை மிக உயர்ந்த சுவையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரியே.மது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை உறிந்து குடித்துவிடும் மிக மோசமான எதிரி என்பதை எக்காலமும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்வின் எச்சந்தர்ப்பங்களிலும் அவை இடம் பிடித்துவிடாதபடி உங்களைச் சுற்றி ஒரு அரண் அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் நீடித்து இருக்கும் என்பதை நான் வாக்குறுதி அளிக்கின்றேன். இவற்றைப் போன்று நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற எனது புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவற்றை கட்டாயம் வாசியுங்கள்.உங்களை முழுமை பெற்ற மனிதராக ஆக்கிக் கொள்ளுங்கள்.