புதன், 11 ஆகஸ்ட், 2021

புத்தரின் பார்வையில் இருள் (Gautama Buddha)

புத்தரின் பார்வையில் இருள்
புத்தரின் பார்வையில் இருள்

இந்த உலகில் இருளைப்பற்றி யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்..!ஐயோ இருளா..?அது பயங்கரமானது..!மனிதர்களை அச்சுருத்தும் ஆபத்தானது..!வெறுட்சி நிறைந்தது.அவ்வளவு ஏன் நம் பார்வைகளின் ஒழியை இழக்கச் செய்துவிடும் கொடூர சக்திகொண்டது என்று அவரவர்கள் இந்த இருளைப் பற்றி என்னவெல்லாம் யோசித்து வைத்திருப்பார்களோ அத்தனையையும் கொட்டி தீர்த்துவிடுவார்கள்.மேலும் பலரோ இருளைப்பற்றி பேசுவதற்கே விரும்பமாட்டார்கள் என்பதே நான் அறிந்த உண்மையாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த உலகின் மகத்தான மனிதனாய் பார்க்கப்பட்ட புத்தர் இருளைப்பற்றி மிக விரிவாக பேசியிருக்கின்றார்.சற்று செவிதாழ்த்தி கேளுங்கள்..!

புத்தரின் பார்வையில் இருள் என்றால் என்ன?

அவர் இருள்தான் உண்மைத்தன்மைமிக்கது என்று குறிப்பிடுகின்றார்.மேலும் அதுதான் நிரந்தரத்துவமிக்க நித்தியமானது என்றும் குறிப்பிடுகின்றார். மனிதன் அதனைவிட்டும் எவ்வளவு தூரம் கடந்து சென்றாலும் அவனால் அந்த இருளை தோற்கடிக்கவே முடியாது என்றும் குறிப்பிடுகின்றார்.அவ்வாறே வெளிச்சம் என்பது தற்காலிகமாக உறுவாக்கப்பட்ட ஒரு மாற்றுசெயல் என்பதாக விவரிக்கின்றார்.அது எந்த ஆற்றலையும் தன்னகத்தே கொண்டதல்ல என்றும் அது மற்றொரு புறத்திலிருந்து தோன்றிமறையும்  தற்காலிக இடம்பிடித்த ஒரு பொருள் என்கிறார்.

இதனாலேயே தன் சீடர்களிடம் தன்னை ஒரு அனைந்துவிட்ட விளக்கு என்பதாக கூறுகிறார்.ஏனென்றால் விளக்கு என்பதுதான் நித்தியமானது என்றும் அதில் தோன்றும் வெளிச்சமானது நிரந்தரமற்றது என்றும் விவரிக்கின்றார்.ஆனால் மக்களில் பெரும்பாலானோர் வெளிச்சம்தான் நிஜம் என்று எண்ணிக்கொண்டு அதன் பின்னேயே ஓடிச்செல்கின்றனர் என்றும் குறிப்பிடுகின்றார்.அவ்வாறே வெளிச்சத்தை மக்களின் கூட்டு வாழ்க்கைக்கு ஒப்பாகவும் இருளை தனிமனித வாழ்க்கைக்கு ஒப்பாகவும் ஒப்பிட்டுக் காண்பிக்கின்றார்.மக்களில் பெரும்பாலானோர் தனிமையின் பயத்தால் இந்த உலகில் யாரையாவது ஒரு உறவை எப்பொழுதும் தேடிக்கொண்டே செல்கின்றனர் என்றும் நிரந்தரமான தனிமனித வாழ்வை கற்க மறந்து விடுகின்றனர் என்றும் கவலையுறுகின்றார்.

அவ்வாறே வெளிச்சத்தை உயிரிற்கும் இருளை மரணத்திற்கும் ஒப்பாக குறிப்பிட்டு காண்பிக்கின்றார்.உயிர் என்பது இன்று உண்மையானதாக இருக்கலாம்.ஆனால் மரணமே என்றும் நிஜமானது என்பதை ஆழமாக சுட்டிக்காண்பிக்கின்றார்.மனிதன் இருளைவிட்டும்,தனிமையைவிட்டும், மரணத்தைவிட்டும் தூரமாக ஓடுவதாக இந்த உலகில் காட்டிக்கொள்ளலாம். ஆனால் அவைகள் அனைத்தும் அவனுடைய வாழ்வில் நிஜமான இடத்தை பிடித்திருப்பதால் இறுதியில் அவனே அதற்கு முன்பு வந்து மண்டியிட்டு சரணடைந்துவிடுவான் என்பதாக குறிப்பிடுகின்றார்.

நீதி:

அண்பர்களே..!நிஜமற்ற இந்த வாழ்வில்தான் என்ற கர்வத்தோடு தன்நிலைமறந்து செயல்படமுற்படாதீர்கள்.உறவுகள் சொத்துக்கள்,சுகங்கள் அனைத்தும் நம்மை நிரந்தரமாக்கி வைக்கக்கூடியது என்ற மமதையில் உங்கள் வாழ்வை நீங்களே அழிவில் போட்டுக்கொள்ளாதீர்கள்.எறியும் விளக்காக இருங்கள் அது தவறில்லை.ஆனால் அதுவே நிரந்தரம் என்று எண்ணிவிடாதீர்கள்.வாழ்வின் உண்மைகளை அசைபோடக் கற்றுக் கொள்ளுங்கள்.அது நிரந்தமற்ற பொய்களுக்கு பின்னால் ஓடுவதைவிட்டும் தானே உங்களை நிறுத்திவிடும்..!

நன்றி:

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி?(so excitement)

பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி
பரபரப்பில்லாமல் வாழ்வது எப்படி

முன்னுரை:

இன்றைய உலகில் எதை எடுத்தாலும் பரபரப்பு..!எங்கு பார்த்தாலும் பரபரப்பு..!ஏன் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் ஓடிக்கொண்டு இருப்பவர்களையும் நம்மால் காணமுடிகின்றது.  அவ்வளவு ஏன் நிற்க நேரமில்லை,நடக்க நேரமில்லை,பேச நேரமில்லை என்று கால் தரையில் படாமல் பரந்துகொண்டே வாழ்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.மேலும் இன்றைய உலகும் நிற்காதே ஓடு ஓடு என்று நாலாபுறமும் நின்றுகொண்டு நம் செவிகளை செவிடாக்கி கொண்டிருக்கும் கொடுமையும் ஒரு புறம் அரங்கேரி வருவது சொல்லிலடங்கா கொடுமையாகும்.அன்பர்களே.!

நீங்களும் இந்த பிரச்சனையை சந்தித்துவருகின்றீர்களா..?அப்படியானால் உங்களை இவற்றைவிட்டும் பாதுகாத்துக்கொள்ள நான் கடைபிடித்து வரும் ஒரு சில வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.அதனை நீங்களும் கடைபிடித்தால் நீச்சயம் சாந்தமான ஒரு நிதானமிக்க வாழ்வை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

பரபரப்பில்லாமல் இருப்பதற்கான வழிகள்:

1.முதலாவதாக நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான விஷயம் "உங்களுடைய நேரத்திற்கு மிஞ்சிய நிகழ்சிகளை திட்டமிடாதீர்கள்.அதாவது ஒரே நேரத்தில் பல்வேறு காரியங்களை செய்துமுடித்திட வேண்டும் என்று தயவுகூர்ந்து திட்டமிடாதீர்கள்.இதனால் பெரும்பாலும் உங்களுடைய நிம்மதியும் இழந்து; நீங்கள் திட்டமிட்ட நிகழ்சியையும் இழந்து; பெரும் துன்பத்திற்கு ஆலாக்கப்படுவீர்கள்.

எனவே எத்தகைய காரியமானாலும் சரி அதற்கான ஒரு தாராளமான நேரத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.அதற்கு பிறகே அதனை நிறைவேற்றச் செல்லுங்கள்.அவ்வாறே உங்களிடம் வரும் அனைவரின் தேவைகளையும் பூர்த்திசெய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் உங்களை நீங்களே போட்டுக்கொள்ளாதீர்கள்.உங்கள் நேரத்திற்கு அப்பாற்பட்ட விஷயத்தை வேறொரு நேரத்தில் செய்து கொடுப்பதாக வெளிப்படையாகவே சொல்லிப்பழகுங்கள்.இதனால் பெரும்பாலும் உங்கள் அமைதியை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

2.உங்களுக்கான ஓய்வு நேரம் என்ற ஒன்றை நீங்களே நிர்னயுங்கள். உதாரணமாக இரவு தூங்கும் நேரத்தில் ஓய்வை தவிர்த்துவிட்டு  தொலைக் காட்சியில் அமர்ந்து நேரத்தை கழிக்க வேண்டும் என்றோ அல்லது தொலை பேசியின் மூலம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடவேண்டும் என்றோ எண்ணாதீர்கள்.ஏனெனில் தொலைக்காட்சியையும்,தொலைபேசியையும் விட நம் இயல்பு வாழ்வை நிலைகுழையச் செய்யும் ஒரு ஆபத்தான கருவி வேறு ஒன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.பெரும்பாலும் அது உங்களுடைய பொன்னான நேரங்களை அழித்தொழித்துவிடும் என்பதே நிதர்சனமாகும். எனவே உங்களுக்கான ஓய்வு நேரங்களில் தயவுகூர்ந்து இது போன்ற சாதனங்களை பயன்படுத்துவதைவிட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள் அதனால் உங்கள் அமைதி பாதுகாக்கப்படலாம்.

3.வாரத்தில் ஒருமுறை உங்கள் வேலையை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு நன்பர்களுடனோ அல்லது உறவினருடனோ நேரத்தை செலவழியுங்கள். அல்லது எங்காவது புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்.இதனால் நிச்சயமாக உங்களின் மனோநிலையையும் சிந்தனையையும் ஓர்முகப்படுத்தி புத்துணர்வாக வைத்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

4.தேவையில்லாதது என்று நினைப்பதை அப்பொழுதே தூக்கி எறிந்துவிடுங்கள்.அதாவது பழைய ஆடைகளாகட்டும்,அல்லது கிழிந்த ஆடையாகட்டும் அனைத்தையும் அவற்றை பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்தால் அதனை அப்பொழுதே தூக்கி எறிந்துவிடுங்கள். இல்லையானல் அது என்றாவது ஒரு நாள் உங்களை நிம்மதி இழக்கச் செய்துவிடும்.அதாவது என்றாவது நீங்கள் அதை மறந்து அணிந்துவிடலாம். அதனால் பெரும் தர்ம சங்கடத்தை நீங்கள் அடையவேண்டிய நிலைக்கும் தள்ளப்படலாம்.எனவே தேவையற்றதை அப்பொழுதே தூரமாக்கும் வழக்கத்தை கடைபிடியுங்கள்.இதனால் நிம்மதியுற்ற ஒரு மனநிலையை உங்கள் செயலில் நிச்சயமாக நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.

5.தனிமையில் சற்று அமர்ந்து உங்கள் எண்ண ஓட்டங்களை உற்று நோக்க கற்றுக்கொள்ளுங்கள்.அவை தன் இஷ்டத்திற்கு ஓடுகின்றதா ?இல்லை அதை உங்கள் கட்டுக்கோப்பில் வைத்திருக்கின்றீர்களா? என்பதை சோதித்துப் பாருங்கள்.இவ்வாறு நீங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவீர்களேயானால் நிச்சயம் ஒரு சாந்தமான நிலையை உங்கள் செயலில் பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

ஆக மேற்கூறிய இந்த ஐந்து விஷயங்களையும் உங்களால் முடிந்தளவு கடைபிடித்து வாருங்கள்.நிச்சயம் உங்கள் செயலில் நிதானம் ஏற்படும் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம்.

உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்?(Happiest people)

உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்?(Happiest people)
உலகிலேயே மக்கள் எங்கு அதிகம் மகிழ்சியாக வாழ்கின்றனர்

முன்னுரை:

இந்த உலகிலேயே அதிகம் மகிழ்சியாக வாழும் மக்களைப்பற்றிய ஆய்வை கொலம்பியாவின் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் ஜஃப்ரே சாச்சஸ் மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது இந்த உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் (Finland)பின்லாந்த் நாட்டைச் சார்ந்தவர்களே என்று குறிப்பிடுகின்றார்.கிட்டதட்ட 5 (மில்லியன்) அதாவது 50 லட்சம் மக்கள் வாழும் அந்நாட்டிலேயே மக்கள் அதிகம் சந்தோஷமாக வாழ்கின்றனர் என்பதாக குறிப்பிடுகின்றார்.

மேலும் அவர் சந்தோஷம் என்பதற்கு மக்களின் மனதிருப்தியையே அளவுகோளாகவும் குறிப்பிடுகின்றார்.அதனடிப்படையில் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிக திருப்தியுற்றிருப்பதாகவும் மேலும் வாழ்வில் மிக மகிழ்சியாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.அங்குள்ள மக்களிடம் அவர் கருத்துக்கேட்டு சென்றபோது அம்மக்கள் என்ன கூறினார்கள் என்பதையும் அவர் பதிவுசெய்துள்ளார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்.

ஃபின்லாந்து மக்களின் கருத்து:

"இங்குள்ள அரசே எங்களுடைய தேவையை பெரும்பாலும் தீர்த்து வைத்துவிடுகின்றது.அதனால் இங்கு எங்களுக்கு எங்களுடைய வாழ்வாதாரம் பற்றிய எந்த கவலையும் இல்லை.எங்கள் நாடு உலகிலேயே மிக வளம்நிறைந்த நாடாக இல்லை என்றாலும் எங்கள் வாழ்க்கையை மிக திருப்தியாக கழிப்பதற்கான எல்லா சுதந்திரங்களும் எங்களுக்கு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகள் தங்களின் உற்பத்தி மற்றும் தொழில் துறையை வைத்தே தங்களை வெற்றிபெற்ற வல்லரசு நாடுகளாக காட்டிக்கொள்ள விரும்புகின்றன.ஆனால் எங்கள் நாட்டில் உற்பத்தித்துறை,ஆரோக்கியமான வாழ்வு,சமூக சுதந்திரம்,சுற்றியிருப்பவர்களின் அரவனைப்பு,அநீதி இழைப்பதை விட்டும் பாதுகாப்பு என்பதிலெல்லாம் மிகச்சிறந்த நாடாக நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.மேலும் இங்குள்ள மக்கள் சந்தோஷம் என்பது திருப்திகரமான வாழ்க்கைதான் என்பதை மிக ஆழமாக நம்புகின்றார்கள்.எனவே அவர்கள் குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒருவரை ஒருவர் பொருந்திக்கொண்டு வாழ்கின்றனர்.

உண்மையில் எங்கள் நாட்டில் ஒரு குழந்தை பிறப்பதை மிகப்பெரும் வரமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.ஏனெனில் இங்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கான மூன்று மாத அனைத்து தேவைகளையும் அரசே கொடுத்துவிடுகின்றது.மேலும் அக்குழந்தையை நன்கு பராமரிப்பதற்காக தாயிற்கு 9 மாதங்கள் விடுப்பும் வழங்குகின்றது.அவ்வாறே இங்கு அதிக வரி என்பதெல்லாம் கிடையாது.கல்வியும்,மருத்துவமும் முற்றிலும் இலவசமாகும்.

இங்கு பெரும்பாலும் திருட்டு ,கொலை,கொள்ளை என்பதெற்கெல்லாம் இடமே கிடையாது,ஏனெனில் இங்குள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.மேலும் எல்லோரும் அவரவர்கள் விரும்பிய நல்ல வேலைகளிலும் இருப்பவர்கள். அதன் காரணமாக இங்குள்ள மக்களில் யாரும் யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்ப்பதும் கிடையாது.ஆகவே இங்கு எல்லோரும் ஏழ்மையை விட்டும் நீங்கி ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.மிக குறிப்பாக இங்கு தற்கொலைகள் என்பதற்கும் இடம் கிடையாது.ஏனெனில் இங்குள்ள மக்கள் தங்களுக்கான அனைத்து அங்கிகாரங்களையும் மிக இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்.

இதுவே இங்குள்ள மக்கள் மிக திருப்திகரமாக வாழ்கின்றார்கள் என்பதற்கு போதுமான அளவுகொளாக இருக்கின்றது.இவ்வாறு இன்னும் பல அற்புதமான மகிழ்சி பொங்கும் பல தருனங்களை தங்கள் நாடு வழங்குவது குறித்தும் அம்மக்கள் அடுக்கிக்கொண்டே செல்வதாக தனது ஆய்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

படிப்பினை:

உண்மையில் பின்லான்ட் நாட்டு அரசிடம் ஒவ்வொரு நாடும் பாடம் படிக்கவேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் உலகில் ஒவ்வொரு நாடும் தங்களின் நாட்டு மக்களின் திருப்தியை குறிக்கோளாக கொண்டு செயல்பட ஆரம்பித்தால் அனைத்து நாட்டு மக்களும் மிக மகிழ்சி நிறைந்த மக்களாக வாழ முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன?(How to save farmers)

விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன
விவசாயிகளை காப்பதற்கு வழிதான் என்ன

முன்னுரை:

உணவு உற்பத்தியே ஒரு நாட்டின் மக்களை பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும் காப்பாற்றக்கூடியது என்பதால் விவசாயமே ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் எந்நாட்டில் உணவு உற்பத்தி என்பது வளமிக்கதாக இருக்கின்றதோ அந்நாடே உலகில் மிக செளிப்பான நாடாகவும் போற்றப்படுகின்றது.இந்தியா என்பது எவ்வாறு மக்கள் தொகையில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டுவிட்ட நாடாக ஏனைய நாடுகளால் கருதப்படுகின்றதோ அதே அளவிற்கு இயற்கை வழங்களாலும் நிறைந்த நாடாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமாகும்.இதனைத்தான் மஹாத்மா காந்தி ஜி அவர்கள் 

"இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான் என்று குறிப்பிட்டார்."

இந்தியாவில் வேளாண்உற்பத்தி பொருட்கள் 85 % உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் மீதி 15 % வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருவது பெருமைக்குறிய விஷயமேயாகும் என்றாலும் குறிப்பிட்ட சில வருடங்களாக வேளாண்உற்பத்தித்துறையில் இந்தியா மிகப்பெரும் வீழ்சியையே சந்தித்து வருவதாக புள்ளி விவரங்கள் நமக்கு விவரிக்கின்றன.இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும்? ஏன் வேளாண்துறை மிகப்பெரும் வீழ்சியை சந்தித்து வருகின்றது என்பது குறித்தும், அதற்கான தீர்வு என்ன என்பது குறித்தும் இந்த கட்டுரையில் வட்டுறுக்கமாக விவரிக்க முயலுகின்றேன்.

வேளாண் துறையின் வீழ்சிக்கு காரணம் என்ன?

இன்றைய வேளாண்துறை வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே அரசு தன் விவசாய மக்களை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் என்பதை என்னால் மிக உறுதியாக கூற முடியும்.ஆம்..!விவசாயிகளே இல்லாத நாட்டை உறுவாக்க நினைக்கும் அரசுதான் இதற்கு முக்கிய காரணம் என்று நான் உறுதியாக கூறுகின்றேன்.நாட்டின் பொருளாதார முதல் மதிப்பீடான விவசாயம் செய்யும் மக்களை வழுக்கட்டாயமாக வேறு தொழில்களை நோக்கி விரட்டத்தூண்டும் அரசின் சில நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று என்னால் வெளிப்படையாகவே கூறமுடியும்.இன்றைக்கு மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் புதிய தலைமுறையினரோ விவசாயத்தைவிட்டும் நெடு தூரம் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் சொல்லப்போனால் வயல்களையும்,வெளிகளையும் அவர்கள் அதிசயமாக பார்க்கும் அளவிற்கு வேற்றுகிரகவாசிகளாக்கப்பட்டுள்ளனர் என்பதே நிதர்சனமாகும்.அத்தகைய நிலையில் வேளாண் துறையை நாம் காக்கவேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும் என்பதையே அதற்கான தீர்வாக நான் காண்கிறேன். அவர்களை காப்பதற்கு அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது குறித்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன்.

எனவே விவசாயிகள் ஏன் விவசாயத்தை விட்டும் தூரமாகின்றனர் என்பது சம்மந்தமாக ஒரு சில விஷயங்களை இங்கு நான் விவரிக்க விரும்புகின்றேன். விவசாயத்தில் இரவு பகல் பாராத அதிக உழைப்பும்,உறுதியற்ற வருமானமும் இருப்பதாலேயே பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்வதை விட்டுவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.ஆம் மக்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லையெனில் எவ்வாறு அவர்கள் அத்துறையில் நிலைத்திருப்பார்கள்?

எனவே அவர்கள் பணம் எங்கு அதிகம் கிடைக்கின்றதோ அந்த துறைகளை நோக்கி சப்தமின்றி நகர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதே எனது கருத்தாகும்.அவ்வாறே அவர்கள் கடனுக்கும் வட்டியிற்கும் பணம் பெற்று அதனை முதலீடு செய்யும் விவசாயம் அவ்வப்பொழுது இயற்கை சீற்றங்களால் முற்றிலும் நாசமடைந்து போகும்பொழுது அவர்கள் நிர்கதியற்று நிற்க வைக்கப்படுகின்றனர்.இதனால் ஏன் இந்த தலைவலி பிடித்த தொழிலை கட்டி மாரடிக்கவேண்டும் என்று விவசாயத்தை வெளிப்படையாகவே தூக்கி எறிந்துவிட முற்படுகின்றனர்.

என்னை பொருத்தமட்டில் அவர்களின் எண்ணம் தவறானதல்ல என்றே நான் கூறுவேன்.ஏனென்றால் இரவு பகலாக ஓடாய் உழைக்கும் ஒரு மனிதனுக்கு எவ்வித பலனுமே கிடைக்கவில்லையெனில் அவன் அத்தொழிலிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்று ஆசிப்பது எவ்வாறு நியாயமாகும்..?எனவே அவனுடைய உழைப்பிற்கான உறுதியான ஒரு பலனை அரசு உறுதி செய்வது மட்டுமே அவன் விவசாயத்தில் நீடிப்பதற்கான தீர்வாக அமையும் என்பது எனது கண்ணோட்டமாகும்.

நூறு நாட்கள் தாண்டியும் இன்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத் திற்கான உறுதியை வேண்டி டெல்லியில் போராடிக்கொண்டு தானிருக்கின்றனர்.ஆனால் அவர்களின் விஷயத்தில் அரசு திரும்பிப் பார்ப்பதற்குகூட தயாராக இல்லை என்பது எத்துணை பெரிய அவளம் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.இத்தகைய அரசைத்தான் முதலாளித்துவ அடிமை அரசு என்று மார்க்ஸ் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

ஏனெனில் பணம் என்பது உழைப்பாளர்களின் உற்பத்தி வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது.அதனை உழைப்பாளிகளை சுரண்டிப்பிளைக்க நினைக்கும் அற்பர்களிடம் அச்சடித்து கொடுத்துவிட்டு ஏழை விவசாயிகளை அந்த பணத்தை நோக்கி ஓடவிடுவது என்பது மிகப் பெரும் அனாகரீகம் என்றே நான் பார்க்கின்றேன்.நாட்டின் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கின்றது என்று நாடாலுமன்றங்களில் கூக்குரல் இடும் இந்த கயவர்கள் ஏன் விவசாயிகளுக்கென்ற வாழ்வாதார உறுதியை கொடுக்க மறுக்கின்றனர் என்று யோசிப்பீர்களேயானால் அங்குதான் முதலாளித்துவ அடிமை சேவகம் ஒழிந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

ஏற்பிடித்து கழப்பை பிடித்து உழைக்கும் ஒருவனின் வியர்வைக்கு தகுந்த வருமானத்தை அரசு உறுதிசெய்யவில்லையெனில் அந்த அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்..?அதுமட்டுமல்லாது இரவு பகலாக பயிரிட்ட அவனது பயிற்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி அமோக லாபம் பெறத்துடிக்கும் முதலாளிகளின் கைகளை எவ்வித கட்டுப்பாடுமின்றி கட்டவிழ்த்துவிட்டு விட்டு நாட்டில் உற்பத்தி குறைந்துவிட்டது,எனவே விலவாசி உயர்ந்துவிட்டது என்று ஓழமிடுவது எத்துனை பெறிய பித்தலாட்டம்.. இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கின்றேன்..!விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு..!அவர்களை முறித்துவிட்டு நாட்டின் முன்னேற்றத்தை எதிர்பார்த்தால் இந்நாடு கூன் விழுந்த கிழவியாகவே நாதியற்று இறந்து போகும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்..!

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

காரல் மார்க்சும் அவருடைய அரசியல் பார்வையும்-Karl Marx

காரல் மார்க்சும் அவருடைய அரசியல் பார்வையும்-Karl Marx
காரல் மார்க்சும் அவருடைய அரசியல் பார்வையும்-Karl Marx

முன்னுரை:

இந்த கட்டுரையில் கார்ல்மார்க்சின் அரசியல் சார்ந்த அடிப்படை கண்ணோட்டத்தை மேலோட்டமாக பதிவு செய்திருக்கின்றேன்.ஏனெனில் இன்றைக்கு அரசியல்,அதிகாரம் என்ற பெயரில் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் புள்ளுருவிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை காரல் மார்க்சின் சில அடிப்படை தத்துவங்கள் தோழுறித்துக் காட்டக்கூடியதாக இருக்கின்றது என்ற அடிப்படையில் இங்கு அவருடைய அரசியல் சார்ந்த சில கண்ணோட்டத்தை விவரிக்கின்றேன்.

அரசியலின் அடிப்படை தத்துவமென்ன என்பதையும் அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதையும் மிகச்சரியாக நாம் விளங்கிக் கொள்ளவில்லையெனில் வலியவன் நம்மை ஆளவும் எளியவனாகவே நாம் துவளவும் பழகிப்போய்விடுவோம்.அத்தகைய இழிநிலையை ஒழிக்கவே பல்வேறு தலைவர்கள் தன் வாழ்நாட்கள் முழுவதும் போராடினார்கள்.அத்தகைய போராளிகளில் ஒருவரான கார்ல் மார்க்சின் ஒரு சில கருத்துக்களை உங்களின் கண்ணோட்டத்திற்கு விடுகின்றேன்.இதனை கட்டாயம் வாசியுங்கள்..!ஏனைய வாலிப நண்பர்களுக்கும் இதனை எத்திவையுங்கள்.. 

கார்ல் மார்க்சிடம் அரசியல் அல்லது அரசு என்பதற்கு பொருள் என்னவென்றால் அதிகாரத்தை தன் கையில் மட்டும் குவித்துக்கொண்டு தனக்கு இனக்கமானவர்களுக்கு சேவகம் செய்வதும் தனக்கு தேவையற்றவர்களுக்கு ஓரவஞ்சகம் செய்வதும்தான் என்று தன்னுடைய பெரும்பான்மையான பேச்சுகளில் வெளிப்படுத்துகின்றார்.வெளிப்படையாக கூறவேண்டுமெனில் முதலாளித்துவம் ஒழிந்துகொள்வதற்கும் அவற்றின் மூலம் பாட்டாளி மக்களை உறிஞ்சி குடிப்பதற்கும் துணைநிற்கும் ஒரு அமைப்புதான் அரசு என்று மிக ஆணித்தரமாக குறிப்பிடுகின்றார்.ஆக அவருடைய பார்வையில் அரசு என்பதற்கான அடைமொழி என்னவென்றால்..! 

"முதலாளிகளால் முதலாளிகளுக்காக முதலாளிகளே உறுவாக்கிய அரசுதான் அரசியல் என்று முகத்தில் அறைந்தார் போல் விளக்கம் தருகின்றார்.அரசு அரசியல் என்பதெல்லாம் தேவையே இல்லாதவை என்பதிலிருந்தே அவரின் அரசியல் கண்ணோட்டம் துவங்குகின்றது.மக்கள் தங்களுக்கு தாங்களே சீராகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டாலே போதுமானது என்றே அவர் பல இடங்களில் குறிப்பிடுகின்றார்.அப்படியே ஒரு வேலை தங்களுக்கு மத்தியில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை அவர்கள் தங்களுக்கு மத்தியிலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தீர்வு கூறுகின்றார்.

மேலும் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அரசு, அரசாங்கம் என்பவையெல்லாம் இல்லாமலே வாழ்ந்துதானிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆனால் குறிப்பிட்ட ஒரு காலத்தில் மக்களுக்கு மத்தியில் தீர்க்க முடியாத வர்க்க பிரச்சனைகள் தோன்றியதால்தான் இந்த அரசு,அரசாங்கம் என்ற நடுவன் மன்றங்களெல்லாம் உறுவானது என்று குறிப்பிடுகின்றார்.இன்னும் சொல்லப்போனால் தங்களை தனித்தனி வர்க்கங்களாக பிறித்துப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில் இணங்க முடியாத வர்க்க பிரச்சனையை தோற்றுவித்ததே இந்த அரசியல் அரசு புள்ளுருவிகள்தான் என்றும் குற்றம் சாட்டுகின்றார்.

மேலும் இந்த வர்க்க பிரச்சனைகள் இல்லாவிடில் அரசு என்பதே இல்லாமல் போய்விடும் என்பதே அவருடைய ஆழமான கருத்தாகவும் இருக்கின்றது.இந்த வர்க்க பிரச்சனையை மக்களிடம் அவ்வப்பொழுது தூண்டிவிட்டு தனக்கான அதிகார பலத்தை அவ்வப்பொழுது மெருகூட்டிக் கொண்டே இருப்பதுதான் அரசு என்ற ஒன்று நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது என்பதையும் அவர் மிகத்தெளிவாக விவரிக்கின்றார்.மேலும் அவரிடம் அரசு என்பதற்கும் மக்களை சுரண்டி பிளைக்கத்துடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அவரின் கருத்தை ஆழமாக வாசிக்கும்பொழுது நன்றாக புரிந்துகொள்ளலாம்.

அவரை பொறுத்தமட்டில் முதலாளித்துவத்தையும்,அரசியலையும் ஒரே தட்டில் வைத்தே அளவிடுகின்றார்.ஏனெனில் முதலாளித்துவமும்,அடிமை அரசும் ஒன்று சேர்ந்தால்தான் உழைக்கும் எளிய மக்களின் இரத்தங்களை உறிஞ்ச முடியும் என்பதையும் அவர் வெளிப்படையாகவே விவரிக்கின்றார்.மேலும் அவர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக செய்யும் அட்டூழியங்களையும் பட்டியலிடுகிறார்.பிறகு அவற்றை ஒழித்துக்கட்ட அவரே முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான ஒரு அரசியலையும் முன் வைக்கின்றார்.

அதற்கு பெயர் தான் "பாட்டாளி மக்கள் கட்சி".என்பதாகும்.அவ்வாறே கார்ல் மார்க்ஸ் அரசியலுக்கும் அரசாங்கத்திற்கும் எதிரானவர் என்றும் முடிவெடுத்துவிட முடியாது என்பதே எனது கருத்தாகும்.ஏனென்றால்  அவரின் "பாட்டாளி மக்களுக்கான அதிகாரம் வேண்டும் என்ற உரிமை முழக்கமே பறைசாட்டுகின்றது அவர் அரசியலுக்கு எதிரானவர் அல்ல என்று. இன்னும்சொல்லப்போனால் இங்குள்ள எல்லோருக்கும் அரசியல் தேவை என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.ஆனால் அந்த அரசு யாருக்கானதாகவும்,எப்படிப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் நேரடியாகவே உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டித்திண்க நினைக்கும் முதலாளி வர்க்கத்தோடு முரன்பட்டு நின்றார்.

மேலும் அரசு என்ற பெயரில் ஏதோ ஒரு வர்க்கத்தை நசுக்கி சிற்றின்பம் கண்டுகொண்டு தன் அதிகார பலத்தை ஏனைய மக்களிடம் காட்டிக் கொள்ளத்துடிக்கும் புள்ளுறுவிகளுக்கு எதிராக விவேகத்தோடு கோள் ஓச்சினார்.எளிய மக்களை சுரண்டித்திண்ணும் பெரிச்சாலிகளை விட்டு விட்டு எளிய சிறுபான்மையினரை தன் அதிகாரத்தால் அடக்கி வைத்திருப்பதாக பெருமைகொள்ளும் இழிவான அரசை நேரடியாகவே எதிர்த்து நின்றார். இறுதியாக முதலாளித்துவதின் அடக்குமுறைக்கும் அதற்கு துணை நிற்கும் அடிமை அரசுக்கும் எதிராக வெளிப்படையாகவே பாட்டாளி மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று தூண்டி வெற்றியும் கண்டார்.

உழைக்கும் மக்களுக்கென்று தனி அதிகாரம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்றும் கொள்கை வகுத்தார்.இன்றைக்கு பல்வேறு நாடுகளிலும் அவர் காட்டித்தந்த வழிமுறைகள்தான் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.அவ்வாறே "உழைக்கும் மக்களிடமே ஆட்சியும் அதிகாரமும் இருக்க வேண்டும் என்பதை தன் அரசியல் முழக்கத்தின் மூலம் நிறூபித்தும் காண்பித்துவிட்டு சென்றுள்ளார்.

ஆக அன்பர்களே...!கார்ல் மார்க்ஸ் அடிமை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை சில தீர்வுகளோடு விவரித்து இருக்கின்றார்.அவை முழுவதையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பது இயலாத விஷயமாகும்.எனவே அவருடைய அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தை மட்டும் என்னால் முடிந்தளாவு புரிந்துகொண்டு மிக வட்டுறுக்கமாக உங்களின் பார்வைக்கு தந்திருக்கின்றேன்.முடிந்தால் இன்றைய அரசியலோடு நீங்களே அவருடைய அரசியல் நிலைப்பாட்டை முன்நிறுத்திப்பாருங்கள்.அவர் முதலாளிகளுக்கோ முதலாளித்துவத்துக்கோ எதிரானவர் அல்ல,மாறாக மக்களை அதிகாரத்தாலும்,பொருள் பலத்தாலும் அடக்கி ஆளத்துடிக்கும் புள்ளுருவிகளுக்கே அவர் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தார் என்பதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளலாம் என்று நான் நம்புகின்றேன்.

கார்ல் மர்க்ஸ் எழுதிய அல்லது அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் உங்களில் யாருக்கேனும் வேண்டுமெனில் இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மெயிலிற்கு உங்களின் குறுஞ்ச் செய்தியை அனுப்புங்கள்.அவை இலவசமாக PDF வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.