செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)

யார் இந்த அரிஸ்டாட்டில்?(Aristotle)
யார் இந்த அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டிலா..?யார் அவர்..?அவருக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் என்றோ..?அல்லது பள்ளி பருவ காலத்தில் ஏதோ ஒரு பாட புத்தகத்தில் படித்த பெயராயிற்றே என்றும் யோசிப்பீர்களேயானால்..!தயவு கூர்ந்து இந்த கட்டுரையை முழுவதுமாக வாசியுங்கள்!ஏனெனில் அவர் நம் வாழ்வில் மிகவும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மிகச்சிறந்த நபராவார். 

நாமெல்லாம் இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாபெரும் வீரன் அலெக்சான்டரை நன்றாக அறிவோம்.அவர் இந்த உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் என்றும் படித்திருப்போம்.ஆனால் அவரை ஒப்பற்ற தலைவனாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டிலை அறிவு சார்ந்த துறையினரே மிகக்குறைவாகத்தான் அறிந்திருக்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஏனெனில் அரிஸ்டாட்டிலின் சேவை என்பது முற்றிலும் கல்விக்கான சேவையாக மட்டுமே இருந்தது.மக்களுக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பை மிக ஆழமாக ஆய்வுசெய்து அதற்கான தீர்வுகளை முன் வைப்பதிலேயே தன்னை அற்புதச் சுரங்கமாக அவர் வடிவமைத்துக் கொண்டார்.இதனால் பெரிதும் வெளிப்படாத அவர் பின் ஒரு காலத்தில் அலெக்சான்டர் என்ற மாபெரும் மன்னனுக்கு கல்வி போதிக்கும் ஆசானானார். அவரின் அந்த போதனையே பிற்காலத்தில் அலெக்சாண்டரை ஒரு தலை சிறந்த தலைவனாக்கியது.

தன் ஆசிரியரை என்றும் மறவாத அலெக்சான்டர் தான் வெற்றி கொண்ட இடங்களில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் மன்னனின் பரிசாக தன் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்கு அனுப்பி வந்ததாக வரலாற்றிலும் நம்மால் காண முடிகின்றது.அந்தளவிற்கு அரிஸ்டாட்டில் கல்வியின் மீது பேராவல் கொண்டவராக திகழ்ந்தார் என்பதை நம்மால் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நாம் நம்முடைய கல்விக்காலங்களில் வரலாற்று புத்தகங்களில் அரிஸ்டாட்டில் என்பவர் கிரேக்கத் தத்துவத்தின் தந்தை என்பதாக மட்டுமே படித்திருப்போம். ஆனால் உண்மையில் அவர் வானவியல் சார்ந்தும்,உயிரியல் சார்ந்தும், தர்க்கவியல் சார்ந்தும்,அறிவியல் சார்ந்தும் அவ்வளவு ஏன் இறையியல் சார்ந்தும்கூட பேசியிருப்பது அவருடைய தூர நோக்கு சிந்தனையை வெட்ட வெளிச்சமாக காட்டுகின்றது.

அவ்வாறே அவருடைய வாழ்வில் பெரும்பங்கை பரந்துவிரிந்த சிந்தனையை மக்களுக்கு ஊட்டவேண்டும் என்ற பேரவலிலேயே அவர் கழித்திருக்கின்றார் என்றும்,மக்களிடம் புரையோடிப்போய் கிடந்த மூடநம்பிக்கையை நீக்கி சுதந்திரமாக சிந்திக்கும் பண்பையும் ஊக்குவித்துக்கொண்டே இருந்திருக்கின்றார் என்றும் வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.மேலும் இந்த உலகின் அறிவியல் எத்தகைய அளவுகோளுடையதாக இருக்க வேண்டும் என்பதை முதல் முதலில் வரையறுத்து கூறியவரும் அவறேயாவார்.

அதாவது ஒரு பொருளின் உண்மை தன்மை என்ன என்பதையும் அதன் அளவு என்ன என்பதையும்,அதன் பயன் என்ன என்பதையும்,மக்களால் அதை எப்படி எல்லாம் அனுக முடியும் என்பதையும் மிகத்தெளிவாக அன்றே  வரையறுத்து காண்பித்தார்.இந்த உலகில் நிகழும் அனைத்து காரியங்களுக்கு பின்பும் ஒரு காரணமுன்டு என்பதையும்,அது மிக முக்கியமான ஒரு நோக்கம் கொண்டது என்பதையும் மக்களிடம் பரப்புரை செய்து மக்கள் அனைவரையும் பகுத்தறிவின் பக்கம் திருப்பிப்போட்டார்.

அவருடைய ஆய்வில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது இந்த உலகை படைத்த இறைவன் என்ற ஒருவன் இருக்கின்றான் என்பதேயாகும். ஆம் அவர் இந்த உலகம் யாரோ ஒரு மகா சக்தி படைத்தவரால் படைக்கப்பட்டதே என்று மிக உறுதியாக குறிப்பிடுகின்றார்.அதற்கு ஆதாரமாக அறிவியலையே முன்வைக்கவும் செய்கின்றார்.அதாவது இந்த உலகம் தானாக தோன்றும் சக்தியற்றது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.எனவே நிச்சயம் இதை உறுவாக்கிய ஒருவர் இருக்கத்தான் வேண்டும் என்பதோடே தன் கடவுள் கொள்கையை அவர் முடித்துக் கொள்ளவும் செய்கின்றார்.

மேலும் இன்று அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் அதிகமான சொற்களை உறுவாக்கியவரே அவர்தான் என்று அறிவியல் உலகம் இன்றும் அவரை போற்றிப்புகழ்வது அவருடைய மிகப்பெரும் தனிச்சிறப்பாகும். அவ்வாறே ஆட்சி அதிகாரங்கள் குறித்தும் பல்வேறு விதிகளை அவர் தொகுத்து கொடுத்துவிட்டு சென்றிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது. இப்படி கல்வி துறையில் அனைத்து கலைகளிலும் மிகப்பெரும் உச்சத்தை தொட்டவராகவே அவரை நம்மால் காணமுடிகின்றது.இங்கு அவருடைய ஒரு சில சேவையை நான் குறிப்பிடுவதின் மிக முக்கியமான நோக்கம் இன்றைய தலைமுறை சுதந்திரமாக பல்வேறு விஷயங்களை சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

மேலும் கிட்டதட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் எவ்வித தொலை தொடர்பு சாதனங்களுமின்றியே பல்வேறு விதிகளை வரையறுத்திருக்கும் பொழுது பல்வேறு நவீன உபகரனங்களை பெற்ற நாம் அறிவியளின் உச்சத்திற்கே செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அவருடைய செயல் நமக்கு தருகின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய சிறப்புகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கின்றேன்.எனவே அண்பர்களே .. இந்த உலகை உற்று நோக்குவதற்கும்,அதன் உண்மைத்துவத்தை கண்டறிவதற்கும் உங்கள் வாழ்வில் சிறிது நேரத்தை இன்றிலிருந்தேனும் ஒதுக்கிக்கொள்ளுங்கள்.மேலும் உங்கள் குழந்தைகளிடமும் சுதந்திரமாக சிந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சியுங்கள்.ஆரோக்கியமான சிந்தனை கொண்ட கல்வியில் சிறந்த சமூகத்தை கட்டமைக்க நீங்களும் ஒரு காரணமாக அமையுங்கள்..!

நீங்களும் தலைவனாகலாம்.(Leadership)

நீங்களும் தலைவனாகலாம்.
நீங்களும் தலைவனாகலாம்.

முன்னுரை:

இந்த உலகத்தில் எல்லோரும் தான் ஒரு பெரிய தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்தோடே வாழ்கின்றனர்.இன்னும் சொல்லப்போனால் இந்த உலகில் தலைவனாகும் ஆசையில்லாத மனிதர்களே மிக அரிது என்றும் குறிப்பிடலாம்.அத்தகைய ஆசை உங்களுக்கும் இருந்தால் அது ஒன்றும் தவறில்லை.ஆனால் அவற்றை அடைவதற்கான சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்வது என்பது தலையாய கடமையாகும்.இந்த உலகில் எவரும் பிறக்கும் பொழுதே தலைவர்களாக பிறக்கவில்லை என்பதனால் நீங்களும் தலைவனாக முடியும் என்ற நம்பிக்கையோடு கீழே நான் குறிப்பிடும் ஒரு சில தகுதிகளை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் ஒரு நல்ல தலைவனாகலாம்..!

ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய முதல் தகுதி: 

1."உயர்ந்த சிந்தனை.".

ஏனென்றால் உயர்ந்த சிந்தனையே ஒரு மனிதனையும் அவனை நம்பியுள்ள மக்களையும் உயர்ந்த இடத்திற்கு இட்டுச்செல்லும் அற்புத உந்து சக்தியாக இருக்கின்றது.இத்தகைய சக்தியில்லாதவர்களால் நிச்சயம் மக்களை சீராக வழி நடத்த முடியாது என்பதே அனைத்து மனோ தத்துவ நிபுனர்களின் ஏகோபித்த முடிவாகும்.எனவே நீங்கள் தலைவனாக வேண்டும் என்று விரும்பினால் உங்கள் சிந்தனை திறனை முதலில் வளர்த்துக்கொள்ளுங்கள். 

அதற்கு நல்ல பல புத்தகங்களை வாசியுங்கள்.அவற்றில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை கிரகிக்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நேற்றைய வாசிப்பாளர்கள்தான் இன்றைய தலைவர்களாக இருக்கின்றார்கள்.அவ்வாறே நல்ல அறிஞர்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.அவர்களோடு சிறிது நேரம் உரையாடுங்கள்.இதனால் நிச்சயம் உங்களுடைய சிந்தனை திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

இரண்டாவதாக ஒரு தலைவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி: 

2."பேச்சாற்றால்" 

அதாவது தான் கொண்ட கொள்கையை அல்லது சரியான பாதையை மக்களிடம் அழகிய முறையில் விளக்கிச்சொல்லும் அளவிற்கு ஒரு தலைவனிடம் நாவன்மை இருப்பது இன்றியமையாததாகும்.உங்கள் சிந்தனையிலும்,எண்ணத்திலும் எத்துனை பெரிய உண்மை பொதிந்திருந்தாலும் அதனை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படி விளக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.இல்லையானால் நீங்கள் செய்யும் நற்காரியங்களும் கூட தீய நோக்கமுடையதாக சித்தரிக்கப்பட்டு உங்களுக்கு அதுவே பெரும் பிரச்சனையை தரக்கூடியதாக மாறிவிடும்.எனவே ஒரு நல்ல தலைவன் தன் நிலைப்பாட்டை மிகத்தெளிவாக மக்களுக்கு புரியச் செய்யும் ஒருவனாக இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததே..!

மூன்றாவதாக ஒரு தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:

 3.பொறுப்பேற்கும் திறன்" 

அதாவது தன்னை நம்பி வரும் மக்களுக்கு தானே முன்வந்து முழுவதுமாக பொறுப்பேற்கும் தகுதி ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க வேண்டும்.  குறிப்பாக நல்ல விஷயங்களில் மக்களை முன்நிற்கவிட்டுவிட்டு பிரச்சனை என்று வரும்பொழுது ஒரு தலைவனே முன் விரிசையில் வந்து நிற்க வேண்டும். இதுவே தலைமைத்துவத்தின் மிக அவசியமான பண்பாகும். பிரச்சணைகளை கண்டு ஒழிந்து கொள்வதோ அல்லது யாரோ செய்த ஒரு நல்ல காரியத்திற்கு தான் பெயர் வாங்க நினைப்பதோ ஒரு நல்ல தலைவனுக்கு ஒருபோதும் அழகாகாது.எனவே நீங்கள் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் மக்களின் குறை நிறைகளுக்கு பொறுப்பேற்க தயாராகிக்கொள்ளுங்கள்.

நான்காவதாக ஒரு நல்ல தலைவனிடம் காணப்பட வேண்டிய மிக முக்கிய தகுதி:

4."மக்களிடம் குறைகளை கேட்குமளவு பணிவு "

அதாவது மக்கள் சகஜமாக சந்தித்து தங்கள் குறையை சொல்லும் அளவிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.தான் தலைவன் என்ற கர்வத்தில் மக்களை தூரமாகவே வைத்து பாவிப்பது என்பது ஒரு நல்ல தலைவனின் செயலாகாது.அதனால் நிச்சயமாக மக்கள் அந்த தலைவனின் மீது அதிர்ப்தியே கொண்டிருப்பார்கள்.மேலும் அதனால் அந்த தலைவனும் கெட்டு மக்களும் கெட்டுப்போவதே முடிவாக அமையும்.

எனவே ஒரு நல்ல தலைவன் தன் மக்களை அவ்வப்பொழுது சந்தித்து அவர்களின் குறை நிறைகளுக்கு செவி சாய்க்கும் அளவு பணிவு கொண்டிருக்க வேண்டும்.நீங்களும் ஒரு நல்ல தலைவனாக விரும்பினால் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலவில் கவனம் செலுத்துங்கள்.அவர்களின் இன்ப துன்பங்களில் அவ்வப்பொழுது பங்கெடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஐந்தாவதாக ஒரு தலைவனிடம் இருக்கவேண்டிய மிக முக்கியமான தகுதி:

5.தனித்து நிற்கும் துணிவு "

தலைமைத்துவம் என்றாலே நிச்சயம் அதற்கு ஒரு எதிர் பகுதி இருக்கும். அத்தகைய எதிர்பகுதியை மிக சமயோஜிதமாக பயன்படுத்த வேண்டும். அவர்கள் செயல்படவிடாமல் தடுக்கும்பொழுதெல்லாம் துணிந்து செயல்பட வேண்டும்.மக்கள் ஏசுகின்றார்கள் என்பதற்காக தன் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு ஓடிவிடக்கூடாது.அச்சமயங்களில் தான்கொண்ட கொள்கையில் நிலையாக நின்று தன் துணிவை நிறூபிக்க வேண்டும்.ஏனெனில் மக்கள் குறைகூறுகின்றார்கள் என்பதற்காக ஓடி ஒழிந்துகொள்பவர் நிச்சயமாக ஒரு நல்ல தலைவனாக முடியாது.எனவே நீங்கள் நல்ல தலைவனாக விரும்பினால் மக்களிடமிருந்து வரும் அனைத்தையும் சந்திக்கும் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.தலைமைத்துவத்தில் பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்ப்பதென்பது முட்டாள்தனத்தின் உச்சம்.

ஆகவே மேற்கூறிய இந்த ஐந்து தகுதிகளையும் ஒரு தலைவனுக்கு மிக முக்கிய பண்பாக நான் பார்க்கின்றேன்.இது அல்லாமல் மேலும் பல பண்புகளும் உண்டு என்றாலும்,இந்த ஐந்து தகுதிகளுமே ஒரு நல்ல தலைவனுக்கு போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அவற்றையே இங்கு பதிவும் செய்திருக்கின்றேன்.முடிந்தளவு கடைபிடித்துப்பாருங்கள்.

அவ்வாறே ஒரு சமூகத்திற்குத்தான் நீங்கள் தலைவனாக இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.உங்களுக்கு நீங்களும் தலைவனாக இருக்க முடியும். மேலும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும்.இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எந்தளவிற்கு பொறுப் பேற்கின்றீர்கள் என்பதை பொறுத்ததே உங்களுடைய தலைமைத்துவம் என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் தலைமைத்துவம் என்பது அதிகாரம் தரும் ஒரு இடம் மட்டுமே என்று நீங்கள் எண்ணுபவராக இருந்தால் தயவுசெய்து அதை அடையும் கனவை ஒதுக்கி வைத்துவிடுங்கள்.ஏனெனில் அந்த இடம் தகுதியுள்ள ஒரு நபரால் நிரப்பப்பட வேண்டிய இடமாகும்.அதிகாரத்தை பெறுவதற்கோ அல்லது மக்களை அடக்கியாள்வதற்கோ தயவு செய்து அதனை அடையவிரும்பாதீர்கள்.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)

யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)
யாரையும் முடிவு செய்யாதீர்கள்(Dont judge)

பார்க்கின்ற எவரையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?அல்லது அனைவரையும் ஏதோ ஒருவிதத்தில் இப்படித்தான் என்று நீங்களாகவே முடிவு செய்கின்றீர்களா?அப்படியானால் உங்கள் வாழ்வில் நீங்கள் பெரும் பகுதியை தொலைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை இப்பொழுதேனும் உணர்ந்து கொள்ள கடமைபட்டிருக்கின்றீர்கள்.ஒருவரை பார்த்த உடனே அல்லது ஒருவரைப்பற்றி கேள்விப்பட்ட உடனே அவரை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ முடிவு செய்வது என்பது ஒரு உயர்ந்த மனிதனின் செயலாக இருக்க முடியாது என்பதே மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்தாகும் .

ஏனென்றால் இந்த உலகில் ஒருவரை பார்த்தவுடனோ அல்லது ஒருவரைப்பற்றி கேள்விபட்டவுடனோ முடிவு செய்வது என்பது பெரும்பாலும் தவறான முடிவிற்கே இட்டுச்செல்கின்றது என்ற உண்மையை நம்மால் நிதர்சன உலகில் ஒவ்வொரு நாளும் காணமுடிகின்றது.இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் எந்த மனிதரும் நேற்று இருந்ததுபோல் இன்று இருப்பதில்லை.இன்று இருப்பதுபோல் நாளை இருப்பதில்லை என்பதேயாகும்.

ஒரு தீயமனிதர் நாளையே நல்ல செயல்களை செய்ய முடியும் என்றிருக்கும் பொழுது அவரை நாம் எவ்வாறு தீயவர் என்று முடிவெடுக்க முடியும்.?அவ்வாறே ஒரு நல்ல மனிதர் நாளையே தீய செயல்களை செய்ய முடியும் என்றிருக்கும் பொழுது அவரை எவ்வாறு நாம் நல்லவர் என்று முடிவு செய்ய முடியும்..? எனவே ஒருநபரை குறிப்பிட்ட சில செயல்களை வைத்து சரியானவர் என்றோ அல்லது தவறானவர் என்றோ சொல்வது மடைமையின் உச்சம் என்றே மனோ தத்துவ நிபுனர்கள் நமக்கு சுட்டிக்காண்பிக்கின்றனர்.

இதனைத்தான் நம் முன்னோர்கள் "கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் 'தீர விசாரிப்பதே மெய் "என்று உபதேசித்து விட்டு சென்றுள்ளனர் என்பதையும் இங்கு நான் சுட்டிகாண்பிக்க கடமைபட்டுள்ளேன்.அவ்வாறே அரபு நாட்டின் மூன்றாவது ஆட்சியாளரான உமர் (ரழி)அவர்களும் இதனைத்தான் "தன்னிடம் ஒரு கண்ணை கையில் எடுத்துக் கொண்டு வந்து இன்னார் என்னுடைய கண்ணை பிடுங்கிவிட்டார் என்று ஒருவர் முறையிட்டாலும் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்து விசாரிக்காத வரை அவர் விஷயத்தில் நான் எந்த தீர்ப்பையும் வழங்கமாட்டேன் என்று கூறிக்காண்பித்துள்ளார்கள்.

இங்கு தீர விசாரித்தே முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னவுடன் பலரும் பிறரின் குறைகளை அலசி ஆராய்ச்சி செய்வது சரியே என்று தங்களின் அற்ப செயலுக்கு வியாக்கியானம் அளிக்க கிளம்பிவிடுவார்கள்.உண்மையில் இங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நாம் விளங்கிக்கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.அதாவது நம்மில் பலரும் ஒருவரை தீயவராக சித்தரிப்பதற்காகவே பல்வேறு ஆராய்சிகளை முடுக்கிவிடுகின்றோம் என்பதே அந்த ஆராய்ச்சியை சாபக்கேடு நிறைந்த ஆராய்ச்சியாக மாற்றிவிடுகின்றது என்பது துரதிஷ்டகரமானதாகும்.

ஏனென்றால் இங்கு ஒரு மனிதரைப்பற்றி தவறாக பேசப்படுவது என்பதே பெரும்பாலும் காழ்ப்புணர்ச்சியாலும் அல்லது பொறாமையாலும் அல்லது அம்மனிதர் மீதான தனிப்பட்ட வெறுப்பினாலுமே உமிழப்படக்கூடியதாக இருக்கின்றது என்பதால் பிற மனிதர்களை நாம் ஆய்வு செய்வதற்கோ, குறிப்பாக நம்முடைய வாழ்வோடு சம்மந்தப்படாத ஒரு மனிதரைப் பற்றி ஆய்வு செய்வதற்கோ அல்லது கருத்து சொல்வதற்கோ நாம் எவ்வித அருகதையுமற்றவர்கள் என்பதே எனது கருத்தாகும்.

ஏனெனில் இங்கு பலரும் தன்னை தவிர்த்து இந்த உலகில் நம்புவதற்கோ, அல்லது பழகுவதற்கோ அல்லது ஏதேனும் ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கோ சிறந்த ஒரு மனிதர் வேறு எவரும் இல்லை என்ற ஆணவத்தோடு சுய நலனிற்காக மடும் "பார்க்கின்ற அனைவரின் மீதும் சேற்றை வாரி வீசும் பழக்கமுடையவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நம்மால் காண முடிகின்றது.உண்மையில் இன்று ஒருவர் எத்துனை ஆயிரம் நலவுகள் செய்தாலும் அவரிடமுள்ள ஏதேனும் ஒரு குறையை பேசுவதிலேயே இன்றைய மக்கள் இன்பம் கண்டு மகிழ்கின்றனர் என்பதை நம்மால் மறுக்க முடியுமா

உண்மையில் சொல்லப்போனால் இந்த உலகில் நல்ல விஷயங்களும் நல்ல மனிதர்களும் இல்லாமலெல்லாம் இல்லை.மாறாக நல்லவர்களின் செயல்களையும்,அவர்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள் என்பதே எனது கண்ணோட்டமாகும்.எனவே அண்பர்களே..!உங்களால் முடிந்தளவு நீங்கள் சந்திக்கும் எவரையும் இவர் இப்படித்தான் என்று மூன்பே முடிவெடுக்காதீர்கள்.அவர்களை அவர்களாக ஏற்றுக்கொள்ள முயற்சி செய்துபாருங்கள்.உண்மையில் அது உங்களின் மீது ஒரு பெரும் மதிப்பை உங்களுக்கே ஏற்படுத்தச்செய்யும்.

உங்கள் வாழ்வில் ஏதேனும் உயர்ந்த செயலை செய்ய நினைத்தால் தயவு செய்து உங்கள் செயலில் ஈடுபட்டுக்கொண்டே இருங்கள்.யாரையும் குறைத்தும் மதிப்பிடாதீர்கள்.நிறைத்தும் மதிப்பிடாதீர்கள்.அது நமக்கு தேவையற்றது என்று ஆழமாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில் இந்த உலகில் எல்லோரும் பலம்,மற்றும் பலஹீனம் இரண்டும் கலந்த கலவைகளாகவே படைக்கப்பட்டுள்ளனர் என்பதை எக்காலமும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..!

இங்கு மிகச்சரியானது என்ற ஒன்றுமில்லை,மிக மோசமானது என்ற ஒன்றுமில்லை.எல்லாம் மாறுதலுக்குறியதே என்பதை நினைவில் நிறுத்தி உங்கள் வாழ்வின் பாதையில் நடைபோட்டுக் கொண்டே இருங்கள். இழப்புகலோ,தோல்வியோ ஏற்பட்டால் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.பிறிதொறுமுறை நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்கள் சிறந்த மனிதராக நிறூபிக்க முடிந்தளவு முயற்சி செய்யுங்கள்.!

நன்றி:

அ.சதாம் உசேன் ஹஸனி

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

பயம் நல்லதா?கெட்டதா?(Fearness)

பயம் நல்லதாகெட்டதா(Fearness)
பயம் நல்லதாகெட்டதா(Fearness)

நம்மில் எல்லோருக்கும் கண்டிப்பாக எதிர்காலம் குறித்த பயம் இருக்கும். அல்லது இறப்பு குறித்த பயம் இருக்கும்.அல்லது நோய்வாய்பட்டுவிடுவோமோ என்ற பயமிருக்கும்.ஒரு சிலருக்கு இருட்டைப் பார்த்தால் பயமாக இருக்கும். வேறு சிலருக்கோ சிறிய பூச்சுகளை பார்த்தாலும்கூட பயமாக இருக்கும். இப்படி பயம் என்ற ஒன்று நம் வாழ்வோடு பின்னி பிணைந்துவிட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது எனபதை நம்மில் எவறும் மறுக்க முடியாது.பயமில்லை என்று ஒருவர் கூறிக்கொள்ளலாம்.அல்லது காட்டிக் கொள்ளலாம்.ஆனால் மனதில் தோன்றி மறையும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் நிகழக் கூடிய ஒரு அதிஷயமான நிகழ்வாகவே இருக்கின்றது.

என்னைப் பொருத்தமட்டில் பயம் என்பது நல்லதுதான் என்றே நான் கூறுவேன். ஏனென்றால் ஒன்றைப்பற்றிய பயம்தான் நம்மை அது விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்துகொள்ளும்படி தூண்டுகின்றது.அதனால் பெரும்பாலும் அப்பொருளினால் ஏற்படவிருக்கும் ஆபத்திலிருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

இதன் அடிப்படையிலேயே மனோ தத்துவ நிபுனர்களும் பயம் என்பது மனிதன் தன்னை எச்சரிக்கையாக வைத்துக்கொள்வதற்கு தூண்டும் ஒரு நல்ல உணர்வுதான் என்பதாக குறிப்பிடுகின்றனர்.அவ்வாறே இத்தகைய பயம் என்பது நல்லதுதான் என்றும் குறிப்பிடுகின்றனர்.ஆனால் வரம்பு மீறிய பயம் என்பது மனிதனின் வாழ்வையே அழித்துவிடும் ஆபத்தாக இருக்கின்றது என்பதாகவும் எச்சரிக்கின்றனர்.அது என்ன வரம்புமீறிய பயம் ?என்று கேட்பீர்களேயானால் அதற்கும் மிகத்தெளிவாக அவர்கள் பதிலளிக்கின்றனர்.

அதாவது உயர்ந்த நோக்கத்தை சற்றுமுயன்றால் அதனை அடைந்துவிடலாம் என்றிருக்கும் பொழுதும்கூட பயத்தால் அதை அடையாமல் விட்டுவிடுவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.இத்தகைய பயம்தான் கெட்ட பயமாகும்.இது நம் வாழ்வின் முன்னேற்றங்களை முறியடித்துவிடும் பயமாகும்.இதுவே நம் வாழ்வில் முற்றிலும் விட்டொழிக்க வேண்டிய பயமாகும்.

உதாரணமாக சாலையில் கவனமின்றி வாகனம் ஓட்டினால் நிச்சயம் விபத்து ஏற்படும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையேயாகும். ஆனால் அதற்காக சாலையில் வாகனம் ஓட்டினாலே விபத்து ஏற்படத்தான் செய்யும் என்று ஒருவர் வாகனம் ஓட்ட கற்காமலேயே இருந்துவிட்டால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதாவது உண்டா..?ஏனெனில் வாகனம் என்பது நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிந்த ஒன்று.அதனை நாம் எவ்வாறு இயக்குகின்றோமோ அதற்கு தக்கவாறே அது இயங்கும் என்பதை நாம் நன்றாக அறிவோம்.அப்படியிருந்தும் ஒருவர் வாகனத்தை பார்த்து பயப்படுகின்றார் என்றால் அந்த பயத்தைத்தான் வரம்புமீறிய பயம் என்று நான் கூறுகின்றேன்.

இந்த வரம்புமீறிய பயம்கொண்டவர்கள் தங்களின் உயிர் மீதோ அல்லது உடல் மீதோ உள்ள அதீத பயத்தாள் வாகனங்களை மிக ஆபத்தானதாக காண்கின்றனர்.அதன் காரணத்தால் அதனை கற்று பலனடைந்துகொள்வதை விட்டும் ஒதுங்கியும்கொள்கின்றனர்.பயத்துக்கும் துணிவிற்குமான வித்தியாசத்தை புலப்படுத்த மேற்குறிப்பிட்ட இந்த ஒற்றை உதாரணமே போதுமானது என்றே நான் நம்புகின்றேன்.நம்மில் பலரும் நம்மால் முடிந்த ஒன்றையும்கூட முயல்வதற்கு துணிவதில்லை என்பது மிக வருந்தத்தக்க விஷயமாகும்.

உண்மையாக கூறப்போனால் இந்த உலகில் இன்று நாம் பார்க்கும் பல்வேறு இயந்திரங்களும்,பிரம்மாண்ட படைப்புகளும் பயமின்றி துணிந்ததால் மட்டுமே தோன்றியது என்பதை நாம் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றை செய்தால் எங்கே தோற்றுப்போய்விடுவோமோ என்றோ அல்லது அது தவறாகிவிடுமோ என்றோ பயந்துகொண்டே இருந்துவிடக்கூடாது.ஒன்றை செய்வதற்கு முடிவு செய்துவிட்டால் அதனை துணிவோடு செய்துமுடிக்க வேண்டும்.

பயத்தினால் இயலாமையை மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அவற்றிற்கு எதிராக துனிவு என்பதால் மனிதனால் நினைத்துப்பார்க்க முடியாததையும் கொண்டு வந்துவிட முடியும் என்றும் டாக்டர் அப்துல் கலாம் கூறிப்பிட்டு காண்பித்திருப்பதை நினைத்துப்பாருங்கள்.அவர் ராக்கெட்களையும் அதிநவீன விண்வெளி கருவிகளையும் செய்வதற்கு பயந்து செயபடாமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரும் பிண்ணடைவில் இருந்திருக்கும்.

ஆகவே ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு முன்பே இது என்னால் முடியாது என்று பயந்து உங்களுக்கு நீங்களே முட்டுக்கட்டையை போட்டுக் கொள்ளாதீர்கள்.ஏனெனில் அந்த பயமே உங்களை அதை நோக்கி செயல்படவிடாமல் தடுத்துவிடும் முதல் காரணியாக அமைந்துவிடும். அன்பர்களே..!எதற்கும் பயப்படாதீர்கள்...1இந்த உலகில் எதனையும் சமாலிக்கும் திறனோடுதான் நீங்கள் அனைவரும் படைக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை ஆழமாக நம்புங்கள்.துணிந்து நில்லுங்கள்...!தேவையற்ற பயத்தை வெல்லுங்கள்..!

நன்றி:

கடன் நல்லதா?கெட்டதா?(Debt and credit)

கடன் நல்லதாகெட்டதா
கடன் நல்லதாகெட்டதா

கடன் என்று சொன்னவுடனே நம்மில் பலருக்கும் தலை தெறிக்க ஓடுவதுதான் நியாபகம் வரலாம்.அந்த ஓட்டம் கொடுப்பதற்கு முன்னாலும் இருக்கலாம் அல்லது கொடுத்ததற்கு பின்னாலும் இருக்கலாம்.அதாவது கடன் கேட்கப் படுபவரும் சில சமயம் கடன் கேட்க வருபவர்களைப்பார்த்து ஓடுவார் அல்லது கடனை வாங்கியவர் கடனை வாங்கிய பிறகு திருப்பிக்கொடுக்க முடியாமல் ஓடுவார்.இத்தகைய நிலைகளையே கடன் சம்மந்தப்பட்ட கொடுக்கல் வாங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம்.

ஆனால் கடனில் ஒரு சுவாரஸ்யமான பகுதியும் இருக்கின்றது.அது என்ன என்பதை இங்கு நான் குறிப்பிட்டுகாட்டுகின்றேன்.அதற்கு பிறகு நீங்களே கடன் நல்லதா ?கெட்டதா எனபதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.இன்றைக்கு உலகின் மிகப்பெரும் கோடிஸ்வரர்கள் அனைவருமே கடனால் உயர்ந்தவர்கள் தான் என்று நான் கூறினால் உங்களால் ஏற்க முடியுமா?நீங்கள் ஏற்கவில்லை யானாலும் அதுதான் உண்மை.இன்னும் சொல்லப்போனால் பல ஆயிரம் கோடி அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்தாலும் இன்றும் அவர்கள் அவ்வப்பொழுது கடன் பெற்றுக்கொண்டும் செலுத்திக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நாமெல்லாம் கவணிக்க தவறிவிட்ட உண்மையாகும்.

ஏன் அவர்கள் அவ்வாறு செய்துவருகின்றார்கள் என்று பார்ப்போமேயானால் அதற்கு பின்புலத்தில் சில அற்புதமான இரகசியங்கள் ஒழிந்திருப்பதை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.எனவே அவர்கள் அந்த கடனை எந்தளவு வாங்குகின்றார்கள் என்பதையும் அதனை எதற்காக வாங்குகின்றார்கள் என்பதையும் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவற்றில் சிலவற்றை இங்கு நான் பதிவு செய்கின்றேன்.

உண்மையில் பள்ளி கல்வியோ அல்லது கல்லூரி கல்வியோ கடனைப் பற்றியோ அல்லது அதனை எவ்வாறு லாபகரமாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியோ பெரும்பாலும் சொல்லித்தருவதில்லை.இதனாலேயே பெரும்பாலானோர் கடனை பார்த்து பயந்து ஓடிவிடுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.ஆனால் கோடிஸ்வரர்களை பொறுத்த வரைக்கும் கடனை ஒரு அற்புதமான வரப்பிரசாதமாக பார்க்கின்றனர்.அதாவது தன் வருமானத்தை இரட்டிப்பாக்கிக்கொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகவே காண்கின்றனர்.

இதனாலேயே தன்னிடம் முழு பணம் கொடுத்து ஒரு வீட்டையோ அல்லது வாகனத்தையோ வாங்கிவிட முடியும் என்றாலும் அதனை சிறிய வட்டியில் தவனை முறையில்  எடுத்துக் கொள்வதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் அவர்களின் மீதி பணத்தை ஏதேனும் வியாபாரத்தில் முதலீடு செய்து அப்பணத்தை அவர்கள் இலகுவாக மீட்டிக் கொள்கின்றனர்.மேலும் அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளையும் பெற்றுவிடுகின்றனர்.தங்கள் பணத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்திவிடுகின்றனர்.

இதனைத்தான் "ரிச் டாட் பூர் டாட்"என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசகி"பணத்தை தனக்காக வேலை செய்ய வைப்பது"என்று கூறுகின்றார். இவ்வாறு அவர்கள் செய்வதால் கடனில் வாங்கப்படும் அப்பொருளுக்கு வரி விலக்கும் வழங்கப்படுகின்றது என்பது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் இரட்டிப்பு சந்தோஷமாகும்.இதனாலேயே பெரும்பாலும் அவர்கள் ஏதேனும் முக்கிய பொருளாக இருந்தாலும் அவற்றை கடனில் பெற்றுக்கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக இருக்கின்றது.

ஆக அவர்களின் கடன் என்பது அவர்களின் எதிர்காலத்தை செழிப்பாக்குவதற்காகவே இருக்கின்றது என்பதால் அவர்கள் கடன் நல்லது என்றே கூறுகின்றனர்.ஆனால் மற்றொரு சாரார்களையும் இங்கு நாம் கவணிக்க கடமைபட்டுள்ளோம்.அதாவது கடன் கிடைக்கின்றது என்பதற்காக நாலாபுறமும் வாங்கி தன் தலைமீது சுமைக்கு மேல் சுமையை ஏற்றிக்கொள்ளும் புன்னியவான்கள்தான் அவர்கள்.

சில வங்கிகள் தங்களின் வியாபாரம் செழிப்பதற்காக கடன் அட்டைகளை கொடுத்து உதவுவதாக சொல்லிக்கொண்டு வரும்பொழுது அதனை பெற்று கண்ணில் காண்பதை எல்லாம் வாங்கிவிட்டு பிறகு அதனை கட்டமுடியாமல் விழிபிதிங்கி நிற்கும் மகான்கள் என்றே அவர்களை சொல்லலாம். அவர்கள்தான் கடனை கெட்டதாக ஆக்குகின்றார்கள்.அந்த கடன்தான் மிக கெட்ட கடனாகும்.ஏனெனில் கடனை வாங்கி ஆசைகளை நிறைவேற்றுவது என்பது முட்டாள்தனத்தின் உச்சம் என்பதாகவே ராபர்ட் கியோசகி குறிப்பிட்டு காட்டுகின்றார்.கடன் என்பது இரட்டிப்பு இலாபம் தந்தால் மட்டுமே அது சரியானதாகும் என்பதையும் மிக ஆழமாக உணர்த்துகின்றார்.அவ்வாறே கடன் வாங்கும் பொழுது பெரும்பாலானோர் கவணிக்க தவறிவிடும் இரண்டு அடிப்படைகளையும் விளக்குகின்றார்.

1.குறுகிய காலத்தில் கட்டிமுடித்துவிடும்படியான கடனை பெறுங்கள் என்கிறார்.

2.அல்லது குறைவான தொகையில் நீண்ட காலதவணையை பெறுங்கள் என்பதாக குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு நாம் செய்வதால் நம் பொருளாதார நிலை சீரானதாக இருக்க முடியும் என்பதாகவும் குறிப்பிடுகின்றார்.ஆகவே தோழர்களே..!மேற்கூறிய இரண்டு சாரார்களையும் உங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள் எந்த சாரார்களாக இருக்கின்றீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் கடன் நல்லதா? அல்லது கெட்டதா?என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர்:

Dr.S.Dhana Priya