முன்னுரை:
இன்றைக்கு குழந்தைகளுக்கும் சரி வாலிபர்களுக்கும் சரி சாதனை என்பதாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது மூன்றே மூன்று விஷயங்கள்தான் என்பதாகவே நான் காண்கின்றேன்.அவற்றைத்தவிர்த்து இந்த உலகில் மனிதன் பெரிதாக சாதிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பதைப்போன்ற கட்டமைப்பையே இந்த உலகம் உறுவாக்கி வைத்திருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அந்த மூன்றும் என்ன என்பதையும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்குவதே எனது இந்த கட்டுரையின் நோக்கமாக கொண்டுள்ளேன்.வாருங்கள் அவற்றைப்பார்த்துவிடுவோம்.
அவைகள்:
முதலாவது : செல்வம் சேர்ப்பது.
இரண்டாவது:பிரபல்யமாவது:
மூன்றாவது:அதிகாரத்தில் அமர்வது:
1.செல்வம் சேர்ப்பது சாதனையா?
செல்வம் சேர்ப்பதை இன்றைய மனிதர்கள் மகத்தான சாதனை என்று எல்லா சமயயங்களிலும் வலியுறுத்துவதை பார்க்கமுடிகின்றது.எனவே செல்வம் உடையவர்களையே இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக வரும் கால சமூகத்திற்கு முன்வைக்கப்படுகின்றது.உண்மையில் என்னைப் பொறுத்த மட்டில் இது மிகப்பெரும் ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றேன்.
ஏனெனில் மனிதனின் தேவைகளில் ஒன்றான இந்த உலக செல்வம் என்பது மனிதனுக்கு அவசியம்தான் என்றாலும் அதனை காகித செல்வமாகவும் பொருள் செல்வமாகவும் மாற்றி அவைகள் அனைத்தையும் எவன் அடைந்துகொள்வானோ அவன்தான் மிகச்சிறந்தவன் என்று கூறி அவன் இந்த உலகில் ரசிக்க வேண்டிய அனைத்தையும் பிடிங்கிக்கொண்டு உலகம் தனக்குத்தேவையான அத்துனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்வதே இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படை நோக்கமாக நான் காண்கின்றேன்.
இங்கு நான் ஏதோ தமிப்பட்ட ஆன்மிகத்தையோ அல்லது துறவறத்தையோ வலியுறுத்த விரும்புவதாக தயவுகூர்ந்து எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் அதுவும் இதுபோன்றே வேறுவிதமான மனித சுரண்டலுக்கு ஆளாக்கும் முக்கியமான ஒன்றுதான் எனபதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது இந்த உலகில் வியாபார நோக்கோடு உறுவாக்கப்பட்ட அத்துனை செல்வத்தையும் அடைவதுதான் ஒரு மனிதனின் மகத்தான நிலை என்றும் மெலும் அதுதான் அவன் வாழ்வின் மிகப்பெரும் சாதனை என்றும் சித்தரிக்கத் துடிப்பது மிகப்பெரும் ஏமாற்று வித்தை என்பதை இங்கு புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.
எனவே இந்த உலகில் மனிதர்கள் வியாபார நோக்கோடு உறுவாக்கிய அல்லது சுய நலனிற்காக மட்டும் உறுவாக்கிய பொருட் செல்வங்களையோ அல்லது பணக்காகிதங்களையோ ஒருவன் அதிகம் அடைந்துவிட்டான் என்பதற்காக அவன் சாதனையாளனாக பார்க்கப்படுவது என்பது என்னைப் பொறுத்தமட்டில் மகத்தான ஏமாற்றாகும்.இன்னும் சொல்லப்போனால் அவன்தான் இந்த உலகின் மிகச்சிறந்த அடிமை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாமல் போகலாம்.அல்லது பொருட்களும் பணக்காகிதமும் மட்டுமே உலகம் என்று உறுவாக்கப்பட்ட இன்றைய பொருளாதார அமைப்பின் ஆதிக்கம் உங்கள் கண்களை மறைக்கலாம்.ஆனால் மனிதனை இயந்திரத்தனமாகவும் அடிமையாகவும் மாற்றுவதற்கான கருவியே இந்த உலகமயமாக்கப்பட்ட பொருட் செல்வங்கள்தான் என்பதை பொருளாதாரத்தின் அடிப்படைவிதிகளே விளக்குவதை காணும்பொழுது இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதைப்பற்றி நான் கவலைபடப்போவதில்லை.
இன்றைய பொருளாதர கோட்பாடே மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனை பல்வேறு கட்டாயத்திற்குள் அடிமைப்படுத்தும் மிகப்பெரும் சதி என்பதே எனது தெளிவான கண்ணோட்டமாக நான் கருதுகின்றேன்.எனவே மிகப்பெரும் செல்வம சேர்ப்பது என்பது ஒருபோதும் பெரும் சாதனையாக பார்க்கப்பட முடியாது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
யாரெல்லாம் செல்வம் சேர்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஓடுகின்றார்களோ அவர்களுக்கு அது ஒரு வேளை சிற்றின்பம் அல்லது மனமகிழ்வை கொடுத்தாலும் உண்மையில் அது இந்த உலகில் அவர்கள் அடைந்துவிட்ட மகத்தான சாதனையாக பார்க்க எவ்வித தகுதியுமற்றதே என்பதை சுட்டிக்காண்பித்துக்கொண்டு அடுத்தபடியாக பிரபல்யமாவது இந்த உலகின் மகத்தான சாதனையா? என்பது சம்மந்தமாக பார்ப்போம் வாருங்கள்.!
2.பிரபல்யமாவது சாதனையா?
இன்றைக்கு எல்லோரும் தன்னை இந்த உலகமே நேசிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை பாராட்ட வேண்டும் என்றோ ஆசிக்கும் நிலை பரவலாகிவிட்டது.பிற மனிதர்களின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அல்லது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவுமே மட்டும் இங்கு பலரும் மஹா யுத்தமே புரிகின்றனர் என்றாலும் அது மிகையாகாது.
ஆம்...!
மக்களிடம் பிரபல்யம் ஆவது என்பது ஒரு பெரும் சாதனை என்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு இங்கு செயல்படும் மனிதர்களின் அட்டகாசம் சொல்லிலடங்காதது என்றே நான் கருதுகின்றேன்.தங்களையும் தங்களின் வாழ்வையும் மறந்துவிட்ட அம்மனிதர்கள் மக்கள் என்ன ஆடை அணிந்தாள் விரும்புவார்கள் என்றும் என்ன பேசினால் விரும்புவார்கள் என்றும் என்ன காட்டினால் விரும்புவார்கள் என்றும் அங்குளம் அங்குளமாக தரவுகள் தயாரித்து வைத்துக்கொண்டு அதற்கு தக்கவாறு தங்களையும் வெளிக்காட்டுவதின் மூலம் மக்களிற்கு மிக பிடித்தமானவர்களாக ஆவதற்கு போராடி வருகின்றனர்.
மேலும் சிலசமயங்களில் அவர்கள் தங்களின் குறூற கருத்தாக்கங்களான போதை பொருள் பாவித்தல் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் கொலை கொள்ளையை ஊக்குவித்தல் மற்றும் சமூக வெறுப்பை தூண்டுதல் போன்ற மானக்கேடான செயல்களையும் பரப்புவதற்கு இந்த பிரபல்யத்தையே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
மேலும் இன்றைய பிரபல்யங்களில் பெரும்பாலானோர் மக்கள் தங்களின் காட்சியை பார்த்துவிட்டாலே போதுமானது அது தன் சாதனைக்கான அங்கிகாரம் என்பதாக தவறாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் மக்கள் பிரபலங்களை பார்க்கின்றார்கள்,ரசிக்கின்றார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வெறும் பிரபல்யத்தை மட்டும் ஒருவரின் உயர் சாதனையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.
ஏனெனில் இந்த உலகில் யானைகள்,நாய்கள்,ஓநாய்களும் கூட காட்சிபடுத்தப்படுவதால் மிக பிரபல்யமாகிவிடுகின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.எனவே பிரபல்யம் என்பது ஒரு பெரும் சாதனை என்பது ஒரு போலியான ஏமாற்று வித்தை என்பதாகவே நான் கூற விரும்புகின்றேன்.இத்தகைய வித்தையை வியாபார நோக்கோடு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊக்குவிக்குகின்றதே தவிர மற்றபடி மக்கள் பிரபல்யங்களை கொண்டாடுகிறார்கள் என்பது பொய்யான பிம்பமேயாகும்.
இங்கு ஒரு முக்கியமான அடிப்படையையும் விளக்கிவிட விரும்புகின்றேன். அதாவது மக்களுக்கு பெரிதும் உபயோகப்படும் காரியங்களை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக பிரபல்யப்படுத்தவேண்டியது கட்டாயம்தான் என்றாலும் இன்று தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கே சில நற்காரியங்களை செய்து மக்களிடம் அங்கிகாரமும் பாராட்டும் தேடும் நிலை முன்பில்லாததை விட இப்பொழுது மிகவும் அதிகரித்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.
இதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைக்கு வியாபார நோக்கம்கொண்ட சில சுய விளம்பர விரும்பிகள் தங்களின் சுயநலனுக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதையும்,மேலும் அவர்கள் தங்களை இந்த உலகிற்கு பெரும் சாதனையாளர்களாக காட்டிக்கொள்வதையும் கண் ஊடாக காணமுடிகின்றது.ஆகவே அண்பர்களே நீங்கள் உங்களையோ அல்லது உங்களுடைய செயலையோ வெறும் மக்களின் அங்கிகாரத்திற்காவோ அல்லது பாராட்டிற்காகவோ மட்டும் விரும்பி பிரபல்யப்படுத்த விரும்பினால் அதைவிட மிக அறிவீனம் வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அது ஒரு ஏமாற்று வித்தைதானே தவிர வேறொன்றுமில்லை.மேலும் அது உங்கள் வாழ்வில் பிரயோஜனங்களை இழுத்து வருவதைவிட நிறைய பிரச்சனைகளையே கொண்டு வரும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் பிரபல்யம் என்பது சாதனை என்பதை தாண்டி அது ஒரு பெரும் சோதனை என்பதாகவே கருதுகின்றேன்.
3.அதிகாரத்தில் அமர்வது சாதனையா?
உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கு பாடுபட்டதைபோல் அவனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் இந்த மனிதசமூகம் இரண்டாயிரம் ஆண்டிற்கான முன்னேற்றத்தை இன்றே பெற்று இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இந்த மனித சமூகத்தின் வாழ்வு அடக்குமுறைகளாளும் அதிகார வெறியாலும் கபலிகரம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதையே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.
ஆம்....!
குடும்பத்தில் யார் தலைவராக இருந்து முடிவெடுப்பது என்பதில் தொடங்கி பணி செய்யும் வேலை இடங்களை கடந்து அரசு ஆட்சி வரை அத்தனையிலும் அதிகார வெறி அன்றிலிருந்து இன்றுவரை கோரத்தாண்டவம் ஆடுவதையும் அதை பெறுவதற்காக மனிதர்கள் போடும் நாடகங்களையும்,ஜாலங்களையும் காணும் போழுது அதிகாரத்தில் அமர்வதுதான் மாபெரும் சாதனை என்றே நம்மில் பலரும் எண்ணலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல..!
மனிதர்களை அச்சுறுத்தி அடக்கியாளுவதற்கு மட்டுமான அதிகாரம் இந்த மனித சமூகத்திற்கான சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.இன்றைய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் போலியான மதிப்பை சம்பாரித்து தரும் அடக்குமுறைக்குட்பட்ட அதிகாரத்தில் அமர்வது தான் சாதனை என்பதாக ஊக்குவிப்பது இந்த மனித இனத்தை மீட்ட முடியாத இழப்பில் தள்ளிவிடுவதைப் போன்றே என்றே நான் கருதுகின்றேன்.
ஏனெனில் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் ஒரு அவளமானநிலை எப்படி ஒரு சிறந்த சாதனையாக போற்றப்பட முடியும் என்பதே எனது கேள்வியாகும்?அவ்வாறே மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து தன்னை உண்மையாக அற்பனிக்கும் ஒருவனுக்கு முன்னால் இத்தகைய போலியான அதிகாரத்தால் மக்களை அடக்கியாள துடிப்பவன் எப்படி சாதனையாளனாக பார்க்கப்படமுடியும்??அங்கு தான் அதிகாரவர்க்கங்களின் கோர முகம் ஒழிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஆம்..!
இந்த மனித சமூகத்தை அடக்கியாள்பவர்களே மக்களில் உயர்ந்தவர்கள் என்றும் சாதனையாளர்கள் என்றும் மரியாதைக்குறியவர்கள் என்றும் ஒரு போலிபிம்பத்தை மக்களை அடக்கியாளத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தினர் சமூகத்தில் மிக ஆழமாக தோற்றுவித்துவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தை வழங்கிய அந்த மக்களே அவர்களை வியந்து காணும் அளவிற்கு அதிகார பீடத்தை போலி மரியாதைகளாலும் சுகபோகங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரித்து ஒரு ஏமாற்று வித்தையை உறுவாக்கிவிட்டனர்.
அதுவே இன்று மக்களில் பெரும்பாலோர் அதிகாரத்தில் அமர்வதுதான் சாதனை என்று எண்ணுவதற்கான அடிப்படை காரணியாகவும் அமைந்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரத்தில் அமர்வது என்பது ஒருபோதும் சாதனையல்ல. மாறாக அது வெறுமனே அதிகாரம் செலுத்துவதற்கான இடமாக மட்டும் இருந்தால் அது மக்களுக்கும் அனைவருக்கும் சாபமே என்றே நான் கருதுகின்றேன்.
இங்கு ஒரு முக்கிய அடிப்படையையும் விளக்கவிரும்புகின்றேன்.அதாவது ஆட்சி அதிகாரம் செலுத்தும் இடமானது மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு நிறைந்த இடம் என்பதாக அது பார்க்கப்பட வேண்டுமே தவிர அது தனி மனித புகழைத்தேடும் சாதனைக்கான இடமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே யார் அதில் அமர்ந்து உண்மையிலேயே மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து உதவி புரிகின்றார்களோ அவர்கள் மக்களால் சிறப்பு மிக்கவர்களாக போற்றப்படுவது எனபது வரவேற்கதக்கதேயாகும்.
ஆனால் இவற்றிற்கு மாறாக வெறுமனே அதிகாரத்தில் அமர்வதை மட்டும் சாதனையாக ஊக்குவிப்பது என்பது இந்த மனித சமூகத்தை இன்னும் இரட்டிப்பான அடக்குமுறைக்கு வழிவகுக்குமே தவிர எவ்வித மனித முன்னேற்றத்தையும் தந்துவிடாது என்பதே எனது கருத்தாகும்.
முடிவுரை:
இந்த உலகில் மனிதர்கள் தங்கள் செயலை ஆக்கப்பூர்வமாக மென்மேலும் செயல்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுவது என்பது ஒரு சிறந்த செயல்தான் என்றாலும் இன்று சாதனை என்ற பெயரில் சுயலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் மனிதர்களை கண்கட்டிய குதிரைகளாக உறுவாக்க விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை தொகுத்தேன்.
மேலும் இன்று சாதனைகளாக போற்றப்படும் பல்வேறு விஷயங்கள் வெறும் சுயலாபத்திற்கான ஏமாற்று வித்தைகளே என்பதையும் தோலுறித்துக்காட்ட வேண்டும் என்றும் விரும்பினேன்.ஆக வாலிப அண்பர்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலை போலியான சாதனை போதைக்கு அடிமையாக்கிவிடக்கூடாது என்பதே எனது இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகவும் கொண்டிருக்கின்றேன்.எனவே இதனை முடிந்தளவு என்னுடைய கண்ணோட்டத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் இது உங்களுக்கு பயனலிக்கும் என்றே நான் கருதுகின்றேன்..!
(அடுத்த கட்டுரையில் எது சாதனை?என்பதை இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.)
நன்றி: