ஞாயிறு, 3 அக்டோபர், 2021

உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்..?(Monk story with a king)

ஒரு நாட்டின் அரசன் மிக பயபக்தியானவர்.அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் மக்களின் நிலையை அறிவதற்காக நகர்வளம் செல்வதுண்டு.அப்படி அவர் செல்கையில் தினமும் ஒரு வாலிபன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டு செல்வார்.ஒரு நாள் ஆர்வமிகுதியால் தன் குதிரையை விட்டும் இறங்கி அவ்வாலிபனிடம் சென்றார்.

"வாலிபனே நான் உன் தியானத்தை கலைத்தற்காக மன்னித்து விடு என்றார்.வாலிபனோ தன் கண்களை மெல்லமாக திறந்து "இல்லை நான் தியானம் செய்வதில்லை அது எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கின்றது , அது எப்பொழுதும் என்னைவிட்டும் கலைவதில்லை எனவே நீங்கள் மன்னிப்பு வேண்டவேண்டிய எந்த அவசியமுமில்லை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.அரசன் " நான்தான் இந்நாட்டின் அரசன்.என்னுடைய அரன்மனைக்கு நீங்கள் வந்துவிடுங்கள்.அங்கு நான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றேன்.நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய தவத்தாலும்,ஒளியாலும், அமைதியினாலும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.எனவே தயவு கூர்ந்து என்னுடன் வந்துவிடுங்கள் என்றார்.

(உண்மையில் அந்த துறவி தன் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அரசர் விரும்பினார்.ஏனென்றால் துறவி அதனை ஏற்றுவிட்டால் அவர் அரன்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்பிதான் இருந்திருக்கின்றார் என்று ஆகிவிடும் என்று பயந்தார்.)ஆனால் அந்த வாலிபர் எழுந்து போகலாம் என்றார்.

அப்போது அரசருடைய மனம் முழுவதும் ஒரு வெள்ளப்பிரலயமே ஓங்கி வீசுகின்றது."இவர் அரன்மணையில் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்போல் தெரிகின்றதே,அப்படியானால் இவர் உண்மையான துறவி இல்லைபோல் தெரிகின்றது.ஏனென்றால் துறவிகள் என்பவர்கள் தங்களை வருத்தி கொள்பவர்கள்தான் என்று அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் இந்த வாலிபர் அரன்மணையை விரும்புகின்றாரே என்பதை கண்டு இவர் ஒரு போலி துறவி என்றே முடிவெடுத்துக் கொள்கின்றார்.

ஆனாலும் வார்த்தை மாறமுடியாதே என்பதற்காக வேறுவழியின்றி வாலிபரை அரன்மணைக்கு அழைத்து செல்கின்றார்.அங்குள்ள பிரத்யேக அறையை அவருக்காக தயார்செய்தும் கொடுத்தார்.மேலும் பணியாட்களையும் அழகிய அந்தபுறப் பெண்களையும் அனுப்பி வைத்தார்.வாலிபர் இவற்றில் எதனையும் மறுக்கவில்லை.அனைத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.அரசனின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.இந்த வாலிபன் என்னை ஏமாற்றிவிட்டான். நான் கடந்துசெல்லும் இடத்தை சரியாக கண்டுபிடித்து என்னிடம் அவன் தியானம் செய்வதுபோல் நடித்து ஏமாற்றிவிட்டான் என்று மனதுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டார்.

இதே எண்ணத்தோடே அரசர் சில நாட்களை பல்லை கடித்துக்கொண்டு கடந்தார் என்றாலும் அவற்றை எல்லாம் போட்டு உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.அப்படி ஒரு நாளும் வந்தது.ஆம்..!
ஒரு நாள் துறவியும் அரசரும் ஒரு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் சூழல் ஏற்பட்டது.அப்பொழுது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி வாலிபரே உங்களிடம் நான் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஆசிக்கின்றேன் என்றார்.துறவியும் கேளுங்கள் என்றார்.

அரசர் சற்று தயக்கத்துடனே இதை நான் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் பாலாய்ப்போன மனம் அதனை உறுத்திக் கொண்டே இருக்கின்றது எனவேதான் நான் இதை கேட்கின்றேன் என்றார்.துறவி பரவாயில்லை கேளுங்கள் என்றார்...!அரசர்"உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன..?"தயவு செய்து எனக்கு விளக்கம் கூறுங்கள்.ஏனெனில் நான் அனுபவிக்கும் அனைத்தையும் நீங்களும் அனுபவிக்கின்றீர்கள் அப்படியானால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்று சற்று விரப்புடனே கேட்டார்.

அதற்கு அந்த வாலிப துறவியோ இந்த சந்தேகம் "நான் உன் அரன்மணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டபோதே உன்னிடம் தோன்றிவிட்டது என்பதை நான் நன்றாக அறிவேன்.ஆனாலும் நீர் ஒரு கோழை.அன்றே இந்த கேள்வியை கேட்டிருந்தால் உன் மனம் நிம்மதியாக இருந்திருக்கும்.சரி இப்பொழுதாவது கேட்டாயே..! என்று கூறி விட்டு, இந்த கேள்விக்கு விடை இதோ இந்த ஆற்றை கடந்தால் மட்டுமே பெற முடியும் என்றார்.

அரசரோ அப்படியா அப்படியானால் நாம் அந்த பக்கமாக போகும்பொழுது அதனை பெற்றுக்கொள்வோம் என்றார்.ஆனால் துறவியோ அது இப்பொழுதே போனால் மட்டுமே கிடைக்கும்.எனவே என்னோடு ஆற்றைக் கடந்து வாருங்கள் என்றார்.இருவரும் ஆற்றைக் கடந்து ஒரு காட்டை வந்தைடைந்தனர்.அப்பொழுது துறவி இந்த காட்டிலேயே நான் அமர்ந்து தவம் செய்யப்போகின்றேன் எனவே நீங்கள் விரும்பினால் என்னோடு இருக்கலாம் இல்லையானால் நீங்கள் போகலாம் என்றார்.

அரசனோ நான் எப்படி உங்களோடு இருப்பது என்னை நம்பி ஒரு நாடு இருக்கின்றது.மேலும் எனக்கான பொறுப்புகளும் கடமைகளும் ஏறாலமாக அங்கு காத்திருக்கின்றது.எனவே என்னால் எப்படி உங்களோடு வர முடியும் என்றார்.அப்பொழுது துறவி "இது தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்றார்.நான் ஒரு துறவி நேற்று போல் எனக்கு இன்று இல்லை.இன்று போல் எனக்கு நாளை இல்லை.எனவே நான் காட்டில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.அரன்மணையில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.ஆனால் உங்கள் நிலை அப்படிப்பட்டதில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் நான் இனி உங்கள் அரன்மனைக்கு வரப்போவதில்லை என்றார்.

அதற்கு அரசனோ இல்லை இல்லை நான் உங்களை தவறாக எண்ணிவிட்டேன் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.நீங்கள் என் அரன்மணைக்கு கட்டாயம் என்னோடு வந்தேயாக வேண்டும் என்று துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு  வேண்டினார்.ஆனால் துறவியோ இல்லை நான் உங்களோடு இப்பொழுது வந்தாலும் உங்கள் மனம் என்றாவது ஒரு நாள் திரும்பவும் அதே கேள்வியை தோற்றுவிக்கும்.எனவே நான் உங்கள் மன அமைதியை கெடுக்க விரும்பவில்லை.எனவே நான் திரும்பி வருவதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் எனக்கு இந்த உலகில் ஒரு மரத்தின் நிழல் போதும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

நீதி:

  •  பிறரைப்பற்றிய நம் எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துவிடும்.
  • யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
  • இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை உள்ளது.
  • இந்த உலகத்தில் ஒரு மரத்தின் நிழலே பெரும் மகிழ்ச்சிக்கு போதுமானது.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இறைச்சி உண்பது குற்றமா?

முன்னுரை:

இன்று உலகில் பல நூறு கோடி மக்கள் ஒரு வேலை உணவிற்காக பசியிலும்,பஞ்சத்திலும் வாடிக்கொண்டிருக்கும் அதே நிலையில் மற்றொரு புறம் யாருடைய உணவு கலாச்சாரம் சிறந்தது என்று மிகப்பெரும் கலாச்சார போரே நடந்துகொண்டிருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் மீது வீசப்பட்ட சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.மனிதன் உயிர் வாழ்வதற்கும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதற்கும் உணவு உட்கொண்ட காலம் கடந்து இப்பொழுது தன் இன,மத,கலாச்சார பெருமையை நிலை நாட்ட மட்டுமே உணவு உட்கொள்ளும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருப்பது உண்மையில் காலத்தின் கொடுமையாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இன்று மனிதர்கள் சாப்பிடுவதிலும் கூட தங்களின் சுதந்திரங்களை இழந்து தங்களுக்கு பிடித்தமானதையும் கூட எவ்வித அறிவுப்பூர்வமான அடிப்படைகளுமற்ற கலாச்சார  வெளியுலகிற்காக மட்டுமே இது எனக்கு பிடிக்காது என்றும்,தனக்கு பிடிக்காததையும் கூட இந்த போலி உணவு கலாச்சார வெளியுலகிற்காக இது எனக்கு பிடித்தது என்றும் கூறி தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதை வெளிப்படையாகவே நம்மால் காண முடிகின்றது.

எனவே கலாச்சார அல்லது மத அடிப்படையிலான உணவு எப்படி தோன்றியது என்பது சம்மந்தமாகவும் நாம் சுதந்திரமான ஆரோக்கியமிக்க உணவு முறையை எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்வது என்பது சம்மந்தமாகவும் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெறுவதோடு ஏனைய நண்பர்களுக்கும் இதனை எத்தி வைக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

உணவு கலாச்சாரம் எப்படி தோன்றியது?

மனிதனின் உணவு கலாச்சாரத்தில் கற்காலம் தொட்டு இக்காலம் வரை மாமிசம் என்பது ஒரு முக்கிய அங்கம் வகித்திருப்பதாகவே நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இன்னும் சொல்லப்போனால் பல்வேறு பகுதிகளில் கால் நடைகள் அல்லது மீன்கள் போன்ற மாமிசத்தை உண்டாலே தவிர உயிர் வாழவே முடியாது என்ற நிலை அன்றிலிருந்து இன்று வரை இருக்கக்கூடிய நாடுகளையும் பகுதிகளையும் நம்மால் காண முடிகின்றது. அங்கெல்லாம் ஏனைய தாணிய மற்றும் காய்கறி உணவுகள் விளைவது கிடையாது என்பதே அங்கு மாமிசம் மட்டுமே பிரத்தியேக உணவாக ஆனதற்கு முக்கிய காரணியாகவும் பார்க்கப்படுகின்றது என்பதும் கவனிக்க தக்கதாகும்.

இந்தியா போன்ற சில நாடுகளில் தாணிய,காய்கறி உணவுகளும் மாமிச உணவுகளும் பெரும்பாலும் சமமான நிலையில் கிடைக்கப்பெற்றதால்  இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்கள் இரண்டையும் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என்றே நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.குறிப்பாக இந்தியாவிற்குள்ளேயே பகுதிகளுக்கு தகுந்தவாறு  உணவு  பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருந்ததாகவும் நம்மால் காண முடிகின்றது.

உதாரணமாக தெற்குப் பகுதியில் இருப்பவர்களுக்கு அரிசி விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் அரிசியை மட்டுமே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் வடக்கில் உள்ளவர்களுக்கு கோதுமையின் விளைச்சல் அதிகமாக காணப்பட்டதால் கோதுமையையே அவர்கள் தங்கள் பிரத்யேக உணவாகவும் ஆக்கிக்கொண்டுவிட்டனர் என்பதாகவே நம்மால் வரலாற்றின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.மேலும் ஆசிய கண்டத்தின் சில பகுதிகளில் சோழம் மற்றும் பருப்பு வகையிலான தாணியங்கள் பிரத்யேக உணவாக பார்க்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக இந்த உலகில் ஒவ்வொரு பகுதிகளுக்கு தகுந்தவாறும் ஒவ்வொரு பகுதியிலுமுள்ள சீதோஷன நிலைக்கு தகுந்தவாறுமே மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் அமைந்திருந்ததே தவிர அங்கு மத அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ அல்லது கலாச்சார அடிப்படையிலான உணவு என்று கூறுவதற்கோ எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றே இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே உணவு கலாச்சாரம் என்பது அந்தந்த பகுதிகளை கவனித்தும் அங்குள்ள சீதோஷன நிலையை கவனித்துமே இருந்தது என்பதை நாம் ஆழமாக உணர்ந்து கொண்டாலே போதுமானது.இன்றைய பெரும் பான்மையான கலாச்சார பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு கண்டுவிட முடியும் என்றே நான் கருதுகின்றேன்.அடுத்தபடியாக எத்தகைய உணவுமுறை சிறந்து என்பதில் மக்களிடம் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அது சம்மந்தமான ஒரு சில விளக்கங்களையும் இங்கு நாம் பார்த்துவிடுவோம்.

எத்தகைய உணவு முறையை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்?

என்னுடைய "முழுமை பெற்ற மனிதனாக இரு "என்ற புத்தகத்தில் ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமை பெறச் செய்கின்றது என்ற தலைப்பின் கீழ் உணவு பழக்க வழக்கம் சம்மந்தமாக விரிவாக எழுதி இருக்கின்றேன்.முடிந்தால் அவற்றை ஒருமுறை வாசித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு அவற்றில் முக்கியமான கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.உலகில் இன்று பல்வேறு உணவுகள் பல சுவைகளில் உறுவாக்கப்பட்டிருந்தாலும் அவற்றிற்கு முக்கிய விதி என்பது இரண்டு தான்.

1.அது நமக்கு பிடித்தமான சுவையில் இருக்க வேண்டும்.

2.உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாத சுத்தமான உணவாக அது இருக்க வேண்டும்.

இந்த இரண்டு பொதுவிதிகளுக்கும் உட்பட்ட எத்தகைய உணவானாலும் உண்ணலாம் என்பதே என்னுடைய கருத்தாகும்.இவற்றில் மாமிசம் பிரியமானவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை தாராலமாக அவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அவ்வாறே காய்கறி வகையான உணவை மட்டுமே விரும்புபவர்கள் அது தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்காது என்று உணர்ந்தால் அவற்றை அவர்கள் தாராலமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இவற்றிற்கு மத்தியில் உணவு கலாச்சாரம் என்றும் உணவு பாரம்பரியம் என்றும் கூறிக்கொண்டு தனக்கு விருப்பமில்லாததை மற்றவர்களும் விரும்பக்கூடாது என்றோ அல்லது தனக்கு விருப்பமானதையே எல்லோரும் விரும்ப வேண்டும் என்றோ வற்புறுத்துவது என்பது மிக இழிவான செயல் என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
ஆக இறைச்சியோ,காய்கறியோ அவரவரின் விருப்பத்திற்கேற்பவும் அவரவரின் உடல் நிலைக்கு ஏற்பவும் தேர்ந்தெடுத்துக்கொள்வதே ஒரு சிறந்த உணவுமுறையாக இருக்குமே தவிர ஒருவருடைய உணவு பழக்கத்தை மற்றொருவரிடம் மதத்தின் பெயராலோ அல்லது கலாச்சாரத்தின் பெயராலோ புகுத்த நினைப்பது என்பது அநாகரீகத்தின் உச்சமேயன்றி வேறில்லை என்றே நான் காண்கின்றேன்.

அடுத்தபடியாக இறைச்சி என்பது பெரும்பாலும் அசுத்தமாக பார்க்கப்படுகின்றதே அப்படியானால் அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?என்று சிலர் கேட்கின்றனர்.எனவே அது சம்மந்தமாகவும் ஒரு சில விளக்கங்களை இங்கு பதிவு செய்வதற்கு விரும்புகின்றேன்.

அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா..?

இந்த உலகில் மனிதன் ஒன்றை தன் உணவாக எடுத்துக் கொள்வதற்கு முதல் விதியே அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதையே நான் பல்வேறு இடங்களிலும் குறிப்பிட்டுவருகின்றேன்.எனவே அது இறைச்சியானாலும் சரி,அல்லது அது காய்கறியானாலும் சரி, அது சுத்தமானதாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.மேலும் அசுத்தத்தை மட்டுமே உண்ணுகின்ற அல்லது பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றும் பிராணிகளின் இறைச்சிகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன்.எவ்வாறு விஷச்செடிகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்கின்றோமோ அது போன்றே இத்தகைய மாமிசங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதும் சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே அனைத்து இறைச்சிகளையும் உண்ணலாமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தமட்டில் உடலுக்கு தீங்கை தரும் இன்னும் அறுவறுப்பாக காணப்படும் நிலையில் உள்ள இறைச்சிகளை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அடுத்தபடியாக கட்டுரையின் இறுதி பகுதிக்கும் வருவோம்.அதாவது இறைச்சி என்றவுடனே இந்தியாவில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாட்டிறைச்சியாகவே உள்ளது. எனவே அது சம்மந்தமாகவும் இங்கு ஒருசில விஷயங்களை பார்த்துவிடுவோம்.

மாட்டிறைச்சி உண்ணலாமா..?

மாடு என்பது உண்மையில் இந்த மனித சமூகத்திற்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருக்கும் ஒரு சிறந்த பிராணி என்பதை இங்கு முதலில் நான் நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.இன்னும் சொல்லப்போனால் அது விவசாயிகள் மற்றும் பால்காரர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு செல்லப்பிராணி என்று கூறினாலும் கூட அது மிகையாகாது என்றே நான் கருதுகின்றேன்.

அத்தகைய ஒரு பிராணியை அவர்கள் அளவு கடந்து நேசிப்பதால் அவற்றையே கடவுளாகவும் புனிதப்படுத்திப்பார்க்கின்றனர்.இது அவர்களின்  தனிப்பட்ட பிரியம் என்பதாக நாம் எடுத்துக் கொண்டாலும் அவற்றை எல்லோரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று ஏனையோரையும் வலியுறுத்த நினைப்பது என்பதிலிருந்து தான்  பிரச்சனையே உறுவெடுக்கின்றது.ஏனெனில் அவர்கள் நினைப்பது போன்றே ஒரு ஆடு வளர்ப்பவர் தன் ஆட்டை அளவு கடந்து நேசிக்கின்றார் என்பதற்காக அதனை இனி யாரும் உண்ணக்கூடாது என்று கூறத்தொடங்களாம்.இது போன்றே உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் புனிதத்தையும் காரணம் காட்டி ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இன்ன பொருளை உண்ணக்கூடாது என்று வற்புறுத்தத் தொடங்கினால் பிறகு உலகில் மனிதன் எதனையும் உண்ணவே முடியாமல் போய்விடுவான்.

எனவே மாட்டை நேசிப்பவர்கள் அல்லது மாட்டிறைச்சி உண்பதை வெறுப்பவர்கள் தாங்கள் அதனை செய்யாமல் தவிர்ந்துகொள்வதுதான் சிறந்ததே தவிர ஏனையோரையும் வற்புறுத்துவது என்பது அநாகரீகத்தின் உச்சம் என்பதை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளும்படி பணிவண்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மாட்டை புனிதமாக பார்க்கின்றார்கள் எனில் அவர்களுக்கு முன்பு மாட்டிறைச்சியை தவிர்த்துக் கொள்வது என்பதே அதனை உண்பவர்களுக்கும் சிறந்த பண்பாக அமையும் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காண்பித்துக் கொள்கின்றேன்..!ஆக மாட்டிறைச்சி உண்ணலாமா? என்று என்னிடம் கேட்டால் அதை உண்ணுவதும் உண்ணாமல் போவதும் அவரவரின் விருப்பம் என்று தான் நான் கூறுவேன், என்றாலும் நாம் அவற்றை உண்ணுவதால் ஒருவருடைய மனம் புன்படுகின்றது என்பதை உணர்ந்தால் அச்சமயம் கட்டாயம் அதனை தவிர்ந்து கொள்வதே சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

நன்றி:

எழுத்தாளர்:

அ.சதாம் உசேன் ஹஸனி

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

திருந்துவதற்கு வாய்ப்பளியுங்கள்

வாழ்வில் பல்வேறு ஏமாற்றங்களுக்கு ஆளான ஒருவன் தன் கண்ணில் படும் 1000 நபர்களின் தலையை கொய்துவிடப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான்.இதனை கேள்விபட்ட மக்கள் அவனை தூரத்தில் கண்டாலே ஓடி ஒழிந்துவிடுவார்கள்.அப்படி இவனை தெரியாத யாராவது இவன் அருகில் வந்துவிட்டால் அவர்களின் தலையை வெட்டிவிடுவான்.மேலும் எத்தனை நபர்களை கொலைசெய்திருக்கின்றான் என்ற கணக்கிற்காக அவர்களின் கட்டை விரலையும் வெட்டி அதனை ஒரு மாலையாக செய்து கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டான்.

இதனாலேயே மக்கள் அவனுக்கு "உங்லி மால்""விரல் மாலைக்காரன்"என்று பெயரும் வைத்திருந்தனர்.உங்லிமால் ஊருக்குள் வருகின்றான் என்று கேள்விபட்டால் அந்த ஊரில் யாரும் வெளியே தலை நீட்டமாட்டார்கள் என்ற நிலை இருந்தது.அரசனும் கூட அவனுக்கு பயந்து பெரும்பாலும் வெளியே வராமல் இருந்தார் என்றே மக்களிடம் பேசப்பட்டது.உங்லிமால் தன்னுடைய சபத்தத்தை நிறைவேற்றுவதில் இறுதி கட்டத்தை அடைந்திருந்தான்.அதாவது 999 தலைகளை வெற்றிகரமாக கொய்து இருந்தான்.ஆனால் இன்னும் ஒரு தலைக்காக அவன் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் பாதையில் அமர்ந்து ஆவலோடு காத்திருந்தான்.அவனுக்கு கிடைத்ததோ மிகப்பெரும் ஆச்சர்யம்.
ஆம்...!

அவ்வழியாக எதார்த்தமாக புத்தபெருமான் தன் சிஷியர்களுடன் அரசரை சந்திக்கவந்தார்.தூரத்தில் அமர்ந்திருந்த உங்லிமாலுக்கு மிகப்பெரும் சந்தோஷம்,தன்னுடைய சபதத்தை நிறைவேற்றும் நேரம் வந்துவிட்டது என்று வெகுதூரத்திலிருந்து தன்னை நோக்கி வந்த சிறிய கூட்டத்தைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டான்.இடைபட்ட நேரத்தில் அவ்வூரின் சில முக்கியஸ்தர்கள் புத்தரின் சீடர்களிடம் விஷயத்தை சொன்னவுடன். சிஷியர்களும் பதறியடித்துக் கொண்டு விஷயத்தை புத்தரிடம் கூறினார்கள்.

புத்தர் அவ்விஷயங்களுக்கு காதுதாழ்த்திவிட்டு தொடர்ந்து உங்லிமால் இருந்த வழியிலேயே நடந்துகொண்டிருந்தார்.சீடர்களோ வெளவெளத்துப்போய் வேறு வழியில் நாம் சென்றுவிடலாமே என்று புத்தரிடம் வேண்டினார்கள்.ஆனால் புத்தரோ உங்லிமால் ஒரே ஒரு தலைக்காகத்தான் காத்திருக்கின்றான் என்பதை என்னிடம் நீங்கள் கூறாமல் இருந்திருந்தால் நான் உங்களோடு வந்திருப்பேன்.ஆனால் இப்பொழுது என்னால் அப்படி வரமுடியாது என்று கூறிவிட்டார்.வேறு வழியின்றி சீடர்களும் தங்களின் மகத்தான குருவை தனியாக விடமுடியாதே என்ற கட்டாயத்தில் புத்தருடனே நடக்கத் தொடங்கினார்கள்.

புத்தர் உங்லிமாலின் அருகில்வர ஆரம்பித்தார்.உங்லிமாலும் தன் வாலை உறுவிநின்றான்.ஆனால் புத்தர் அருகில் வரவர புத்தருடைய சலனமில்லா நடையும் அவரின் மலர்ந்த முகமும் ஒளிகள் வீசும்பார்வையும் 999 தலைகளை இறக்கமின்றி கொய்த அந்த கல்நெஞ்சக்கார உங்லிமாலையும் ஒரு கனம் செயலற்று சிந்திக்க வைத்தது.இத்துனை அமைதியான சாந்தம் நிறைந்த ஒரு முகத்தை இது நாள் வரை நான் கண்டதில்லையே.

இதை எப்படி என்னால் கொய்யமுடியும் என்று தனக்குள்ளே புலம்பிக்கொண்டிருந்த உங்லிமால் புத்தரை நோக்கி அங்கேயே நில் என்றான். ஆனால் புத்தர் அதனை கண்டுகொள்ளாமல் அவனை நோக்கி நடந்து கொண்டே சென்றார்.மீண்டும் உங்லிமால் "இதோ பார் உன்னை பார்த்தால் எனக்கு மிகப்பரிதாபமாக இருக்கின்றது"எனவே உன்னை நான் உயிரோடு விட்டுவிடுகின்றேன்.இத்தோடு வேறு வழியில் திரும்பி சென்றுவிடு என்று கர்ஜித்தான்.

ஆனால் புத்தரோ அதனை பொருட்படுத்தவே இல்லாமல் அவன் வால் அருகில் சென்று "உங்லிமாலே நானும் உன் மீது பரிதாபப்பட்டுதான் வந்திருக்கின்றேன்.உன்னுடைய சபதத்தை தீர்ப்பதற்கு இன்னும் ஒரே ஒரு தலை தான் மிச்சம் இருக்கின்றதாமே அதற்காக நீ பல வருடமாக காத்திருக்கின்றாய் என்றும் நான் கேள்விபட்டேன்.எனவே பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட,மேலும் எதற்கும் உதவாத என் தலையை நீ எடுத்துக்கொள் என்றார்.

அதனை கேட்ட உங்லிமால் நீர் வசீகரம்மிக்க மனிதராக இருப்பதோடு சற்று பைத்தியக்காரராகவும் இருப்பீர்போலையே என்று கூறி தன் வாலின் கூர்மையை காட்டி இது உன் தலையை துண்டித்துவிடும் என்பதை நீ அஞ்சவில்லையா..?என்றான்.எவ்வித ஆசைகளுமற்ற ஒரு மனிதனாக நான் என்று மாறினேனோ அன்றிலிருந்து நான் எதற்கும் அஞ்சுவதில்லை.ஆனால் நான் இறக்க இருக்கும் இத்தருனத்தில்  என் மனதில் இப்படி ஒரு ஆசை உதிக்கின்றது அதனை நீ நிறைவேற்றி வைப்பாயா என்றார் புத்தர்..!

உடனே உங்லிமாலும் என்ன ஆசை என்று சொல் என்னால் நிறைவேற்ற முடிகின்றதா என்று பார்க்கின்றேன் என்றான்.புத்தரோ "இதோ இந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார்.உடனே தன் கூர்மையான வாளால் அக்கிளையை வெட்டி புத்தரின் கையில் கொடுத்துவிட்டு ..!நீ உண்மையில் பைத்தியக்காரர்தான் என்பதை உன்னுடைய இந்த ஆசையே கூறுகின்றது என்றான்.உடனே புத்தர் இல்லை இது என் ஆசையின் ஒரு பகுதிதான் அதை நீ நிறைவேற்றிவிட்டாய் ஆனால் இந்த கிளையை நீ மீண்டும் அது இருந்த இடத்தில் ஒட்டி நீ என் முழு ஆசையையும் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றார்.

உடனே உங்லிமால் அட பைத்தியாகரனே இதை எப்படி திரும்பவும் ஒட்ட முடியும் என்றான்.அப்பொழுது புத்தர் ஆம்...!உன்னால் அதனை ஒட்ட முடியாதெனில் அதனை வெட்டவும் உனக்கு உரிமை இல்லைதானே என்றார்..?வெட்டுவதால் நீ வீரன் என்பதாக எண்ணிக்கொண்டிருக்கின்றாயா...? அதனை குழந்தையும் கூட செய்யுமே என்று கூறி நீ உண்மையான வீரனாக இருந்தால் இதோ இந்த கிளையை ஒட்ட வை என்றார்.உங்லிமால் அது முடியாத காரியம் என்றார்.

உடனே புத்தர் அப்படியானால் உன்னுடைய இந்த விரல் மாலைகளையும், வாலையும் தூக்கி எறிந்துவிடு.இவைகள் ஒரு வீரமான நபருக்கு அழகல்ல. இவைகள் கோழைகள் தங்கள் கோழைத்தனத்தை மறைத்துக் கொள்வதற்காக வைத்திருப்பவைகள் என்று கூறி நீ என்னோடு வா நான் உன்னை உண்மையான வீரனாக்குகின்றேன் என்றார்.என்னால் உங்கள் உயர்ந்த நன்நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது.உண்மையில் நான் பார்த்த நபர்களிலேயே மிக துனிச்சலான வீரர் நீங்கள்தான் தயவு கூர்ந்து என்னையும் உங்கள் சீடனாக்கிக் கொள்லுங்கள் என்று மன்றாடினான். புத்தரும் தன்னுடன் அவரை அழைத்துக் கொண்டு அரசவைக்கு சென்றார்.

அந்த மக்களிடமெல்லாம் உங்லிமால் புத்தருடன் அரசவைக்கு சென்றிருப்பதாக செய்தி பரவியது.அரசரும் செய்தியை கேள்விபட்டு திடுக்கிட்டுப்போனார்.புத்தர் அரசைவியின் முக்கிய பகுதியில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது அரசர் உங்லிமாலுக்கு பயந்து வாலுடன் வருகை தந்தார்.இதனை கண்ட புத்தர் இங்கு வால் ஏதும் தேவை இல்லையே என்றார். அரசர் புத்தரிடம் நலம் விசாரித்து விட்டு இங்கு யார் அந்த உங்லிமால் என்று சற்று பதட்டத்துடன் கேட்டார்.

அப்பொழுது புத்தரோ அவன் இப்பொழுது ஒரு அப்பாவியான துறவி.இனி அவன் யாரையும் துன்புறுத்தமாட்டான் என்றார்.ஆனாலும் அரசர் யார் அவன் எனக்கு அவனை காண்பியுங்கள் அவனுடைய பெயரே மிக அபாயகரமானதாக உள்ளதே என்று வாளை வெளியில் உறுவி படபடத்துநின்றார்.புத்தர் புன்னகைத்துக் கொண்டே தன் அருகில் சாந்தமாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதனை சுட்டிக்காண்பித்து இதோ இவன் தான் உங்லிமால் என்றார்.அரசர் அவனை சண்டைக்கு அழைப்பதுபோல் எல்லோரையும் வெட்டிவிடுவாயா நீ? என்று வாளை அவனிடம் நீட்டினார்.

அப்பொழுது உங்லிமாலோ சிறித்துக் கொண்டே நீ மாபெரும் வாள்வீரனாக இருந்திருந்தால் நான் உங்லிமாலாக இருந்தபோது என்னிடம் நீ வந்திருக்க வேண்டும்.இப்பொழுது நான் யாருடைய உயிறையும் பறிப்பவன் அல்ல,பல மனிதருக்கு அதனை வழங்க ஆசிப்பவன் என்று கூறி நீ  உன் வாளை உன் உறைக்குள் வை என்றான்.அரசனும் அவ்வாறே செய்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்...!

 நீதி:

  • வாழ்வில் ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை சீர்செய்ய ஒரு வாய்ப்பையேனும் வழங்க வேண்டும்..!

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபாரத்தின் ஆபத்துகள்

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ற முந்தைய கட்டுரையிலேயே வியாபாரத்தின் நோக்கங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.அதில் இன்றைய உலகம் மிக தீவிரமாக செயல்படுத்தத்துடிக்கும் லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபார முறையும் ஒன்றாக குறிப்பிட்டு இருந்தேன்.மேலும் அது இந்த மனித சமூகவாழ்வை இறுதி நிலைக்கு அழைத்துச்சென்றுவிடும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.எனவே இந்த கட்டுரையில் அது எப்படி இந்த மனிதசமூகத்திற்கு மிக ஆபத்து என்பதை விரிவாக பார்ப்போம்...!

1.மக்களிடம் செயற்கை தேவையை ஏற்படுத்துகிறது.

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வியாபார முறையானது மக்களின் தேவையை நிறைவேற்றுவதைவிடுத்து தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் மக்களிடம் செயற்கையான தேவையை ஏற்படுத்துவதை மைய்யமாகக்கொண்டு செயல்படக்கூடிய வியாபாரமுறை என்பதே இதில் ஒழிந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதாக நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றிற்கென்று எந்த வரைமுறைகளுமின்றி பொருளை மக்களின் தலையில் கட்டுவது மட்டுமே இந்த வியாபாரமுறையின் அடிப்படை கொள்கையாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு உதாரணமாக இன்றைய உற்பத்தி துறைகளில் லாபநோக்கோடு மட்டும் செயல்படும் பல்வேறு கார்பரேட் தொழில் கூடங்களை குறிப்பிடலாம். உதாரணமாக இன்றைக்கு குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு இத்தனை வாகனங்களை மக்களின் தலையில் கட்டிவிட வேண்டும் என்ற (Target)குறிக்கோளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக நாம் பார்க்கலாம்.

மக்களுக்கு வாகனம் தேவையாகத்தான் இருக்கின்றது என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் தேவையற்றது என்பதும் நிதர்சனமாக இருக்கின்றது. ஆனால் அளவுக்கு அதிகமாக தயாரித்து வைத்திருக்கும் வாகனங்களை மக்கள் தங்கள் கையில் உள்ள பொருளை அல்லது பணத்தை கொடுத்து எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்பதற்காகவே இந்த வியாபார முதலைகள் செயற்கையான தேவையை உறுவாக்குகின்றனர்.அதற்கு அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் ஆயுதம் மக்களின் பேராசையை தூண்டுவதேயாகும்.
ஆம் ..!
இன்று மக்கள் தங்களின் சொத்தை விற்றேனும் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதற்கான ஆசையை விளம்பரங்களின் மூலம் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இதனால் யார் அந்த பொருளை வைத்திருப்பாரோ அவர் சமூகத்தில் மிக மதிப்பிற்குறியவர் என்றும் யாரிடம் அது இல்லையோ அவர் சமூகத்தில் எவ்வித மதிப்புமற்றவர் என்றும் ஒரு ஆபத்தான சமூக கட்டமைப்பை இந்த லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட வியாபாரமுறை உறுவாக்கிக்கொண்டிருக்கின்றது என்பதே எனது முதல் குற்றச்சாட்டாகும்.

இந்த வியாபார முறையை இப்படியும் விளக்களாம் என்றே நான் கருதுகின்றேன்.அதாவது குருடனும்கூட அவனுடைய சொத்தையோ அல்லது தன்னையோ இழந்து லாபநோக்கம் மட்டுமே கொண்ட சில வியாபாரிகளின் ஒரு அழகிய சித்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதைப்போன்றதே இந்த லாப நோக்கம் கொண்ட வியாபாரமுறை என்றும் குறிப்பிடலாம்.

அந்த சித்திரத்தை குருடன் பார்க்கவே முடியாது என்றாலும் அது அழகானது என்று சில மக்களாலோ அல்லது அதை விற்கத்துடிப்பவர்களின் விளம்பரத்தாலோ வலியுறுத்தப்பட்டுவிட்டதால் அந்த குருடனும் அதை வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றான்.இப்படி மனிதனின் அத்தியாவசியங்கள் என்பதெல்லாம் தாண்டி சவ்கரியங்கள் என்பதையும் கடந்து தேவையற்ற பொருட்கள் என்ற வட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டு அது உலகலவில் சந்தைப்படுத்தப்படுவது என்பது இந்த மனித இனத்திற்கான மிகப்பெரும் அழிவுப்பாதையேயன்றி வேறு என்னவென்று சொல்வது

இத்தகைய வியாபாரமுறைதான் இந்த மனித சமூகத்தை மிகப்பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் மிகக்கொடிய வியாபாரமுறை என்று நான் குறிப்பிடுகின்றேன்.ஆனால் இன்று இந்த உலகையே இந்த வியாபார முறைதான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் நிதர்சனமாக நான் காண்கின்றேன்.இது இந்த மனித சமூகத்திற்கு பொருளாதார சீர்கேட்டை தருமே தவிர ஒரு முறையான வசதிமிக்க மனநிறைவுபெற்ற வாழ்வியலை ஒருபொழுதும் தராது என்பதே எனது உறுதியான கண்ணோட்டமாக இருக்கின்றது.

ஏனெனில் மக்களின் தேவையே வியாபாரத்தின் அடிப்படை விதி என்றிருக்கும்பொழுது மக்களிடம் செயற்கையான தேவையை உறுவாக்கி அவர்களிடம் வியாபாரம் செய்து அவர்களை உறிஞ்ச நினைப்பது என்பது இந்த மனித சமூகத்தை பேரழிவில் தள்ளுவதற்கான முயற்சியாக அமையுமே தவிர இந்த மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் ஒருபோதும் அழைத்துச் செல்லாது என்பதே எனது தீர்க்கமான முடிவாகவும் நான் கருதுகின்றேன்.

2.பொருட்களை பதுக்கி வைத்துக்கொள்ள தூண்டுகிறது.

வெறும் லாப நோக்கை மட்டுமே கொண்ட இந்த வியாபார முறையே பொருட்களை பதுக்கி வைத்து மக்களிடம் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கும், விலைஏற்றம் செய்வதற்கும் மிக அடிப்படை காரணியாக இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.இன்று மக்களின் தேவைக்கு தகுந்தவாறு பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய சூழலிலும்கூட இந்த லாப நோக்கு கொண்ட வியாபாரமுறை அதனை பதுக்கி வைத்துக்கொண்டு மக்களை அலைக்களிக்கச் செய்து பிறகு மிகப்பெரும் விலைக்கு மக்களிடம் தலையில் கட்டிவிடுகின்றது என்பதை நம்மால் ஒர்போதும் மறுக்க முடியாது.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச்செயலாக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் பல்வேறு சமயங்களில் அரசின் உதவியோடே இந்த மாபாதகச் செயல் அரங்கேற்றப்படுகின்றது.லாபமடைவது என்ற சுயநலனை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வியாபாரமுறை மக்களின் நிலைகுறித்தோ அல்லது மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ எந்த கவலையும் படத்தயாராக இல்லை என்றிருக்கும்பொழுது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அந்த வியாபாரிகள் மனசாட்சியின்றி மக்களை உறிஞ்சுவதற்காக விலையை தாருமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.அப்படி மக்கள் வாங்க மறுக்கும்பொழுது அதனை வேண்டுமென்றே பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.எனவேதான் இந்த மனசாட்சியற்ற வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வியாபார முறை மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்லும் மிகப்பெரும் ஆபத்து என்று நான் கூறுகின்றேன்.

3.குறிப்பிட்ட சிலருக்கே இது உதவி புரிகிறது.

லாப நோக்கம் மட்டும் கொண்ட இந்த வியாபார முறையானது அடித்தட்டு வியாபாரி தொடங்கி உயர் மட்ட வியாபாரி வரை அனைவரிடமும் குடி கொண்டிருந்தாலும் இது உயர்மட்ட வியாபாரிகளிடமே அதிகம் குடிகொண்டிருக்கின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் இது உயர்மட்ட நுகர்வோர்களுக்கு மட்டுமே அதிகம் உதவக்கூடியதாகவும் நம்மால் காணமுடிகின்றது.

உதாரணமாக ஒரு அத்தியாவசியப்பொருள் அது சந்தையில் எங்கும் கிடைக்கவில்லை என்றிருக்கும்பொழுது அதனை குறிப்பிட்ட சிலர் மட்டும் மிக எளிதில் பெற்றுவிடுவது இதற்கு மிகப்பெரும் சான்றாக இருக்கின்றது.வெறும் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் இந்த வியாபாரமுறை குறிப்பிட்ட செல்வாக்குடையவர்களை குறிவைத்தே நகர்கின்றது என்பதையே இவ்வாறு நான் குறிப்பிடுகின்றேன்.குறிப்பாக சொல்லப்போனால் உழைப்பின்றி பெரும் செல்வங்களை திரட்டிவைத்திருப்பவர்களுக்கு எத்தகைய தொகையும் பெரிதாக தெரியப்போவதில்லை என்பதை கருத்தில்கொண்டே இந்த வியாபாரமுறை சுழல்கின்றது என்பதாகவும் இதனை கூறலாம்.

பெரிய அளவிலான மக்கள் இந்த வியாபாரத்தால் பயனடையவும் முடியாது.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் பெரும் லாபம் அடைந்து கொள்ளவும் முடியும் என்பதே இந்த வியாபாரமுறையின் முக்கிய முரன்பாடுடைய அபாயமாக இருக்கின்றது.எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உதவி செய்யும் இந்த வியாபார முறையானது மக்களின் உயர்நிலைக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்பதோடு இது செல்வம் படைத்தவர்களுக்கும் ஆபத்தே என்பதும் எனது கண்ணோட்டமாக இருக்கின்றது.

கட்டுரையின் விரிவு கருதி இத்துடன் இந்த கட்டுரையை முடித்துக் கொண்டு அடுத்த கட்டுரையில் தொழிளாலர்களுக்கு இந்த வியாபார முறை எப்படியெல்லாம் ஆபத்தாக அமைந்திருக்கின்றது என்பது சம்மந்தமாகவும், மேலும் வியாபாரம் எதனை அடிப்படையாகக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.

 நன்றி:

அ.சதாம் உசேன் ஹஸனி

சனி, 25 செப்டம்பர், 2021

மனிதனின் மனஅமைதி எங்கே இருக்கின்றது?

ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள காட்டில் சென்று மரம் வெட்டிவந்து அதனை விற்று தன் வாழ்வை கழித்து வந்தான்.இப்படி ஒவ்வொரு நாளும் அவன் அக்காட்டு வழியாக கடந்து செல்லும்போது ஒரு மரத்தடியின் கீழ் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதையும் பார்த்துக்கொண்டே கடந்துசென்றான். ஒரு நாள் தன் வாழ்வில் எதுவுமற்ற வெறுட்சியை உணர்ந்த விவசாயி அத்துறவியிடம் தன் வாழ்கையில் செல்வம் பெற்றவனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கலாமே என்று யோசித்துக்கொண்டு அத்துறவியை நெருங்கினான்.

தியானத்தில் இருந்த துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா நான் வாழ்வில் செல்வம் பெற்று உயர்வாக வாழ ஏதேனும் வழி உண்டா என்றான். கண்களை மெல்லமாக திறந்த துறவி இதோ இந்த பக்கமாக மரங்களை பார்த்துக்கொண்டே நடந்துசெல் என்றார்.உடனே அவ்விவசாயியும் துறவியின் பேச்சை தட்டக்கூடாது என்பதற்காகவே மரங்களை பார்த்துக்கொண்டே தூரமாக நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் கடந்த பின்பு சந்தன மரங்கள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தான்.இதற்கு முன்பு அக்காட்டில் பலமுறை கடந்து வந்திருந்தாலும் இதனை கவனிக்கவில்லையே என்று வருந்திக்கொண்டே அம்மரங்களை வெட்டிவீழ்த்தினான்.பிறகு அதனை விற்று அவனுடைய ஊரிலேயே மிகப்பெரும் செல்வந்தனானான்.சிறிது காலம் தான்அனுபவிக்காத அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தான்.பிறகு அனைத்தும் சலித்துப்போனது. அதைவிட பெரும் செல்வந்தனாக ஆக வேண்டும் என்று விரும்பினான்.எனவே மீண்டும் அத்துறவியை சந்திக்கச்சென்றான்.எப்பொழுதும்போல் துறவி அம்மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

விவசாயியோ ஐயா என் வாழ்வில் இதைவிட பெரிய செல்வந்தனாக ஏதேனும் வழி உண்டா என்றான்.மீண்டும் துறவி மெல்லமாக கண்களை திறந்து இதோ இவ்வழியாக கீழே பார்த்துக்கொண்டே செல் என்றார்.அவனும் கேட்ட மாத்திரத்திலேயே கீழே பார்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.நீண்ட தூரம் கடந்த பிறகு ஒரு சிறிய குகையை அடைந்தான். அங்குள்ள பாறைகள் முழுவதும் தங்கத்தால் மின்னியது.அட இத்தனை நாள் இந்த காட்டை சுற்றிவருகின்றேன் இது தெறியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு அத்தங்கங்களை கட்டியாக்க முற்பட்டான்.பிறகு அதனை விற்று மிகப்பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிட்டான்.

சிறிது காலம் தன் மனதில் புதைந்து கிடந்த அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொண்டான்.பிறகு முன்பைப்போல் மீண்டும் மனதில் வெறுட்சி தோன்ற ஆரம்பித்தது.அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது.எனவே எப்பொழுதும் போல் அத்துறவியின் நினைவு வந்தது.துறவியை நோக்கி நடக்கலானான். துறவியும் எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.விவசாயியோ மெல்லமாக துறவியின் அருகில் சென்று ஐயா இப்பொழுது இருப்பதைவிட இன்னும் மிகப்பெரிய செல்வந்தனாக நான் ஆவதற்கு ஏதேனும் வழியிருக்கின்றதா என்றான்.

மெல்லமாக கண்களை திறந்த துறவி இதோ இந்த ஆற்றின் ஓரமாகவே நடந்து செல் என்றார்.உடனே விவசாயி விருவிருவென நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் கடந்த பின்பு அந்த ஆற்றின் ஓரத்தில் சில வைரவைடூரிய கற்கள் கிடப்பதை பார்த்தான்.அட என்ன ஆச்சர்யம் இந்த கற்களை நான் வாழ்நாட்கலிலேயே அணிந்ததில்லையே என்று எண்ணிக்கொண்டு அவற்றை பொறுக்கி எடுத்துக்கொண்டான்.அவற்றில் சிலவற்றை அணிந்து கொண்டு மீதியை மிகப்பெரும் தொகைக்கு விற்றான்.

சிறிது காலம் எல்லா சுகங்களையும் அனுபவித்தான்.ஆனால் இயற்கை அவனை திரும்பவும் இயல்பு நிலைக்கு அழைத்தது.எல்லா வசதிகள் இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுட்சி துரத்துவதை உணர்ந்தான்.சரி மீண்டும் துறவியிடம் செல்வோம் என்று யோசித்தபோது அவனுடைய மனதில் இப்படி ஒரு எண்ணமும் தோன்றியது.அதாவது வைர முத்துக்கள் மற்றும் தங்க சுரங்கம் மற்றும் சந்தனக்காடு இவை எல்லாம் இருக்கும் இடங்கள் அனைத்தையும் தெரிந்தும் இந்த துறவி ஏன் அவற்றை எடுத்து அனுபவிக்காமல் இருந்தார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தலையே சுற்றியது.சரி கட்டாயம் இதனை துறவியிடம் கேட்டால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்த விவசாயி துறவியை நோக்கி நடந்தான்.துறவி எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அங்கு வந்த விவசாயியோ துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா இன்று நான் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டுச்செல்ல வந்திருக்கின்றேன் என்றான். துறவியும் கண்களை விழித்து, கேள்! என்றார்.ஐயா நீங்கள் ஏன் சந்தனக் காடுகளையும் தங்க சுரங்கத்தையும் வைர முத்துக்களையும் உங்களுக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே எனது கேள்வியாகும் என்றான் விவசாயி.

அதற்கு துறவியோ புன்னகைத்துக்கொண்டே "நான் அதனைவிடவும் மேலான "மன அமைதியை" அடைந்துவிட்டேன்."எனவே நீ உயர்வாக பார்க்கும் அப்பொருட்கள் எனக்கு எத்தேவையுமற்றது என்றார் துறவி.துறவியின் பதிலை கேட்ட மாத்திரமே விவாசாயி அவருடைய கரங்களை பற்றிக்கொண்டு ஐயா எனக்கும் அந்த மனஅமைதியை தரும் வழியை கற்றுக்கொடுங்கள் என்று மன்றாடினான்.அப்பொழுது துறவியும் அதனை அவனுக்கு கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.!

நீதி:

  • இந்த உலகில் மன அமைதியை விட விலை உயர்ந்தது வேறொன்றுமில்லை.
  • இந்த உலகில் அனைத்தும் ஒரு கட்டத்தில் சலிப்பை தந்துவிடுவதே.
  • அடையும் வரைக்கும்தான் செல்வம் சுகமானது.
  • மன அமைதி என்பது பாதுகாக்கப்பட வேண்டியது.
  • மன அமைதி என்பது ஆழ்ந்த அமைதியால் பெறப்படக் கூடிய அற்புத நிலை.