வியாழன், 14 ஏப்ரல், 2022

உறவின் ரகசியங்கள்!


முன்னுரை:

"உறவின் ரகசியங்கள்"என்ற இந்த சிறிய புத்தகத்தை இந்த உலகில் கலப்பற்று உறவாட நினைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் தொகுத்துவருகின்றேன்.அந்த புத்தகத்தில் உறவுகள் என்றால் என்ன .?என்பதையும் அது எங்கிருந்தெல்லாம் தோன்றுகின்றது என்பதையும் என் சிந்தைக்கு உட்பட்டு மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவ்வாறே மக்கள் எதையெல்லாம் உறவாடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள் கின்றார்கள் என்பது குறித்தும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் மேலும் எத்தகைய உறவுகளெல்லாம் தோற்றுப்போகின்றது என்பது குறித்தும் மிக விரிவாகவே விவரித்து இருக்கின்றேன்.நிச்சயமாக அந்த சிறிய புத்தகம் இந்த மனித சமூகத்துடன் உறவை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் மிக பயனலிக்கக்கூடியதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.இப்பொழுது அப்புத்தகத்தின் ஒரு சில பகுதியயி மட்டும் இந்த கட்டுரையில் தருகின்றேன்.தொடர்ந்து வாசித்து வாருங்கள்..

நாம் உறவின் பல்வேறு ரகசியங்களை அறிவதற்கு முதலில் உறவு என்றால் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இங்கு உறவு என்றால் என்ன என்பதற்கு மொழி ரீதியான மேலும் அகராதி ரீதியான பொருள் என்ன என்பதை விளக்குவதே மிகப்பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.எனவே முதலில் உறவு என்றால் என்ன என்பது சம்மந்தமாக மொழியின் அடிப்படையிலும் அகராதியின் அடிப்படையிலும் சிறியதோர் அறிமுகத்தை இங்கு பதிவிட்டுவிடுகின்றேன்.

உறவு என்றால் என்ன..?

உறவு என்ற சொல்லிற்கு பெரும்பாலும் அகராதியில் :

"இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் தொடர்பு என்றும் இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் இசைவு அல்லது பிணைப்பு" என்றுமே பொருள் கொள்ளப்படுகின்றது.இவற்றை தவிர்த்து இரு நபர்கள் திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது அன்பின் அடிப்படையில் உடலால் இணைவதற்கும் மேலும் இரு நபர்கள் இரத்தபந்தத்தால் இணைவதற்கும் உறவு என்றே பொருள் கொள்ளப்படும் என்பதாகவும் அகராதியில் நம்மால் காணமுடிகின்றது.இவை உறவு என்பதற்கு மொழி மற்றும் அகராதி ரீதியிலான விளக்கமாகும். இவையன்றி உறவு என்பதற்கு சமூகம் எத்தகைய பொருள் கொள்கின்றது என்பது சம்மந்தமாகவும் நாம் அறிந்து கொள்வது என்பது உறவின் பல்வேறு ரகசியங்களை ஆழமாக நாம் அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் அதனையும் சற்று வட்டுறுக்கமாக இங்கு விவரித்துவிடுகின்றேன்.

உறவு சம்மந்தமான சமூக புரிதல் என்ன..?

மக்களில் பலரும் உறவு என்பது வெறும் திருமண ஒப்பந்தத்தாலும் அல்லது இரத்த பந்தத்தாலும்  ஏற்படுவது மட்டுமே என்று தங்களுக்கு தாங்களே நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை தாங்களே போட்டுக்கொள்வதையே இன்றைய நிதர்சன வாழ்வில் நாம் பெரும்பாலும் காண முடிகின்றது.பெரும்பான்மையான மக்களின் இந்த புரிதலே பெரும்பாலும் மனிதர்களோடு பொதுவாக பேசுவதையோ அல்லது பழகுவதையோ தவிர்த்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

இத்தைகைய புரிதல்தான் பெரும்பான்மையான மனிதர்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது என்றும் நான் நம்புகின்றேன்.ஏனெனில் இத்தகைய புரிதல் உடையவர்கள் வெளிப்படையாகவே தன் ரத்தபந்தமல்லாத அல்லது திருமணபந்தமல்லாத பிறமனிதர்களை வெறுத்து ஒதுக்குவதற்கே முற்படுகின்றனர்.மேலும் அவ்வாறு செயல்படுவதையே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் அவர்கள் எண்ணிக்கொள்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கின்றது என்பதையும் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் இங்கு தான் உறவின் சில வகைகளை அவர்கள் உணரத்தவறுகின்றனர் என்பதாகவும் கருதுகின்றேன்.மேலும் மேம்போக்கான அவர்களின் தவறான புரிந்துணர்வால் பெரும்பான்மையான மக்களிடம் தெரிந்தோ தெரியாமலோ வெறுப்பை மட்டுமே வேறூன்றச் செய்துவிடுகின்றனர் என்பதையும் இங்கு உலவியல் உண்மையாக நான் வறுத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.அதாவது உறவு என்பது தொடர்பினாலும் சந்திப்பினாலும் மேலும் அவற்றில் ஏற்படும் ஆழமான புரிதலாலும்தான் உறுவாகின்றது என்ற உண்மையை மறந்து இரத்த உறவுகள்தான் தொடர்பையும் ,சந்திப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தங்களுக்கு தாங்களே தவறான புரிதலை கேடயமாக்கிக் கொண்டது என்பது மிக வருத்தத்திற்குறிய விஷயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.

அவ்வாறே அவர்கள் உறவு என்றாலே அது தன்னை முழுவதுமாக ஒப்படைக்க கூறும் திருமண உறவு மட்டும்தான் என்றும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இடமளிக்கும் அளவிற்கான ஆழமான உறவு என்பது மட்டும்தான் என்றும் தங்களுக்கு தாங்களே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொண்டது என்பதும் மிக வருந்தத்தக்க செயலாகவே நான் கருதுகின்றேன்.இந்த தவறான புரிந்துணர்வே பெரும்பாலும் ஏனைய மனிதர்களை அவர்கள் வெளிப்படையாகவே புறக்கணிப்பதற்கான முக்கிய காரணியாகவும், உலவியல் உண்மையாகவும் அமைந்திருக்கின்றது என்பதை என்னால் அருதியிட்டுக் கூற முடியும்.எனவே இத்தகைய மனித விரோத புரிதலையே முதலில் கலைய வேண்டிய அவசியமிருக்கின்றது என்ற அடிப்படையில்  இங்கு மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ளாத சில உறவுகளின் வகைகளை விளக்க வேண்டிய அவசியமிருக்கின்றது என்றே நான் உணர்கின்றேன்.அவற்றை இங்கு பதிவு செய்வது மனிதத்தோடு உறவாட விரும்பும் அனைவருக்கும் மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் கருதுகின்றேன்.எனவே வாருங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய உறவின் சில வகைகளை முதலில் அறிந்து கொள்வோம்...!

உறவின் வகைகள்..!

1.பொதுவான உறவு.

2.தனிப்பட்ட உறவு.

3.ஆழமான உறவு.

இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே கடைபிடித்து வருவது என்பது உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கதாகும்.ஆம் நம்மில் ஒவ்வொருவரும் இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் உறவில் கடைபிடித்துக்கொண்டே இருக்கின்றோம்.ஆனால் அதனை எப்படி கடைபிடிப்பது யாரிடம் கடைபிடிப்பது என்பதில் தான் பெரும்பாலோர் தவறிழைத்துவிடுகின்றனர். அந்த அனுகுமுறைகளை நாம் மிக இலகுவாக புரிந்து கொள்வதற்கு நம் வாழ்வில் நாம் அன்றாடம் கடைபிடித்து வரும் பேச்சை உதாரணமாக சுட்டிக்காட்டுவது இங்கு மிகப்பொறுத்தமானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவ்வுதாரணத்தின் மூலமே விளக்குவதற்கு முயற்சிக்கின்றேன்.

பொதுவாகவே நம்முடைய பேச்சில் மூன்று வகையான அனுகுமுறைகள் பொதிந்து இருக்கின்றது.அவற்றில் 1.பொதுவான பேச்சு என்ற ஒன்றும்,2.தனிப்பட்ட பேச்சு என்ற ஒன்றும்,3.ஆழமான(இரகசிய) பேச்சு என்ற ஒன்றும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றது.இது நாம் எல்லோரும் நமக்கு தெரியாமலே நம்முடைய பேச்சில் கடைபிடித்து வரும் ஒரு சாதாரண செயல்தான் என்றாலும் இதனை பலரும் தெரிந்து கடைபிடிப்பது கிடையாது. அவ்வாறே இதனை எப்படி கடைபிடிப்பது என்பதிலும், யாரிடம் கடைபிடிப்பது என்பதிலும் பெரும்பாலானோர்  தவறிழைத்துவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.

அது எப்படி மக்கள் இது விஷயத்தில் தவறிழைக்கின்றார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீர்கள்..!அதற்கான விளக்கத்தை இங்கு நான் முழுவதுமாக குறிப்பிடுகின்றேன்.

அன்றாட பேச்சும் உறவின் அனுகுமுறையும்..!

நான் மேலே கூறிய மூன்று வகையான பேச்சுக்களையும் உங்கள் மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டு உங்கள் பொதுவாழ்வில் நீங்கள் எப்படி பேசுகின்றீர்கள் என்பதை சற்று ஆழமாக உற்று நோக்கிப்பாருங்கள். ஒன்று நீங்கள் எல்லோரோடும் ஒரேவிதமாக பேசுபவராக இல்லாமல் இருக்கலாம்.அல்லது எல்லோரிடமும் ஒரே விதமாக பேசுபவராக இருக்கலாம். ஒருவேலை இந்த இருவகையினரில் நீங்கள் எல்லோரிடமும் ஒரே விதமாக பேசும் இரண்டாவது வகையினராக இருந்தால் நீங்கள்தான் நான் மேலே கூறிய அந்த தவறிழைக்கும் நபர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் நீங்கள் சந்திக்கும் மக்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதையும் மேலும் நீங்கள் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அடுத்த பதிவில் தொடர்வோம்:

வெள்ளி, 15 அக்டோபர், 2021

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்
மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறை வேண்டும்


முன்னுரை:

இந்த கட்டுரையை இந்த மனித சமூகத்தை உண்மையாகவே நேசிக்கும் நல்உள்ளங்களுக்கும்,வரும்கால சமூகத்தை அழிவின் பாதையிலிருந்து காப்பதற்கு ஆசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அற்பனிக்கின்றேன். குறிப்பாக இந்த உலகையும் இந்த உலகில் கொஞ்சி மகிழப்பட வேண்டிய இயற்கையையும் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இந்த கட்டுரையை அற்பனம் செய்கின்றேன்.

மகிழ்ச்சியான மனித வாழ்விற்கான கல்விமுறையே தீர்வு.

இன்றைக்கு மனிதர்களின் மேம்பட்ட வாழ்விற்கும் மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பதே கல்விதான் என்பதை அறிந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கும் நிலையை உறுவாக்கி இருப்பது என்பது இந்த மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னேற்பாடு என்பதில் அனைவரும் திருப்திகொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.ஏனெனில் கல்வியற்ற சமூகம் என்பது இந்த மனித சமூகத்தையே பேரழிவில் தள்ளிவிடச்செய்துவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை முந்தைய வரலாறுகளின் மூலம் நம்மால் தெள்ளத்தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது.என்றாலும் இன்றைய கல்விமுறையை அடிப்படையாகக்கொண்ட தற்போதைய சமூகம் இந்த மனித சமூகத்தை இன்னும் விரைவாக அழிவில் தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது. ஏனெனில் இன்றைய கல்விமுறையே அத்தகைய சூழலை உறுவாக்கி கொடுப்பதாக உணர முடிகின்றது.

அதாவது இன்றைக்கு குழந்தைகளுக்கு இயந்திரத்தனமான பொருளை தேடுவதற்கான கல்வியை மட்டுமே கட்டாய கல்வியாக தினிக்கப்படுவது என்பது ஒரு கட்டத்தில் இந்த மனித சமூகம் தன் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் ,தன்னை சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் இயற்கைகளை மறந்து பாழ்படுத்துவதற்கான வழிவகைகளை செய்துவிடும் என்பதையே இங்கு நான் அவ்வாறு கூறுகின்றேன்.இன்றைக்கு பல்வேறு நாடுகளும் சுற்றுச் சூழல் மாசுபட்டுவிட்டது என்றும் இந்த பூமி அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் கூப்பாடுபோடுவதோடு மனிதர்கள் இந்த இயற்கையை காக்கத்தவறுகின்றனர் என்பதாக குற்றமும் சாட்டுகின்றனர். ஆனால் அவர்கள்தான் அத்தகைய நிலைக்கு காரணமாக இருக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர் என்பதை இங்கு நான் வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.

அதாவது இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படும் பெரும்பான்மையான கல்விகள் மனித வாழ்வை மெறுகூட்டும் கலைகள் என்பதை கடந்து பணத்தையும் பொருளாதாரத்தயும் அடைவதற்கான வழிகளாக அரசே அமைத்து வைத்துவிட்டு பிறகு நாட்டில் மனிதவளத்தையும் இயற்கை வளத்தையும் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு பெறிய அறியாமை என்பதை இன்றைய அரசுகள் உணர வேண்டும்.

மேலும் மனிதர்கள் இந்த உலகில் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத்தான் கல்வி,பொருளாதாரம்,நாட்டின் வளங்கள் என்பவையெல்லாம் அரசே மனிதர்களுக்கு  மறக்கடித்துவிட்டு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளின் பின்னால் அவர்களை ஓடவும் விட்டுவிட்டு, இன்றைய மனித சமூகம் இந்த உலகை சூரையாடுகின்றது என்று கூப்பாடு போடுவது என்பது வடிகட்டிய மடமையன்றி வேறென்ன..?மனிதர்களின் வாழ்வியலை சீர்கெடுக்கும் அத்துனை வழிகளையும் நாமே திறந்து வைத்துவிட்டு மனிதர்கள் அதில் சென்று அழிகின்றார்கள் என்பது எவ்வளவு பெரிய அறியாமை..?

எனவே இந்த மனித சமூகத்தை உண்மையிலேயே மேம்படுத்தத் துடிப்பவர்களும்,இந்த உலகின் இயற்கையை காக்கத்துடிப்பவர்களும் ஆரம்பம் முதலே இந்த மனிதனுக்கு அடிப்படை கல்வியாக இந்த உலகில் யாருக்கும் தொல்லையின்றி மகிழ்ச்சியாக தன்னை நேசிக்கவும் தன்னை சுற்றி இருப்பவர்களை நேசிக்கவும் மேலும் இந்த எழில் கொஞ்சும் இயற்கையை நேசிக்கவும் போதிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதையே என்னுடைய தாழ்வான வேண்டுகோளாக இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகின்றேன்.

மேலும் மனிதவாழ்விற்கு பல்வேறு திருப்திகளை தரும் கலைகளை அற்ப வியாபாரம் ஆக்குவதை விடுத்துவிட்டு அதை மனிதர்களை மேம்படுத்தும் கலைகளாகவும்,மனிதர்களை உற்சாகமூட்டும் திறன்கலாகவும் போற்றப்படுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்பதையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக இந்த உலகில் மனித வாழ்வில் பெருந்துன்பங்களும், குற்றங்கலும்,இயற்கை சீரழிவுகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்குமே தவிர இவ்வுலகில் எவ்வித முன்னேற்றங்களும் நடந்தேறிவிடாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்பதை நினைவுபடுத்திக் கொண்டு கட்டுரையின் முடிவுக்கு வருகின்றேன்.

முடிவுரை:

இன்றைக்கு கல்வி என்ற பெயரில் மனித வாழ்விற்கு பெரிதும் பயன்தரக்கூடிய பல்வேறு கலைகள் வியாபாரமாக்கப்பட்டிருப்பது நாமெல்லாம் அறிந்த உண்மையே ஆகும்.அவ்வாறே மனிதர்களுக்கு எக்காலமும் பயன்தரக்கூடிய இந்த உலகின் இயற்கைகளும் மிகப்பெரும் வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.அதன் விளைவாக இன்றைக்கு உலகம் மிகப்பெரும் ஆபத்தை சந்தித்துவருவதும் நாம் அறிந்த உண்மையே ஆகும்.

இதற்கு தீர்வுகாண வேண்டுமெனில் நாம் நம்முடைய கல்விமுறையை வியாபார நோக்கமாக மட்டும் ஆக்குவதை விடுத்துவிட்டு மகிழ்ச்சியான மனித வாழ்வை போதிப்பதற்கானதாக ஆக்கவேண்டும்.அல்லது பொருளாதார கல்வியை போதிப்பதோடு மனித வாழ்வியலை மகிழ்வாக்கிக் கொள்ளுவதற்கும் மேலும் இயற்கையை நேசிப்பதற்குமான ஒரு பாடத்திட்டத்தையேனும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறு நாம் செய்யவில்லையெனில் இந்த மனித சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பதை மிக வருத்தத்தோடு இங்கு நினைவூட்டிக் கொள்கின்றேன்.

நன்றி

வியாழன், 7 அக்டோபர், 2021

பெரியாரும் விவாகரத்துச் சட்டமும்

பெரியாரைப் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பலராலும் பரப்பப்பட்டுவரும் நிலையிலும் அவர் இந்த தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பல்வேறு நலவுகளையும்,தொண்டுகளையும் நடுநிலை கண்ணோட்டத்துடன் என்னுடைய கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டுவருகின்றேன்.குறிப்பாக ஒரு சுதந்திரமான மனோநிலையில் மனிதர்களின் வாழ்வியலை போதிக்கும் ஒரு  சிறந்த ஆசானாகவே அவர் தன் வாழ்வை அமைத்துக்கொண்டிருப்பதை அவருடைய எழுத்துக்களும் பிரச்சாரங்களும் பிரதிபளிப்பதை காணும் பொழுது அத்தகைய சிறந்த மனிதரின் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

இந்த கட்டுரை முழுவதும் பெரியார் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையில் "விவாகரத்து சட்டத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி "கல்யாண விடுதலை"என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.இது நிச்சயம் எல்லோருக்கும் பயனலிப்பதாக இருக்கும் என்றே ஆதரவு வைத்து பதிவிடுகின்றேன்.

(குறிப்பு:இவற்றில் சில கருத்துக்களை புரிவதற்காக நானே எளிய சில வார்த்தைகளையும் சேர்த்து இருக்கின்றேன் என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு விட்டுவிடுகின்றேன்.)"ஆண்,பெண் கல்யாண விஷயத்தில் அதாவது கணவன் மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப்போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாண தத்துவத்தையெல்லாம் சுறுக்கமாக பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாக்கிக்கொள்வதை தவிர வேறொன்றுமே அதில் இல்லை.அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்துக்கு தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கிறோம்.

பொதுவாக கவனித்தால் நமது நாடு மட்டுமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும் ,இயற்கைக்கு விரோதமான நிர்பந்தமும்படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது.ஆனால் நம் நாடு இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாடுகளையும் விட மிக மோசமானதாகவே இருந்து வருகின்றது. 

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டிற்குள்ளாக கல்யாணம் என்பதும் ,உறவு முறை என்பதும் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் கொடுமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்திக் கொண்டே வருகின்றனர்.ஆனால் நம் நாடு மாத்திரம் குரங்குபிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது.ஆகவே முறையாக நமது நாட்டில் பெண்களின் ஒரு கிளர்ச்சி ஏற்பட வேண்டிய அவசியமிருக்கின்றது.

சென்ற வருடம் செங்கல் பட்டு மாநாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடன் மேலும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்தவுடன் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுபவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டு மாநாட்டிற்கு பிறகு இந்தியாவிலேயே பல இடங்களில் கல்யாண ரத்து சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரஷ்யாவில் கல்யாணம் என்பது ஒரு நாள் ஒப்பந்தமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.ஜெர்மனியில் கணவன் மனைவிக்கு விருப்பமில்லையானால் காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தினரும் கல்யாண ரத்துக்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள்.மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் நடைமுறையில் இருந்துதான் வருகின்றது.ஆனால் நமது நாட்டில் மட்டும் இவ்விஷயத்தில் சட்டம் கொண்டுவராமல் இருப்பது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும்.

சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக கனவர்கள் தங்களது மனைவிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்வதாக தினம் தினம் செய்திகள் வெளியாவதை பார்த்து வருகின்றோம். சில சமயங்களில் மனைவிகளின் நடத்தையில் சந்தேகத்தின் காரணமாகவே பல்வேறு கொலைகள் நடப்பதையும் பார்க்கின்றோம்.ஆனால் இந்த சீர்திருத்தவாதிகளான பிடிவாதக்காரர்களிடம் தெய்வீகம் சார்ந்த இந்த கல்யாணம் இப்படி கொலைகளில் முடிகின்றதே என்று கவலைப்பட எவ்வித புத்தியும் இன்னும் தென்படவில்லை.

"பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அவ்வாறே ஆண்களுக்கும் திருப்தியும் ,இன்பமும் ,உண்மையான காதலும்,ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது மிக முக்கியமான காரியமாகும்.அப்படி இல்லாதவரை ஆண்,பெண் இருவருக்கும் சுதந்திரமான வாழ்க்கை என்பதற்கு இடமே இல்லாமல் போய்விடும்.

இங்கு தங்களை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களைப் பார்த்து நாம் ஒன்று கேட்கவும் விரும்புகின்றோம்."கல்யாணம் என்பது மனிதனின் இன்பத்திற்கும் திருப்திக்குமா.?அல்லது வெறுமனே சடங்கிற்காக மட்டுமா..?என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

அது அவர்களால் முடியாது...!

எனவே தெய்வீகம் எங்கின்ற பெயரைச் சொல்லிக் கொண்டு கணவனுக்கும் மனைவிக்கும் விருப்பமே இல்லாமலும் எவ்வித அறிமுகமும் இல்லாத உறவில் நிலைத்திருக்கும் படியும் வற்புறுத்தப்படுவதால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் துன்பம் ஒழிக்கப்பட வேண்டும்.மனிதன் ஏன் பிறந்தான் ஏன் சாகின்றான் என்பது வேறு விஷயம்.அது ஒருபுறமிருக்க மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியும் தான்.அதற்கு ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனமாக இருக்கின்றனர் என்பதே நிதர்சனமாகும்.

அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூரு இருக்குமானால் அதை முதலில் கலைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதனைத்தான் முதலில் செய்ய வேண்டும்.இதைவிடுத்து கல்யாணம் செய்துவிட்டோமே என்பதற்காக சகித்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்று கருதி துன்பத்தையும் ,அதிருப்தியையும் அனுபவிப்பதும்,அனுபவிக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் ,சுய மரியாதையுமற்ற தன்மையுமேயாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும்.

புதன், 6 அக்டோபர், 2021

யார் நல்லவர் ?யார் கெட்டவர்?(Who is good and who is bad)


யூதர்களின் ஒரு சுவாரஸ்யமான கதை..!

ஒரு கோபக்கார கடவுள் ஒரு நகரத்தில் அங்குள்ள மக்களெல்லாம் மிக மோசமானவர்களாக இருக்கின்றனர் என்பதற்காக அந்த நகரத்தையே அழிக்கப்போவதாக முடிவெடுத்தார்.அப்படி அழிப்பதற்கு முன்பு அங்கு வசித்துவந்த தனக்குப்பிடித்தமான ஒரு துறவியை அழைத்து இந்த நகரத்தை நான் அழிக்கப்போகின்றேன் எனவே நீங்கள் அங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினார்.

இதனை கேள்விபட்ட துறவி சற்று யோசித்துவிட்டு கடவுளே நீங்கள் அழிக்கவிருக்கும் அந்த நகரத்தில் ஆயிரம் தீயவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை என்றாலும் நூறு நல்லவர்களும் இருக்கின்றனரே அதனை என்ன செய்ய இருக்கின்றீர்கள் என்றார்...!உடனே கடவுளும் ஆமாம் இதனைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே நல்லவேலை கூறினாய்..! சரி அங்கு யார் அந்த நூறு நபர்கள என்பதை எனக்கு காட்டு நான் அவர்களுக்காக அவ்வூரை விட்டுவிடுகின்றேன் என்றார்.அதற்கு துறவி கடவுளே சற்று பொறுங்கள்..

அங்கு நூறு நல்ல நபர்கள் இருப்பார்களா என்பது எனக்கு தெறியாது ஆனால் அங்கு பத்து நபர்கள் நல்லவர்களாக இருந்தால் அவ்வூரை என்ன செய்வீர்கள் என்றார்.கடவுளோ அங்கு நூரோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல அங்கு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை எனக்கு நிறூபி நான் அந்த ஊரை விட்டுவிடுகின்றேன் என்றார்.

உடனே துறவி கடவுளே என்னால் என்னை தவிர வேறு யாருக்கும் பொறுப்பேற்க முடியாது.நான் என்று நல்லவனாக ஆனேனோ அன்றிலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிறித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்லவர்களே.நான் யாரிடமும் கெட்ட தனத்தை பார்ப்பதில்லை.ஏனெனில் கெட்ட தன்மை என்பது ஒரு நிழல் போன்றது.அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது என்பதே எனது எண்ணம்.

கெடுதல் உண்டாக்கும் செயலை ஒருவன் செய்திருக்கலாம் ஆனால் அது அவனுடைய இருப்பையே கெட்டதாக்கிவிட முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஒருவன் ஒரு கெட்ட செயல் அல்லது இரு கெட்ட செயல் அல்லது நூறு கெட்ட செயல்கள் கூட செய்திருக்கலாம் ஆனால் அது அவனது இருப்பை ஒருபோதும் கெடுப்பது இல்லை.அவனுடைய இருப்பு எப்பொழுதும் தூய்மையாகவே உள்ளது .ஏனெனில் இருப்பு என்பது ஒருவனை அச்செயலை விட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடும்.அது அவனது கடந்த காலத்தையும் கூட கடக்கச்செய்துவிடும்.எனவே நிரந்தரமற்ற அவனது செயலை வைத்து அவனது இருப்பை எவ்வாறு தீயவன் என்றோ அல்லது நல்லவன் என்றோ முடிவு செய்ய முடியும்..?

எனவே கடவுளே நான் அந்த நகரத்தில் தான் வசிக்கின்றேன் பலரும் அங்கு நல்லவர்கள்தான் என்று என்னால் உறுதியாக கூற முடியாது என்றாலும் அவர்கள் நற்செயல்களும் செய்யவே செய்கின்றனர் என்றார்.அதனை கேட்ட கடவுள்.அந்த நகரத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக் கொண்டார் என்பதாக அக்கதை முடிகின்றது.

செவ்வாய், 5 அக்டோபர், 2021

இந்தியாவில் காட்டுமிராண்டிகளின் பிறப்பிடமாகும் அரசியல்

அரசு மற்றும் அரசியல் என்பது மக்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒப்பற்ற புனிதமிகு இடம் என்றே நாம் முன்னோர்கள் மூலமும் வேதங்களின் மூலமும் கேள்விபட்டிருப்போம்.ஆனால் அதுதான் இன்று மிருகங்களின் கூடாரமாக இருக்கின்றது என்பதை யாராவது நினைத்து பார்த்ததுண்டா..?சமீப காலமாக இந்தியாவில் அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச அரசின் துணையோடு பல்வேறு மனித உரிமைமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டேஇருக்கின்றது.ஏனைய மக்களுக்கு வெறும் செய்தியாக மட்டும் அது பகிரப்பட்டும் வருவது உண்மையில் காலத்தின் சாபக்கேடாகவே நான் காண்கின்றேன்.

அவற்றையெல்லாம் தொடர்ந்து நேற்றய தினம் உ.பி யில் நடந்த சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நொறுங்கச்செய்கின்றது.தங்களின் வாழ்வாதார பிரச்சனையை முன்னிட்டு பல நாட்களாக போராடி வந்த விவசாயிகளை எவ்வித ஈவுஇரக்கமுமின்றி மத்திய மந்திரியின் மகனின் வாகனம் அங்கிருந்தவர்களை மோதி தள்ளிவிட்டு செல்லும் அந்த காட்சி இன்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.அதிகார போதையில் ஆடிய அந்த கோரத்தாண்டவம் இந்திய மக்களையே திகைப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.


காணொளி

இந்த காணொளியை கண்ட பிறகும் இதனை சரிகாண்பவர்கள் உண்மையில் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர்கள் என்றே நான் கருதுகின்றேன்.அரசும் அதிகாரமும் எப்பொழுது மக்களை புழுப்பூச்சுக்களாக பார்க்க ஆரம்பித்து தங்களை கடவுளாக எண்ண ஆரம்பித்துவிடுமோ அன்றே அம்மக்களின் வாழ்வு நரகில் தூக்கி எறியப்பட்டுவிட்டது என்பதையே நான் தொடர்ந்து கூறிவருகின்றேன்.

இன்று அதனை நேரில் காண்கின்றேன்.மக்கள் அந்த காட்டுமிராண்டிகளுக்கு தங்களின் மக்கள் சக்தியை எடுத்தியம்பும் நேரமாகவே இதனை நான் கருதுகின்றேன்.எனவே மக்கள் இத்தகைய செயலுக்கு உ.பி.அரசை பொறுப்பேற்கச் செய்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றும் இத்தகைய மாபாதக செயலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதற்கான கோரிக்கையை முன் நிறுத்தியே போராட்டங்களையும் தொடர வேண்டும் என்றும் எனது இந்த பதிவின் மூலம்  வேண்டிக்கொள்கின்றேன்.